Wednesday, August 31, 2022
RESTORATION OF ARICHANDRA RIVER
Tuesday, August 30, 2022
REJUVENATTION OF ANUMAN RIVER
"மறு உயிர் பெற்ற அனுமன் ஆறு"
அன்பு
உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம் குண்டார்ஆறு பற்றி பார்த்தோம். இன்று நாம் அனுமன் ஆறு பற்றி பார்க்கலாம்.
அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவடைந்தால் எவ்வளவு நிலப் பரப்பில் கூடுதலாக பயிர் சாகுபடி செய்யமுடியும் ?
இந்தத் திட்டம் நிறைவடைந்தால் 3 லட்சத்து 37 ஆயிரத்து 717 ஏக்கர்
நிலப்பரப்பில் கூடுதலாக பயிர் சாகுபடி செய்யலாம்.
இப்போது தென்காசி மலையில் உற்பத்தியாகும் அனுமன்நதி சிற்றாரின் ஒரு துணையாறு. அனுமன்நதி 5 ஆயிரத்து 413 அடி உயரமான மலைப் பகுதியில் உற்பத்தியாகிறது.
அங்கிருந்து
மலைச்சரிவுகளின் ஊடாக 10 கிலோ மீட்டர் பயணம் செய்து கீழே இறங்குகிறது. அதன் பிறகு அதன் துணை
ஆறான கருப்பாநதியுடன் சேர்ந்து
தாயார்தோப்பு என்ற இடம் வரை ஓடி
சிற்றாருடன் சங்கமமாகிறது.
அனுமன் நதி பயணம்
செய்யும் மொத்த தூரம் 32 கிலோமீட்டர் இந்த நதியில் அடவிநயினார் நீர்த்தேக்கம் ஒன்றை செங்கோட்டை
தாலுகாவில் மேக்கரை என்ற இடத்தில் அமைத்துள்ளார்கள்.
இந்த ஆற்றை அனுமன்
நதி என்று அழைப்பதற்கு ஒரு காரணம் உள்ளது. அனுமன் சீதையைத் தேடி ஸ்ரீலங்கா சென்ற
சமயம் இந்த ஆறு அனுமனை தடுத்து நிறுத்தியதால், அவர் அந்த ஆற்றங்கரையில்
தங்கியிருந்து அதன் பின்னர் ஸ்ரீலங்காவிற்கு சென்றதாக ஒரு கர்ண பரம்பரைக் கதை
ஒன்று சொல்லுகிறார்கள்.
அதனால் தான் இதனை அனுமன்நதி என்று
சொல்கிறார்கள்.
நம் அனுமான் ஆறு சிலகாலம் கவனிப்பாரற்று போனதனால் தனிநபர்களின் ஆக்கிரமிப்பினால் ஏகப்பட்ட ஏரிகளும் குளங்களும் வறண்டு போயின.
இதனால் அனுமன்
நதியின் தயவினால் செய்த பயிர் சாகுபடி சுமார் 30 ஆண்டுகளாக
நடைபெறாமல் போனது. சமீபத்தில் "நம் அனுமன் ஆறு மீட்பு இயக்கம்", என்று பொதுமக்கள்
ஒரு சங்கத்தை உருவாக்கி அதன்மூலம் குடிமராமத்து முறையில் அதனை சீர்செய்ய, செப்பனிட உதவினார்கள். குறிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்ற உதவினார்கள் என்று சொல்லுகிறார்கள்.
அதுபோல இந்த
பகுதியில் பணியாற்றிய மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு அவர்களின் முயற்சியினால்
அனுமன்நதி மீண்டும் மறு உயிர் பெற்றுள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
அதுமட்டுமல்ல 10 ஆயிரம் ஏக்கர்
நிலப்பரப்பில் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பயிர் சாகுபடி மீண்டு வந்து உள்ளது
என்கிறார்கள்.
