Monday, August 2, 2021

INDIAN TREE OF HEAVEN, தீக்குச்சி மரம்

 


பீநாறி மரம் என்னும் தீக்குச்சி மரம்

AILANTHUS EXCELSA

 INDIAN TREE OF HEAVEN, COROMANDEL ILANTO


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

தீக்குச்சிமரம் என்று கிராமங்களில் பரவலாக அறியப்படும் மரம் இந்திய மரம். மரவேலைகள் செய்ய உதவும். படகுகள் செய்யலாம். கப்பல்கள் கட்டலாம். கட்டுமரங்கள் செய்யலாம். நீர் மிதவைகள் செய்யலாம். மருந்துகள் செய்யலாம்.

 

2004 ம் ஆண்டு சுனாமி வந்தது. அந்த சமயம் மீனவர்களின் படகுகள் மற்றும் கட்டுமரங்களெல்லாம் உடைத்து சின்னாபின்னமானது. அந்தப் படகுகளை சரி செய்யவும் புதிய படகுகளை செய்யவும் தீக்குச்சி மரங்களைத்தான் தேடி அலைந்தார்கள்.

 

அப்போது தீக்குச்சிகள் மட்டும்தான் செய்ய முடியும் என்று நினைத்திருந்த நான் கூடுதலாக அந்த மரம்பற்றி தெரிந்துகொள்ளத் தொடங்கினேன்.

 

இந்தியாவில் கடல் வாணிகம்

ஒரு காலத்தில் கடல் வாணிகம் இந்தியாவில் கொடிகட்டிப் பறந்தது. அப்போது படகுகள் மற்றும் கப்பல்கட்டும் தொழில்நுட்பமும் வளர்ந்திருந்தது. இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, கொங்கணி, குஜராத், கலிங்கா, மற்றும் வங்காளம் ஆகிய கடற்கரைகளில்; படகுகள் மற்றும் கப்பல் கட்டுமான தொழிநுட்பங்கள் வளர்ந்திருந்தது. இவை தவிர அந்தமான் நிகோபார் தீவுகளில் பலவிதமான மரங்களைப் பயன்படுத்தி பலவிதமான படகுகளைச் செய்து  பயன்படுத்துகிறார்கள்.

 

ஒற்றை மரத்தைக் குடைந்துவிட்டு அதனைப் படகாக பயன்படுத்துவதை டுகாங்க் கிரீக் என்னும் அந்தமான் தீவினில்; நான் பார்த்திருக்கிறேன். குடைந்த மரத்திற்குள் உட்கார்ந்து படகினை ஆழம் குறைந்த நீரில்  செலுத்துகிறார்கள்.

 

துடுப்புகள் அல்லது நீளமான கம்புகளைப் பயன்படுத்தி நீரைத்தள்ளூகிறார்கள். அதில் உட்கார்ந்தபடி குத்தீட்டி கொண்டு மீன் வேட்டை ஆடுகிறார்கள்.

 

அந்தத் தீவினில் ஓங்கிஎன்னும் பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அந்தமான் நிகோபார் தீவுகளில் பலவிதமான மரங்களைப் பயன்படுத்தி சிறிய பெரிய நடுத்தர படகுகளை எல்லாம் செய்கிறார்கள். மீன்பிடிக்க, வேட்டையாட, பொருட்களை எடுத்துச் செல்ல என்று தனித்தனியாக படகுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

 

அந்தமான் தீவுகளில் ஆறுவகையான பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் நாகரீகத்தில் பின்தங்கியிருந்தாலும் அனைவரும் படகுகள் கட்டுமானப் பணிகளில் முன்னணியில் இருக்கிறார்கள்.

 

ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தீக்குச்சிமரம்

காய்ச்சல், உடல்வலி, உடல் சோர்வு, ஆகியவற்றைப் போக்கும் மருந்துகள்உடலுக்கு வலு சேர்த்து உரமாக்கும் டானிக்குகள், போன்றவை செய்ய தீக்குச்சி மரத்தின் பட்டைகள் மற்றும் இலைகளைப் பயன்படுத்தலாம்.

 

முக்கியமாக குடற்புழு நீக்கம்தோல்நோய்கள் சிகிச்சை, வயிற்றுப்போக்கு, சீதபேதி, மாதவிடாய் சமயம் ஏற்படும் மிகையான உதிரப்போக்கு, வயிற்றுவலி ஆகியவற்றையும் குணப்படுத்தும்.

