Monday, August 29, 2022

GINGEE RIVER OF VILLUPURAM - செஞ்சி ஆறு


"செஞ்சி ஆறு"  

அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !

நேற்று நாம் மேகாலயா மாநிலத்தில் ஓடுகின்ற இந்தியாவின் மிகவும் சுத்தமான நதி என்ற பெருமைக்குரிய டாவ்கி என்னும் உம்மன்காட் ஆறு  பற்றி பார்த்தோம். இன்று நாம் செஞ்சி ஆறு பற்றிப் பார்க்கலாம்.

அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். அதாவது டாவ்கி கிராமம் மாதிரி சர்வதேச அளவில் மேகாலயா மாநிலத்தில் பிரபலமான இரண்டு ஊர்கள் என்னென்ன ?

முதல் ஊர் சிரபுஞ்சி இன்னொன்று மாசின்ராம். இரண்டும் உலகிலேயே அதிக மழை பெறும் ஊர் எனும் பெருமைக்குரியது மாசின்ராம். 

அங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 11 ஆயிரத்து 782 மில்லி மீட்டர். இதற்கு முன்னர் உலகின் அதிக மழைபெறும் ஊராக இருந்தது சிரபுஞ்சி. அங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 11 ஆயிரத்து 444 மில்லிமீட்டர்.

இன்று நாம் செஞ்சி ஆறு பற்றி பார்க்கலாம். சங்கராபரணி ஆறு, வராகநதி என்பதும் செஞ்சி ஆற்றின் பெயர்கள் தான். இந்த மூன்று ஆறுகளும் ஒன்றுதான். 

செஞ்சி மலைகளில் விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தியாகி பாண்டிச்சேரிக்கு அருகே வங்கக் கடலில் சங்கமமாகிறது செஞ்சியார் ஆறு..

இந்த ஆற்றின் ஒரு பகுதி ஆறு பக்கமலைகளில் இருந்து வருகிறது. இன்னொரு பகுதி ஆறு மேல்மலையனூர் மலைகளில் இருந்து வருகிறது. இரண்டும் தென்பாலை என்ற கிராமத்தில் ஒன்று சேர்கிறது. இங்குதான் செஞ்சி ஆறாக அது மாறுகிறது. அதன்பிறகு ஊரணித்தாங்கல் என்ற கிராமத்தில் நரியாறு என்னும் துணை நதி இத்துடன் சேருகிறது. தொண்டியார் என்னும் துணைநதியும் வீடுர் அருகில் இத்துடன் சேருகிறது.

 வீடூரைத்தாண்டும் சங்கராபரணி ராதாபுரம் கிராமத்திற்கு அருகில் பம்பையார் என்ற துணை நதி இத்துடன் சேருகிறது. பின்னர் புதுவை மாநிலத்தில் நுழைகிறது. அங்கு குடுவையார் என்னும் ஆறு இத்துடன் சேருகிறது. இந்த இடத்தில் சங்கராபரணி ஆற்றை இன்னொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அதுதான் சுண்ணாம்பாறு என்பது. சுண்ணாம்பார் என்ற பெயருடன் இரண்டு கிலோ மீட்டர் ஓடும் சங்கராபரணி பின்னர் வங்கக் கடலில் சங்கமமாகிறது.

 சங்கராபரணி ஆற்றின் மொத்த நீளம் 78.5 கிலோமீட்டர். இதில் புதுவை மாநிலத்தில் 34 கிலோ மீட்டரும் தமிழ்நாட்டில் 44.5 கிலோ மீட்டரும் ஓடுகிறது.

 அன்னமங்கலம் சர்ப்ளஸ், நரியார் ஓடை, தொண்டியார், பம்பையார், பம்பை, குடுவையார்ஆகிய ஆறு ஆறுகளும் சங்கராபரணி ஆற்றின் துணையாறுகள்.

இன்றைய கேள்வி:

இந்த ஆற்றங்கரையில் உள்ள ஒரு கிராமத்தில் தான் ஒரு கல்மரப் பூங்கா அமைந்துள்ளது அந்த கல்மரப்பூங்கா எங்கு அமைந்துள்ளது

இதற்கான பதிலுடன் நாளை சந்திப்போம் ! நன்றி வணக்கம்.

28  ஆக 22

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...