மேடைப் பேச்சுக்கு தேவை நினைவாற்றல் மேடையில பேச ஞாபகம் இருக்கணும். மறக்காம இருக்கணும். மேடையில் நல்லா பேசணும்னா எழுதினது ஞாபகம் இருக்கணும். இல்லன்னா அந்த மேடைப்பேச்சு காலை வாரிடும். இந்த ஞாபக சக்தியை எப்படி அதிகப்படுத்தலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
சராசரியா ஒரு மனுஷனுக்கு 10% தான் ஞாபக சக்தி இருக்கும். நூறு விஷயங்களை சொன்னா 10 செய்திகளைத்தான் நாம் ஞாபகத்தில் வச்சுக்கணும். உங்க ஞாபகசத்திய அதிகரிக்கணும் அப்படின்னு அர்த்தம்.
இதுக்கு எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரே வழி மனப்பாடம் தான். அசோகர் மரம் நட்டார், அசோகர் மரம் நட்டார், அப்படின்னு ஒரு 50 தடவ சொன்னா ஞாபகத்தில் இருக்கும். பயிற்சி அப்படின்னு சொன்னாலே ஒரு காரியத்தை திரும்பத் திரும்ப செய்யறதுன்னு தான் அர்த்தம். அதுதான் ஆங்கிலத்தில் ரிபிடேஷன் (REPITITION).
சில விஷயங்கள் மட்டும் நம் மனசுல அப்படியே பசை போட்டு ஒட்டின மாதிரி பதிஞ்சிடும். சிலருடைய தோற்றமே மறக்க முடியாததாக இருக்கும். உதாரணம் சார்லி சாப்ளின் மீசை. சுருளிராஜனின் குரல். பெரியார் அவர்களின் தாடி. கருணாநிதி மற்றும் அண்ணா அவர்களின் கரகரப்பான மேடைக்குரல். இவற்றையெல்லாம் நம்மால மறக்க முடியாது. இதுதான் ஆங்கிலத்தில் இம்ப்ரசன் (IMPRESSION). சிலருடைய நடை உடை பாவனை எல்லாமே மனதில் அழுத்தமாக பதிந்து கொள்ளும். மனதில் அழுந்தப் பதிந்தவைகளை நம்மால் சுலபமாய் மறக்க முடியாது.
ஒரு சிலருக்கு அபாரமான ஞாபக சக்தி இருக்கும். யாரையாச்சும் ஒரு தடவை பார்த்தாலும் அப்படியே ஞாபகத்துல வச்சிருப்பாங்க. குலம் கோத்திரம் சாதி சனம் அத்தனையும் விட்டுப்போகாம பட்டுப்பட்டுன்னு சொல்லுவாங்க,
நமது கண்களால் ஒரே சமயத்தில் ஓராயிரம் பொருட்களை பார்க்க முடியும். ஆனால் ஒன்றையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அதற்கு காரணம் அந்த காட்சி அல்லது செயல் நம் மனதில் அழுத்தமாக பதிவது கிடையாது. இதற்குப் பெயர் கவனக்குறைவு அல்லது மோசமான கவனம்.
புத்தகம் படிக்கும்போது சத்தமாக வாய்விட்டு படிக்கும் போது அது சுலபமாக மனதில் பதியும். ஆபிரகாம் லிங்கன் படிக்கும் போது வாய் விட்டு தான் படிப்பாராம். அப்படி படிக்கும்போது அது கண்கள் வழியாக காட்சியாகவும் காதுகள் வழியாகவும் பதியும். ஆக நமது மூளையில் இரண்டு வழிகளில் பதிவதால் அது நினைவில் அழுத்தமாக பதிந்து விடும்.
ஆனால் உண்மையாக காதால் கேட்பதை விட கண்களால் பார்ப்பது தான் நினைவில் அதிகம் நிற்கும் காதுகளால் கேட்கப்படும் செய்திகள் ஒரு சதவீதம் பதிகிறது என்றால் கண்களால் பார்க்கும் காட்சிகள் 25 சதம் கூடுதலான அளவில் மூளையில் பதிவாகிறது.
அதனால்தான் ஆயிரம் முறை காதுகளால் கேட்பதைவிட ஒரு முறை கண்களால் பார்ப்பது மேல் என்று சொல்லுகிறது சீனாவின் பழமொழி ஒன்று.
எதையும் நினைவில்
கொள்வதற்கு உள்ள இயற்கையான மூன்றாவது விதி என்னவென்றால் ஒன்றுடன் ஒன்றை பொருத்திப்
பார்ப்பது.
1. பிரியாணி என்று சொன்னால் ஆற்காடு, ஆம்பூர்.
2. தோல்ஷாப்பு என்றால் வாணியம்பாடி.