நம் அனுமன் ஆறு
மீட்பு இயக்கம் மாதிரி விஷ்ணு மாதிரி மனிதர்கள் இன்னும் இருக்கத்தான்
செய்கிறார்கள் ! "உண்டாலம்ம இவ்வுலகம்"
இன்றைய கேள்வி:
குடிமராமத்து என்றால் என்ன ?
மீண்டும் நாளை
சந்திப்போம், வணக்கம்.
01 செப் 22
KUNDAR CAUVERY INTERLINKING - குண்டார்ஆறு காவிரி ஆறு இணைப்பு
குண்டார்ஆறு காவிரி ஆறு
இணைப்பு
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
நேற்று
திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடும் கடனாநதி பற்றி பார்த்தோம். இன்று குண்டார் ஆறு
பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னர் நேற்றைய கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம்.
கடனாநதி திருநெல்வேலியில் ஓடுகிறது என்று பார்த்தோம். கடனா டேம் என்ற பெயரில்
அணைக்கட்டு ஒன்று குஜராத் மாநிலத்தில் இருக்கிறது என்பதையும் பார்த்தோம். இந்த
அணைக்கட்டு எந்த ஆற்றின் மீது
கட்டப்பட்டுள்ளது ? என்பதுதான் எனது
கேள்வி. குஜராத் மாநிலத்தில் மாஹி என்ற நதியின் மீது இந்த அணை கட்டப்பட்டுள்ளது.
இப்போது குண்டாறு
பற்றி பார்க்கலாம். குண்டார்ஆறு
சதுரகிரி மலையில் உற்பத்தியாகி
திருமங்கலம் கமுதி வழியாக பயணம் செய்து வங்காள விரிகுடாக் கடலில் சங்கமமாகிறது.
பொதுவாக குண்டார் என்றால் அது விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு உரிய ஆறு
என்று சொல்லலாம்.
2021 ஆம் ஆண்டு காவிரி, தெற்கு வெள்ளாறு, வைகை, மற்றும் குண்டார்
ஆற்றினை இணைக்கும் ஒரு அற்புதமான திட்டம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டது. இதன் முதல்
கட்டமாக காவேரியில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை 118.45 கிலோமீட்டர் நீளத்திற்கு இணைப்புக் கால்வாய்
வெட்டத் திட்டமிட்டார்கள். இதற்காக ஆகும் திட்ட நிதியை நபார்டு வங்கி இருந்து
பெறவும் திட்டமிடப்பட்டது.
இப்படி இந்த ஆறுகளை
இணைக்கும் கோரிக்கை வெள்ளைக்காரர்கள் ஆட்சி காலத்திலிருந்து இருந்ததாகச்
சொல்கிறார்கள்.
வாட்டர் ரிசோர்சஸ் டிபார்ட்மெண்ட் அதிகாரிகளின் கருத்துப்படி இந்த காவிரி வைகை குண்டாறு இணைப்புக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள். இந்த திட்டப்படி 255.60 கிலோமீட்டர் கால்வாய் ஒன்றினை அமைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இந்த கால்வாய்
கரூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம்
மற்றும் விருதுநகர் வழியாக அமைய உள்ளது. இதன் மூலம் இப்பகுதி மக்களின் விவசாயத்
தேவை, குடிநீர்த் தேவை மற்றும் தொழிற்சாலைகளில் நீர்த் தேவையும் பூர்த்தி
செய்ய இயலும் என்றும் தெரிகிறது.
இன்றைய கேள்வி:
இந்த காவிரி வைகை குண்டாறு இணைப்புத் திட்டம் முழுமையாக நிறைவடைந்தால் எவ்வளவு
பரப்பு சாகுபடிக்கு உதவும் ?
மீண்டும் நாளை
சந்திக்கலாம்,வணக்கம்.
