பால் தொழிலுக்கு முக்கியம் பசுமாடா ? பசும்புல்லா ?
கிராமங்களில் நடத்த ஏற்ற பட்டிமன்ற தலைப்பு
உலகின் முதல் நிலையில் பெருகிவரும் பால் தொழில் அருகிப் போகாமல் இருக்க வேண்டும். அதற்கு பன்னி புல்வெளி மாதிரி கால்நடைகளின் மேய்ச்சலுக்கு உதவுமாறு ஊருக்கு ஒரு புல்வெளி வேண்டும். ஊருக்கு ஊர் இருக்கும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களை உண்மையான மேய்ச்சல் நிலங்களாக மாற்ற வேண்டும்.
அதற்கு உதாரணமாக குஜராத் மாநிலத்தில் இருக்கும் பன்னி புல்வெளி பற்றி நாம் இன்று பார்க்க போகிறோம்.
பன்னி புல்வெளி குஜராத் மாநிலத்தின் பெரிய புல்வெளி. அதுமட்டுமல்ல, ஆசியாவின் மிகப்பெரிய புல்வெளி.
யோசிக்க முடியாத அளவிற்கு இதன் பரப்பளவு அதிகம், ஒன்றல்ல இரண்டல்ல 3847 சதுர கிலோ மீட்டர்.
தினம் தினம் ஒரு லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யும் பன்னி எருமைகள் மற்றும் காங்க்ரெஜ் இன மாடுகளுக்கு பசுந்தீவனம் தருவது, இந்தப் புல்வெளிதான்.
இங்கு உள்ள கந்தப்பாவல் மரங்கள் சார்கோல் என்னும் கரியினைத் தயாரித்து உள்ளூரிலும் வெளியூரிலும் விற்பனை செய்வதன் மூலம் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது.
வன உயிரின மேம்பாடு (WILF LIFE) மற்றும் உயிரின பன்முகத்தன்மை (BIODIVERSITY) ஆகியவற்றிற்கு வாழும் உதாரணம் பன்னி.
இன்று வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி (RESERVE FOREST AREA), ஒரு காலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினால் உருவாக்கப்பட்டது இந்தப் புல்வெளி.
சுமார் ஒரு பங்கு நிலப்பரப்பில் உருவாக்கப்பட்ட இந்த புல்வெளி ஒன்பது பங்கு வனப்பரப்பாக, ஆசியாவின் மிகபெரிய புல்வெளியாக இன்று வளர்ந்துள்ளது.
சிறுத்தைகளின் வாழ்விடமாக இந்திய வன உயிரின நிறுவனம் இதனைத் தெரிவு செய்துள்ளது.
சிவப்பரிசி மக்களின் பிரதான உணவாக இருந்த சமயம் சிந்து நதி இந்தபக்கம் தான் ஓடியது, அப்போது புல்வெளி இல்லை, ஒன்றுக்கும் உதவாத உப்புவெளியாக இருந்தது, என்கிறார்கள்.
1819 ஆம் ஆண்டில் ஏற்பட்ட "ரான் ஆஃப் கட்ச்" என்ற பூகம்பம் சிந்து நதியின் ஓட்டத்தை பாகிஸ்தான் வழியாக ஓட திசை மாற்றி விட்டது
பன்னி புல்வெளியில் உப்பு தன்மையை தாங்கி வளரும் மரங்களும் 30 வகையான புல்வகைகளும் இன்று நிறைந்துள்ளன. இந்தப் புல்வெளியில் வனவிலங்குகள் பெருகிவிட்டன
இந்த விலங்குகள் எல்லாம் உங்களுக்கு தெரிகிறதா என்று பாருங்கள்.
கரும்புலி, காட்டுப்பன்றி, தங்க நரி, இந்திய முயல், இந்திய ஓநாய், ஆசிய காட்டுப் பூனை, பாலைவன நரி,மற்றும் இந்திய காட்டுக் கழுதை.
இந்தப் புல்வெளியை சுற்றிலும் 40 வகையான முல்தாரிஸ் இன மக்கள் வசிக்கிறார்கள். முல்தாரிகள் என்றால் கால்நடைகளை வாழ்வாதாரமாகக் கொண்ட இடையர்கள் என்று அர்த்தம்.
