Wednesday, September 7, 2022

GANGES OF SOUTH INDIA CAUVERY

 


ஆறும் ஊரும்  

"தென்னாட்டு கங்கை 

காவிரி ஆறு"

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

பாட்டுக்கு ஒரு புலவன் பாரதி ஆறுகளை பற்றி "காவிரி தென்பெண்ணை பாலாறு" என்று பாடும்போது கூட காவிரி ஆற்றை தான் முதலில் வைத்துப் பாடினார். 

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமே மிகவும் பிரபலமான நதி காவிரி. அது மட்டுமல்ல இந்தியாவின் பிரதான நதியாக கருதப்படும் கங்கை நதிக்கு சமமான ஆறு காவிரி ஆறு.

காவிரி நதி பற்றி சொல்லும்போது இதில் உங்களுக்கு தெரியாத செய்திகளை சொல்வது மிகவும் கடினமான காரியம். காரணம் காவிரி ஆறு அவ்வளவு பிரபலம்.  

கர்நாடக மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் தலகாவேரி என்ற இடத்தில் உற்பத்தியாகி தமிழ்நாட்டில் பூம்புகார் என்ற இடத்தில் வங்கக் கடலில் சங்கமமாகிறது.

217 கிலோ மீட்டர் தூரம் ஓடும் பவானி ஆறுதான் காவிரி ஆற்றின் மிக முக்கியமான துணை ஆறு. காவிரி ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து சங்கமமாகும் இடம் வரைக்கும் அது ஓடும் மொத்த தூரம் அல்லது தொலைவு 800 கிலோமீட்டர். 

ஹாரங்கி, ஹேமாவதி, கபினி, சுவர்ணவதி, இலட்சுமண தீர்த்தா, பவானி, நொய்யல், அமராவதி, மோயார் ஆறு, ஆகியவை காவிரியின் துணை ஆறுகள்.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு அடுத்தபடியாக தென் இந்தியாவின் மூன்றாவது பெரிய நதி காவிரி. இதனை தென்னாட்டு கங்கை என்றும் சொல்லுவார்கள்.  

தமிழ்நாடு கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் காவிரி ஓடினாலும், அதிகமான நீர்வடிப்பகுதி பரப்பைக் கொண்டது தமிழ்நாடுதான்.  

காவிரி ஆறு கர்நாடக மாநிலத்தில் 320 கிலோ மீட்டரும் தமிழ்நாட்டில் 416 கிலோ மீட்டரும் இரண்டு மாநிலங்களின் எல்லைகளிலும் சேர்ந்து 64 கிலோ மீட்டரும் ஓடுகிறது காவிரி. 

காவிரி ஆற்றின் மீது கரிகால் சோழன் கட்டிய புராதனமான அணைக்கட்டு கல்லணை.இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீரைப் பிரித்து வினியோகம் செய்யக்கூடிய அணைக்கட்டுகளில் இது போன்று நான்கு அணைக்கட்டுகள் தான் உலக அளவிலேயே உள்ளன என்று சொல்கிறார்கள். 

புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, காரைக்கால், ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு காவிரியின் தண்ணீரைத் திருப்பும் நோக்கத்துடன்தான் கரிகால்சோழன் கல்லணையை கட்டினார். 

தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் கர்நாடகாவில் சிவசமுத்திரம் ஸ்ரீரங்கப்பட்டினம் என மூன்று இடங்களில் காவிரி ஆறு 3 தீவுகளை உருவாக்கியுள்ளது.

இன்றைய கேள்வி காவிரி ஆற்றுக்கு தமிழில் இன்னொரு பெயர் உண்டு அது என்ன பெயர் என்று தெரியுமா ?  

மீண்டும் நாளை சந்திப்போம் வணக்கம் !

08 செப் 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...