Monday, August 2, 2021

நெல்லி PHYLLANTHUS EMBLICA, INDIAN GOOSE BERRY, EMBLIC MYROBALAN, MALACCA TREE

 


 நெல்லி

PHYLLANTHUS EMBLICA

 INDIAN GOOSE BERRY, EMBLIC MYROBALAN, 

MALACCA TREE


உலகில் எத்தனையொ கனி வகை உண்டு. கனிதோறும் ஒரு தனி ருசி உண்டு. பரவலாக பழங்கள் என்றாலே இனிக்கும். அதுதான் இந்த பிரபஞ்ச விதி;

 

அந்த இனிப்பிலேயே பல தினுசுகள் இருக்கும். சில பழங்கள் ஈடுஇணை இல்லா இனிப்பாக இருக்கும். சில சுமார் ரகமாக இருக்கும். சில கடமைக்கு இனிக்கும். சில சப்பென்று இருக்கும். சிலவற்றில் துவர்ப்பு கலந்திருக்கும். சிலவற்றில் புளிப்பு கலந்திருக்கும்;;. சிலவற்றில் புளிப்பு மட்டுமே  இருக்கும்.

 

பெருநெல்லி பெரும்பாலும் சிறியது முதல் பெரிய அளவு வளரும் பழ மரம். பழமரம் என்பதைவிட அதை ஒரு மூலிகை மரம் என்பது பொருத்தமானது.

 

அவ்வைக்கு அதியமான் தந்த கனி

அதிகபட்சம் எட்டு மீட்டர் உயரம் கூட வளரும். பெருநெல்லிக்கனிகள் எலிமிச்சம் பழங்களைவிட கொஞ்சம் சிறுசாய் இருக்கும். புதிதாக கண்டுபிடித்து சந்தைக்கு வரும் ரகங்கள் எல்லாம் அதற்கு சமமாகக்கூட உள்ளன. கனிகளின் வெளிப்புறம் பள்ளமான கோடுகளால் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

 

தகடுர்சீமை என்பது தர்மபுரியின் பழைய பெயர். தகடுர்சீமையை ஆண்ட பிரபலமான அரசன் அதியமான். தமிழ்நாட்டின் பிரபலமான தமிழ்ப்புலவர் ஒளவையார். மன்னா நீ பலநூறு ஆண்டுகள் வாழ உன்னை வாழ்த்துகிறேன்என்று அதியமானை வாழ்த்தி நெல்லிக்கனிகளை ஒளவையார் பரிசாகக் கொடுத்தது தமிழ் சரித்திரத்தின் பிரபலமான சம்பவம்.

 

நெல்லிக்கனியை சாப்பிட்டு வருபவர்கள் நெடுநாள் வாழ்வார்கள் என்பது பழந்தமிழர் நம்பிக்கை. பல்வேறு மருத்துவ முறைகளும் நவீன அறிவியல் ஆராய்ச்சிகளும் கூட இதனை உறுதி செய்கின்றன.

 

தமிழ்நட்டில் பெருநெல்லி ஊறுகாய் பிரதான ஊறுகாய். சமீபகாலமாய் இந்த பழங்கள் தேனில் ஊறவைத்து உலரவைத்து இனிப்பத் தின்பண்டமாய் உலா வருகிறது. இதன் அருமை பெருமைகளை உணர்ந்தவர்கள் வற்றலாக உலர்த்தி நெடுநாளைக்கு வைத்துப் பயன்படுத்துகிறார்கள்.

 

பேரரசர் அசோகர்.பரிசாக பெற்ற கனி

பாராட்டுக்குரிய சாதனைகளைச் செய்த புத்த மதச் சாதனையாளர்களுக்கு உயர்ந்தபட்ச பரிசுப் பொருளாக நெல்லிக்கனியை தருவது வழக்கம்.

 

அதுகூட முழுநெல்லிக்காய் அல்ல, சரியாக பாதி நெல்லிக்காய். அப்படி பாதி நெல்லிக்காய் பரிசு பெற்றவர், மவுரியப்பேரரசனாக அறியப்பெற்று புத்த மதத்தை இந்த உலகில் பரப்பியதில் பெரும் பங்காற்றி தன்னை புத்த மதத்தோடு ஐக்கியப்படுத்திக்கொண்ட பேரரசர் அசோகர்.

 

இந்தியப் பெருந்தேசத்திற்கே பேரரசானான வீற்றிருந்த அசோகச்சக்கரவர்த்தி கடைசியாக அரைநெல்லிக்காய்க்கு அதிபதி ஆனார் என்று பாரட்டுகிறது, அசோகவதனா என்னும் நூல். அசோகச் சக்கரவர்த்தியின் வாழ்க்கைச் சரித்திரம்தான் அசோகவதனா என்பது.

 

பெருநெல்லி பழமரம் மருத்துவத்தில் ஒரு கிழமரம்.

பெருநெல்லி ஒரு பழ மரம் என்றாலும் மருத்துவத்தைப் பொருத்தவரை அது ஒரு கிழமரம். பல நூறு ஆண்டுகளாக சித்தவைத்தியம். ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவம் என எல்லா மருத்துவ முறைகளும் பெருநெல்லியை பெருங்குத்தகை எடுத்துள்ள மரம் எனலாம்.

