Saturday, September 24, 2022

CUDDALORE GEDILAM RIVER - கெடிலம் ஆறு – பகுதி 1



ஆறும் ஊரும்

கெடிலம் ஆறு பகுதி 1 

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் ! 

நமது பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் ஆறு கெடிலம். இன்று கடலூர் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மழைக் காலங்களில் இரு கரை தொட்டு 112 கிலோ மீட்டர் ஓடும் அழகான ஆறு இது. இந்த பகுதியின் ஏரிகளுக்கும் குளங்களுக்கும் மழைக் காலத்தில் நீர் உபயம் செய்யும் ஆறு. 

இந்த கெடிலம் ஆறு பற்றிய சுவாரசியமான 20 செய்திகளை இன்று நாம் பார்க்கப் போகிறோம்.

.1. கெடிலம் ஆறு சங்கராபுரத்தைச் சேர்ந்த மையனூர் என்ற இடத்தில் உற்பத்தியாகி மலட்டாற்றுடன் சேர்ந்து கடலூரில் வங்க கடலில் சங்கமமாகிறது.

2. கடலூர் புதுநகர் மற்றும் பழைய நகர் இரண்டுக்கும் ஒரு நீர் எல்லையாக அமைந்து இருப்பது கெடிலம் ஆறு. ஆற்றின் கிழக்குப் பக்கம் இருப்பது கடலூர் என் டி, பழைய ஆறு கடலூர் ஓட்டி என்று ஆங்கிலத்தில் சொல்லுவது வழக்கு. 

3. கடலூரில் கடிலம் மட்டுமல்ல, உப்பனாறு மற்றும் பரவனார் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளும் கடலுடன் கூடும் இடம் கடலூர். அதனால்தான் இதன் பழைய பெயர் கூடலூர். இன்னும் கூட கடலூர் பழைய நகரின் பெயர் கூடலூர் தான். 

4. தாழனோடை ஆறு, இதன் துணையாறு. இது வீரமங்கலம் ஏரியில் உருவாகி பல ஊர்களைக் கடந்து வண்டிப்பாளையம் அருகே கடிலம் ஆற்றுடன் கலக்கிறது. தாழனோடை ஆற்றின் பிற பெயர்கள் சேஷநதி மற்றும் சின்னாறு.

5. மலட்டாறு, தென்பெண்ணை ஆற்றிலிருந்து சித்தலிங்கமடத்தில் பிரிந்து திருவாமூருக்கு முன் கெடிலம் ஆற்றுடன் கூடுகிறது. ஆக மலட்டாறு கெடிலம் ஆற்றின் இன்னொரு துணை ஆறு மற்றும் தென்பெண்ணையின் கிளை ஆறு. 

6. தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தில் மிகமோசமாக அடிபட்ட மாவட்டம் கடலூர் என்று சொல்லலாம். 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் காலை 26 ம்தேதி தமிழ்நாட்டை மட்டுமல்ல உலக நாடுகளையே பயமுறுத்தி இயற்கை சீற்றம் சுனாமி கடலூரில் மட்டும் 572 மனித உயிரைக் காவு கொண்டது. 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி ஏற்பட்ட தாணே புயலும் கடலூர் பகுதியை கந்தர் கோலமாக்கியது.    

7. வெள்ளைக்காரர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் கொள்ளையடித்த பொருட்களை அள்ளிச்செல்ல அனுசரணையாக இருந்தத் துறைமுகங்களில் ஒன்று கடலூர் துறைமுகம்.

8. பல்லவர்கள் மற்றும் இடைக்காலச் சோழர்களின் காலத்தில் பெரும் பட்டினமாக வளர்ந்தது கடலூர். அதனைத்தொடர்ந்து பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள், மதுரை தஞ்சை நாயக்கர்கள், திப்புசுல்தான், பிரான்ஸ் மற்றும் ஆங்கில அரசின் கீழ் இருந்தது.

9.பிரான்ஸ் நாட்டுப் படைகளுக்கும் ஆங்கிலேய படைகளுக்கும்  1758 ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடந்த சண்டை  கடலூரில் தான் நடந்தது. இதன் பெயர் கடலூர் யுத்தம்.

10. கடலூர் துறைமுகத்திற்கு 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது காரைக்கால் துறைமுகம். அருகாமையில் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது பாண்டிச்சேரி துறைமுகம்.

ஆறும் ஊரும் கட்டுரைத் தொடரைப் பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அனைவருக்கும் எனது நன்றிகள். 

 

இதுவரை நான் ஆறுகள் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்காதவர்கள்  www.gnanasuriabahavan.com என்ற வலைத்தளத்தில் படிக்கலாம்.

நன்றி வணக்கம் ! மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...