"மறு உயிர் பெற்ற அனுமன் ஆறு"
அன்பு
உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம் குண்டார்ஆறு பற்றி பார்த்தோம். இன்று நாம் அனுமன் ஆறு பற்றி பார்க்கலாம்.
அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவடைந்தால் எவ்வளவு நிலப் பரப்பில் கூடுதலாக பயிர் சாகுபடி செய்யமுடியும் ?
இந்தத் திட்டம் நிறைவடைந்தால் 3 லட்சத்து 37 ஆயிரத்து 717 ஏக்கர்
நிலப்பரப்பில் கூடுதலாக பயிர் சாகுபடி செய்யலாம்.
இப்போது தென்காசி மலையில் உற்பத்தியாகும் அனுமன்நதி சிற்றாரின் ஒரு துணையாறு. அனுமன்நதி 5 ஆயிரத்து 413 அடி உயரமான மலைப் பகுதியில் உற்பத்தியாகிறது.
அங்கிருந்து
மலைச்சரிவுகளின் ஊடாக 10 கிலோ மீட்டர் பயணம் செய்து கீழே இறங்குகிறது. அதன் பிறகு அதன் துணை
ஆறான கருப்பாநதியுடன் சேர்ந்து
தாயார்தோப்பு என்ற இடம் வரை ஓடி
சிற்றாருடன் சங்கமமாகிறது.
அனுமன் நதி பயணம்
செய்யும் மொத்த தூரம் 32 கிலோமீட்டர் இந்த நதியில் அடவிநயினார் நீர்த்தேக்கம் ஒன்றை செங்கோட்டை
தாலுகாவில் மேக்கரை என்ற இடத்தில் அமைத்துள்ளார்கள்.
இந்த ஆற்றை அனுமன்
நதி என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அனுமன் சீதையைத் தேடி ஸ்ரீலங்கா சென்ற
சமயம் இந்த ஆறு அனுமனை தடுத்து நிறுத்தியதால், அவர் அந்த ஆற்றங்கரையில்
தங்கியிருந்து அதன் பின்னர் ஸ்ரீலங்காவிற்கு சென்றதாக ஒரு கர்ண பரம்பரைக் கதை
ஒன்று சொல்லுகிறார்கள்.
அதனால் தான் இதனை அனுமன்நதி என்று
சொல்கிறார்கள்.
நம் அனுமான் ஆறு சிலகாலம் கவனிப்பாரற்று போனதனால் தனிநபர்களின் ஆக்கிரமிப்பினால் ஏகப்பட்ட ஏரிகளும் குளங்களும் வறண்டு போயின.
இதனால் அனுமன்
நதியின் தயவினால் செய்த பயிர் சாகுபடி சுமார் 30 ஆண்டுகளாக
நடைபெறாமல் போனது. சமீபத்தில் "நம் அனுமன் ஆறு மீட்பு இயக்கம்", என்று பொதுமக்கள்
ஒரு சங்கத்தை உருவாக்கி அதன்மூலம் குடிமராமத்து முறையில் அதனை சீர்செய்ய, செப்பனிட உதவினார்கள். குறிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவினார்கள் என்று சொல்லுகிறார்கள்.
அதுபோல இந்த
பகுதியில் பணியாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்களின் முயற்சியினால்
அனுமன்நதி மீண்டும் மறு உயிர் பெற்றுள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
அதுமட்டுமல்ல 10 ஆயிரம் ஏக்கர்
நிலப்பரப்பில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயிர் சாகுபடி மீண்டு வந்து உள்ளது
என்கிறார்கள்.
நம் அனுமன் ஆறு
மீட்பு இயக்கம் மாதிரி விஷ்ணு மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்கத்தான்
செய்கிறார்கள் ! "உண்டாலம்ம இவ்வுலகம்"
இன்றைய கேள்வி:
குடிமராமத்து என்றால் என்ன ?
மீண்டும் நாளை
சந்திப்போம், வணக்கம்.
01 செப் 22
No comments:
Post a Comment