ஆனைமலையை
காப்பாற்றிய
வெள்ளைக்காரர்
WHITE MAN
WHO SAVED GREEN ANAIMALAIS
(Here
only Forester Hugo wood IFS laid at rest as per his last wish. He was a
dedicated forest officer. You must visit Topslip. I will take you there when I
come to India. Now this forest is Annamalai Tiger Reserve sanctuary. Worth
visiting - SAMBASIVAM IFS (Rtd.), Forest Department,
Tamilnadu, (Nanneri Village, Thiruppaththur District)
திருமிகு. சாம்பசிவம் I F S, அவர்கள் தந்த தகவல்கள்
அடிப்படையில் நான் இந்த கட்டுரையை தொகுத்து எழுதியுள்ளேன், தற்போது அவர் அமெரிக்காவில்
ஹூஸ்டன் நகரில் டெக்சஸ் மாநிலத்தில் வசித்து வருகிறார்)
ஆனமலை காடுகளை அழிவில் இருந்து காப்பாற்றிய
வனத்துறை அலுவலர் வெள்ளைக்காரர் பிரான்சிஸ் ஆன்ட்ரூ வுட், நீங்கள் புகைப்
படத்தில் பார்ப்பது அவருடைய கல்லறைதான், ஆனைமலையில்
டாப்ஸ்லிப் என்ற பகுதியில் தேக்குமர காடுகளின் ஊடாக அமைந்துள்ளது, தாம் நட்டு வளர்த்த மரங்களுக்கு ஊடாகத்தான் நாம் மறைந்த
பிறகும் உறங்க விரும்புகிறேன் என்று சொன்னதால் இன்றும் அந்தக் கல்லறை அங்கு இருக்கிறது.
000000000000000000
பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்
அழிக்கப்பட்ட ஆனைமலைக் காடுகளை மறுசீரமைத்து, ஆங்கிலேய அரசு மரங்களை வெட்ட
முற்பட்டது, அதற்கு அனுமதிக்காமல் மரங்களை வளர்த்து டாப்சிலிப் காடுகளைப்
பாதுகாத்தவர் ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட்(1870-1933) என்ற வன அதிகாரி. அவருடைய பிறந்ததினம் (12.06.1870) இன்று.
பதினெட்டாம் நூற்றாண்டுத்
தொடக்கத்தில் ஐரோப்பாவில் நல்ல வளர்ச்சி ஏற்பட்டது, 1857 ஆம் ஆண்டு
இந்தியாவில் ஏற்பட்ட சிப்பாய்க் கிளர்ச்சியின் காரணமாகவும் ரயில் பாதை
அமைப்பதற்கும், கப்பல் கட்டுவதற்கும், தொழிற்சாலைகள், கட்டிடங்கள்
கட்டுவதற்கும் மரங்கள் ஆங்கிலேயருக்குத் தேவைப்பட்டது.
அதனால் ஆனைமலை
டாப்சிலிப் வனப்பகுதிகளில் இருந்து பெருமளவில் தேக்கு மரங்கள் வெட்டி மும்பை
மற்றும் இங்கிலாந்துக்கு
எடுத்துச் சென்றார்கள்.
தொடர்ந்து மரங்கள்
வெட்டப்பட்டதால் 1885 ம் ஆண்டு டாப்சிலிப் வனப்பகுதி முற்றிலும் காணாமல் போனது, அப்போதைய சென்னை மாகாணத்தில் ஒரேஒரு ஆண்டில் சுமார் 40,000 மரங்களுக்கு மேல் வெட்டப்பட்டன.
இந்த மரங்கள் ரயில்பாதை அமைப்பதற்காக மட்டுமே வெட்டப்பட்டன, அதன் பிறகுதான் ஆங்கிலேயர்கள் காடுகளைப் பாதுகாக்க
வேண்டிய அவசியத்தை உணர்ந்தார்கள்.
அடுத்த 30 ஆண்டுகளில் அழிந்த டாப்சிலிப் வனப் பகுதியை மீட்டெடுக்கும்
முயற்சியில் பல அதிகாரிகளை நியமித்து முயற்சிச் செய்தும் பயன் கிடைக்கவில்லை.
1915 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஐ.எப்.எஸ்.
