ஆறும் ஊரும்
நமக்குத் தெரியாத
கெடிலம் ஆறு – பகுதி 2
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
1.சோழ நாட்டிற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவே இருக்கும் கடலூர் பகுதியை நடுநாடு என்று சொல்லுகிறது சங்க இலக்கியங்கள். விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கியதுதான் இந்த நடுநாடு.
2. 1758 வரை வெள்ளைக்காரர்களின் ஆட்சியில், தமிழ்நாடு, ஆந்திரா கர்நாடகா கேரளா அடங்கிய தென்னிந்தியாவின் தலைநகராக இருந்தது கடலூர்தான்.
3. முகலாற்று அணை, புத்தனேந்தல் அணை, கெடிலம் அணை, திருவாமூர் அணை, வானமாதேவி அணை, திருவந்திபுரம் அணை, என பல அணைகள் கட்டி கெடிலம் ஆற்றின் குறுக்காக கட்டப்பட்டுள்ளது.
4. திருவதிகை கோயில், வீரட்டேஸ்வரர் கோயில், திருவந்திபுரம் தேவநாத பெருமாள் கோயில் ஆகியவை கெடிலம் ஆற்றின் கரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்கள்.
5. புலவர் சுந்தரசண்முகனார் எழுதியுள்ள “கெடிலக்கரை நாகரிகம்” நூலை பல ஆண்டுகளுக்கு முன்னரே படித்திருக்கிறேன். அவரே “கெடிலவளம்” என்ற நூலையும் எழுதியுள்ளார்.
6.தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனாரும் அப்பர் திருநாவுக்கரசர் பிறந்ததும் இந்த கெடிலக் கரையில் உள்ள திருநாவலூர் மற்றும் திருவாமூர் என்ற கிராமங்களில்தான்.
7.இந்தியாவுக்கு முதன்முதலாக சர்க்கரை ஆலையையும், பாரீஸ் சாக்லெட்டையும் அறிமுகம் செய்த நெல்லிக்குப்பம் என்ற ஊரும் அமைந்துள்ளது இந்த
கெடிலம்
ஆற்றங்கரையில்தான்.
8. திருப்பதிரிப்புலியூர், திருவதிகை, திருவாமூர், திருநாவலூர் ஆகிய திருப்பதிகள் கெடிலத்தின் வடகரையிலும், திருமாணிக்குழி சேந்தமங்கலம் ஆகியவை தென்கரையிலும் அமைந்துள்ளன. இங்கெல்லாம் கெடிலம் மேற்கு கிழக்காக ஓடுகிறது.
9. மேற்கு திசையிலிருந்து கிழக்கு திசையில் ஓடும் கெடிலம் நதி திருவிந்திபுரத்தில் கேப்பர் மலைத்தொடர் காரணமாக வட்திசையில் திரும்பி ஓடுவதால் இதனை உத்தர வாகினி என்றும் சொல்லுகிறார்கள். உத்தரவாகினி என்றால் வடக்கு நோக்கி ஓடும் ஆறு என்று அர்த்தம்.
10. திருநாவுக்கரசர் சிறிது காலம் சமண மதத்தில் சேர்ந்து விலகியதால் அவரை கல்லில் கட்டி கடிலம் ஆற்றில் எறிய, ஆறு கடலுக்கு போகும் முன்னர் இறைவன் அவரைக் காப்பாற்றி கரையேற்றினார். அந்த இடத்தின் பெயர், கரையேறவிட்டகுப்பம். என்று ஆனது. அந்த கரையேறவிட்டகுப்பம் தான் இன்றைக்கு கடலூரின் வண்டிப்பாளையம்.
இந்த கட்டுரை கொஞ்சம் நீளமாக போய்விட்டது மன்னிக்கவும் இதற்கு காரணம், நானும் இந்த கெடிலம் ஆற்றங்கரைவாசி தான்.
ஆறும் ஊரும் கட்டுரைத் தொடரைப் பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அனைவருக்கும் எனது நன்றிகள்.
இதுவரை நான் ஆறுகள் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளை வாசிக்காதவர்கள் www.gnanasuriabahavan.com என்ற வலைத்தளத்தில் படிக்கலாம்.
நன்றி வணக்கம் !
மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திக்கலாம்.
No comments:
Post a Comment