Friday, August 6, 2021

MANGIUM TREE, ACACIA MANGIUM, மான்செவிக்கருவை ஆஸ்திரேலிய மரம்

 

மான்செவிக்கருவை

ACACIA MANGIUM, FABACE

MANGIUM TREE, BLACK WATTLE, HICKORY WATTLE, FOEST MANGROVE, SABA SALWOOD, BROWN SALWOOD


எண்பதுகளில் இந்த மரம் இந்தியாவில் பிரபலமானது. தமிழ்நாட்டில் நான் முதன்முறையாக அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் பார்த்தேன். மான்காது வேலமரம்என்ற பெயரில் பேராசிரியர் அன்பு அவர்கள் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மான்காது மாதிரி அசப்பில் இருக்கும். அதன் இலைகளைப் பார்த்து ஆச்சரியப் பட்டேன். இதுவும் நம்ம ஊர் வேலமரம் குடும்பத்தைச் சேர்ந்தது. இதற்கு முள் கிடையாது. அதிக கிளை விடாது. செங்குத்தா வளரும். சீக்கிரமா வளரும். இதுக்கு சொந்த ஊர் ஆஸ்திரேலியாஎன்றும் எனக்கு விவரம் சொன்னபோது என் ஆச்சரியம் கூடுதலானது.

 

பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தும்

அப்போது நான் மதுரை வானொலி நிலையத்தில் விவசாய ஒலிபரப்புக்கு பொறுப்பு அலுவலராக இருந்தேன். அப்போதிருந்தே நான் மரங்களை ஆய்வு செய்வதில் ஒரு பைத்தியம் ஆனேன்.

ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, பப்புவா நியூகினியா, இவையெல்லாம் இந்த மரத்திற்கு சொந்த ஊர். ஆனால் மலேசியா, தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் இந்த மான்காது வேமரம் அதிகம் பரவியுள்ளது.

பொதுவாக மரங்கள் சுற்றுச்சூழலை மேம்படுத்தக் கூடியவை என்று நமக்குத் தெரியும். அவை பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்தக் கூடியவை. காற்றுமண்டலத்தில் இருக்கும் கரியமில வாயு என்னும் கார்பன்டை ஆக்சைடை நீக்கித் தனக்குள் சேமித்து வைக்கக் கூடியவை  என்று நமக்குத் தெரியும்.

ஆனால் மேஞ்சியம் என்னும் மான்காது வேலமரம் சுற்றுச் சூழலுக்கு கூடுதலான நன்மைகளை செய்யக்கூடிய மரம் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.

நூற்றுக்கு  எழுபத்தைந்து  விதைகள் முளைக்கும்

இதன் நெற்றுக்கள் சுருள்சுருளாக இருக்கும் விதைகள் மிகவும் சிறியவை. ஒரு கிலோ எடையில் ஒரு லட்சத்து இரண்டாயிரம் விதைகள் இருக்கும். விதைகளை கொதிநீரில் விதைநேர்த்தி செய்து விதைத்தால் நூற்றுக்கு  எழுபத்தைந்து  விதைகள் முளைக்கும். மிக வேகமாக முளைக்கும். முளைவந்த விதைகளை சாப்பிடலாம்.

சுமாரான மண் வகைகளில், சுமாரான வடிகால் வசதி இருந்தால் கூட சுமாராக வளரும் என்கிறார்கள். எனது சொந்த அனுபவத்தில் இதற்கு நல்ல மண்கண்டமும் ஈரச்செழிப்பும் தேவை எனத் தோன்றுகிறது.

எனது நிலம் செம்பொறை அல்லது செஞ்சரளை என்று சொல்லலாம். ஈரம் என்பது இம்மியளவு கூட இல்லாத பூமி. ஆறேழு வருஷத்தில் இருபது அடிக்குமேல் அதனால் எழுந்திருக்க இயலவில்லை. ஐந்து மரங்கள் வைத்ததில் இரண்டுதான் தேறின.

 

மரவேலைகளுக்கு ஏற்றது

லெகுமினேசிஎன்னும் பெரும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் வேர்களில் வேர்முடிச்சுகள் இருக்கும். இந்த வேர்முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் காற்றில் இருக்கும் தழைச் சத்தைக் கிரகித்து மண்ணில் நிலைப்படுத்தும். அதனால் இந்த மரங்கள் சாகுபடி செய்யும் நிலங்களில் தழைச்சத்து மேம்படும்.

மரம் மிகு எடை கொண்டது. கடினமானது, வலுவானது, முரட்டுத் தன்மை கொண்டது. இழுக்க இழுக்க இறுதிவரை இன்பம் என்ற விளம்பரம்போல இழைக்க இழைக்க பளபளப்பு கூடும் மரம் என்கிறார்கள், மரவேலைக் கலைஞர்கள். ஆனால் மரங்கள் ஊடாக பிளக்கும் தன்மை உடையதால் மரச்சில்லுகள்  தயாரிக்க, மரக்கூழ் தயாரிக்க, இதர தொழிற்சாலைகளில் பயன்படுத்த என்று விற்பனை செய்கிறார்கள்.

பாழ்பட்ட நிலங்களை மேம்படுத்த இந்த மரங்கள் உதவும். கோவா பகுதியில் சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட மண்ணில்கூட வளர்கின்றன. கொலம்பியாவில் தங்கச் சுரங்கங்களில் எடுத்த மண் குவியல்களிலும் மா.கா.வே. மரங்களைத்தான் நட்டிருக்கிறார்கள். கொலம்பியாவின் தங்கச் சுரங் ஸ்பெஷல் ! 

