"காவிரி பிறந்த கதை"
அன்பு உடன் பிறப்புகளுக்கு மதியம் வணக்கம்.
காவிரி பிறக்கும் இடம் தலைக்காவேரி என்ற இடம். தலகாவேரி குடகு மாவட்டத்தில் உள்ள இடம். குடகு மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் உள்ள இடம்.
குடகு ஒரு ஆன்மீக ரீதியான பூமி மட்டுமல்ல அது கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமும் கூட. காவிரி பிறக்கும் இந்த புண்ணிய பூமிக்கு பிரம்மகிரி என்ற பெயரும் உண்டு. இந்த பிரம்ம கிரியை தலைக்காவிரி என்று சொல்லுகிறார்கள்.
காவிரி ஆற்றுக்கும், பிள்ளையாருக்கும், அகத்திய முனிவருக்கும் தொடர்புடைய ஒரு சுவாரசியமான கதை உண்டு.
அந்த கதையைப் பார்ப்பதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம்.
காவிரி ஆற்றின் இன்னொரு தமிழ் பெயர் என்ன, என்பதுதான் நேற்றைய கேள்வி. அதற்கான சரியான பதில் பொன்னி ஆறு என்பதுதான் அதற்கான சரியான பதில்.
இப்போது நாம் காவிரி ஆற்றுக்கும் பிள்ளையாருக்கும் அகத்திய முனிவருக்கும் தொடர்புடைய கதையை பார்க்கலாம்.
முன்னொரு காலத்தில் சுவதர்மன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அந்த சுவதர்மன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான ஒரு தவம் செய்தான். அவன் தவத்தை மெச்சிய சிவபெருமான் காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். தன்னை யாரும் வெல்ல முடியாத வரம் வேண்டும் என்று அவன் கேட்டான். அப்படியே ஆகட்டும் என்று அந்த வரத்தை தந்தார் சிவபெருமான். அன்று முதல் அவன் தேவலோகம் போய் தேவர்களோடு சண்டையிட்டு அவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்தான்.
தேவர்களில் வருணன் மற்றும் இந்திரன் மட்டும் அவனிடமிருந்து தப்பி ஓடினார்கள். அதில் இந்திரன் மட்டும் தென்னிந்தியாவில் ஒளிந்து கொண்டார். வருணன் மட்டும் வசமாய் சுவதர்மன் கையில் சிக்கிக் கொண்டார். சுவதர்மன் என்ன செய்வது என யோசித்தான். இந்திரன் தென்னிந்தியாவில் ஒளிந்து கொண்டிருக்கிறார் அதனால் நீ அங்கு மழை பெய்யக் கூடாது என்று வருணனுக்கு கட்டளை இட்டான்.
வருணன் சுத்தமாக மழை பெய்ய அனுமதிக்கவில்லை. தென்னிந்தியா முழுக்க மழையில்லாமல் வரண்டு போனது. இதைக் கேள்விப்பட்ட அகத்திய முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்தார். வரட்சியைப் போக்க உதவ வேண்டினார். காட்சி தந்த சிவபெருமான் தனது தலையில் வைத்திருந்த கங்கை நதியில் ஒரு சிறு பகுதியை அகத்தியருக்கு அளித்தார். கங்கையின் அந்த சிறு பகுதியை அகத்தியர் தனது கமண்டலத்தில் அடைத்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.
அந்த சமயம் விநாயகப் பெருமானும் தென்னிந்தியாவில் ஏற்பட்ட வறட்சியைப் போக்க விரும்பினார். அகத்தியரைப் பின் தொடர்ந்து சென்றார். அகத்தியர் தனது கமண்டலத்தை தரையில் வைத்துவிட்டு எப்போது எப்படி கங்கையை வெளிப் படுத்துவது என்ற யோசனையில் ஆழ்ந்தார். அந்த சமயம் விநாயகர் இதனை தள்ளிப்போடாமல் உடனே கங்கையை விடுதலை செய்ய விரும்பினார்.
விநாயகர் ஒரு காகமாக மாறினார். பறந்து போனார். தரையில் வைத்து இருந்த அகத்தியரின் கமண்டலத்தை தனது சிறகினால் தள்ளினார். கமண்டலம் கீழே உருண்டது.கீழே விழுந்த வேகத்தில் மூடி திறந்து கொண்டது. அவ்வளவுதான் கங்கைநதி கமண்டலத்திலிருந்து வெள்ளமாகப் பெருகியது. அகத்தியர் கோபத்துடன் அந்த காக்கையை விரட்டினார். உடனே காகமாக இருந்த விநாயகர் தன் உருவத்தை காண்பிக்க அகத்தியர் அவரை வணங்கினார். அந்த சமயம் கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே ஆறாகப் பெருகி ஓடியது. காகம் தன் சிறகை விரித்ததால் ஆறு பிறந்ததால் கா...விரி கா..விரி காவிரி என்று அகத்தியர் அதன் காதில் சொல்லி அதற்கு பெயர் சூட்டினார். இதுதான் காவிரி பிறந்த கதை.
இன்றைய கேள்வி காவிரி பிறந்ததற்கு காரணமாக இருந்தது அகத்தியரின் கமண்டலம் என்று பார்த்தோம். ஆமாம் கமண்டலம் என்றால் என்ன என்று சொல்லுங்கள் பார்ப்போம்.
மீண்டும் அடுத்தப் பதிவில் சந்திப்போம், வணக்கம் !
08செப் 22
ReplyForward |
No comments:
Post a Comment