Friday, July 10, 2020

சிக்கிம் இயற்கை விவசாயம் - SIKKIM BECAME ORGANIC




 சிக்கிம் இயற்கை விவசாயம்   -  
SIKKIM BECAME ORGANIC   



 


My Dear Vivasaya Panchangam Friends! Good Morning!


1.சிக்கிம் 100 சதம் இயற்கை விவசாயம்

1994 ஆம் ஆண்டில் பவன்குமார் சாம்லின் என்பவர் சிக்கிம் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார், அவருடைய முன்முயற்சி தான் இங்கு இயற்கை விவசாயம் வந்தது, 2018 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் நாள் நூறு சதம் இயற்கை விவசாய மாநிலம் என்று அறிவிக்கப்பட்டது, உலகிலேயே ஒரு நாட்டின் மாநிலம் நூறு சதம் இயற்கை விவசாய மாநிலம் என்று அற்விக்கப்பட்டது இதுதான் முதல் முறை.

 2. பவன் குமார் சாம்லின்

பவன்குமார் சிக்கிம் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவர்,  சிக்கிம் டெமாக்ரட்டிக் ஃபிராண்ட் (SIKKIM DEMOCRATIC FRONT) என்னும் அரசியல் கட்சியின் தலைவர், மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற மனிதர், அதனால்தான் அவர் தொடர்ந்து 5 முறை 25 ஆண்டுகளுக்கு சிக்கிமின் முதலமைச்சராக இருந்தார், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இப்படி ஒரு அதிசயம் நடந்து இருக்குமா ? இதற்கு முன்னால் 1989 முதல் 1992 வரை நார் பஹதூர் பண்டாரி என்பவரின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராகவும் இருந்தார்.

3. பானு புரஸ்கார் விருது பெற்றவர்

பவன் குமார் ம்பலிங்,  இவர் அடிப்படையில் ஒரு எழுத்தாளர், நேபாளி மொழியின் குறிப்பிடும்படியான எழுத்தாளர், 2010 ஆம் ஆண்டு சிக்கிம் சாகித்ய பரிஷத்தின் பானு புரஸ்கார் என்னும் விருதினை பெற்றவர். 

4. சிக்கிம் மக்காச்சோளம்

சிக்கிமில் அதிக அளவில் சாகுபடி செய்யும் பயிர் மக்காச்சோளம், 40000 எக்டர் பரப்பு வரை இதனை சாகுபடி செய்கிறார்கள், இது சிக்கிமின் மொத்த சாகுபடி பரப்பில் 30 முதல் 40 சதம்,  அத்துடன் நெல், எண்ணை வித்துக்கள், பயறு வகைகள் கோதுமை, பார்லி மற்றும் கேழ்வரகு ஆகியவற்றையும் சாகுபடி செய்கிறார்கள். இவை தவிர மேண்டரின் ஆரஞ்சு, ஏலக்காய் மற்றும் இஞ்சி ஆகிய பணப்பயிர்களையும் சாகுபடி செய்கிறார்கள்.

 4. மேண்டரின்  ஆரஞ்சு

சிக்கிமின் மிக முக்கியமான வியாபார ரீதியான பயிர் மேண்டரின் ஆரஞ்சு, நாம் கமலாஆரஞ்சு, நாக்பூர்ஆரஞ்சு, லூஸ்ஜாக்கெட் ஆரஞ்சு,   சந்த்ரா ஆரஞ்சு, கூர்க்சந்த்ரா, என்றெல்லாம்  சொல்லுவதுதான் மேண்டரின் ஆரஞ்சு,  ஸ்சாம், நேபாளம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய இடங்களில் உள்ள மேண்டரின் ஆரஞ்சுகளுக்கு இவை சமமானவை, சிக்கிம் மாநிலத்தின் பாரம்பரியமான பழம், காலம்காலமாக பயிரிடும் பழப்பயிர், சிக்கிமில் 6300 எக்டர் நிலப்பரப்பில் மன்டரின் ஆரஞ்சு இயற்கை விவசாயமாக சாகுபடி ஆகிறது.

5. ஏலக்காய் சாகுபடியில் முதலிடம்

இந்தியாவில் ஏலக்காய் சாகுபடிக்கான தலைமையகம் சிக்கிம்தான், காரணம் தேசிய அளவில் அதிகமான அளவு ஏலக்காய் உற்பத்தி செய்யும் மாநிலம் சிக்கிம், அடுமட்டுமல்ல, சிக்கிமிற்கு கணிசமான வருமானம் ஏலக்காயிலிருந்துதான் வருகிறதாம்.

ஆண்டுதோறும் இந்தியா 4200 மெட்ரிக்டன் ஏலக்காயை உற்பத்தி செய்கிறது, இந்த மொத்த உற்பத்தியில் 82 சதத்தினை  சிக்கிம் உற்பத்தி செய்கிறது, பெரிய ஏலக்காய் என்னும் ரகத்தை இவர்கள் அதிகம் சாகுபடி செய்கிறார்கள். நம்ம ஊர் ஏலக்காயைவிட பெரியதாக இருக்கும், ஆனால் நம்ம போடிநாயக்கனூர் ஏலக்காயை மிஞ்சமுடியாது என்கிறார்கள்.

