Thursday, July 9, 2020

தெரிந்த நிலக்கடலையும் தெரியாத சேதிகளும் - UNKNOWN FACTS ON KNOWN GROUNDNUT






தெரிந்த நிலக்கடலையும்
தெரியாத சேதிகளும்

UNKNOWN FACTS ON
KNOWN GROUNDNUT

நிலக்கடலை தெரியும், வேர்க்கடலை தெரியும், மணிலாகொட்டை தெரியும், கிரவுண்ட்நட், பீநட் தெரியும், இந்தியில்கூட மூங்பல்லி என்று தெரியும், இதைப்பற்றித் தெரியாத 20 செய்திகள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

01. நிலக்கடலையின் தாய்நாடு பெரு

நிலக்கடலை தென் அமெரிக்காவில்  பெரு என்னும் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தது, அங்கு நிலக்கடலைக்கு மணிஎன்று பெயர், அத்துடன் லாசேர்த்து மணிலா என்று அழைத்தனர், கொஞ்சநாளில் அத்துடன் கொட்டை சேர்ந்து மணிலாகொட்டை ஆனது, அதுவும் மருவி மல்லாட்டை ஆனது.


02. நிலக்கடலைக்கு ஒரு மாத விழா

1974 ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் ஒரு மாதம் வரைநிலக்கடலை மாதம்என்று கொண்டாடுகிறார்கள், 1941 ஆம் ஆண்டிலிருந்து அது வாரவிழாவாக, கொண்டாடினார்கள், அதனை இப்போது மாத விழாவாக மாற்றிவிட்டார்கள், .அலபாமாவில் உள்ள அப்பா என்ற அமைப்பு இந்த விழாவை கொண்டாடுகிறது. அப்பா என்றால் அலபாமா பீநட் புரொட்யூசர்ஸ் அசோசியேஷன் (APPA – Alabama Peanut Producers As) என்று அர்த்தம்.

   

03. தொல்லை தராத கொழுப்பு

நிலக்கடலையில் இருப்பது இதயத்திற்கு தொல்லை தராத கொழுப்பு என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்,  இதனை மானோ சாச்சுரேட்டட் ஃபேட் (MONO SATURATED FAT)என்று சொல்லுகிறார்கள், இது இதயத்திற்கு பாதுகாப்பானது.


04.  அதிகமான புரதம்

மரங்கள் அல்லது தாவரங்களிலிருந்து கிடைக்கும் கொட்டைகள் எல்லாவற்றையும்விட அதிகமான புரதச்சத்து இருப்பது வேர்க்கடலையில்தான், அத்துடன் இருபத்தி ஒன்பது வகையான வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், தாது உப்புக்கள்   அத்தனையும் உள்ளன, குறிப்பாக மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை நிரம்ப உள்ளது,

05. நிலக்கடலை தோலில் காப்பித்தூள்

அமெரிக்காவில் 1861 முதல் 1865 வரை நான்கு ஆண்டுகள் சிவில் வார்எனும் உள்நாட்டுப் போர்  நடந்தது, பொதுவாக போர்காலங்களில் உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படுவது சகஜம், அதுபோல அமெரிக்காவில் ந்த சமயம் காப்பித்தூள் கிடைக்காத நிலை இருந்தது, அந்த சமயத்தில் நிலக்கடலைத் தோலை அரைத்து அந்த பவுடரை காப்பித்தூளுக்கு பதிலாகப் பயன்படுத்தினார்கள் போர்வீர்ர்கள்.

 06. சீட்டுகிழிச்சான் கொட்டை

தமிழில் நிலக்கடலைக்கு சீட்டுக்கிழிச்சான் கொட்டை என்ற ஒரு பெயரும் இருந்தது, நிலக்கடலை சாகுபடி செய்து கிடைத்த லாபத்தில் வாங்கிய கடனை அடைத்தார்கள், அதற்கான அந்த கடன் பத்திரங்களை எல்லாம்  வாங்கி கிழித்து போட்டார்களாம், அதனால் நிலக்கடலைக்கு தமிழ்நாட்டில் சீட்டுக்கிழிச்சான்கொட்டை என்று பெயர் வந்தது.  


