Saturday, July 31, 2021

நெட்டிலிங்கம் மரம் INDIAN MAST TREE, ASHOK, FALSE ASHOK, BUDHA TREE

 


நெட்டிலிங்கம் மரம்

INDIAN MAST TREE, ASHOK, FALSE ASHOK, 

BUDHA TREE


 My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!

ஓவ்வொரு மரமும் ஒவ்வொரு வகையில் வித்தியாசப்படும். அந்த வகையில் வடிவத்தால் வித்தியாசமானது இந்த நெட்டிலிங்கம் மரம்.  சிலர் இளைத்துப்போன இந்திய கோபுரம் மாதிரி இருக்கு என்பார்கள்;. சிலர் இதனை ஒட்டடைக் குச்சியில் சொருகிய ஒல்லிப் பிரமிடு என்பார்கள்;. எனக்கு மட்டும்; எனக்கு மட்டும் அரை நிஜார் வயசில் வாங்கித் தின்ற குச்சிஐஸ்தான் ஞாபகத்தில் வரும்.

 

யாரைக் கேட்டாலும் இந்த மரத்தை அசோக மரம் என்றே சொல்வார்கள். இந்த மரத்தடியில் அதிக நிழல்கூட இருக்காதே.. அசோக வனத்தில் எப்படி சீதை அத்தனை வருஷம் சிறை இருந்தாள்..? என்று ஒரு தடவை என் அம்மாவிடம் கேட்க அவர் சொன்னார் கதைக்கு கால் கிடையாது. அதை அவ்ளோ நுணுக்கமா பார்க்கக் கூடாதுஎன்றார்.

 

நானும் இதை அசோக மரம் என்றே சொல்லி வந்தேன். ஆனால் இதுபற்றி ஆய்வு செய்த பின்னால்தான் தெரிந்தது இதன் பெயர் நெட்டிலிங்கம் என்று.

 

மரமும் அழகு பூவும் அழகு

மேற்கத்திய நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும்தான் இதுபோன்ற வடிவத்தில் மரங்கள் இருக்கும். இதையும் வெகுநாள்வரை வெளிநாட்டு மரம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இது உண்மையிலேயே இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு சொந்தமான மரம்.

 

இதன் கிளைகள் மெல்லிய கொடிகள்போல தென்படும். மரத்தோடு மரம் ஒட்டியதுபோல கீழே தொங்கும். அதனால்தான் இந்த மரம் குச்சிஐஸ் தோற்றம் தருகிறது. எப்போதும் ஜீரோ சைஸ்தான் பீரோ சைஸ் வராது.

 

இந்த மரம் மார்ச் ஏப்ரல் மாதங்களில்பூக்கும். வெளிர் பச்சை நிறத்தில் நட்சத்திர வடிவில் அழகான  இதன்பூக்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்கள்தான் மரங்களில் பார்க்கலாம். அதற்குமேல் அவை மரங்களில் தங்காது.

 

இலைகள் உதிராமல் எப்போதும் பசுமையாக இருக்கும். இதன் தாவரவியல் பெயர் பாலியால்தியா லாங்கிபோலியா. பலவிதமான நோய்களைக் குணப்படுத்தும் என்று சொல்லும் கிரேக்க வார்த்தைதான் பாலியால்தியா.

 

இதன் இலைகள் நீளமானவை என்று சொல்லத்தான் லாங்கிபோலியா. அகலம் குறைவான இதன் இலைகளின் ஓரம் நெளிநெளியான வளைவுகளுடன் பச்சை நிறத்தில் பளபளக்கும்.

 

கப்பல் கொடிக்கம்பங்களுக்கு ஏற்ற மரம்

இந்த மரம் பிரிட்டீஷ் இந்தியாவில்தான் பிரபலமானது. சொல்லப் போனால் இந்தியாவில் வெள்ளைக்காரர்கள்தான் இந்த மரத்திற்கு சிவப்புக் கம்பளம் விரித்தார்கள்.

 

அதற்கு காரணம் இல்லாமலில்லை. அவர்களுடைய தேசம்ஒரு தீவு. தண்ணீரால் சூழ்ந்தது. நீர்வழிதான் அவர்களுக்குப் பிரதான போக்குவரத்து. அன்று அவர்களின் முக்கிய தேவையாக இருந்தது சிறிய பெரிய படகுகளும் கப்பல்களும்தான்.

