Friday, September 2, 2022

ATTRACTIVE TOURIST SPOT KALLAR RIVER

 

கலக்கலான

சுற்றுலாத்தலம்

கல்லாறு

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

இன்று நாம் கல்லார் ஆறு பற்றிப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ஆறுகள் கல்லார் என்ற பெயரில் ஓடுகின்றன. இதில் ரொம்பவும் பிரபலமான ஆறு கோயம்புத்தூர் மாவட்ட ஆறு. இன்னொன்று கிழக்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகும் ஆகும் தென்பெண்ணையின் துணை ஆறு. இன்னொன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு சொந்தமான கல்லார் ஆறு.

அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம். ஒரு காலத்தில் இந்தியாவும், தமிழ் நாடும் ஒரு மரத்தின் பெயரால் அழைக்கப்பட்டது  என்கிறார்களே அது உண்மையா ? இதுதான் கேள்வி. இந்திய புராணங்களின்படி, இந்தியாவின் பழைய பெயர்ஜம்பூத்வீபம்என்று பார்த்தோம். தமிழ்னாட்டின் பழைய பெயர் நாவலந்தீவு. இரண்டும் நாவல் மரத்தோடு தொடர்பு உடையது.

ஊட்டி மலையின் அடிவாரத்தில் ஓடும் ஆறு கல்லார் ஆறு.

1.கோயம்புத்தூர் மாவட்டத்தில், மேட்டுப்பாளையத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கல்லார் ஆறு. அரசுக்கு சொந்தமான ஒரு பழப்பண்ணையும் இந்த கல்லார் ஆற்றங்கரையில்தான் உள்ளது.

கல்லார் ஆறு பார்க்க விரும்பினால் நீங்கள் முதலில் மேட்டுப்பாளையம் போக வேண்டும். அங்கு போனால் ஆழமில்லாமல் பாறைகளுக்கிடையே சலசலத்தது சில்லென ஓடும் தண்ணீரில் முங்கிக் குளிக்கலாம்.

1971 ம் ஆண்டு கல்லார் ஆற்றில் நான் குளித்திருக்கிறேன். கணக்கு போட்டுப் பாருங்கள், அரை நூற்றாண்டுக்கு முன்னால்.

ஆற்றங்கரையில் இருக்கும் அரசு பழப்பண்ணையை ஒரு விசிட் அடிக்கலாம். துரியன், மங்குஸ்டான், அவக்கேடோ, கேரம்போலா, இப்படி வித்தியாசமான பழ மரங்களைப் பார்க்கலாம்.

2. இதேபோல பெரம்பலூர் மாவட்டத்திலும் ஒரு கல்லாரு ஓடுகிறது. இது கிழக்குத் தொடர்ச்சி மலையில் அரசலூர், அன்னமங்கலம், மற்றும் விசுவக்குடி பகுதியில் உள்ள பச்சைமலைப் பகுதியில் உற்பத்தியாகிறது.

வெங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் கலந்து அங்கிருந்து கிழக்குத் திசையில் ஓடி, கொல்லி மலையில் உற்பத்தியாகி வரும்  சுவேதா நதியில் கலக்கிறது.

இந்த பெரம்பலூர் கல்லார் ஆறு 20 கிலோமீட்டர் ஓடி 10000 ஏக்கர் பயிர் சாகுபடிக்கு உதவியாக உள்ளது.

3. கல்வராயன் மலையிலும் ஒரு கல்லாறு உற்பத்தி ஆகி ஓடி தென்எண்ணை ஆற்றுடன் கலக்கிறது. இது தென் பெண்ணை ஆற்றின் துணைஆறு

4. கல்லாறு என்ற பெயரில் தென் கேரளத்திலும் ஒரு ஆறு ஓடுகிறது. இது பம்பா நதியின் துணை நதி. அதுமட்டுமல்ல இது ஆண்டு முழுவதும் ஓடும் ஜீவநதியும்கூட. இது வடசேரிக்கரா என்ற இடத்தில் இது பம்பா நதியுடன் சேர்கிறது. இந்த கல்லார் ஆறு முழுவதுமாக அடர்ந்த காடுகளின் வழியாக ஓடுகிறது என்று சொல்லுகிறார்கள்.

கேரள மாநிலத்தில் உள்ள வாமனாபுரம் ஆற்றின் துணை நதி ஒன்றையும்  கல்லார் என்று சொல்லுகிறார்கள். இது திருவனந்தபுரம் மாவட்டம் முழுக்க ஓடுகிறது. இதில்தான் இரண்டுமீன்முட்டி அணைக்கட்டுஎன்ற பெயரில் இரண்டு அணைக்கட்டுகள் உள்ளன.

இன்றைய கேள்வி: தென்னிந்தியப் பகுதியில் எந்த ஆற்றை தட்சிண பாக்கீரதி என்று சொல்லுகிறார்கள். (பாக்கீரதி ஆறு கங்கை நதியின் ஆதார சுருதியாக இருக்கும் துணை ஆறு எனச் சொல்ல்லாம்)

மீண்டும் நாளை சந்திப்போம், வணக்கம், 05 செப் 22

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...