Wednesday, August 4, 2021

CUCUMBER TREE OF ALIEN ISLANDS - DENDROSICYOS SOCOTRANUS, வெள்ளரி மரம் ஏலியன் தீவு மரம்


 

வெள்ளரி மரம்

CUCUMBER TREE

DENDROSICYOS SOCOTRANUS, CUCURBITACEAE


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

ஆறு விரல், மூன்று கை,  இரண்டுதலை உடைய அதிசயக் குழந்தைகள் போல இந்த பாட்டில் மரம் ஒரு சொகோத்ரோ தீவின் அதிசயப் பிறவி.

ஆப்ரிக்கா கண்டத்தில் தீவுகளில் ஒன்று சொகோத்ரோ தீவு. இது ஹார்ன் ஆப் ஆப்ரிக்காவின்  ஒரு பகுதி. இந்த சோகோத்ரா தீவு ஒரு விச்சித்திரமான தீவு. இங்கு இருக்கும் செடி கொடி மரம் எல்லாமே விச்சித்திரமானவை.

 

பாட்டில்களை அடுக்கிவைத்த மாதிரி மரங்கள்

அதற்கு உதாரணமாக ஒரே ஒரு மரத்தை இங்கு பார்க்கப் போகிறோம். இந்த மரத்தின் பெயர் குகூம்பர் ட்ரீ  என்னும் பாட்டில் மரம். மேலே உள்ள படத்தில் ஐந்து பாட்டில்கள் பக்கம்பக்கமாக அடுக்கி வைத்தமாதிரி உள்ளன.

சொக்கோத்ரா ஒரு குட்டியோண்டு தீவு. இந்த தீவின் நீளம் 142 கி;மீ. அகலம் 49.7 கி.மீ மட்டுமே. குறுகலான சமவெளி, மிகுதியான சுண்ணாம்புப்பாறை கொண்ட நிலப் பரப்பு, கார்ஸ்ட் குகைகள்  இந்த மூன்றும் சேர்ந்ததுதான்  இந்தத் தீவு.

ஆமாம், கார்ஸ்ட் குகை என்றால் ?  மண்கண்டத்தின் அடி ஆழத்தில் இருக்கும் லைம் ஸ்டோன், டோலமைட், ஜிப்சம் போன்ற உப்புக்கள் நீரில் கரைந்து வெளியேறிவிடும். கரைந்து போன பகுதிகள் எல்லாம் வெற்றிடம் கொண்ட குகைகளாக மாறிவிடும். இவைதான் கார்ஸ்ட் குகைகள்.

இப்படி இயற்கையாக மாறிய குகைகள் நம் நாட்டில் இருக்கிறதா என தோண்டித் துருவினேன். சில இடங்களில் இருப்பதாகத் தெரிகிறது. இங்கு ஏன் இப்படி கார்ஸ்ட் குகைகள் பற்றி நான் எழுதுகிறேன் என்பதை கட்டுரையின் பின் பகுதியில் சொல்லுகிறேன்.

இது போன்ற கார்ஸ்ட் குகை கர்நாடகாவில் யானா என்ற கிராமத்துக் காடுகளில் உள்ளதாம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சாயாத்ரி மலைத் தொடரில் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ளது. இங்கு உள்ள யானா ராக்ஸ் (YANA ROCKS) என்னுமிடம்  சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் காந்தம் என்கிறார்கள்.

வித்தியாசமான தாவரங்களை உடைய சொக்காத்ரோ தீவு

உலகிலேயே வித்தியாசமான தாவரங்கள் மற்றும் பிராணிகளை உள்ளடக்கியது இந்த சொக்காத்ரோ தீவு . அதனால்தான் இதனை ஏலியன் தீவு என அழைக்கிறார்கள்.

 

இந்த மரத்தின் வேறு பெயர்கள் என்ன என்று பார்க்கலாம்.

 தமிழ் பெயர் பாட்டில் மரம், பொதுப்பெயர்கள் பாட்டில் ட்ரீ மற்றும்  குகூம்பர் ட்ரீ. தாவரவியல் பெயர் டெண்ட்ரோசிசையாஸ் சோகோட்ரானஸ் (DENDROSICYOS SOCOTRANUS). இதன் தாவரக் குடும்பப்பெயர், குகர்பிட்டேசி (CUCURBITACEAE)

வறண்ட கல்லாங்கரடுகளில் வளரும் மரம்

இன்னொரு ஆச்சரியம் இதில் உண்டு. இந்த மரம் குகர்பிட்டேசி என்னும் தாவரக்குடும்பத்தைச் சேர்ந்தது. பொதுவாக ஒரு தாவரக்குடும்பம் என்றால் அதில் மரம், செடி, கொடி என எல்லாம் இருக்கும்.

ஆனால் இந்த  குகர்பிட்டேசி தாவரக்குடும்பத்தில் எல்லாமே கொடிவகைதான். புடல், பூசணி, பாகல், பீர்க்கு எல்லாமே இந்த குகர்பிட்டேசி குடும்ப வகையறாதான். இந்த குடும்பத்தில் ஒரே ஒரு மரம்தான். அந்த ஒன்றுதான் இந்த பாட்டில் மரம்.