 

தீவனம்காகிதம் - சாயம் தயரிக்க 

ஆடுமாடுகள், எருமைகள் போன்றவற்றிற்கு தீவனமாகிறது இதன் இலைகள் மற்றும் இளம் தளிர்கள். இதன் மற்ற சராசரி மர இலைகளைவிட கூடுதலான கச்சாப் புரதம் இருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்த மரத்தில் உயர்தரமான கரி தயாரிக்கலாம். இதில் செயற்கைக் கார்பன் மற்றும் சார்கோல் பிரிக்கட்ஸ்  தயார் செய்யலாம்.  சாபா, சுமத்ரா, வியட்நாம் ஆகிய இடங்களில் இந்த மரங்களில் பேப்பர் தயாரிக்க மரக்கூழ் அதிக அளவில் தயாரிக்கிறார்கள். பார்ட்டிகிள் போர்டுகளும் தயார் செய்கிறார்கள். இதில் முப்பத்தி ஒன்பது சதவிகிதம் வரை டேனின் சத்து இருப்பதால் வியாபார ரீதியில் சாயம் தயாரிக்கலாம்.

 

தோட்டக்காரன் பொழப்பு காற்றடிச்சாப் போச்சி

அடர்த்தியான தழை அமைப்பை உடைய மரம் இது. மேலும் ஆண்டு முழுவதும் தழை இருப்பதால் இது பசுமை மாறாத நல்ல நிழல் மரம். சாபா என்னும் இடத்தில் பயிரிடும் சாக்லட் பயிர் கோகோவுக்கு நிழல் மரமாகப் வளர்க்கிறார்கள். லிபியா நாட்டின் ஒரு மாநிலம் சாபா.

தோட்டக்காரன் பொழப்பு காற்றடிச்சாப் போச்சிஎன்பார்கள். திருச்சி மாவட்டத்தில் வாழைத்தோட்டம் வைத்திருப்பவர்களுக்கு அதன் அர்த்தம் புரியும். பழத்தோட்டங்களில் அல்லது விவசாய நிலங்களில் இதனை காற்று தடுக்கும் மரமாகப் பயன்படுத்தலாம்.

 

வாட்டில் டிம்பர்

இந்த மரங்களை வாட்டில் டிம்பர் என வகைப்படுத்துகிறார்கள். இது கட்டுமானப் பணிகள், படகுகள் கட்ட, மேஜைநாற்காலிகள், பெட்டிகள், கதவுகள் மற்றும்  ஜன்னல்கள் செய்ய பரவலாக பயன்படுகிறது. கடவுள்பாதி மிருகம்பாதி என்பதைப்போல இதில் பாதி குறைகளும் உள்ளன. கரையான் இதனை விரும்பிச் சாப்பிடும். தண்ணீரைத் தாக்குப் பிடிக்காது, அழுகிவிடும். மரத்தில் நிறைய முடிச்சுக்களும் போரைகளும் இருக்கும். மரவேலை செய்யும்போது இவை இடைஞ்சலாக இருக்கும்.

 

காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்த

மலேசியா, தாய்லாந்து நாடுகளில்  அழகு மரமாக வளர்க்கிறார்கள். குறிப்பாக சாலை ஓர மரமாக மற்றும் நகர்ப்புற வனங்கள் உருவாக்குவதில் பயன்படுத்துகிறார்கள்.

வனங்கள் அல்லது காடுகளில் காட்டுத் தீயினைக் கட்டுப்படுத்த தீ இடைவெளி கொடுப்பது வழக்கம். அந்த இடைவெளிகளில் மா.கா.வே. மரங்கள் நடுவதை சில இடங்களில் வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.

 

பல மொழிப் பெயர்கள

தமிழில் மான்காது வேலமரம்,

இதன்  வியாபாரப்பெயர் பிரவுன் சால்வுட் என்பது.

பொதுப்பெயர்கள் மேஞ்சியம் ட்ரீ, பிளாக் வேட்டில், ஹிக்கரி வேட்டில், பாரெஸ்ட் மேங்குரோவ், சபா சால்வுட், பிரவுன் சால்வுட்(MANGIUM TREE, BLACK WATTLE, HICKORY WATTLE, FOEST MANGROVE, SABA SALWOOD, BROWN SALWOOD )

தாவரவியல் பெயர்: அகேசியா மேஞ்சியம் (ACACIA MANGIUM),

தாவரக் குடும்பம் பெயர்: பேபேசியே (FABACE). 

எங்கள் பூமி ஆபீசில் உட்கார்ந்தபடியே பார்த்தால்கூட ஏழைகளின் ஊட்டி ஏலகிரியை முழுசாய் பார்க்கலாம். வருஷாவருஷம் கோடை வந்தால் தினமும் தீபாவளி மாதிரி மலையில் காட்டுத்தீ பார்க்கலாம். அதேபோல நாங்கள் நீர்வடிப்பகுதி வேலை பார்க்கும் தும்பேரி கிராமத்தின் மலைப் பகுதிக்கும் இந்த காட்டுத்தீ வந்துவந்து போகிறது.

தற்போது நாடு முழுவதும் மரம் நடுவதில் தீவிரமாக ஈடுபட்டுவரும் நாம் ஏற்கனவே சொற்பமாக இருக்கும் மரங்களை காட்டுத்தீக்கு காவு கொடுக்காமல் இருக்கவும் முயற்சிக்க வெண்டும். 

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...