Wednesday, August 4, 2021

YELLOW BELLS, TECOMA STANS, FLOWER TREE, BIGNONIACEAE , தங்க அரளி அழகு பூமரம்

 

தங்க அரளி

TECOMA STANS, BIGNONIACEAE

YELLOW BELLS, YELLOW TRUMPET, YELLOW ELDER

 My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

சிறப்பு, தென் அமெரிக்க மரமாக இருந்தாலும் இந்தியா முழுக்க உள்ளுர் மரம் போல வீட்டுக்கு வீடு காணப்படுவது, சீக்கிரமாய் வளர்வது, ஆண்டு முழுவதும் பூப்பது, அரைத்த மஞ்சள் நிறத்தில் கவர்ச்சிகாட்டுவதுகொளுத்தும் வெப்பத்தைத் தாங்குவது, தாக்கும் பூச்சி நோய்களைத் தாக்குப் பிடிப்பது, குறைவான நிலப்பரப்பில் தன்னை வளர்த்துக் கொள்வது, வானத்தைத் தொட்டுவிட துடிக்காமல் 15 முதல் 20 உயரத்திற்கு வளர்ந்து அடக்கி வாசிப்பது, சிம்புகளை கிளைகளை எவ்வளவு கழித்தாலும் கவலைப்படாமல் தொடர்ந்து வளர்வது, இதெல்லாம்தான்.


கரிபியன் கடலின் விர்ஜின்தீவு மரம்

சொந்த மண், அமெரிக்காவின் விர்ஜின் தீவுகள். அந்தத் தீவின் அரசு மரம். கரிபியன் கடலில் இருக்கும் தீவுகளுக்கு, கரிபியன் தீவுகள் என்று பெயர். கரிபியனில் உள்ள இன்னொரு கொத்து தீவுகள்தான் விர்ஜின் தீவுகள். இதற்கு ஒரு சிறப்பு உண்டு. இவற்றிற்கு பெயர் வைத்தது  கிறிஸ்டோபர் கொலம்பஸ்.

அடி முதல் முடிவரை மருந்தாகிறது

இது ஒரு மூலிகையாக பயன்படுகிறது. சிறுநீர்ப் பெருக்கியாக உடல் உரமூட்டியாக, மேகப்புண் நோய் நீக்கியாக, சக்கரைநோய் தடுப்பாக, குடற்புழுக் கொல்லியாக இதன் இலை, பட்டை, பூ, காய், வேர் என அடி முதல் முடிவரை மருந்தாகிறது.

மேக்சிகோவைச் சேர்ந்த வளைகுடா நாடு வேராகுரூஸ். இங்கு தங்க அரளியின் பூக்கள் மற்றும் பட்டைகளிலிருந்து எடுக்கும் சாற்றை வயிற்றுவலிக்கு மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

குவாதலஜரா (புறுயுனுயுடுயுதுயுசுயு) என்னுமிடத்தில் இதன் வேர்களில் பீர் தயாரிக்கிறார்கள். எந்த வேர்கொடுத்தாலும் அதில் பீர் தயார்பண்ணிவிடுவார்கள் மெக்சிகோக்காரர்கள்.  மெக்சிகோ, மத்திய அமேரிக்கா, மற்றும் தென் அமெரிக்காவில் சக்கரை நோயை குணப்படுத்தவும் இது  பயன்படுகிறது.  

பல மொழிப் பெயர்கள்

தமிழில்  தங்க அரளி, சொர்ணப்பட்டி, இந்தியில் பிலியா (PILIYA), சோனாப்பட்டி கன்னடத்தில் கோரநேக்லார் (KORANECHELLAR), தெலுங்கில் பச்சகோட்லா (PACHAKOTLA),

தாவரவியல் பெயர்   டெக்கோமா ஸ்டேன்ஸ் (TECOMA STANS), தாவரக் குடும்பத்தின் பெயர் பிக்னோனியேசி (BIGNONIACEAE)

பொதுப்பெயர் அல்லது ஆங்கிலப்பெயர்: எல்லோ பெல்ஸ், எல்லோ டிரம்பட், எல்லோ எல்டர்  (YELLOW BELLS, YELLOW TRUMPET, YELLOW ELDER)

மயில்கொன்றைக்கு அடுத்து தங்க அரளியா ?

தங்க அரளி அதிகம் பரவி உள்ள நாடுகள், இந்தியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, மற்றும் மெக்சிகோ.