பெரிய ஏலக்காய் சாகுபடிக்கு நிழலும் ஈரப்பசை மிகுந்த இடமும் தேவைப்படும், உலரவைத்த மாட்டு சாணம்தான் இதற்கு அற்புதமான உரம் என்கிறார்கள்,

பெரிய ஏலக்காய் சாகுபடியில் நல்ல வருமானம் கிடைப்பது, இன்னொன்று காலம்காலமாக அவர்களுக்கு பழக்கப்பட்ட விவசாயம், அதனால் சிக்கிம் மாநிலத்து இளைஞர்கள் பெரும்பாலும் ஏலக்காய் விவசாயத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளுகிறார்கள். சிக்கிமில் மட்டும் 26459 எக்டர் பரப்பில் இயற்கை விவசாய ஏலக்காய் உற்பத்தி ஆகிறது.


6. நெல் சாகுபடி

தானிய பயிர்களில் மிக முக்கியமானது நெல் குறைவான வெப்பம் மற்றும் ஈரப்பசை மிகுந்த குறைவான நீர் வளமுள்ள இடங்களில் 11.15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்கிறார்கள்.

7. இயற்கை விவசாயம் தந்த தங்க விருது

விருது 100 சதம் இயற்கை விவசாயம் செய்யும் உலகின் ஒரே மாநிலம் என்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மைக் கழகம் (FOOD AND AGRICULTURAL ORGANIZATION) தங்க விருது வழங்கி பாராட்டியுள்ளது, சிக்கிம் இயற்கை விவசாயத்தின் தந்தையும் முதலமைச்சருமான பவன்குமார் சாம்பலிங் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

8. ரசாயன உரங்களுக்கு அனுமதி இல்லை

சிக்கிம் மாநில எல்லைக்குள் நுழைய ரசாயன உரங்களுக்கு அனுமதி இல்லை, 2003 ஆம் ஆண்டிலிருந்து ரசாயன உரங்களைப் விற்பனை செய்வதும் வாங்குவதும் தடை செய்யப்பட்டுள்ளது, அப்படி விற்கவோ வாங்கவோ செய்தால் அது சட்டப்படி குற்றமாகும், இதற்கான சட்டம் உருவாக்கப்பட்டு கடுமையாக இங்கு செயல்படுத்தப்படுகிறது.

9. இயற்கை விவசாயத்திற்கு சான்றிதழ்

இவர்கள் இயற்கை உரங்கள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள், இங்கு உள்ள அனைத்து விவசாயிகளும் தொழு உரம், குப்பை உரம், மண்புழு உரம் மற்றும்  உயிரியல் உரங்கள் போன்ற இயற்கை உரங்களை மட்டுமே விவசாயத்திற்கு பயன் படுத்துகிறார்கள் என உத்தரவாதம் அளிக்கிறது சிக்கிம் அரசு, அதற்காக  அத்தனை நிலங்கள் மற்றும் விவசாயிகளுக்கும் அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது, இதனை பல நாடுகளும் பார்த்து வியந்து பாராட்டுகின்றன.


10. அறுபத்தி ஆறாயிரம் குடும்பங்கள்

சிக்கிம்  ஒரு சிறிய கையடக்கமான ஒரு மாநிலம் தான், ஆனாலும் இது பிரதானமாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாநிலம், இங்கு உள்ள 66 ஆயிரம் விவசாய குடும்பங்களும் இயற்கை விவசாய குடும்பங்கள் ஆக மாற்றப்பட்டு உள்ளது என்பது அதிசயமான செய்தி.

11. அதிகரித்திருக்கும் சுற்றுலாப் பயணிகள்

உலகிலேயே இயற்கை விவசாயத்தை 100% செய்யும் மாநிலம் என்ற பெயர் வந்த பிறகு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 50 சதம் அதிகரித்துள்ளது,  இமய மலையின் ஒரு பகுதியில் இந்த மாநிலம் அமைந்திருப்பதால் எப்போதுமே இந்த பகுதி சுற்றுலா பயணிகளுக்கு உரிய ஒரு மாநிலம்தான், ஆனாலும் தற்போது வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் வெளிமாநிலத்து  விவசாயிகளும் அதிக எண்ணிக்கையில் இங்கு வந்து போகிறார்கள்.

12. பத்து ஆண்டுகள் போராடினோம்

இந்த 100% இயற்கை விவசாயம் என்பதை நாங்கள் சாதிக்க 10 ஆண்டுகள் ஓயாமல் உழைத்தோம் என்கிறார்கள் இந்த மக்கள், 75 ஆயிரம் எக்டர் பரப்புள்ள யல்களை எல்லாம் இயற்கை விவசாயம் செய்யும் பொன்பரப்பாக மாற்றியிருக்கிறோம், இயற்கையாகவே ஊட்டச்சத்துக்கள் கூடியதாக இருக்கும் எங்கள் நிலங்கள் இப்போது இன்னும் மெருகேறி இருக்கின்றன என்கிறார்கள்.