 

அதற்கு கொடிக்கம்பங்கள் செய்யத் தோதாக இருந்தது இந்த நெட்டிலிங்கம். இருந்த மரங்களை வெட்டினார்கள். இல்லாததற்கு புதிதாக நட்டார்கள். நெட்டிலிங்க மரத்தின் எண்ணிக்கை பிரிட்டீஷ் இந்தியாவில் நெட்டுக்குத்தாக வளர்ந்தது.

 

பாடும் குயில்களும், பழம் தின்னும் வவ்வால்களும் 

வெப்பமண்டலப் பகுதிகளில், உலகம் முழுவதிலும் இந்த மரத்தை பல நாடுகளில் வளர்க்கிறார்கள். அவை இந்தோனேஷியாவின் ஜக்கர்தா, ரிபியன் தீவுகள் மற்றும் ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் அண்ட் டொபேகோ.

 

நெட்டிலிங்கம் ஒரு மூலிகை மரமும்கூட. பல நோய்களை கட்டுப்படுத்தும். அவை, காய்ச்சல், தோல் நோய்கள், ரத்த அழுத்தம், ஹெல்மின்தியாசிஸ், பெப்ரிபியூஜ், சக்கரைநோய், பூசணநோய்கள் மற்றும் பாக்டீரியல் நோய்.

 

சிலவகை பட்டாம்பூச்சிகளின் இளம்புழுக்களுக்கு இதன் இலைகள் பிரதான உணவாகிறது. மாவிலை தோரணம் கட்டுவதுபோல பல நாடுகளில் முக்கிய விழாக்களில் தோரணமாக அலங்கரிப்பவை நெட்டிலிங்கம் இலைகள்தான்.

 

பாடும்; குயில்களுக்கும், பழம் தின்னும் வவ்வால்களுக்கும்  பிடித்தமான விருந்து இதன் பழங்கள்.

 

இதன் விதைகள், 50 முதல் 70 சதம் வரை முளைக்கும். ஒரு கிலோ எடையில் 1800 முதல் 2000 விதைகள் வரை இருக்கும்.

 

ஒரு காலத்தில் பிரிட்டீஷ் கப்பல்களில் கொடிக்கம்பமான நெட்டிலிங்கம் மரங்கள், இன்று தீக்குச்சிகள், பென்சில்கள் மற்றும் பெட்டிகள் தயார்செய்யபட்டையிலிருந்து வலுவான நார்க்கயிறு தயாரிக்க, காகிதம் செய்யும் மரக்கூழ் தயாரிக்க, பீப்பாய்கள், பெட்டிகள், கட்டுமான சட்டங்கள், வேளாண் கருவிகள்; ஆகியவற்றை செய்ய உதவுகின்றன.

 

நெட்டிலிங்கம் மரத்தின் பலமொழிப் பெயர்கள்:

தமிழ்ப் பெயர் :  நெட்டிலிங்கம், வான்சூலம் (NETTILINGAM, VANSOOLAM)

இந்தி: அசோக். (ASHOK)

மலையாளம்: ஹேமாபுஷ்பம் (HEMA PUSHPAM)

தெலுங்கு: தேவதாரு, (DEVADHARU)

கன்னடம்: அப்பினா (APPINA)

பொதுப்பெயர்: இந்தியன் மேஸ்ட் ட்ரீ, அசோக், பால்ஸ் அசோக், புத்தா ட்ரீ, இந்தியன் பிர் ட்ரீ (INDIAN MAST TREE, ASHOK, FALSE ASHOK, BUDHA TREE)

 

தாவரவியல் பெயர்: பாலியால்தியா லாங்கிபோலியா (POLYALTHIA LONGIFOLIA)

தாவரக்குடும்பம் பெயர் :  அனோனேசி (ANNONACEAE)

 

வழக்கமாக பிரிட்டீஷ் கப்பல்களில் மெடிட்ரேனியன் சைப்ரஸ் என்னும் மரங்களைப் கொடிக்கம்பமாகப் பயன்படுத்தி வந்தார்கள். நெட்டிலிங்கம் 30 மீட்டர் வளரும் என்றால் இந்த மரங்கள் 35 மீட்டர் உயரம் வளரும். இதற்கு டிராமா ட்ரீ  என்று பெயரும் உண்டு. காரணம் லேசாகக் காற்று வீசினால்கூட இந்த சைப்ரஸ்மரம் வேகமாக ஆட்டம் போடுமாம்.

 

வேகமாக காற்று வீசும்போது நம்ம ஊர் நெட்டிலிங்கம்கூட நல்லா வளைந்து ஆடும் ! ஆனால் நெளிந்து ஆடாது.


Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


No comments:

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...