Monday, August 29, 2022

KOTTAR ALIAS PAZHAYAR RIVER OF NAGERCOIL - கோட்டார் ஆறு


"கோட்டார் ஆறு"

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் !

நேற்று நாம் கோமுகி ஆறு பற்றி பார்த்தோம். இன்று நாம் கோட்டார் ஆறு பற்றி பார்க்கலாம். 

அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். கோமுகி ஆற்றின் குறுக்கே எத்தனை அணைகள் கட்டப்பட்டுள்ளன? இதுதான் என்னுடைய கேள்வி.

கோமுகி ஆற்றின் குறுக்காக செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி, உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளன.

இப்போது கோட்டார் ஆறு பற்றிப் பார்க்கலாம். கோட்டார் என்பது சேரர்கள் மற்றும் பாண்டியர்களின் வியாபார தலமாக இருந்த இடம். பஃருளி ஆற்றின் கரையில் அமைந்த ஊர்தான் கோட்டார் ஆறு. பஃருளி ஆறு என்பதும் பழையாறு என்பதும் ஒன்றுதான் என்று சொல்லுகிறார்கள்.

நாகர்கோவிலில் உள்ள மார்க்கெட் பகுதிதான் கோட்டார்  என்று சொல்லுகிறார்கள்.

மேலும் இன்றைய நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிக முக்கியமான வியாபாரத் தலம் இது என்று சொல்லுகிறார்கள். ரோம் நாட்டின் இயற்கை வரலாற்று ஆசிரியர் பிளைனி, டாக்டர் கால்டுவெல், கிரேக்க கணித மற்றும் வானவியல் வல்லுனர் தாலமி அவர்களும் கோட்டார் மிக முக்கியமான வணிகத் தளம் என்று குறிப்பிட்டு உள்ளார்கள். சோழர் காலத்து கோவில் கல்வெட்டுக்களிலும் கோட்டார் பற்றிய செய்திகள் அதிகம் காணப்படுகின்றன.

12ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் திருநெல்வேலி திருவனந்தபுரம் சாலையை கோட்டாரு பெருவழி என்றும் குறிக்கப்பட்டுள்ளது. பழையாறு மகேந்திரகிரி மலை சரிவுகளில் உற்பத்தியாகிறது. மணக்குடி என்ற இடத்தில் அரபிக் கடலில் சங்கமமாகிறது. பழையாறு ஆற்றின் நீளம் 40 கிலோமீட்டர். இதன் நீர்பிடிப்பு பரப்பு 397 சதுர கிலோமீட்டர் 

மகேந்திரகிரி மலைச் சரிவுகளில் இருந்து இறங்கும் ஓடைகள் தோவாலை, அகத்தீஸ்வரம், பகுதிகளில் ஓடி பூதப்பாண்டி, தாழக்குடி, புத்தேரி, நாகர்கோவில், சுசீந்திரம் ஆகிய பகுதிகளைக் கடந்து இறுதியாக மணக்குடி காயலில் சேர்கிறது.

 பழங்காலத்து அரசர்கள் பழையாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி நிலத்தடி நீரைச் சேமித்தார்கள்.பூதல ஷ்ரீ  உதய மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் 1517 ஆம் ஆண்டு வீரப்புலி அணை மற்றும் கால்வாய்களை அமைத்து உள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் வந்த ஒரு பெரு வெள்ளம் அந்த அணை மற்றும் கால்வாய்களை பெயர்த் தெறிந்து விட்டது என்கிறார்கள். இப்போது அந்த அணை இருந்த இடத்தில் பாலம் ஒன்றினை எழுப்பியுள்ளார்கள்.

அந்த காலத்தில் அரசர்கள் கட்டிய தடுப்பணைகள் எல்லாம் "நித்திய கண்டம் பூரண ஆயுசு" என்று தான் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். 

"இந்த காலத்து அரசர்கள் இதனை கவனிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுக்கின்றன அந்த காலத்து தடுப்பணைகள்.

 பழையாற்றின் புதிய பிரச்சனை மாசு. 

சுருளோடு முதல் புத்தேரி வரை பழையாற்றுத் தண்ணீருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. புத்தேரியில் ஆரம்பிக்கும் தலைவலி சுசீந்திரம் வரை சொல்லி மாளாது என்கிறார்கள் நாகர்கோவில் வாசிகள். நகரக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், இப்படி எல்லாவற்றையும் பழைய ஆற்றில் கொட்டி பழையாறு இன்று கழிவாறாக மாறி விட்டது என்று சொல்லுகிறார்கள்.

நாகர்கோவில் பழையாறு ஆற்றில் ஈகோலி என்னும் பாக்டீரியா 3 ஆயிரம் யூனிட் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில், ஆற்று நீரில் மூன்று யூனிட் ஈகோலி தான் இருக்கவேண்டும். 

இன்றைய கேள்வி: ஆறுகளில் கழிவுநீரை விடுவது சட்டப்படி குற்றம் என்று இந்திய அரசு, ஒரு சட்டம் கொண்டு வந்தது, அது எந்த ஆண்டு என்று சொல்லமுடியுமா ? மீண்டும் நாளை சந்திப்போம்! 

வணக்கம். 

30 ஆகஸ்ட் 22

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...