3.நெல்லிக்குப்பம் என்றல் சர்க்கரை ஆலை.
4. மணப்பாறை என்றால் முறுக்கு.
5. மதுரை என்றால் மீனாட்சி.
6. திருச்சி என்றால் உச்சிப்பிள்ளையார்.
7. நெய் என்ரால் ஊத்துக்குளி,
8. திருநள்ளாறு என்றால் சனீஸ்வரன்
9. தஞ்சாவூர் என்றால் பெரிய கோயில்
10.வெள்ளை சமாதானம்
11. கருப்பு துக்கம்
12. மஞ்சள் மங்கலம்
13. நீலம் ஆகாயம்
14. சிவப்பு கோபம்
15. பச்சை வளமை
இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டு போகலாம்.
இதனை ஆங்கிலத்தில் சொல்லுவது ஒன்றைஒன்று சார்புடைய நினைவு (ASSOCIATED MEMORY) என்று சொல்லுகிறார்கள். ஒன்றைச் சொன்னால் அத்துடன் தொடர்புடைய இன்னொன்று நினைவுக்கு வருவது என்று அர்த்தம்.
இன்னொன்று நுணுக்கமாக எதையும் கவனிக்கும்போது அது தொடர்பான செய்திகள் நம் மனதில் அழுத்த பதித்து விடும். தனது நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள ரூஸ்வெல்ட் அவர்கள் இதை ஆயுதமாக வைத்திருந்தார். எதையும் உன்னிப்பாக கவனிப்பது அவருடைய வழக்கமாக இருந்தது.
ஒரு பூவைப் உன்னிப்பாக பார்ப்பது என்றால் அதன் இதழ்கள், அதன் மகரந்தங்கள், சூலகம், காம்பு, நிறம், அதன் அளவு, இப்படி ஒவ்வொன்றாக நுட்பமாகப் பார்ப்பது என்று பொருள்.
ஒரு செய்தியை அறிந்து கொள்ளும் போதும் ஒன்றுக்கு மேற்பட்ட புலன்களின் மூலம் தெரிந்து கொள்ளும்போது அது மறக்காது. வாய்விட்டு படிப்பதன் மூலம் ஒரே தகவலை கண்கள் மற்றும் காதுகளால் மூளைக்குள் பதிவிடுகிறோம். இந்த மாதிரியை மாடலை ஆபிரகாம் லிங்கன் அதிகம் பயன்படுத்தினார்.
இன்னொரு முறை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதை படங்களாக பார்க்கும் போது சுலபமாக மறக்காது.
ஒன்றை ஓன்று சார்ந்திருக்கும் படங்கள் (DETAILS OF ASSOCIATED PICTURES)
1. அழகு என்ற சொல்லுக்கு ஒரு ரோஜா பூ.
2. உயரம் தென்னைமரம்.
3. தந்திரமான ஆள் – நரி
4. சேட்டை செபவர் – குரங்கு
5. தாமதம் – ஆமை
6. நினைவுச்சின்னம் – தாஜ்மகால்
7. நீலம் நிறம் – வானம்
8. சிகப்பு நிறம் – மிளகாய்
9. காவி நிறம் – சாமியார்
10. மேடைப்பேச்சு – மைக் அல்லது ஒலிவாங்கி
11. ரகசியம் காக்க முடியாதவர் – ரேடியோ அல்லது பறை
மார்க்டுவைன் என்ற பிரபலமான எழுத்தாளர் இப்படி படங்களாக நினைவில் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
எதையும் நீங்கள் படித்தவை அதிகபட்சமாக 8 மணி நேரம் நினைவில் இருக்கும். அதற்குப் பிறகு அது நம் நினைவிலிருந்து ஆவியாகிவிடும். அதனால் மேடையில் ஏற்வதற்கு முன்னால் ஒருமுறை படித்துக் கொள்வது உங்கள் மேடைப்பேச்சுக்கு கை கொடுக்கும்.
நீங்கள் பேசக்கூடிய செய்திகளை திரும்ப திரும்ப பேசிப் பார்த்தல், சிலவற்றை மனதில் அழுத்தமாக பதியச் செய்தல், சிலவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்திப் பார்த்து நினைவுக்கு கொண்டு வருவது, ஆகியவற்றை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படி ஒரு மேடைப் பேச்சாளர் தனது ஞாபகசக்தியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேடைப் பேச்சை கையில் எடுப்பவர்களுக்கு நிச்சயமாக இந்த பதிவு உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை எனக்குச் சொல்லுங்கள். மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம் நன்றி வணக்கம். பூமி ஞானசூரியன்.
எனது இமெயில்:gsbahavan@gmail.com
No comments:
Post a Comment