"ஜம்புநதி ராமநதி இணைப்பு ?"
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி
ஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம் அரிச்சந்திரா நதி என்னும்
நாகை திருவாரூர் மாவட்ட ஆறு பற்றி பார்த்தோம். இன்று ஜம்புநதி என்னும்
திருநெல்வேலி மாவட்ட ஆறு பற்றிப் பார்க்கலாம். ஜம்புநதி பற்றிப் பார்ப்பதற்கு முன்னால்
நேற்றைய கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். சுமார் 20 கிராமங்களுக்கு மேல் விவசாயத்திற்கு
தண்ணீர் உபயம் செய்யும் அரிச்சந்திரா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணையின் பெயர்
என்ன ? இது தான் அந்தக் கேள்வி.
பதில்: இருபது கிராமங்களுக்கும் மேலாக
பாசன உதவி செய்யும் அரிச்சந்திரா நதியின் மீது கட்டப்பட்டுள்ள அணை யின் பெயர்
"பிரிஞ்சு மூலை" அணைக்கட்டு.
இப்போது ஜம்புநதி பற்றி பார்க்கலாம்.
ஜம்புநதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு சொந்தமான ஆறு.
"ஜம்புத்வீபம்" என்பது அசோகர் காலத்தில் வழக்கில் இருந்த
இந்தியாவின் பெயர். அதாவது ஜம்பு என்னும் நாவல் மரங்களுக்கு உரிய நாடு என்று
பொருள்.
ஜம்புநதி என்பதும் அதிலிருந்து
பெறப்பட்ட பெயர் என்று சொல்லுகிறார்கள். அதற்கு ஆன்மிகக் கதை ஒன்று உள்ளது. ஒரு
காலத்தில் நாவல் மரங்களில் பழங்கள் ஒவ்வொன்றும் யானை 'சைசில்' பூதாகரமாக இருந்தன.
இந்த பழங்கள் பழுத்துக் கனிந்து மலை முகடுகளில் சிதறி உதிர்ந்தன. கனிந்த அந்த
பழங்களின் சாறு பழங்களில் இருந்து வடிந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. அன்று ஓடிய
அந்த நாவல் சாறுதான் இன்று ஜம்பு நதியாக தொடர்ந்து ஓடுகிறது.
இதுதான் ஜம்புநதி பிறப்பு பற்றிய
கர்ணபரம்பரைக் கதை. இது பற்றிய தகவல்களை நமது விஷ்ணு புராணம் விரிவாகப் பேசுகிறது.
ராமநதி மற்றும் ஜம்பு நிதியை
இணைக்கும் கால்வாய் திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டு வருகிறது. இந்தப்
பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுவதாகவும் சமீபத்தில் ஒரு பத்திரிக்கைச்
செய்தியைப் படித்தேன்.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர்
ஒன்றியத்தின் தென்பகுதி, கடையம் ஒன்றியத்தின் வடபகுதி, ஆகியவற்றில் றண்டு கிடக்கும்
இருபத்தொரு குளங்களின் நீர் ஆதாரத்தை மேம்படுத்த ராமநதி - ஜம்புநதி இணைப்பு
கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தால்
4,501.18 ஏக்கர் பயிர்ப் பரப்பு கூடுதலாக பாசனம் பெறும். 729 கிணறுகள் நீர்மட்டம் உஉயரும்
என்றும் சொல்லுகிறார்கள்.
மேலும் 100 கிராமங்களின்
குடிநீர்த் தேவையையும் இது நிறைவு செய்யும் என்கிறார்கள். இந்தத் திட்டத்திற்கான
நிதி ஒதுக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்றும் செய்திகள்
வெளிவந்துள்ளன. அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை.
இந்த ரமாநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய்த்
திட்டம் வருமா ? எப்போது வரும் ?
இன்றைய கேள்வி: ஒரு காலத்தில்
இந்தியாவின் பெயரும் தமிழ்நாட்டின் பெயரும் நாவல் மரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது
என்கிறார்களே அது உண்மையா ?
மீண்டும் நாளை சந்திக்கலாம்.
வணக்கம். 04செப்22
No comments:
Post a Comment