31ஆக 22
Monday, August 29, 2022
KADANA RIVER OF THIRUNELVELI - கடனாநதி
"கடனாநதி"
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம்
கோட்டார் ஆறு எனும் பழையாறு பற்றி பார்த்தோம். இன்று நாம் திருநெல்வேலி
மாவட்டத்திற்கு உரிய கடனாநதி என்னும் ஆறு பற்றி பார்க்கலாம். அதற்கு முன்னால்
நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். ஆறுகளில் கழிவுகளை சேர்ப்பது சட்டப்படி
தடை செய்யப்பட்டுள்ளது என்ற சட்டம் எந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது ? இந்த சட்டம் கொண்டு
வந்தது 1986 ஆம் ஆண்டு. இந்த சட்டத்தின் பெயர் "என்விரான்மெண்ட்
புரோட்டெக்க்ஷன் ஆக்ட்"
அடுத்து கடனாநதி
பற்றி பார்க்கலாம். பொதிகை மலை என்னும் அகத்திய மலையில் உருவாகி திருநெல்வேலி
மாவட்டத்தில் ஓடும் நதி இது. திருப்புடை மருதூர் என்னும் இடத்தில் இது
சங்கமமாகிறது.
மொத்தம் 43 கிலோ மீட்டர் தூரம்
ஓடும் கடனாநதிக்கு ஐந்து துணை ஆறுகள் உள்ளன. அவை கல்லார், கருணையார், வீராநதி, ஜம்புநதி மற்றும்
ராமா நதி.
அரசப்பட்டு, ஆழ்வார்குறிச்சி, தென்கல், காங்கேயன், மஞ்சப்பள்ளி, காக்கவள்ளூர், காங்கேயன் ஆகிய
அணைக்கட்டுகள் இந்த கடனாநதியில் கட்டப்பட்டுள்ளன.
சிவசைலம் என்னும் கிராமத்திற்கு
அருகிலுள்ள கடனா நதி நீர் தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கியமான
சுற்றுலாத் தலமாக அமைந்துள்ளது. ஆழ்வார்குறிச்சி அருகில் அமைந்துள்ளது இந்த
கடனாநதி நீர்த்தேக்கம். நிறைய அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா தளமாக
இது மாறியுள்ளது.
கடனாநதி ஆறு தனது
ஆறு அணைக்கட்டுகளில் மூலம் உற்பத்தி 38.87 சதுர கிலோமீட்டர் பயிர் சாகுபடிப்
பரப்புக்கு பாசன நீரை அளிக்கிறது.
இன்றைய கேள்வி: "கடனாடேம்" என்ற பெயரில் ஒரு அணைக்கட்டு குஜராத் மாநிலத்தில்
உள்ளது, அந்த அணைக்கட்டு எந்த நதியின் மீது கட்டப்பட்டுள்ளது ?
அன்பின் இனிய
நண்பர்களே ! மீண்டும் நாளை சந்திப்போம். வணக்கம் !
31ஆகஸ்டு 22
KOTTAR ALIAS PAZHAYAR RIVER OF NAGERCOIL - கோட்டார் ஆறு
"கோட்டார் ஆறு"
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமிஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம் கோமுகி ஆறு பற்றி
பார்த்தோம். இன்று நாம் கோட்டார் ஆறு பற்றி பார்க்கலாம்.
அதற்கு முன்னால் நேற்றைய கேள்விக்கான
பதிலை பார்க்கலாம். கோமுகி ஆற்றின் குறுக்கே எத்தனை அணைகள் கட்டப்பட்டுள்ளன? இதுதான் என்னுடைய
கேள்வி.
கோமுகி ஆற்றின் குறுக்காக
செம்படாகுறிச்சி, சோமண்டார்குடி,
உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள்
கட்டப்பட்டுள்ளன.
இப்போது கோட்டார் ஆறு பற்றிப்
பார்க்கலாம். கோட்டார் என்பது சேரர்கள் மற்றும் பாண்டியர்களின் வியாபார தலமாக
இருந்த இடம். பஃருளி ஆற்றின் கரையில் அமைந்த ஊர்தான் கோட்டார் ஆறு. பஃருளி ஆறு
என்பதும் பழையாறு என்பதும் ஒன்றுதான் என்று சொல்லுகிறார்கள்.