07. பீநட் கிளஸ்டர் டே

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் எட்டாம் தேதி பீநட் கிளஸ்டர் டே’ (PEANUT CLUSTER DAY) என்று கொண்டாடுகிறார்கள், நாம் கடலை பர்பி என்பதும் பீநட் கிளஸ்டர் என்பதும் ஒன்றுதான்.

நம்ம ஊர் நிலக்கடலை பர்பியில் வெல்லம் சேர்த்து தயாரிக்கிறோம், வெல்லத்திற்கு பதிலாக அவர்கள் சாக்லேட் சேர்த்து தயாரிக்கிறார்கள், அவ்வளவுதான் வித்தியாசம், இதிலும் பல வகை உண்டு,  கேராமல் கிளஸ்டர், பட்டர் ஸ்காட்ச் கிளஸ்டர்,  சாக்லெட் கிளஸ்டர் என பல வகை உண்டு.


08. ராக்கெட்டில் பறந்தபடி கடலை சாப்பிட்டவர்

நிலக்கடலை பிரியர்களுக்கு தடை போடுவது சிரமம்,  அவர்கள் எங்கு போனாலும் கடலை கிடைக்கிறதா என்று பார்ப்பார்கள், அப்படித்தான் ராக்கெட் பயணத்தின் போது நிலக்கடலை சாப்பிட்டார் ஒரு வானவெளி வீர்ர், அவர் பெயர் ஆலன் பி ஷெப்பர்ட் என்பவர்,


09. உலகப்போரில் கடலை மிட்டாய் சப்ளை

இரண்டாவது உலகப் போர் தீவிரமாக நடந்த சமயம், போர் முனைகளில் வீரர்களுக்கு தலைவாழை இலைபோட்டெல்லாம் சாப்பாடு போடமுடியாது, அவர்களுக்கு எடுத்தமா சாப்பிட்டமா என்று இருக்க வேண்டும், அது சண்டைபோட சக்தியும் தர வேண்டும், அதற்கு ஏற்றது கடலை மிட்டாய்தான் என்று முடிவு செய்தார்கள், அப்புறம் என்ன, வாராவாரம் 50,000 நிலக்கடலை மிட்டாய் சப்ளை செய்து போர் வீரர்களை உற்சாகப்படுத்தினார்களாம். எம்போரியா என்னும் காப்பி கம்பெனிவாரம் தவறாமல் கடலை மிட்டாயை சப்ப்ளை செய்தார்களாம்.


 10.அமெரிக்கர்கள் அதிகம் சாப்பிடுவது

நிலக்கடலை அமெரிக்காவின் மிக முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்று, ஆனால் இதனை அமெரிக்காவுக்கு அறிமுகம் செய்தவர்கள் ஆப்பிரிக்க மக்கள்தான், 1700 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் நுழைந்த நிலக்கடலை அடுத்த 100 ஆண்டுகளில் அமெரிக்காவின் மிக முக்கியமான வியாபார பயிரானது. ஒவ்வொரு அமெரிக்கரும் ஓராண்டில் சராசரியாக 4.082 கிலோகிராம்  நிலக்கடலையை சாப்பிடுகிறார்கள்,  


 11. பீட்பட்டர் பாதுகாப்பானது

பீட்பட்டர் அல்லது நிலக்கடலை பட்டர் அல்லது நிலக்கடலை வெண்ணை என்பது இன்னும் நம் நாட்டில் புழக்கத்தில் இல்லை, இதில் பொட்டாசியம் மற்றும் புரதம் கணிசமாக இருப்பதால் இது இரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானது, அதனால் இதனை பயப்படாமல் சாப்பிடலாம்.

12. வேர்க்கடலை மாவட்டம்

தமிழ்நாட்டில் தென்ஆர்க்காடு மாவட்டத்திற்கு வேர்க்கடலை மாவட்டம் என்று பெயர், நிலக்கடலை இந்தியாவிற்கு அறிமுகமான சமயத்தில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்தது கடலூர் விழுப்புரம் பகுதிகளை உள்ளடக்கிய தென்னார்க்காடு மாவட்டம்தான். அதனால்தான் அது நிலக்கடலை மாவட்டம் ஆனது.


