Monday, July 13, 2020

கின்னஸ் விருது வாங்கிய புடவை - SILK SAREE AND GUINNESS RECORD





கின்னஸ் விருது வாங்கிய புடவை

SILK SAREE AND GUINNESS RECORD

My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


 நாற்பது லட்ச ரூபாய் கையில் இருந்தால் இரண்டு ஏக்கர் நிலம் வாங்கலாம், வீடுகட்ட இரண்டு காலிமனை வாங்கலாம், ஆவடி அம்பத்தூரில் ஒரு டபிள் பெட்ரூம் ஃபிளாட் வாங்கலாம், அதை எல்லாம் விட்டுவிட்டு நாற்பது லட்ச ரூபாய்க்கு ஒரேஒரு பட்டுப்புடவை வாங்கியிருக்கிறார் ஒருத்தர்.

யார் அந்த புண்ணியவாளன் ?

யார் அந்த புண்ணியவாளன் என்று கடைசியில் சொல்லுகிறேன், இது கின்னஸ்ல் பதிவாகியுள்ளது, இந்த சரித்திர சம்பவம் நடந்தது 2008 ம் ஆண்டில், இந்த புடவையை தயார் செய்தது சென்னை சில்க்ஸ்,

இதைத் தயாரிக்க 4760 மனித மணிநேரம் செலவானது, புடவையின் நீளம்கூட ஆறு மீட்டர்தான், அதில் வயிரம், எமெரால்டு, தங்கம், மற்றும் பல விலை உயர்ந்த 8 கிலோ எடையுள்ள பலவித கற்கள் எல்லாம் அந்த  புடவையில் பதிக்கப்பட்டிருந்தன.

இந்த புடவையின் நிமித்தம் இந்தியாவின் விலை உயர்ந்த ஓவியர் ராஜா ரவி வர்மா பதினோரு ஒவியங்களை தீட்டியுள்ளார்.

அந்த புடவையில் என்னென்ன கற்கள் எவ்வளவு பதிக்கப்பட்டுள்ளன தெரியுமா ? படியுங்கள் கீழே தலை சுற்றும் .கோல்ட் 59.7 கிராம், வயிரம் 3 காரட் 913 செண்ட், பிளாட்டினம் 120 மி.கி., சில்வர் – 5 கிராம், ரூபி 2 காரட் 985 செண்ட், எமரால்ட் – 55 செண்ட், எல்லோ சஃபயர் 5 சென்ட், கேட் ஐ – 14 செண்ட், டோபாஸ் – 10 செண்ட், முத்து 2 கிராம், மற்றும் பவழம் – 400 மில்லி கிராம்.

கின்னஸ் விருதுபெற்ற இந்த பிரம்மாண்டமான புடவை யார் கைக்கு போய் இருக்கிறது தெரியுமா ? இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர் அம்பானி குடும்ப திருமணத்திற்கு என்று சொல்லுகிறார்கள்.
வேலைவாய்ப்பு

கிராமங்களில் வேலை வாய்ப்பினை உருவாக்க மிகவும் பொருத்தமான தொழில் பட்டு வளர்ப்பு, இது ஆண்டு முழுவதும் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பினைத் தருகிறது, ஒரு கிலோ கச்சா பட்டு உற்பத்தி செய்ய 11 நபர்கள் தேவைப்படுகிறார்கள், இந்தியாவில் பட்டு உற்பத்தி 85 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வேலை தருகிறது. பெண்கள் ஆண்களுக்கு சம்மாக இந்த வேலைகளில் பங்கேற்க முடியும், கிராமங்களில் பட்டு வளர்ப்புத் தொழிலை செய்பவர்கள் குடும்பம் குடும்பமாக அதில் ஈடுபடுகிறார்கள்.

இந்தியாவில் பட்டு உற்பத்தி

 இந்தியாவில் பட்டு உற்பத்தி என்றால் ஐந்து மாநிலங்களைத்தான் விரல் நீட்ட வேண்டும், அவை கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம், மற்றும் ஜம்மு காஷ்மீர், சமீபகாலமாக தமிழ்நாடு மிக முக்கியமான பட்டு உற்பத்தி கேந்திரமாக உருவாகி வருகிறது,  தமிழ்நாட்டில் சேலம் ஈரோடு தர்மபுரி ஆகிய மாவட்டங்கள் பட்டு உற்பத்திக்கான முக்கிய இடங்கள் என்று சொல்லலாம்.
 