அடி பருத்து முடி சிறுத்த பாட்டில் மாதிரியான அபூர்வமான வடிவமைப்பு கொண்ட மரம் இது. சுரண்டி எடுக்கக்கூட கரண்டிமண் கிடைக்காத கல்லாங் கரடுகள், பாறை மற்றும் கற்கள் நிறைந்த மலையடிவாரங்கள், மழை இல்லாத மலட்டுப் பகுதிகள்அனைத்திலும் வளரும்.

இந்த மரம் பார்க்க அசப்பில் ராட்சச பாட்டில் மாதிரியே இருக்கும். யார் இந்த வனாந்தரத்தில் இப்படி பெரியபெரிய பாட்டில்களை நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றும்.

அடிமரம் பாட்டில் மாதிரி. நுனி மரத்தில் சொற்பமான கிளைகள். சிக்கனமாக இலைகள். இவை எல்லாம் சேர்ந்து வெள்ளை பாட்டிலுக்கு பச்சை மூடி போட்ட மாதிரி தோன்றும்.

 

மரத்தில் காய்த்த மாமிசத்துண்டுகள்

இலைகள் வட்ட வடிவமானவை. மெல்லிய நுட்பமான முட்களால் மூடப்பட்டிருக்கும். ஐந்தாம் ஆண்டில் பூக்கும். ஒரே மரத்தில் ஆண் பெண் பூக்கள் தனித்தனியாய் பூக்கும். அழகிய மஞ்சள் நிறத்தில் பூக்கும். இதன் கனிந்த பழங்கள் ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் பார்க்க மாமிசத்துண்டுகளே மரத்தில் காய்த்த மாதிரி தோன்றும்.

பருவ மழைக்கு ஏற்றவாறு இந்த மரங்கள் தங்களை தயார்ப்படுத்திக் கொள்ளும். அப்போது கிடைக்கும் அதிகப்படியான நீரை பாட்டில் மாதிரியான தனது வயிற்றுப் பகுதியில் சேமித்துக் கொள்ளும். அந்த வயிற்றுப் பகுதியின் நுரைபோன்ற திசுக்கள் தண்ணீரை உறிஞ்சிக் கொள்ளும். தட்டுப்பாடான காலங்களில் அதனை கட்டுப்பாடாக பயன்படுத்திக் கொள்ளும்.

மரங்கள் கொஞ்சம் நிதானமாக வளரும். சராசரியாக 3 மீட்டர் உயரம் வரை வளரும். மழையின் கருணை இருந்தால் ஆறு மீட்டர் கூட வளரும்.

 

பழங்குடி மக்கள் பழமையான மருந்து

பழங்குடி மக்கள் பலவிதமான உடல் உபாதைகளுக்கு இதனை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ஹைடாடிடோசிஸ் (HYDATIDOSIS) நோய்க்கு இதன் இலைச்சாற்றில் மருந்து தயாரிக்கிறார்கள். இது நாடாப் புழுக்களால் ஏற்படும் நோய் இது. இதனால் மனிதர்களின் ஈரல் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படும். 

பாட்டில் மரங்கள் இந்தத் தீவின்  கால்நடைகளுக்குத் தீவனமாகிறது. இங்கு பாட்டில் மரங்கள் இல்லையென்றால் கால்நடைகள் இல்லை. கால்நடைகள் அதிகம் இருப்பதால்தான் பாட்டில் மரங்கள் இல்லாமல் போகிறது என்கிறார்கள் இந்தத் தீவு மக்கள்.

 

இந்தியர்கள் வந்துபோன ஏலியன் தீவு

ஆடுமாடுகள் வளர்ப்பது, மீன் பிடிப்பது, பேரீச்சை சாகுபடி இவைதான் அங்கு பிரதான தொழில்கள். பேரீச்சை, நெய், புகையிலை, மீன் போன்றவை சொகோத்ரோவின் ஏற்றுமதிப் பொருட்கள்.

ஏலியன் தீவு என்று வர்ணிக்கப்படும் சொக்கார்த்தோ தீவுடன் கூட இந்தியர்கள் கடல் வியாபாரம் செய்துள்ளனர் என்பது ஆச்சர்யமான செய்தி. மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் சொக்காத்ரொ தீவு ஒரு வியாபார மையம்.

இங்குள்ள கார்ஸ்ட் குகைகளில் 2001 ம் ஆண்டில் பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் ஆய்வு செய்தார்கள். முதலாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை வியாபார நிமித்தமாக மாலுமிகள் வந்து சென்றதற்கான குறிப்புகள் இந்த குகைகளில் சில மொழிகளில் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலானவை இந்தியாவின் பிரம்மி  எழுத்துக்களால் ஆனவை என்கிறார்கள் அந்த ஆராய்ச்சியாளர்கள்.

சோக்கோத்ரா தீவு கூட கடல் பயணத்தில் கைதேர்ந்த இந்தியர்களுக்கு புதுசு இல்லை எனத் தெரிகிறது. 

 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...