Friday, August 6, 2021

AFRICAN SAUSAGE TREE, KIGELIA PINNATA - சிவகுண்டலம் மரம்

 


சிவகுண்டலம்

 AFRICAN SAUSAGE TREE, KIGELIA PINNETA, BIGNONIACEAE

My Dear Vivasaya Panchangam Friends! Good Morning !

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும்படியான பெயர் கொண்ட சிவகுண்டல மரம் ஒர் ஆப்ரிக்க மரம். சிவகுண்டலம் மரத்தின் பூக்கள் ரத்த சிவப்பு நிறத்தில் நடுநிசியில் பூக்கும். இதன் மகரந்தச் சேர்க்கைக்கு, கார்பெண்டர் தேனீக்கள் போன்ற பெரிய பூச்சி இனங்கள் மற்றும் சன்பேர்ட்ஸ் என்னும் பறவைகள் உதவுகின்றன.

 

காட்டு விலங்குகள் விரும்பும் பழங்கள்

பெரிய சைஸ் சாசேஜ் போல் இதன் பழங்கள்  நீளமான காம்புகளில் தொங்கிக் கொண்டிருக்கும். இந்த சிவகுண்டலப் பழங்கள் ஒவ்வொன்றும் ஐந்து  முதல் ஏழு கிலோவரை கூட இருக்கும். பழம் எழுபது முதல் நூறு செ.மீ. நீளம் கூட இருக்கும்.

பழங்களை நாம் சாப்பிட முடியாது. நீர் யானைகள், பன்றிகள், முள்ளம் பன்றிகள், குரங்குகள், மனிதக் குரங்குகள், ஒட்டச்சிவிங்கிகள் போன்றவை விரும்பிச் சாப்பிடும். விதைகள் இந்தப் பிராணிகளின் சாணத்தின் மூலம் பரவுகின்றன.

 

ஹோமர் எழுதிய  சாசேஜ் கவிதை 

ஆங்கிலத்தில் இதன் பெயர்சாசேஜ் ட்ரீ. சாசேஜ் என்பது ஒரு அசைவ உணவுப் பண்டம். பர்கர் என்று சொல்வது மாதிரி. ஆனால் சாசேஜ்க்கு ஒரு சரித்திரம் உண்டு. சாசேஜ் 2000 ஆண்டுகளுக்கு மேலாக புழக்கத்தில் உள்ளது.

கிறிஸ்து பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன் த சாசேஜ்என்ற தலைப்பில் ஒரு கிரேக்க நாடகம் மேடையேற்றப்பட்டது. உலகப் பிரபலமான கவிஞர் ஹோமர் தனது கவிதைகளில் கூட சாசேஜ் பற்றி எழுதியுள்ளார்.

இன்றும் கூட இந்தியா உடபட மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சாசேஜ் பிரபலமான உணவு வகை. ஒரு காலத்தில் அசைவ வகை உணவாக இருந்தது. இன்று வடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சைவ சாசேஜ் மற்றும் இனிப்பு சாசேஜ் என மாற்றிவிட்டார்கள்.

 

அழகுசாதனப் பொருட்கள்

தோல் வியாதிகள், குடற்புழுக்கள், உட்பட பல நோய்களை குணப்படுத்த இதன் பழங்கள் மருந்தாகிறது. இவை தவிர ஷேம்பு, முகத்தை அழகாக வைத்துக் கொள்ள உதவும் பேசியல் கிரீம்கள் போன்ற அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கிறார்கள். இதற்கு சாசேஜ் மரத்தின் பூக்கள் பயன்படுகின்றன.

 

மகோராஸ் என்னும் சிறு படகு

சென்னைக்கு மெரினா கடற்கரை மாதிரி போட்ஸ்வானாவுக்கு மகோராஸ் படகுசவாரி. மகோராஸ் என்பது ஒரு சிறு படகு. ஒரே மரத்தில் செதுக்கும் சிற்பம் போல ஒரே மரத்தில் செய்யும் படகுதான் மகோராஸ். 

ஒரு பெரிய ஒற்றை மரத்தைக் குடைந்து இந்தப் படகினை செய்கிறார்கள். குடைந்த பகுதிக்குள் குறைவாக பயணிகள் உட்கார்ந்து பயணம் செய்யலாம். குறைவான ஆழமுள்ள நீரில் நீளமான கம்புகளின் உதவியுடன் இந்த படகினை செலுத்துவார்கள்.