பரவிவரும் பட்டு வளர்ப்பு

லாபம் தரக்கூடியது என்பதால் பட்டு வளர்ப்பு சமீப காலமாக பிரபலமாகி வருகிறது, பல முக்கிய பயிர்கள் செய்வதை மூட்டை கட்டிவிட்டு மல்பெரி சாகுபடியில் முனைப்பாக இறங்கிவிட்டார்கள், கர்நாடகாவில் கரும்புக்கு பதிலாக, ஜம்மு காஷ்மீரில் தோட்டக்கலை பயிர்களுக்கு பதிலாக, மேற்கு வங்காளத்தில் சணலுக்கு பதிலாக, ஆந்திராவில் திராட்சைக்கு பதிலாக, தமிழ் நாட்டில் பல பணப்பயிர்களுக்கு பதிலாகவும் விவசாயிகள் பட்டுவளர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.


காஞ்சிபுரம் பட்டு

 காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு பெயர்போனது, இதனை புடவைபுரம் என்றே அழைக்கலாம், காஞ்சிபுரம் அதன் டிசைன்கள், சரிகை வேலைகள் ஆகியவற்றிற்கு சிறப்பானவை, சுமார் ஐயாயிரம் குடும்பங்கள் காஞ்சிபுரம் பகுதியில் பட்டு நெசவில் ஈடுபட்டுள்ளனர். பிரிய்தர்ஷன் என்ற திரைப்பட இயக்குனர் காஞ்சிபுரம் என்ற தலைப்பில் பட்டு நெசவு பற்றிய ஒரு திரைப்படம் எடுத்தார், அது 2008 ஆம் ஆண்டில் தேசிய விருது பெற்றது.

இந்தியாவின் சில்க்சிட்டி

போச்சம்பள்ளி என்ற ஊர்தான் இந்தியாவின் சில்க் சிட்டி, இது தெலுங்கானா மாநிலத்தில் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ளது, இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டுப்புடவைகள் பிரபலமானவை, போச்சம்பள்ளியை சில்க் சிட்டி ஆஃப் இந்தியா என்று அழைக்கக் காரணம் இந்த போச்சம்பள்ளி புடவைகள்தானாம்.

சீனாவின் சில்க் ரோடுகள்

மண்ரோடு, தார்ரோடு, சிமெண்ட்ரோடு,  இப்படி பல ரோடுகளை நாம் பார்க்கிறோம், ஆனால் சில்க் ரோடு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ? ஒரு காலத்தில் சீனாவிலிருந்து  ட்டு உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருந்தார்கள், உதரணம் பீஜிங்கிலிருந்து லண்டனுக்கு ஏற்றுமதி செய்தால் அந்த வழியை சில்க் ரூட் என்று சொல்ல்லாம், ஆனால் அதனை  சில்க் ரோட் என்றும் சொந்னார்கள், சீனாவில் 10 சில்க் ரோடுகள் இருக்கிறது என்று சொன்னால் பட்டு விற்பனை செய்ய பத்து வழிகள் இருக்கின்றன என்று அர்த்தம்.


இந்தியாவிலா ? சீனாவிலா ?

உலகில் பட்டு வளர்ப்பு எப்படி உருவானது ? பட்டு வளர்ப்பு உலகில் முதன்முதலாக இந்தியாவில்தான் தோன்றியது என்று ஒரு கருத்து உள்ளது, அதன்படி இமயமலையின் அடிவார மலைப்பகுதிகளில் தான் முதன்முதலாக தோன்றியது அங்கிருந்துதான் அனைத்து உலகத்திற்கும் பரவியது, இன்னொன்று இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சீனப் பெண்மணிதான் முதன்முதலில் பட்டு வளர்ப்பைக் கண்டறிந்தார், பின்னர்தான் அது உலகம் முழுக்க பரவியது என்பது இரண்டாவது கருத்து.


