"டாவ்கி உம்மன்காட் ஆறு"
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் !
நேற்று செய்யாறு பற்றி பார்த்தோம்.
இன்று மேகாலயாவில் டாவ்கி என்ற இடத்தில் உள்ள "உம்மன் காட் "என்ற ஆறு
பற்றி பார்க்கலாம். சர்வதேச அளவில் மிக சுத்தமான 10 ஆறுகளில் இதுவும் ஒன்று என தேர்வு
செய்துள்ளார்கள்.
அப்படிப் பார்த்தால் இந்தியாவில்
சுத்தமான ஆறுகள் என்று பட்டியல் போட்டால் முதல் நிலையில் வரும் ஆறு இது. இந்த
உம்மன்காட் ஆறு மேகாலயா மாநிலத்தில் டாவ்கி என்ற இடத்தில் ஓடும் ஆறு இது.
மேகாலயா மாநிலத்தில் இயற்கை
ஆர்வலர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கிறார்கள். ஓங்கி உயர்ந்த மலைகள், அவற்றுடன்
போட்டிபோடும் மரங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரியான தண்ணீர் ஓடும் ஓடைகள், ஆறுகள், திரும்பிய
பக்கமெல்லாம் மலைகளில் இருந்து இறங்கும் அருவிகள், ஏரிகள் எல்லாம் நம் மனதை மயக்கும்.
இப்படிப்பட்ட ஒரு இடம் தான் டாவ்கி என்னும் இடம்.
டாவ்கி என்பது ஒரு கிராமத்தின் பெயர்
தான். உம்மன்காட் என்பதுதான் ஆற்றின் பெயர். ஆனாலும் இந்த ஆற்றினை டாவ்கி ஆறு
என்றுதான் சொல்கிறார்கள்.
மேகாலயாவில் மேற்கு ஜெயின்ஷியா
மாவட்டத்தில் உள்ள ஊர்தான் இந்த டாவ்கி கிராமம்.
அது மட்டுமல்ல இந்தியாவில் இருந்து
வங்காளதேசத்திற்கு செல்லும் சாலை டாவ்கி கிராமம் வழியாகத்தான் போகிறது.
அதனால்தான் இந்த டாவ்கிரோடு எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்
என்கிறார்கள்.
மேலும் டாவ்கி ஆறு அந்த கிராமத்தின்
மீனவர்களுக்கு முக்கியமான வாழ்வாதாரமாக உள்ளது.
இந்த ஆற்றின் இரு பக்கமும் உள்ள
மலைகளை இணைத்தபடி ஒரு தொங்கும் பாலம் ஒன்றினை அமைத்து உள்ளார்கள். 1932ஆம் ஆண்டு
அமைக்கப்பட்ட இந்தப் பாலம், கண்ணாடி போன்ற தண்ணீர் உடைய ஆறுகள், மற்றும் கண்ணைக் கவரும் இந்த
மலைகளும்தான் இந்த கிராமத்தை ஒரு சுற்றுலாத் தலமாக மாற்றி உள்ளது.
ஷில்லாங் - டாவ்கி - 82 கி.மீ
டாவ்கிக்கு அருகில் இருக்கும் விமான நிலையம் - குவாஹாத்தி
டாவ்கிக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் - குவாஹாத்தி
குவாஹாத்தி - டாவ்கி - 173 கி.மீ.
இன்றைய கேள்வி: டாவ்கி கிராமத்தைப்
போலவே இன்னும் இரண்டு கிராமம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கிராமங்கள்
இருக்கின்றன. அவை என்னென்ன ?
மீண்டும் நாளை சந்திப்போம். நன்றி, வணக்கம்.
27ஆக22
No comments:
Post a Comment