13. முதல் இரண்டு நிலக்கடலை வகை

நாம் ன்று உலகம் முழுவதும் பயிரிடும் நிலக்கடலை இரண்டு ரகங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டது, அவை இரண்டும் பொலிவியா மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்தவை, அவை இரண்டும் தென்னமெரிக்க நாடுகள், அவற்றின் தாவரவியல் பெயர்கள் அராச்சிஸ் அய்ப்பன்சிஸ், மற்றும் அராச்சிஸ் டூரானென்சிஸ்(ARACHIS IPAENSIS & ARACHIS DURANENSIS).


 14. மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு

இந்தியாவில் நிலக்கடலையை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் குஜராத், இங்கு இந்தியாவின் மொத்த உற்பத்தியில் 27.8 87 சதவீதம் உற்பத்தியாகிறது, இரண்டாம் நிலையில் இருப்பது ஆந்திர பிரதேசம், மூன்றாம் நிலையில் இருப்பது தமிழ்நாடு.


 15. கெட்ட கொழுப்பு குறைவு

தமிழில் நிலக்கடலை பற்றிய கொச்சையான அல்லது வேடிக்கையா ஒரு பழமொழி உண்டு, ‘மல்லாட்டை கொழுப்பு  மாமியாரை எழுப்பு என்று, அதனால் தான் அது நமக்கு வேண்டாம் அதில் கொழுப்பு அதிகம் என்று டாக்டர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன், ஆனால் சமீபகாலமாக அதில் இருப்பது நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு குறைவுதான் என்கிறது ஆராய்ச்சி.


14. சர்க்கரை இருப்பவர்கள் இதனை சாப்பிடலாமா ?

நிலக்கடலை சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது, இயற்கையாக பீநட்பட்டர், லோ கிளைசிமிக் (LOW GLYCEMIC INDEX) உணவு வகையைச் சேர்ந்த்து,  அதனால் பீட்பட்டர் பாதுகாப்பானது. லோ கிளைசிமிக் என்றால்  அது மெதுவாக சர்க்கரையை ரத்தத்தில் சேர்க்கும், அது மெதுவாக செரிக்கும் உணவு என்று அர்த்தம், நிலக்கடலையில் இந்த கிளைசிமிக் இண்டெஃஸ் 14 மட்டுமே, இது மிகவும் குறைவு என்கிறார்கள். சர்க்கரை இருப்பவர்களுக்கும் இது பாதுகாப்பானது.

15. உலக அளவில் இரண்டாம் இடம்

சர்வதேச அளவில் இந்தியா தான் நிலக்கடலையை அதிகமான பரப்பில் உற்பத்தி செய்கிறது என்பது தெரியுமா ? உலக அளவில் நிலக்கடலையை அதிகமான பரப்பில் சாகுபடி செய்தாலும்  உற்பத்தியில் சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது, நாம் இருப்பது உலக அளவில் இரண்டாம் இடம்தான்.


 16. நிலக்கடலையின் தந்தை

ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்பவரை நிலக்கடலையின் தந்தை என்கிறார்கள், காரணம் அவர் நிலக்கடலையில் 300க்கும் மேற்பட்ட பொருட்களை கண்டுபிடித்துள்ளார்,  அத்துடன் ஷாம்பூ,, ஷேவிங் க்ரீம் ஒட்டும்பசை, இப்படி பலவிதமான பொருட்களையும்  கண்டுபிடித்துள்ளார், நிலக்கடலைக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்  ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், இவருக்காக ஒரு நினைவகம் ஒன்றையும் அமைத்துள்ளது அமெரிக்க அரசு, தனால் தான் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர், நிலக்கடலையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.