 

பெரு நெல்லியின் ஒருபாகத்தையும் விட்டுவிடாமல் அடி முதல் முடி வரை பயன்படுத்தப்படுகிறது. மனித உடலில் ஏற்படுத்தும்; பல

நோய்களையும் குணப்படுத்தும் சக்தி உடையது பெருநெல்லி. அவை, அஜீரணம், மலச்சிக்கல், காய்ச்சல், ரத்தம் அசுத்தமடைதல்,

 

இருமல், ஆஸ்துமா, இதயம் பலவீனம் அடைதல், கண்பார்வை மங்குதல், தலைமுடி கொட்டுதல், போன்றவற்றை சரி செய்து புத்திக் கூர்மையை மேம்படுத்தி, இளமையை மீட்கும் அபூர்வமான காரியங்களை எல்லாம் செய்யவல்லது பெருநெல்லி.

 

கூந்தல்தைலம் மற்றும் ஷாம்புகளில் நெல்லிக்கனியை பிரதானமாகப் பயன்படுத்துவது ஊரறிந்தசேதி. எழுதும் மை இங்க் தயார்செய்யக்கூட பயனாகிறது.

 

நெல்லிக்காயில் டேனின் சத்து அதிகமாய் உள்ளது. அதனால்தான் சாயங்களை துணிகளில் ஏற்றும்போது அவை நன்றாக பொருந்துவதற்காகக்கூட இதனைப் பயன்படுத்துகிறார்கள். இதனை மார்டெண்ட்  என அழைக்கிறார்கள்.

 

கோவில் கட்டுமானத்தில் நெல்லிக்காய்

ஒரு நம்பமுடியாத செய்தி ! முக்கியமான செய்தியும் கூட !  இந்தியக் கோயில்கள் கட்டுமானத்தில் ஒரு முக்கியமான இடத்தில் நெல்லிக்காயின் வடிவத்தைப் பயன்படுத்துகிறார்கள். கோயிலின் உச்சிப்பகுதியை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் ? யோசித்துப் பாருங்கள்.

 

நான் சொல்லுவது கலசத்திற்குக் கீழே. அதனை அமலக்கா என்பார்கள். அமலக்காவின் மேல் கலசம் மட்டுமே அமர்ந்திருக்கும். குப்தர்களின் பொற்காலத்திலும், கலிங்கர்களின் ஆடசிக் காலத்திலும் அமலக்கா புழக்கத்தில் இருந்தது. ஆனால் தென்னிந்திய கோவில் கட்டுமானக் கலையில் இந்த அமலக்கா இல்லை. அது தனித்துவம் பெற்றதாக இருந்தது.

 

மரம் சிவப்பு நிற மரம், வேளாண் கருவிகள் செய்ய, மேஜை நாற்காலிகள்,    தூண்கள் செய்ய, காகிதம் தயாரிக்கலாம். அடுப்பெரிக்க அற்புதமான விறகாகும்.

 

வீசும் காற்றின் வேகத்தைத் தடுக்கும், தூசியினை வடிகட்டும் மற்றும் காற்றை தூய்மைப்படுத்தும்.

 

ஏகப்பட்ட விவசாயிகள் ஏக்கர் கணக்கில் பெருநெல்லியை சாகுபடி செய்கிறார்கள். ஒட்டு ரகங்கள் பல வந்துள்ளன. அவை சாக்கியா, பனாரசி, பவானிசாகர், நரேந்திரா, மற்றும் காஞ்சனா.

 

அதிக தண்ணீர் தேவைப்படாத பழமரம். வுறண்ட பிரதேசங்களுக்கு ஏற்றது அதிக செலவில்லாத சாகுபடி.

 

பலமொழிப் பெயர்கள்:

தமிழ் :   பெருநெல்லி, நெல்லிக்காய் (PERU NELLI, NELLIKAI)

இந்தி: அம்லா (AMLA)

கன்னடம்: பெட்ட நெல்லி (BEDDA NELLI)

மலையாளம்: நெல்லி (NELLI)

தெலுங்கு: உசிரிக்காய் (USIRI KAAI)

பொதுப்பெயர்: இண்டியன் கூஸ்பெரி, எம்லிக் மிரோபாலன், மலாக்கா ட்ரீ (INDIAN GOOSE BERRY, EMBLIC MYROBALAN, MALACCA TREE)

தாவரவியல்பெயர்: பில்லான்தஸ் எம்பிலிகா (PHYLLANTHUS EMBLICA)

தாவரக்குடும்பம் பெயர்: பில்லான்த்தேசியே  (PHYLLANTHACEAE)

 

ஆறு சுவைகளில் ஐந்து சுவைகள் அடங்கி இருக்கும் ஒரேகனி நெல்லிக்கனி மட்டும்தான். யாமறிந்த கனிகளிலே நெல்லிக்கனி போல சகல சுவைக் கனிஎங்கும் காணேன் என சொல்லத் தோன்றுகிறது.


 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...