இந்த முல்தாரிஸ் இன மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது இந்த பன்னி புல்வெளி தான் என்று சொல்லுகிறார்கள்
மழை மிகுந்த ஆண்டுகளில் வெளிநாடுகளிலிலிருந்து 150 க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வலசை வந்து போகின்றன.
அழிந்து வரும் அல்லது அருகி வரும் ஆசிய சிறுத்தைகளின் வாழ்விடமாக இந்தப் புல்வெளி அறிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுஆறுகளின் வடிகாலாக உள்ளது இந்த பன்னி புல்வெளி.
ஆரம்ப காலத்தில் இந்த பன்னிப் பகுதியின் உப்பு தன்மை மற்றும் மலட்டுத்தன்மையை எதிர்த்து போராடுவதற்காக என்ன மரம் நடலாம் என்று யோசித்தார்கள
அதற்கு விடையாக வந்த ஒரே மரம் கந்தப்பாவல் மரம். என்ற மரத்தை நடவு செய்தார்கள். சிறியப் பகுதியில் அந்த மரத்தை நட்டார்கள். மரத்தை நட்டது, அன்றைய மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை.
கந்தப்பாவல் உங்களுக்குத் தெரிந்த மரம்தான் இது. கண்டுபிடிக்க முடிகிறதா ? முயற்சி செய்யுங்கள்
அந்த மரம் வேகமாக வளர்ந்து மிகப் பெரிய புல்வெளியை உருவாக்க காரணமாக அமைந்தது. புல்வெளி உருவானதும், இந்திய வனச் சட்டத்தின் கீழ் இந்த கந்தாப்பாவல் மரங்களை வெட்டலாம் என்று அரசு அனுமதி அளித்தது.
இந்த கந்தப்பாவல் மரங்களை வெட்ட ஆரம்பித்த பிறகு இந்த பகுதியில் உள்ள காட்டுத் தேனீக்கள்கள் 20 முதல் 25 சதவீதம் குறைந்து விட்டதாகச் சொல்லுகிறார்கள்
இந்த கந்தப்பாவல் மரங்கள் மாதிரி, தீவன மரங்களை நமது மேய்ச்சல் புறம்போக்கு நிலங்களில் நடலாம். நமது கிராமங்களில் நட்டு ஒரு புல்வெளியை உருவாக்க முடியும்
பன்னி மாதிரி ஒரு மாதிரி புல்வெளியை உருவாக்கிய அந்தப்பகுதி மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்
ஏற்கனவே உங்கள் ஊரில் நிறைய கந்தப்பாவல் மரங்கள் இருந்தால் அதன் ஊடாக புல்விதை விதைத்து புல்வெளி உருவாக்கலாம். மெல்ல மெல்ல நம்ம ஊர்த்தீவன மரங்களைக் கொண்டு கந்தப்பாவல் மரங்களை குறைக்கலாம்.
கால்நடைகளுக்கான பசும்புல் தீவனம், மர இலைத்தீவனம் உற்பத்தி செய்யலாம், சூழல் வெப்பம் குறைக்கலாம், மாசு நீக்கலாம், பல்லுயிர் பெருக்கலாம், பசுமையும் சேர்க்கலாம், ஊருக்கு அழகும் சேர்க்க
அன்பின் இனிய நண்பர்களே ! கந்தப்பாவல் என்பது வேறு எந்த மரமும் இல்லை. அவை சீமைக்கருவை மரம்தான்.
ஊருக்குஊர்; மேய்ச்சல் புறம்போக்கு அல்லது பொது நிலங்களில் மரங்கள் ஊடாக புல்வெளிகள் உருவாக்குவதுபற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். முடியுமா ? முடியாதா ? தேவையா ? தேவை இல்லைய
மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம் ! நன்றி ! வணக்கம் !
பயந்தரும் செய்திகளைப் பகிர்வோம் ! பலபயன் பெறுவோம்
பூமி ஞானசூரியன்
#BANNIGRASSLAND
#GUJRAT
#WILDLIFE
#BIODIVERSITY
#TREESANDGRASS
#BANNAIBUFFALO
#KANKREJ
#MILKPRODUCTION
#PROSOPISJULIFLORA
#SALVADORAPERSICA
No comments:
Post a Comment