13. எங்கள் உற்பத்தி 65 சதம்

சிக்கிம் மாநிலத்தின் மக்கள் எங்கள் உற்பத்தி முழுக்க அத்தனையும் இயற்கைஎன்கிறார்கள்,  தற்போது சிக்கிம் மாநிலம் எட்டு லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பண்டங்களை உற்பத்தி செய்கிறது, இந்தியாவின் மொத்த இயற்கை விவசாய விளைபொருட்கள் உற்பத்தியில் சிக்கிமின் பங்கு மட்டும் 65 சதம் என்று பெருமிதமாக சொல்லுகிறார்கள்.

14. பாரதப் பிரதமரின் பாராட்டு

இயற்கை விவசாயம் செய்வதில் முன்னோடியானது சிக்கிம் மாநிலம் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுகிறார், இந்திய மாநிலங்கள் அனைத்தும் சிக்கிமை பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களின் உயர் தரமான இயற்கைமுறை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

15.விவசாயிகள் தயார்செய்யும் இயற்கை உரங்கள்

தங்கள் பயிர்களுக்கு தேவைப்படும் இயற்கை உரங்களை அத்தனையையும் அவர்களே தயார் செய்கிறார்கள், உதாரணத்திற்கு மண்புழு உரம், இயற்கை சுரக்க்ஷா டீகம்போஸர் திரவம், எபெக்டிவ் மைக்ரோ ஆர்கனிசம், த்தியம் கம்போஸ்ட், அசோலா, வேர்மி வாஷ், கிராமப்புறக் குப்பை, குப்பைக்குழி ரம், இலைமக்கு, மற்றும் மூலிகைதிரவம், நம்ம ஊர் பஞ்சகாவியம் அமுதக்கரைசல் இவற்றையெல்லாம் காணும், வேறு பெயர்களில் இங்கு இருக்கலாம்.




16. பாரம்பரியமா நடைமுறைகள்

இயற்கை விவசாயம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னரே பாரம்பரியமாக  பல தொழில்நுட்பங்களை கடைபிடித்து வருகிறார்கள், அவை மூடாக்கு போடுதல், பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்தல், மாட்டு சாணம் மற்றும் கோமியத்தை உரமாகப் பயன்படுத்துதல், மற்றும் பூச்சிகளின் தாக்குதலை தடுக்க வரப்புகளில் சில வகை மரங்களை நட்டு வளர்த்தல், ஆகியவை. விவசாயிகள் எந்த மாநிலமாக இருந்தாலும் அவர்களிடம் இந்த அனுபவம் பேசும்.

17. ரசாயன உரமானியம் வேண்டாம்

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வேண்டாம் என்று நடைமுறைப்படுத்தியதால் அதற்கான மானியங்களையும் தைரியமாக வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள் இந்த மாநிலத்து மக்கள், அதனை ஈடுசெய்ய இயற்கை உரங்கள் தயாரிக்க அரசு உதவி இருக்கும் என நினைக்கிறேன், ஆனால் அதுபற்றிய தகவல்கள் ஏதும் எனக்கு சிக்கவில்லை.

18. கூடுதலாக மகசூல்

இயற்கை விவசாயம் செய்வதால் நஷ்டம் என்று சொல்வது சரியல்ல, அது இயற்கை விவசாயத்திற்கு எதிரான செயல் என்கிறார்கள், சிக்கிம் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் என்பது கைவந்த கலையாகி விட்டது.

அறிவியல் தொழில் நுட்பங்களையும் தங்கள் அனுபவங்களையும் சேர்த்து செய்யும் விவசாயம்தான்  இது என்று சொல்லுகிறார்கள், இயற்கை விவசாயத்தின் மூலம் கிடைப்பது எவ்வளவு வருமானம் ? எவ்வளவு மகசூல் ? எவ்வளவு லாபம் கூடுதலாகக் கிடைக்கும்  என்றால் 30 முதல் 40 சதம் என்கிறார்கள்.


20. நாங்கள்  பாதுகாப்பாக இருக்கிறோம்

இப்போது எங்கள் நிலமும் நீரும் எங்கள் இயற்கை வளங்களும் சூழலும் நாங்களும் பாதுகாப்பாக இருக்கிறோம்

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு எங்களது காணிக்கை இந்த இயற்கை விவசாயம்

நீங்களும் எங்களைப் போல முழுமையாக இயற்கை விவசாயத்திற்கு எப்போது மாறப் போகிறீர்கள் ?’

சிக்கிம் மக்கள் இப்படி நம்மைப் பார்த்து கேட்கிறார்கள்.

0000000000000000000

Presented & Published By: D.Gnana Suria Bahavan, Author, Vivasaya Panchangam Blogspot.

Thanks and Courtesy to respective author's books and online e-resources.

00000000000000000000000


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...