Friday, August 6, 2021

BEGGARS BOWL TREE திருவோட்டு சுரைக்காய் மரம்

திருவோட்டுசுரைக்காய்


My Dear  Friends! Good Morning!

மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவை சொந்த மண்ணாகக் கொண்ட மரம் திருவோட்டு சுரைக்காய். ஆனாலும் கூட திருவோடு என்பது நமக்குத் தெரியும். அது ஒரு பிச்சைப் பாத்திரம்.

பெரும்பாலும் சாமியார்கள் வைத்திருப்பார்கள். இது சுரைக்காய் மாதிரியான ஒரு காயிலிருந்து எடுக்கப்பட்ட ஓடு என்பது இப்போதுதான் தெரிகிறது. 

மரத்தில் காய்க்கும் சுரைக்காய்

மரம் ஏறும் சாணார் என்னும் மரம் ஏறிகள் சுரைக் குடுக்கையைப் பயன்படுத்துவார்கள். இந்த சுரைக்குடுக்கை, மரம் ஏறும்பொது அவர்கள் இடுப்பில் தொங்கும். பனை மரத்திலிருந்து சாறு அல்லது கள் சேகரிக்கப் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த திருவோடு சுரைக்குடுக்கையைவிட உறுதியாக  இருக்கும்போலத் தெரிகிறது. சுரைக்குடுக்கைகூட உறுதிதான்

சிறுபாத்திரங்கள் மற்றும் பானங்கள் பருகும் பாத்திரங்களை (FOR MAKING UTENSILS) மெக்சிகோ நாட்டில் செய்து பயன்படுத்துகிறார்கள். கலாபேஷ் என்றால் சுரைக்காய் என்று அர்த்தம். அது கொடியில் காய்க்கும், இது மரத்தில் காய்க்கும். அதனால் நாம் அதை கொடிச்சுரை என்றும், இதை மரச்சுரை என்றும் அழைக்கலாம். 

மான்கள் மேயாத நெருப்பு தாக்காத மரம் (DEER CUM FIRE RESISTANT)

பூக்களை கட்பிளவர்ஸ்’ (CUT FLOWERS) ஆக பயன்படுத்தலாம். தேனீக்கள் மற்றும் பூச்சிகளுக்குப் பிடித்தமானவை. உலர வைத்து பாதுகாக்கலாம். வாசைன உடையவை.  இதர பயிர்ப் பாகங்கள் அனைத்தும் விஷத்தன்மை உடையவை. தொடாமல் பார்த்து ரசியுங்கள், என்று போர்டு வேண்டுமானால் வைத்துவிடலாம்.

கனிகளை, பழங்களை காயவைத்து உடைத்து விதைகளை சேகரிக்க வேண்டும். மரக்கிளைகள் மற்றும் கிளைகள் மான்கள் மேயாதது. நெருப்பு தாக்காதது.

கலாபேஷ்காப்பி ரொம்ப நன்னாருக்கு (CALABASH COFFEE)

ழங்களும் விதைகளும் நச்சுத்தன்மை உடையன. ஆனால் இளம் காய்களில் ஊறுகாய் போடுகிறார்கள். இதன் விதைகளை சமைத்து சாப்பிடலாம். இதிலிருந்து ஒரு வகையான பானங்கள் தயாரிக்கலாம். இதிலிருந்து ஒரு வகையான இனிப்புக் குழம்பு தயார் செய்கிறார்கள். அதன் பெயர் கேராபோபோ.

இதன் இலைகளில் சூப்தயாரிக்கிறார்கள். இதன் விதைகள், கோதுமை இரண்டையும் நன்கு வறுத்து இடித்து மாவாக்கி, காப்பித்தூள் தயாரித்து கலாபேஷ்காப்பி பேஷ்பேஷ் ரொம்ப நன்னாருக்குஎன்று குடிக்கலாம்.

முரட்டு மரங்கள்

மரத்தின் மகிமை, பச்சை மரத்திலேயே கடைசல் வேலைகள் (WOOD SUITABLE FOR CARVING)செய்யலாம். மரம் பதப்படுத்திய பின்னால் இரும்பு போல மாறிவிடும். நூறு வருஷம் னாலும் ஒரு நூல்கூட அசைந்து கொடுக்காது. அவ்வளவு கடினமாக இருக்கும். உளிகள் மற்றும் ரம்பங்கள்கூட இந்த மரத்தில் பட்டால் அப்பளம்போல நொறுங்கிப் போகும்.

மொத்தமாக ஒழுங்கின்றி வளர்ந்த முரட்டு மரங்களை குதிரைச்சேணம் தயார் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதனால் இதனைச் சேணமரம் என்றும் சொல்லுகிறார்கள். குதிரையின்மேல் உட்காருவதற்கான அமைப்பின் பெயர் ஆங்கிலத்தில் சேடில். தமிழில் அதற்கு சேணம் என்று பெயர். சேடில் ட்ரீ என்பதனை சேணக்கட்டை மரம் என்றும் சொல்லலாம்.

அந்த காலத்தில் ஸ்டிர்அப்ஸ் (STIRUPS) என்னும் அங்கவடி செய்யவும் பயன்பட்டது. அங்கவடி என்றால் சேணவளையம் என்று பெயர். குதிரைச்சவாரி செய்பவர் கால் வைக்கும் வளையம்தான்  சேணவளையம்.