17. ஜிம்மி கார்ட்ரின் தேர்தல் சின்னம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயி,  பின்னர் வெற்றிகரமாக விவசாய தொழிலதிபராக மாறினார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க நாட்டிற்கே அதிபரானார், அதிபர் தேர்தலில் அவர் நின்றபோது அவருடைய தேர்தல் சின்னம் என்ன தெரியுமா ? அதுவும் நிலக்கடைதான். அமெரிக்காவின் 39 ஆவது அதிபராக 1977 முதல் 1981ஆம் ஆண்டு வரை இருந்தார்,  

 18. மார்சில்லஸ் ஜில்மோர் எட்சன் என்பவர்தான் 1884 ஆம் ஆண்டு பீநட் பட்டர் எனும் வேர்கடலை வெண்ணை தயாரிப்பது  எப்படி என கண்டுபிடித்தார், இந்த  கனடாக்காரர் கண்டுபிடித்த்தை அமெரிக்காவில் 94 சதவிகித மக்கள் சாப்பிடுகிறார்கள்.




19. பீட் பட்டர் தயாரிக்கும் கருவி ஒன்றை 1903 ஆம் ஆண்டு தயாரிக்கும் மிஷின் ஒன்றை கண்டுபிடித்தார் டாக்டர் அம்புரோஸ் ஸ்ட்றாஃப் என்பவர்,  அந்த கருவிதான் இப்போதும் பிரபலமாக உள்ளது என்கிறார்கள்.

20. முதியோர் ஸ்பெஷல்

ஆரம்ப காலத்தில் பீட் பட்டர் விற்பனை செய்த டாக்டர் ஹார்வி என்ன சொல்லி விற்பனை செய்தார் தெரியுமா ? நீங்கள் பல்லில்லாதவரா ? கடித்து மெல்லமுடியாத வயோதிகரா ?  உடல் நலம் சரியில்லாதவரா ?  உங்களுக்காக தயாரிக்கப்பட்டது தான் இது என்று சொல்லி விற்பனை செய்தார். ஆனால்  இன்று பல் இருப்போர் இல்லாதோர் எல்லோரும் அதனை சாப்பிடுகிறார்கள்.

நிலக்கடலை பற்றிய இன்னும் கூடுதலான இந்திய செய்திகளை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம், இந்த முறை அதிக அமெரிக்க செய்திகள் முந்திக்கொண்டன.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன், உங்கள் கருத்துக்களை கமெண்ட் பெட்டியில் மறக்காமல் எழுதுங்கள்.

எழுதியவர்: அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.12tomatoes.com / 10 Fun Facts About Peanuts
www.wisfarmer.com / These American Presidents were famous and ranchers at Heart
www.huffpost.com /The history of Peanut Butter
www.nationalpeanutbard.org/  History of peanut Butter
www.medicalnewstoday.com/articles - Can People With Diabetes Eat Peanut Butter ?
www.alpeanuts.com/ March National Peanut Month

0000000000000000000000000







3 comments:

Anonymous said...

அருமையான தகவல்கள். எனக்கிருந்த உண்மை தெரிஞ்சாகனும்.எல்லா பயிர்களும் நிலத்தில்தானே வளர்கின்றன .பின் ஏன் கடலைக்கு மட்டும் நிலக்கடலை என்று பெயர்?

முரளிதரன் ராமராவ் said...

அருமையான தகவல்கள். எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்.எல்லா பயிர்களும் நிலத்தில்தானே வளர்கின்றன .பின் ஏன் கடலைக்கு மட்டும் நிலக்கடலை என்று பெயர்?

Reply

Gnanasuriabahavan Devaraj said...

"பளிச்" சென்ற தங்கள் பாராட்டிற்கு நன்றி. நிலத்திற்கு அடியில் காய்க்கும் ஒரே கடலை இதுவாக இருக்கலாம், இது ஒரு அனுமானம்தான். தங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

ஆறும் ஊரும் புத்தக வெளியீட்டு விழா - 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARUM URUM

DR.SASIKANTA DAS, HON.L.PAZHAMALI, ARIVAZHAGAN & BHUMII GNANASOORIAN ARUM URUM BOOK ON TAMIL RIVERS 100 RIVERS OF TAMILNADU NEW BOOK ARU...