 

டாடிமவலேகா, வயிற்றுப்போக்குக்கான அற்புதமான மருந்து. பிரைஹட் கங்காதர சூரணா, அஜீரணம், வயிற்றுப்போக்கு, உடலை உரமூட்டுதல் போன்றவற்றிற்கு உதவும் மருந்து, இரண்டும் தீக்குச்சி மரத்தின் இலைகள் மற்றும் பட்டைகளில் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்துகள்.

  

அகன்ற புல்வெளிகளின் ஊடாக ஒரு மரம் நட்டாலும் நச்சென்று இருக்கும். பூங்காக்களில் பெருந் தோட்டங்களில் அழகு மரமாக நடலாம்.

 

இந்த மரம் பரவலான மண்வகைகளில் வளரும். கடல்மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம்வரை வளரும். கடுமையான வறட்சியைத் தாங்காது. தமிழ்நாட்டில் மேற்குப் பகுதி, வடமேற்குப்பகுதி, காவேரி டெல்டா, மற்றும் தென்பகுதிகளில் நன்கு வளர்கிறது.

 

கனிகள் வெடித்து விதைகள் சிதறும்

இந்த மரத்தின் விதைகள் வன ஆராய்ச்சி நிலையங்களில் ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்கிறார்கள். ஒரு கிலோ விதையில் 7500 முதல் 10000 விதைகள் இருக்கும். சேமித்த விதைகளை உடனடியாக விதைக்க வேண்டும்.

 

ஒரு வருஷம்கூட சேமித்து வைக்கமுடியாது. அப்படி வைத்திருந்து விதைத்தால் குறைவாக முளைக்கும். அல்லது முளைக்காமல் போகவும் வாய்ப்புண்டு.

 

கனிகள் வெடித்து விதைகள் சிதறும் முன்னால் அவற்றை சேகரிக்க வேண்டும். விதைகள் நுண்ணியதாக இருப்பதால் அவற்றை சீராக விதைக்க சாம்பல் அல்லது மணலில் கலந்து விதைக்க வேண்டும். எட்டு முதல் பதினான்கு  நாட்களில் முளைக்கத் தொடங்கும். முழுவதுமாக முளைக்க  நாற்பது முதல் நாற்பத்தியைந்து  நாட்கள்ஆகும்.

 

காலி இடங்களில் பொதுநிலங்களில் சீர்கேடடைந்த நிலப்பகுதிகளில் பலவகையான மரங்களுடன் கலந்து நடவு செய்யலாம். அந்தத் தோழமை மரங்கள்வன்னி மரம், வாகை, வெள்வேல், வேம்பு, சால், கருவை, புங்கன், மற்றும் சீமை இலந்தை.

 

அஸ்ஸாம் மாநிலத்தில் ஜோர்காட் என்னும் இடத்தில் உள்ள பட்டுப்பூச்சி ஆராய்ச்சி நிலையத்தில்  இந்த இலைகளை பட்டுப்புழுக்களுக்கு பயன்படுத்துவது குறித்த ஆய்வுகள் நடைபெற்றன.

 

பலமொழிப் பெயர்கள்:  

தமிழ் : தீக்குச்சிமரம், பீநாறி (THEEKKUCHI MARAM, PEENAARI)

இந்தி: மகாநிம்ப், மகாருக், கோடா நீம், கோடா கரஞ் (MAGANIMB, MAGARUKH, GODA NEEM) 

மலையாளம்: மட்டிபோங்கில்யம், பெருமரம் (MATTIPONGILYAM, PERUMARAM)

தெலுங்கு: பெட்டா, பெட்டாமண்டு (PETTA, PETTAMUNDU)

கன்னடம்: பெண்டி டோடபீவு, டொட்ட மரா (BENDI, DODABEEVU, DODDA MARA)

தாவரவியல்பெயர்: அய்லாந்தஸ் எக்சல்சா (AILANTHUS EXCELSA)

பொதுப்பெயர்: இண்டியன் ட்ரீ ஆப் ஹெவன், கொரமேண்டல் ஐலண்டோ (INDIAN TREE OF HEAVEN, COROMANDEL ILANTO)

 

இந்த மரங்களில் கிட்டத்தட்ட 70 சதம் தீக்குச்சிகள் செய்ய போகிறது. அதற்கு அடுத்தபடியாக பொருட்களைப் பொதிந்து வைக்க தேவைப்படும் பெட்டிகள் செய்ய, பிளைவுட் செய்ய, ஈரிபட்டுப்புழு வளர்க்க, கட்டுமரங்கள் படகுகள் செய்ய என்று பலவகைகளில் பயன்படுகிறது.


 Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...