நாகர்கோவிலில் உள்ள மார்க்கெட்
பகுதிதான் கோட்டார் என்று சொல்லுகிறார்கள்.
மேலும் இன்றைய நிலையில் கன்னியாகுமரி
மாவட்டத்தில் மிக முக்கியமான வியாபாரத் தலம் இது என்று சொல்லுகிறார்கள். ரோம்
நாட்டின் இயற்கை வரலாற்று ஆசிரியர் பிளைனி, டாக்டர் கால்டுவெல், கிரேக்க கணித
மற்றும் வானவியல் வல்லுனர் தாலமி அவர்களும் கோட்டார் மிக முக்கியமான வணிகத் தளம்
என்று குறிப்பிட்டு உள்ளார்கள். சோழர் காலத்து கோவில் கல்வெட்டுக்களிலும் கோட்டார்
பற்றிய செய்திகள் அதிகம் காணப்படுகின்றன.
12ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்றில் திருநெல்வேலி திருவனந்தபுரம் சாலையை கோட்டாரு பெருவழி என்றும் குறிக்கப்பட்டுள்ளது. பழையாறு மகேந்திரகிரி மலை சரிவுகளில் உற்பத்தியாகிறது. மணக்குடி என்ற இடத்தில் அரபிக் கடலில் சங்கமமாகிறது. பழையாறு ஆற்றின் நீளம் 40 கிலோமீட்டர். இதன் நீர்பிடிப்பு பரப்பு 397 சதுர கிலோமீட்டர்
மகேந்திரகிரி மலைச் சரிவுகளில்
இருந்து இறங்கும் ஓடைகள் தோவாலை,
அகத்தீஸ்வரம், பகுதிகளில் ஓடி
பூதப்பாண்டி, தாழக்குடி, புத்தேரி, நாகர்கோவில்,
சுசீந்திரம் ஆகிய பகுதிகளைக் கடந்து
இறுதியாக மணக்குடி காயலில் சேர்கிறது.
பழங்காலத்து அரசர்கள் பழையாற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி
நிலத்தடி நீரைச் சேமித்தார்கள்.பூதல ஷ்ரீ உதய மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் 1517 ஆம் ஆண்டு
வீரப்புலி அணை மற்றும் கால்வாய்களை அமைத்து உள்ளார். நாற்பது ஆண்டுகளுக்கு
முன்னால் வந்த ஒரு பெரு வெள்ளம் அந்த அணை மற்றும் கால்வாய்களை பெயர்த் தெறிந்து
விட்டது என்கிறார்கள். இப்போது அந்த அணை இருந்த இடத்தில் பாலம் ஒன்றினை
எழுப்பியுள்ளார்கள்.
அந்த காலத்தில் அரசர்கள் கட்டிய தடுப்பணைகள்
எல்லாம் "நித்திய கண்டம் பூரண ஆயுசு" என்று தான் இருப்பதாகச்
சொல்லுகிறார்கள்.
"இந்த காலத்து அரசர்கள் இதனை கவனிக்க வேண்டும்" என்று கோரிக்கை
விடுக்கின்றன அந்த காலத்து தடுப்பணைகள்.
பழையாற்றின் புதிய பிரச்சனை மாசு.
சுருளோடு முதல் புத்தேரி வரை பழையாற்றுத்
தண்ணீருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. புத்தேரியில் ஆரம்பிக்கும் தலைவலி
சுசீந்திரம் வரை சொல்லி மாளாது என்கிறார்கள் நாகர்கோவில் வாசிகள். நகரக் கழிவுகள், மருத்துவ கழிவுகள், இப்படி
எல்லாவற்றையும் பழைய ஆற்றில் கொட்டி பழையாறு இன்று கழிவாறாக மாறி விட்டது என்று
சொல்லுகிறார்கள்.
நாகர்கோவில் பழையாறு ஆற்றில் ஈகோலி
என்னும் பாக்டீரியா 3 ஆயிரம் யூனிட் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் சர்வதேச அளவில், ஆற்று நீரில்
மூன்று யூனிட் ஈகோலி தான் இருக்கவேண்டும்.