இந்தியாவின் பட்டு ஏற்றுமதி

பட்டுத் தொழில் இந்தியாவில் தான் தொடங்கியது, கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே பட்டு இந்தியாவிலிருந்து ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி ஆனது, இதன பல சரித்திர ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள், அதற்கான ஆதாரங்கள் நிரம்ப இருக்கின்றன.


டசார் பட்டு

டசார் பட்டு, இந்தியாவில் ஆரம்பத்தில் அறிமுகம் ஆனது, இது மிக நுட்பமான இழைகொண்டது, ஆந்திரேயா என்னும் இனத்தைச் சேர்ந்த மூன்று நான்குவகை பட்டுப்புழுக்கள் இந்த பட்டினை உற்பத்தி செய்கின்றன (ANTHERAE PROYELI), வை மருதம், சால், நாவல், ஓக் ஆகிய மரங்களில் வளரும்,  இந்த வகை பட்டுப்புழுக்கள் இயற்கையாக இமயமலைப் பகுதிகளில் அதிகமாக இருந்தன,  மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம் அசாம் மேகாலயா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் இது இயற்கையாக ஒரு காலத்தில் பரவியிருந்தது.


ஹரப்பா அகழ்வாராய்ச்சி

ஹரப்பா மற்றும் சான்ஹுடாரோ ஆகிய இரு நகரங்களில் செய்த அகழ்வாராய்ச்சியில், மிக நுண்ணிய  பட்டு இழைகள் கிடைத்திருக்கின்றன, இவை 2450 முதல் 2000 பிசி வரையான  காலகட்டத்திற்கு உரியது. இவை எல்லாம் சீனாவுக்கு முன்னதாகவே இந்தியாவில் பட்டு இருந்ததற்கான ஆதாரங்கள்,


அர்த்தசாஸ்திரம்

அர்த்தசாஸ்திரம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்டது, அது குப்தர்களுடைய பொற்காலம், அதில் பட்டு நெசவாளர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன, அந்த காலத்திலேயே நெசவாளர் சங்கங்கள் இருந்திருக்கின்றனவாம்,  அப்போது இந்தியா தான் முக்கியமான பட்டு ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தது. ரோமானியர்கள், பெர்சியன்கள்,  மற்றும் பைசாண்டியர்கள் அதிகம் இந்தியாவிலிருந்து பட்டு இறக்குமதி செய்தார்கள்.

நாம் இரண்டாவது பெரிய நாடு.  

இந்தியாவின் மொத்த சாகுபடி பரப்பு 159.7 மில்லியன் எக்டர்,  மொத்த பூகோளப்பரப்பு 328.37 மில்லியன் எக்டர், இந்தியாவின் சாகுபடி பரப்பு உலகின் இரண்டாவது அதிகமான பரப்பளவை உடையது. முதல் நிலையில் இருப்பது அமெரிக்கா. இந்தியாவின் மொத்த சாகுபடி பரப்பில் 0.1 சதம் மட்டுமே பட்டு தொழில் செய்யப்படுகிறது, ஆனாலும் உலக நாடுகளில்  பட்டு உற்பத்தியில் நாம் இரண்டாவது பெரிய நாடு.  

எழுதியவர்: அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot, Phone: +918526195370,Email:gsbahavan@gmail.com

Thanks and Courtesy to respective authors' books and online e-resources.


FOR FURTHER READING

www.en.wikipedia.org / Silk In Indian Sub Continent
www.agritech.tnau.ac.in / Sericulture – Silk Worm Types
www.yourarticlelibrary.com / Sericulture in India: History Types of Silks and Life History
www.vikaspedia.in / Sericulture In India
www.yourarticlelibrary.com / Sericulture India: Type Of Silks And History
www.ducksters.com / Ancient China Legends Of Silk

00000000000000000000

1 comment:

Yasmine begam thooyavan said...

இது விவசாய மக்களுக்கு மட்டுமல்ல பட்டு புடவையை விரும்பும் பெண்களுக்கு ஏற்ற பதிவு. சிறந்த தகவல். நீண்ட நாட்களுக்கு பின் நான் போடும் கமென்ட்.

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...