ஆப்ரிகன் எபனி, நாப்தான் அகேசியா, நம்ம சாசேஜ் ட்ரீ ஆகிய மூன்று மரங்களில்தான் இந்த மகோராஸ் படகுகளைச் செய்ய முடியுமாம்.

மரங்கள்,  இருபது மீட்டர் வரை உயரமாக வளரும். கொப்பும் குலையுமாய் வருஷம் 365 நாளும் இருக்கும் பசுமை மாறா மரம். கடுமையான வறட்சியில் மட்டும் இலைகளைக் கொட்டி தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும்.

காவிநிறக் கிளிகள் 

காவிநிறத் தலையுடைய ஒரு வகைக் கிளிகள்  இதன் பழங்களை ரசித்து ருசித்து சாப்பிடும். பொதுவாகக் கிளிகள் என்றால் அவை புழங்கும் இடங்ளில் கீசிகீச்சென்று கத்தி அந்தப்பகுதியையே கலவர பூமியாய் மாற்றிவிடும்.

ஆனால் இந்த காவித்தலைக் கிளிகள் பறவைகளிலேயே அமைதியானவை என்று பெயர் எடுத்தவை. அதனால் இவை வீடுகளில் வளர்க்க ஏற்றவை என்று அப்பார்ட்மென்ட் பெர்ட்ஸ்என்று பட்டம் தந்திருக்கிறார்கள். நம்ம ஊரில் அப்பார்ட்மென்ட் கிளிகள் வந்துவிட்டதா என்று தெரியவில்லை. ஆனால் ஆப்ரிக்காவில் சாசேஜ் மரங்கள்தான் இந்த கிளிகளுக்கு அப்பார்ட்மெண்ட்.

கிரேட்டர்கூடு என்னும் ஒருவகை மான்களும் சாசேஜ் மரத்தின் ரசிகர்கள். இதன் பழங்களை விரும்பிச் சாப்பிடும். கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்க வகை மான். ஆன்டிலோப் என்னும் மான் வகைகளிலேயே பெரிய சைஸ் மான் இது. அடர்ந்த காடுகளில் மாடுகள்போல சுற்றித் திரியும்.

 

சாசேஜ் பழங்களை பறித்தவுடன் சாப்பிடக் கூடாது. அதில் ஒருவகை நச்சுப்பொருள் இருக்கும். ஆனால் பழத்தை உலரவைத்து சாப்பிடலாம். வறுத்து சாப்பிடலாம். நொதிக்கவைத்து புளிக்கவைத்தும் சாப்பிடலாம்.

இதிலிருந்து முராட்டினா (MURATINA) என்னும் ஒரு முரட்டு சாராயம் தயாரித்து குடிக்கலாம். முழுக்க முழுக்க ஆர்கானிக். பருப்பில்லாமல் கல்யாணமா என்பது தமிழ் பழமொழி. முராட்டினா இல்லாமல் விசேஷமா என்பது கென்யா நாட்டுப் பழமொழி. அங்கு முராட்டினா அவ்வளவு பாப்புலர்.

கிக்கியூ என்னும் பழங்குடிமக்கள் பலநூறு வருஷமாக பருகிவரும் பானம் இது. சாசேஜ் பழத்தையும் கரும்பு சாற்றையும் சேர்த்து புளிக்கவைத்து இந்த முராட்டினாவைத் தயாரிக்கிறார்கள். கலக்கலான கசப்பு சுவையுடன் ஆல்கஹால் நெடியுடன் அசத்தலாக இருக்கும் என்கிறார்கள் இதனை வாசம் பிடித்தவர்கள்.

 

பலமொழிப் பெயர்கள்   

தமிழில் சிவகுண்டலம், யானைப்பிடுக்கன் (SIVAKUNDALAM, YANAIPIDUKKAN)

மலையாளத்தில் சிவகுண்டலம் (SIVAKUNDALAM)

இந்தியில்  பலம் கீரா, ஹாத்தி பைலான் (PALAM KEERA, HATHTHI PYLA,)

இதன் தாவரவியல் பெயர்  கிகேலியா பின்னேட்டா (KIGELIA PINNETA)  

பொதுப்பெயர் மற்றும் ஆங்கிலப்பெயர்  ஆஃப்ரிகன் சாசேஜ் ட்ரீ (AFRICAN SAUSAGE TREE)

தாவரக்குடும்பம் பெயர் :  பிக்னோனியேசி (BIGNONIACEAE)

 

முராட்டினா தயாரிக்கும் பார்முலா என்னிடம் உள்ளது. தேவைப்படுவோர் தொடர்புகொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. முராட்டினாவை முயற்சித்துப் பார்க்கலாம்.

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...