இன்றைய கேள்வி: ஆறுகளில் கழிவுநீரை
விடுவது சட்டப்படி குற்றம் என்று இந்திய அரசு, ஒரு சட்டம் கொண்டு வந்தது, அது எந்த ஆண்டு
என்று சொல்லமுடியுமா ? மீண்டும் நாளை சந்திப்போம்!
வணக்கம்.
30 ஆகஸ்ட் 22
GOMUKHI RIVER OF KALLAKURICHI - கோமுகி ஆறு
"கோமுகி ஆறு"
அன்பு உடன்
பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
கோமுகி ஆறு
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உரிய ஆறு. கள்ளக்குறிச்சி திருக்கோயிலூர் மற்றும்
உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் ஓடும் ஆறு இது.
கல்படை, பொட்டியம், மல்லிப்பொடி, பரங்கிநத்தம், ஆகியவை இதன்
துணையாறுகள். கல்வராயன் மலையில் பெய்யும் மழை இந்த துணை ஆறுகள் மூலம் கோமுகி
அணையில் வந்து சேர்கின்றன. இந்த அணையில் இருந்துதான் கோமுகி ஆறு உற்பத்தியாகிறது.
கோமுகி அணை
கல்ராயன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த நீர்ப்பரப்பு 360 எக்டர். இதன் மூலம்
பாசனம் பெறும் நிலப்பரப்பு 2024.29
எக்டர். இதற்காக இந்த அணையில் இருந்து
8 ஆயிரத்து 917 மீட்டர் தூரத்திற்கு கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பெரியார் அருவி, மேகம் அருவி, வெள்ளி அருவி, ஆகியவை சுற்றுலாப்
பயணிகளை கவர்ந்திழுக்கும் கல்ராயன் மலை அருவிகள். நல்லூர் கிராமத்தில் மணிமுத்தா
நதியுடன் கலக்கிறது. ஆற்றின் குறுக்காக 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளன.
கோமுகி ஆற்றின் மூலம் 40 ஏரிகள் தண்ணீர் பெறுகின்றன. 5860 எக்டர் நிலப்பரப்பில் பயிர் சாகுபடி
நடைபெறுகிறது.
புதிய கால்வாய்
பாசனத்தின் மூலம் மண்மலை, மாத்தூர், கரடிசித்தூர்,
மாதவச்சேரி உள்ளிட்ட கிராமங்களில்
சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
அடுத்து, உங்களுக்கு இன்றைய
கேள்வி: கோமுகி ஆற்றின் குறுக்கே எத்தனை அணைகள் உள்ளன என்று சொல்லமுடியுமா ?
மீண்டும் நாளை
சந்திப்போம், வணக்கம் !
29 ஆகஸ்ட் 22
GINGEE RIVER OF VILLUPURAM - செஞ்சி ஆறு
"செஞ்சி ஆறு"
அன்பு உடன்பிறப்புகளுக்கு பூமி ஞானசூரியன் வணக்கம் !
நேற்று நாம்
மேகாலயா மாநிலத்தில் ஓடுகின்ற இந்தியாவின் மிகவும் சுத்தமான நதி என்ற
பெருமைக்குரிய டாவ்கி என்னும் உம்மன்காட் ஆறு பற்றி பார்த்தோம். இன்று நாம் செஞ்சி
ஆறு பற்றிப் பார்க்கலாம்.
அதற்கு முன்னால்
நேற்றைய கேள்விக்கான பதிலை பார்க்கலாம். அதாவது டாவ்கி கிராமம் மாதிரி சர்வதேச
அளவில் மேகாலயா மாநிலத்தில் பிரபலமான இரண்டு ஊர்கள் என்னென்ன ?
முதல் ஊர்
சிரபுஞ்சி இன்னொன்று மாசின்ராம். இரண்டும் உலகிலேயே அதிக மழை பெறும் ஊர் எனும் பெருமைக்குரியது
மாசின்ராம்.
