Monday, August 2, 2021

HELICOPTER TREE OF CENTRAL AMERICA - GYROCARPUS AMERICANUS , தணக்கு மரம்

 


தணக்கு என்னும்

  எலிகாப்டர் மரம்

GYROCARPUS AMERICANUS

HELICOPTER TREE, STINK WOOD, TANAKKU, CHAIVAVATHALA, ZEITHUN

 My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

தணக்கு மரத்தின் விதைகள் ஹெலிகாப்டர் மாதிரி மெல்ல காற்றில் சுழன்றபடி கீழே இறங்கும்.  அதாவது காற்றின் மூலம் பரவுகின்ற விதை இது.  வெறலிகாப்டர் பறப்பதற்கு மேலே இரண்டு விசிறிகள். சுழல்வதுபோல இந்த விதைகளுக்கும் இரு விசிறிகள் உண்டு. 

 

அந்த விசிறிகள் சுழலும்போது விதைகளும் சுழன்றபடி, காற்று வீசும் திசைக்கு ஏற்ப, வேகத்திற்கு ஏற்ப அருகிலோ அல்லது தொலை தூரத்திலோ விழும். விழுந்து, முளைத்துப் பரவும்.  அதனால்தான் இதன் பெயர் ஹெலிதாப்டர் ட்ரி.

 

மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த தணக்குமரம், கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, மலேசியா, வடக்கு ஆஸ்திரேலியா, மெலனேசியா, பாலினேசியா, தென் மற்றும் மத்திய அமெரிக்கா ஆகிய இடங்களில் பரவலாக உள்ளது.

 

இதன் பூக்கள், மஞ்சளும் பச்சையும் கலந்த நிறத்தில் இறுக்கமான பூங்கொத்துக்களாக மலரும். பார்க்க அழகாய் இருக்கும்.  ஆனால் மோசமான வாடை வீசும்.

 

தணக்கு மரத்தின் பட்டைக் கஷாயம் பட்டையை கிளப்பும்

சிறுநீரகவலி, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களை தணக்கு மரத்தின் பட்டைக் கஷாயம் தந்து குணப்படுத்துகிறார்கள்.  உடலில் ஏற்படும் காயங்கள், வயிற்றுப்போக்கு ஆகியவற்றை சரிசெய்ய தணக்கு வேர்கள் உபயோகமாகின்றன.

 

தணக்கு மரம் உலகம் முழுக்க நிறைய நாடுகளில் பரவி உள்ளது அவை, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி ஆசியாவின் வெப்பப் பிரதேசங்கள், ஆப்ரிக்காவில் கிழக்கு செனிகல், கினியா, மாலி, எரித்ரியா, வடக்கு ஆஸ்திரேலியா, தாகித்தி தீவுக்கு அணுக்கமாய் உள்ள பசுபிக் கடலின் தீவுகள்.

 

கென்யாவின் கிழக்குப் பகுதி, தென் ஆப்ரிக்கா மற்றும் நபிபியாவின் தென் பகுதி, மடகாஸ்கரின் மேற்கு மற்றும் தென் திசைப் பகுதிகள்.

 

கெனோபடகு எனும் ஒற்றை மரப்படகு

கடலோரத்தில் இருக்கும் பகுதிகள் எல்லாவற்றிலும் சிறு படகுகள் தயரிப்பது காலம் காலமாக ஒரு திறன்மிகு கலையாக இருந்துள்ளது.  அதிலும் குறிப்பாக 'டக் அவுட் கேனோ' என்பது மிகவும் பிரபலமான ஒன்று. நான் ஏற்கனவே கூட இதுபற்றி எழுதி உள்ளேன்.  ஒரு பெரிய நீளமான மரத்தின் உட்புறத்தை குடைந்துவிட்டு, அதனைப் படகாகப் பயன்படுத்துவார்கள்.

 

பயணிகள் குடைந்த உட்புறத்தில், கால்களை மடக்கி உட்கார்ந்து கொள்வார்கள்.  படகு கவிழாமல் இருக்க பக்கவாட்டில் இரண்டு முதல் மூன்று அடிக்குக் குறையாமல் கம்புகளைப் பொருத்தி இருப்பார்கள்.  சிறு துடுப்புகள் அல்லது நீளமான கம்புகளை ஊன்றி படகினை செலுத்துவார்கள்.  ஆழம் குறைந்த நீரில் இதுபோன்ற படகுகளைப் ஓட்டுகிறார்கள்.

 

எனக்கு அந்தமான் தீவுகளில் ஒரு மாத காலம் கப்பலில் சுற்றிவரும் வாய்ப்பு கிடைத்தது.  அப்போதுதான் டுகாங்கிரீக்  என்ற தீவிற்கு சென்றபோது, அங்கு இந்த 'டக் அவுட் கேனோ' படகுகளைப்; பார்த்தேன்.

 

அந்தமான் ஒங்கி இன மக்களோடு ஒரு நாள்

இந்தத் தீவு நேரடியாக கடலில் இல்லை.  தீவைச் சுற்றி 'பேக் வாட்டரிங்' தேங்கி நிற்கும் தண்ணீர். ஹைடைட் 'லோடைட்;” க்கு ஏற்றவாறு தண்ணீர் ஏறும் இறங்கும்.

 

இதனை கடலோர மக்கள் வெள்ளம் வத்தம் என்கிறார்கள். அப்படிப்பட்ட தண்ணீரில், இந்தப் படகில் சென்று மீன்வேட்டை ஆடுகிறார்கள், இங்கு வசிக்கும் 'ஒங்கி' இன மக்களோடு ஒரு நாள் அவர்களோட் இருந்தேன். எனக்கு இது ஒரு அபூர்வமான அனுபவமாக இருந்தது.