தங்க அரளி எனக்கு அறிமுகமான விதம் வித்தியாசமானது. 1970 களில் எனது சகோதரி ராணிமேரி கல்லூரியிலிருந்து இந்த விதையை கொண்டுவந்து போட்டார். அடுத்த ஆறு மாதத்தில் எங்கள் தோட்டம் முழுக்க தங்க அரளி  பூக்கள்தான்.

அந்த சமயம் எங்கள் ஊர்ப்பக்கம் வேறு எங்கும் அந்த மரம் கிடையாது. மரமும் புதுசு, அந்தப்பூவும் புதுசு. அந்தப் பக்கம் யார் வந்தாலும் என்ன பூ தம்பிஎன்று என்னிடம் கேட்பார்கள். உடனே சொல்வேன் விண்ட் டிஸ்பெர்சல்என்று. ங்கள் அக்கா எங்களுக்கு  சொன்ன பெயர் அதுதான்.

அதற்கு காற்றின் மூலம் பரவும் விதை என்ற அர்த்தம் அப்போது எனக்குத் தெரியாது. ஆனால் அந்த அர்த்தம் தெரிந்த பின்னாலும் கூட நாங்கள் அதே பெயரிலேயே அழைத்து வந்தோம். சமீபத்தில்தான் எனக்குத் தெரியும், தங்க அரளி, வெளிநாட்டு மரம் என்று.

எனக்குத் தெரிந்து அழகுக்காக அதிகம் வளர்க்கும் மரம் மயில்கொன்றைதான். ஆனால் அதைவிட இன்று வீட்டுத் தோட்டங்களில் அதிகம் தென்படும் மரம் தங்க அரளிதான்.

தேனீக்கள் கிரிவலம் வரும் மரம்

பாக்கட் சைஸ் தாஜ்மகால் என்பதுபோல இதுவும் ஒரு பாக்கட் சைஸ் மரமதான். முகத்துப் பக்கம், முதுகுப் பக்கம், இடக்கை பக்கம், வலக்கை பக்கம், கதவுப்பக்கம், ஜன்னல்பக்கம் என உள்ளங்கை ளவு இடம் இருந்தால் கூட உள்ளளபடியே ஒரு மரம் நடலாம்.

எங்கள் சமையலறை ஜன்னலில் கூட ஒரு தங்க அரளி எப்போதும் ஒரு ஆயிரம் பூக்களுடன் ஹாய் சொல்லிக் கொண்டிருக்கும். ஒரு தேன்சிட்டு, ஒரு பட்டாம்பூச்சி, ஒரு தும்பி, ஐந்தாறு தேனீக்கள், என்று எப்போதும் அந்த மரத்தைச்சுற்றி கிரிவலம் வந்துகொண்டிருக்கும்.

மரம், காவி நிறத்தில் இருக்கும். பெட்டிகள் செய்யலாம். சிறு கருவிகள் செய்யலாம். கட்டிட கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தலாம், நாட்பட உழைக்கும்.

நெற்றுக்கள்,  எட்டு அங்குல நீளத்தில் அகலம் குறைந்த அவரைக்காய் மாதிரி சாக்லட், நிறத்தில் இருக்கும். நெற்றுக்களில் சிறகு வைத்த விதைகள் வெடித்துச் சிதறி பறந்துபோகும்.

சில மண்ணில் நீர் கோர்த்துக்கொண்டு வடியமாட்டேன்’  என அடம் பிடிக்கும். அப்படிப்பட்ட மண்கண்டம் இதற்கு சரிவராது. அதுபோல இந்த மரத்திற்கு தண்ணீர் கட்ட வேண்டாம், காட்டினால் போதும்.

தானாக வளர்ந்தால் அது காட்டுப்பூ மரம். நாமாக வளர்த்தால் அழகுப் பூமரம். சூரியன் சுடுகதிர் வீசும் இடத்திலும் வளரும். சூரியன் முகம் காட்டும் இடத்திலும் முகம் சுளிக்காமல் வளரும்.

ஆச்சர்யமான செய்தி, கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தனி அழகு, எப்போதும் கொத்து கொத்தாய் ரோல்ட் கோல்ட்பூக்களைச் சூடிக்கொண்டிருப்பதுதான்.

வேலிகளையே பூமரத்தால் அலங்கரிக்க விரும்புவர்களுக்கும், உள்ளங்கை அளவில் தோட்டம் வைத்திருப்பவர்களுக்கும் கைக்கெட்டும் தொலைவில் ஒரு தங்க அரளியை நட நான் சிபாரிசு செய்கிறேன். 


Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources. 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...