இந்த மரம் வெளிர் காவிநிறம் () மஞ்சள் கலந்த காவி நிறத்தில் கடினத் தன்மையுடன் இருக்கும். பாலிஷ் ஏற்ற ஏற்ற பளபளப்புக் கூடுதலாகும். வண்டிகள், மற்றும் ஏர்களில் பூட்டும் நுகத்தடி கத்தி, அரிவாள் சுத்தி போன்ற கருவிகளுக்கு கைப்பிடிகள், மற்றும் கட்டுமானத்திற்கான வலுவான மரச்சாமான்கள் செய்யலாம். 

நுரையீரல் பிரச்சினைகள் சீராகும்.

இதன் இலைகளிலிருந்து தயாரிக்கும் கஷாயத்தின் மூலம் உடல் காயங்களை கழுவி அவை விரைந்து குணமாகச் செய்யலாம். இதன் பழக்கூழ் ஜலதோஷத்திற்கு அற்புதமான மருந்து.

 சுகப்பிரசவத்திற்கு உதவும்

இதன் பழச்சாற்றைக் கொடுத்து வயிற்றுப்போக்கு, நிமோனியா, குடல் நோய்கள் ஆகியவற்றை சுகப்படுத்தலாம். இதில் தயாரிக்கும் தேநீர் மாதவிடாய் வலியை சரிசெய்வதுடன் சுகப்பிரசவத்தை சுலபப்படுத்தும்.

மரத்தின் அனைத்து பாகங்களும் சிறுநீர்பெறுக்கியாக செயல்படும். இலைகளைக் கூழாக்கி காயங்களின்மீது தடவுவதால் ரத்தப்போக்கை சீர் செய்யலாம். இலைக்கூழால் ஒத்தடம் கொடுக்க தலைவலி சரி ஆகும்.

இலைகளை மெல்ல மெல்ல, மெல்ல மெல்ல பல்வலி குணமாகும். இளம் இலைகளில் சாறெடுத்துப் பருக பருக ஜலதோஷம் மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் சீராகும்.

மரத்தின் பலமொழிப் பெயர்கள்

தமிழ்: திருவோட்டுக்கை, திருவோட்டுச்சுரைக்காய் (THIRUVOTTUKKAAI, THIRUVOTTU SURAIKKAAI)

இந்தி: கமண்டல் (KAMANDAL)

கன்னடம்: சோர்புருட் மரா (SOKEBURUDE MARA)

இதன் தாவரவியல் பெயர் கிரசென்ஷியா குஜெட்டி (CRESCENTIA CUJETE)

பொதுப்பெயர் / ஆங்கிலப்பெயர் : மெஃக்சிகன் கலாபேஷ் ட்ரீ, ஜிக்காரோ, மோரிட்டோ, விங்டு கலாபேஷ், பெக்கர்ஸ் பவுல் ட்ரீ (MEXICAN CALABASH TREE, JIKARO, MORITTO, WINGED CALABASH, BEGGARS BOWL TREE)

தாவரக்குடும்பம் பெயர்: பிக்னோனியேசி (BIGNONIACEAE)

பரவியிருக்கும் இடங்கள்: இந்தியாவில் அஸ்ஸாம், கேரளாவில் பாலக்காடு, திருவனந்தபுரம், தமிழ்நாட்டில் எல்லா மாவட்டங்களும்.

முதலில் சாமியார்கள்

முதன் முதலில் பிச்சை எடுக்க இந்தத் திருவோட்டை சாமியார்கள் பயன்படுத்தினர். அதற்குப்பிறகு பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க பயன்படுத்தினார்கள். இப்போதெல்லாம் பிச்சைக்கார்ர்கள் கார்ட் ஸ்வைப்  மெஷின் (CARD SWIPE MACHINE) வைத்திருக்கிறார்கள். சில்லரை இல்லப்பாஎன்றெல்லாம் சொல்லமுடியாது. முழுக்க முழுக்க கேஷ்லெஸ் டிரான்சேக்க்ஷன் (CASHLESS TRANSACTION) !

இப்பல்லாம் எங்க வேலைய எல்லாருமே செய்ய ஆரம்பிச்சிட்டாங்க சார்.. ஆனால் எங்களத்தான்   பிச்சைக்காரங்கன்னு கேவலமா சொல்றாங்க”  என்று அங்கலாய்க்கிறார் அனுபவமிக்க பிச்சைக்காரர் ஒருத்தர்.

அரசனுக்கு செங்கோலையும் ஆண்டிக்கு திருவோட்டையும்  தருகின்றன, மரங்கள், என்ன  வேண்டும் ? எதையும் தரும் மரங்கள்.

நீங்கள் திருவோட்டு சுரைக்காய் மரம் பர்த்திருக்கிறீர்களா ? அல்லது திருவோடாவது  பார்த்திருக்கிறீர்களா ?

D.Gnana Suria Bahavan, Author,  Phone: +918526195370, Email: gsbahavan@gmail.com

For Further Reading

www.en.m.wikipedia.org - Crescentia cujete 

 

No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...