 

இந்தப் படகில் இருந்தபடியே தண்ணீர் அடி ஆழத்தில் இருக்கும் மீன்களை துல்லியமாகப் பார்க்க முடியும்.  கை ஈட்டிகொண்டு மீன் வேட்டை ஆடுகிறார்கள்.  அந்தமானில் பல தீவுகளில் இதனை நான் பார்த்திருக்கிறேன்,

 

அந்தமான் 'கமோர்டா'  துறைமுகத்தில் பளிங்கு நீர்

அங்கு இருக்கும் தண்ணீர் பளிங்குபோல இருக்கிறது.  தண்ணீரின் மேல்மட்டத்திலிருந்தபடி தண்ணீரின் அடி ஆழத்தில் இருக்கும் மீன்கள், நண்டுகள், நத்தைகள் போன்றவற்றைக்கூட சுலபமாய்ப் பார்க்கலாம்.

 

ஒரு நாள் இரவு நேரத்தில் 'கமோர்டா'  என்ற தீவுத்  துறைமுகத்தில் சுமார் இருபத்தியைந்து அடி ஆழநீரில் நீந்திச் செல்லும் மீன்களை எல்லாம் மின் விளக்கு வெளிச்சத்தில் என்னால் பார்க்க முடிந்தது. ஆக இந்த ஹெலிகாப்டர் மரம் இதுபோன்ற டக்அவுட் கேனோசெய்யக்கூட உதவுகிறது.

 

பொதுவாக மரங்களில் மூன்று பகுதிகள் இருக்கும்.  ஒன்று வெளிப்புறத்தில் இருக்கும் பட்டை, அதற்கு அடுத்து இருக்கும் மேல் மென்மையான மரப்பகுதி, அதற்கு அடுத்தது உறுதியான நடுப்பகுதி.  அதன் பெயர் வயிரப்பகுதி தணக்கு மரத்தின் வயிரம் வெண்ணிற சரம்பல் நிறம் முதல் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  உலர்ந்தவுடன் அது ஆழ்ந்த காவி மற்றும் சாம்பல் நிறம் கலந்தது போலத் தென்படும்.

 

இந்த மரத்தில் கூர்மையான கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இல்லை எனில் இந்த மரங்கள் நொறுங்கிவிடும்.  கரையான்களால் சுலபமாக தாக்கக் கூடிய மென்மையான மரம்.

 

விதைகள் காற்றின் மூலம் பரவும் எனப் பார்த்தோம்.  தண்ணீரில் விதைகள் விழுந்தால், பல மாதங்கள் கூட மிதந்து சென்று பின்னர் முளைக்கும் தன்மை உடையது. 

 

மணற்சாரியான, வடிதால் வசதி உள்ள நிலவாகுகள் இதற்கு ஏற்புடையவை.  ஆயினும், பாறைகள் மற்றும் கற்கள் நிறைந்த நிலச்சரிவுகள், ஆற்றங்கரை மற்றும் களிமண் பிரதேசங்களில் இந்த மரங்கள் தோப்புகளாக வளர்ந்து பரவுகின்றன.

 

1000 தணக்கு விதை நெற்றுக்களின் எடை 250 முதல் 350 கிராம் இருக்கும்.  நெற்றுக்களை வெயிலில் உலர்த்தி, காற்றுப்புகாத பெட்டிகளில் சேமித்து வைத்தால் ஒராண்டுவரை கூட இருக்கும். 

 

விதைக்கும் முன் விதைகளை 24 மணிநேரம் தண்ணீரில் ஊரவைத்து விதைத்தால் முளைப்புத்தன்மை நன்றாக இருக்கும்.  இதன் முளைப்புத் தன்மை அறுபது  முதல் எண்பத்தைந்து  சதம் வரை இருக்கும்.  நேரடியாக விதைப்பது நல்ல பலன் தரும்.

 

தணக்கு மரத்தின் பலமொழி பெயர்கள்

தமிழ்: தணக்கு, சைவவதலா (TANAKKU, CHAIVAVATHALA)

தெலுங்கு: தணக்கு (TANAKKU)

கன்னடம்: தணுக்கு (TANUKKU)

இந்தி: செய்த்துன் (ZEITHUN)

பொதுப்பெயர்: ஹெலிகாப்டர் ட்ரீ, ஸ்ட்டிங்க் வுட் (HELICOPTER TREE, STINK WOOD)

தாவரவியல் பெயர்: கைரோகார்ப்பஸ் அமெரிகானஸ் (GYROCARPUS AMERICANUS)  

தாவரக்குடும்பம்: ஹெர்னாண்டியேசி (HERNANDIACEAE)

தாயகம்: மத்திய அமெரிக்கா

 

வணிக ரீதியில் இதனை மருந்துகள் செய்யவும், கடைசல் மூலம் பொம்மைகள் மற்றும் இதர கலைப்பொருட்களும் செய்து உள்ளூர் சந்தைகளிலும். ஆன்லைன் மூலமாக வெளிநாடுகளிலும் விற்பனை செய்ய வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.  இன்றைக்கு மரவிதைகள் கூட ஆன்லைன் மூலம் விற்பனைக்கும் கிடைக்கிறது.

 

ஆன்லைனில் வாங்க ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  நமது மணிபர்ஸ் மட்டும் கொஞ்சம் கனமாய் இருக்க வேண்டும்.

 

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Gnanasuriabahavan Academy, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...