அங்கு கிடைக்கும்
ஆண்டு சராசரி மழை 11 ஆயிரத்து 782 மில்லி மீட்டர். இதற்கு முன்னர் உலகின் அதிக மழைபெறும் ஊராக
இருந்தது சிரபுஞ்சி. அங்கு கிடைக்கும் ஆண்டு சராசரி மழை 11 ஆயிரத்து 444 மில்லிமீட்டர்.
இன்று நாம் செஞ்சி
ஆறு பற்றி பார்க்கலாம். சங்கராபரணி ஆறு, வராகநதி என்பதும் செஞ்சி ஆற்றின்
பெயர்கள் தான். இந்த மூன்று ஆறுகளும் ஒன்றுதான்.
செஞ்சி மலைகளில்
விழுப்புரம் மாவட்டத்தில் உற்பத்தியாகி பாண்டிச்சேரிக்கு அருகே வங்கக் கடலில்
சங்கமமாகிறது செஞ்சியார் ஆறு..
இந்த ஆற்றின் ஒரு
பகுதி ஆறு பக்கமலைகளில் இருந்து வருகிறது. இன்னொரு பகுதி ஆறு மேல்மலையனூர்
மலைகளில் இருந்து வருகிறது. இரண்டும் தென்பாலை என்ற கிராமத்தில் ஒன்று சேர்கிறது.
இங்குதான் செஞ்சி ஆறாக அது மாறுகிறது. அதன்பிறகு ஊரணித்தாங்கல் என்ற கிராமத்தில் நரியாறு என்னும் துணை நதி இத்துடன் சேருகிறது. தொண்டியார் என்னும்
துணைநதியும் வீடுர் அருகில் இத்துடன் சேருகிறது.
வீடூரைத்தாண்டும் சங்கராபரணி
ராதாபுரம் கிராமத்திற்கு அருகில் பம்பையார் என்ற துணை நதி இத்துடன் சேருகிறது.
பின்னர் புதுவை மாநிலத்தில் நுழைகிறது. அங்கு குடுவையார் என்னும் ஆறு இத்துடன்
சேருகிறது. இந்த இடத்தில் சங்கராபரணி ஆற்றை இன்னொரு பெயர் சொல்லி அழைக்கிறார்கள்.
அதுதான் சுண்ணாம்பாறு என்பது. சுண்ணாம்பார் என்ற பெயருடன் இரண்டு கிலோ மீட்டர்
ஓடும் சங்கராபரணி பின்னர் வங்கக் கடலில் சங்கமமாகிறது.
சங்கராபரணி ஆற்றின் மொத்த நீளம் 78.5 கிலோமீட்டர். இதில்
புதுவை மாநிலத்தில் 34 கிலோ மீட்டரும் தமிழ்நாட்டில் 44.5 கிலோ மீட்டரும் ஓடுகிறது.
அன்னமங்கலம் சர்ப்ளஸ், நரியார் ஓடை, தொண்டியார், பம்பையார், பம்பை, குடுவையார்ஆகிய ஆறு
ஆறுகளும் சங்கராபரணி ஆற்றின் துணையாறுகள்.
இன்றைய கேள்வி:
இந்த ஆற்றங்கரையில்
உள்ள ஒரு கிராமத்தில் தான் ஒரு கல்மரப் பூங்கா அமைந்துள்ளது அந்த கல்மரப்பூங்கா
எங்கு அமைந்துள்ளது?
இதற்கான பதிலுடன்
நாளை சந்திப்போம் ! நன்றி வணக்கம்.
28 ஆக 22
INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
ஜெய் ஜவான் ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...
-
ஞானசூரியன் கதைகள் ( சில கதைகளின் தோள்மீது மட்டும்தான் கைபோட்டுக்கொண்டு ஜாலியாய் நடந்து போகலாம். அதுபோன்ற வகையறாவைச் சேர்ந்த கதை இ...
-
துரிஞ்சி வீட்டுத்தோட்ட ஷாம்பு மரம் THURINJI HOME GARDEN HAIR CARE TREE பொதுப்பெயர் : துர...