மஞ்சளாறு அணைக்கட்டு |
மஞ்சளாறு அல்லது
வத்தலகுண்டு ஆறு என்பது இதன் பெயர். திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓடும் ஆறு இது. பழனி மலை அடுக்குகளில் பிறக்கிறது. ஆறு ஆறுகளுக்கும், ஆறு ஏரிகளுக்கும் நீர் உபயம் செய்யும் மஞ்சளாறு, கூட்டாத்து என்ற இடத்தில் வைகை
ஆற்றுடன் சேருகிறது, ஆக இது ஒரு துணை ஆறு.
மஞ்சளாறு அணை (MANJALAR
DAM)
மஞ்சள் ஆற்றின் நீர்வடிப் பரப்பு 470 சதுர கிலோமீட்டர் இதனால் பாசனம் பெறும் நிலப்பரப்பு 21553 எக்டர். மஞ்சள் ஆற்றின் குறுக்காக தேவதானப்பட்டியில் ஓர் அணை கட்டி இருக்கிறார்கள். மூலாறு, வரட்டாறு, மற்றும் தலையாறு ஆகியவற்றின் மூலம் வரும் தண்ணீர் அனைத்தும் மஞ்சளாறு அணைக்கு வந்து சேர்கிறது.
பாசனப்பகுதிகள் (AYACUT
AREAS)
தேவதானப்பட்டி, செங்குளத்துப்பட்டி, ஜி தும்மலப்பட்டி, கணவாய்ப்பட்டி, வத்தலகுண்டு கட்டகாமன்பட்டி, பழைய வத்தலகுண்டு, கரட்டுப்பட்டி, குன்னுவாரன்கோட்டை ஆகிய ஊர்கள் இதன் பாசனப் பகுதிகள்.
தலையார் நீர்வீழ்ச்சி (THALAIYAR FALLS)
மஞ்சளாத்துக்கு நீர்வரத்து தரும் ஆறுகளில் முக்கியமானது தலை யாரு நீர்வீழ்ச்சி. தலையாறு அருவிதான் தமிழ்நாட்டிலேயே மிக உயரமான அருவி. 975 அடி உயரத்திலிருந்து கொட்டுகிறது. அது மட்டுமல்ல, இதுதான் இந்தியாவின் ஆறாவது உயரமான அருவி. உலக அளவில் 267 வது உயர்ந்த அருவி என்பது பெருமைக்குரியது.
கொடைக்கானல் செல்லுபவர்கள் “டம்டம்”பாறை என்ற இடத்திலிருந்து தூரத்தில் மலை உச்சியிலிருந்து மலைகளுக்கு ஊடாக வெள்ளை நிற கோடு போட்ட மாதிரி இந்த தலையாறு அருவி ஒல்லியாக ஒடிசலாகக் கொட்டுவதைப் பார்க்கலாம்
அருவி என்றதும் அருகில் சென்று பார்க்கலாம். குளித்து மகிழலாம் குதித்து மகிழலாம், இப்படி எல்லாம் யோசிக்க கூடாது. தலையாறு அருவியின் அடிவாரத்துக்குப் அணுகுவதுகூட ஆபத்தான சமாச்சாரம் என்கிறார்கள்.
வெளிநாட்டு பயணிகள் உட்பட, பலர் இதன் அருகில் செல்ல ஆசைப்பட்டு தங்கள் உயிரை, இழந்ததாக கதை கதையாகச் சொல்லுகிறார்கள்.
சமீபத்தில் எட்டு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, இந்த தலையாறு அருவியின் அடிவாரத்தை அடைந்த ஒரு அற்புதமான வீடியோ ஒன்றை நான் பார்த்தேன். தங்கள் உயிரைப் பணயம் வைத்து அங்கு போய் இருந்தார்கள். இந்த இளைஞர்கள் வீடியோவும் எடுத்து அதை யூடியூபிலும் போட்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அருவிகளை எல்லாம் நேரடியாகச் சென்று பார்க்கும் வயதை இழந்து விட்டேனே என்று நினைக்க வருத்தமாக இருக்கிறது.
நான் முதன்முதலாக பார்த்தது குற்றாலம் ஐந்தருவிகள், அடுத்து மதுரையில் வேலை பார்க்கும் போது அடிக்கொரு தடவை கொடைக்கானல் போவேன். போகும்போது எல்லாம் தவறாமல் பார்க்கும் இரண்டு அருவிகள், ஒன்று எலிவால் அருவி, இரண்டு வெள்ளி நீர்வீழ்ச்சி. அதற்குப் பிறகு கம்பம் பள்ளத்தாக்கிற்கு போகும்போது சுருளி அருவியை பலமுறை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது.
உலகின் முதல் அழகு அருவி
இன்னொன்று நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு அருவிக்கு நான் போயிருந்தேன். அதை நேரடியாய்ப் மிக அருகில் போய்ப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, அதில் குளிக்க வாய்ப்பு கிடைத்தது, அந்த அருவி ஆற்றில் படகில் சென்று அதன் நீர்ச்சிதறலில் நனைய வாய்ப்பு கிடைத்தது. அதுதான் உலகின் முதன்மையான நீர்வீழ்ச்சி என்று சொல்லக்கூடிய அமெரிக்காவின் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி.
நான் சொன்ன இந்த மூன்று நான்கு அருவிகளில் நீங்கள் எந்த அருவிக்கு போயிருக்கிறீர்கள் ?
GNANASURIA BAHAVAN D
88888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888
2 comments:
மஞ்சள் நதி சீனாவில் தான் இருக்கிறது என்று படித்திருக்கிறேன்.நம் நாட்டிலும் மஞ்சள் ஆறு இருக்கிறது என்பதைப்படித்து மகிழ்ச்சியுற்றேன். நான் நயாகரா சென்றதில்லை.ஒகேனக்கல் அருவியில் குளித்திருக்கிறேன்.குளித்த பின் என்ன பசி.வீட்டிலிருந்து கொண்டு வந்த புளியோதரை தயிர்சாதம் உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டு அனுபவித்தது இன்னும் நினைவில் இருக்கிறது
அன்பு முரளிதரன், நீங்கள் வங்கியில் வேலை பார்த்தவர். வங்கி என்றால் கணக்கு என்று புரிந்து கொண்டிருப்பவன் நான். எனக்கு கணக்கு வராது. நான் கணக்கில் மண்டு அதனால்தான் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று ஒரு கவிதை கூட எழுதி னேன். எழுதி என் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டேன். எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ! நீங்கள் எப்படி கணக்கு கவிதை என இரண்டிலும் கலக்குகிறீர்கள் ? ஒகேனக்கல்லையும், மஞ்சளற்றையும் நான் மறந்து விட்டேன். நினைவுபடுத்தியமைக்கு நன்றி !
Post a Comment