படித்த ஹியூகோ பிரான்சிஸ் அன்றேவ் வுட் என்ற வன அதிகாரியை டாப்சிலிப் வனப்
பகுதிக்கு அனுப்பினார்கள்.
ஹியூகோ மரங்கள்
வெட்டப்பட்ட காடுகளைப் பார்வையிட்டு, உண்ணிச்செடிகளால் மரங்கள் வளர்வதில்லை
என அறிந்து அரசுக்குச் செயல்திட்டம் ஒன்றை சமர்ப்பித்தார்.
எல்லாப் பகுதிகளில்
முற்றிலும் மரம் வெட்டுவதைத் தடைச் செய்வது, ஒரு மரம் வெட்டினால் நான்கு மரம்
நடுவது, 25 வருடங்கள் கடந்த மரங்களை மட்டும் வெட்டுவது, மரத்தை வேரோடு
வெட்டாமல் நிலத்திற்கு மேல் சில அடிகள் விட்டு வெட்டுவது, உண்ணிச் செடிகளை
அகற்றுவது, வெளியேற்றபட்ட பழங்குடி மக்களைத் திரும்பவும் வரவழைப்பது, பழங்குடி மக்களின் உதவிடயுடன் காடுகளை மீட்பது போன்ற
திட்டங்களை செயல்படுத்தினார்.
அவர் தங்குவதற்கு அளித்த பங்களாவில்
தங்காமல் காடுகளுக்கு நடுவே ஒரு சிறிய வீட்டினை அமைத்து அங்கு தங்கிப் பணியாற்றினார்.
தினமும் தனது
சட்டைப் பைகளில் மர விதைகளை நிரப்பிக்கொண்டு, காடுகளில் நடந்து, ஊன்றுகோலால் குழித்
தோண்டி விதைகளைத் தினமும் விதைத்தார்.
விதைத் தீர்ந்து
போனால், அடுத்த நாள் விதைகளைக் கொண்டுவந்து விட்டுப்போன இடத்தில் இருந்து
மறுபடியும் தொடங்குவார். இப்படிப் பல வருடங்கள் தினம்தோறும் நடந்து அவர் வைத்த
லட்சக்கணக்கான மரங்களே இன்று டாப்சிலிப் பகுதியில் வானுயர்ந்து நிற்கும் மரங்கள்.
மேற்குத் தொடர்ச்சி
மலைப் பற்றியும், மழைப் பெறுவதற்கும், பருவநிலை மாற்றத்திற்கும் காடுகளும், காட்டுயிர்களும்
எவ்வாறு உதவுகின்றன என்று நன்கு அறித்து வைத்து இருந்தார் ஹியூகோ வுட்.
முதல் உலகப்போரின்
பொது ஆங்கிலேயருக்குக் கப்பல் கட்ட மரங்கள் தேவைப்பட்டன. மரங்களை வெட்ட ஹியூகோ
வுட்டை ஆங்கிலேய அரசு அணுகியபோதும், ஒரு மரத்தைக் கூட வெட்ட
அனுமதிக்கமுடியாது என்று கூறி இந்தக் காடுகளைக் காப்பாற்றியவர்.
இல்லையென்றால்
டாப்ஸ்லிப், பரம்பிக்குளம் பகுதிகளும் எஸ்டேட்களாக மாறியிருக்கும், 25 ஏக்கரில் அவர் ஆரம்பித்த மரம் வளர்ப்பு, அவர் இறக்கும் போது
625 சதுரக் கி.மீட்டராகப் பரந்து விரித்து இருந்தது.
தேக்கு மரங்கள்
வளர்வதற்கு உண்ணிச்செடிகள் தடையாக உள்ளது என்று, அதனை அழிக்கவும் முயற்சிகள்
மேற்கொண்டார்.அழித்துப் போன ஆனைமலைக் காடுகளை மறு சீரமைப்புச் செய்தார்,
அந்த டாப்ஸ்லிப், பரம்பிக்குளம்
பகுதி காடுகளின் மீது கொண்ட அன்பினால் தான் இறந்த பின் இந்தக் காட்டிலேயே தனது உடலை அடக்கம் செய்ய
வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அவர் ஆசைப்படி அவர் வைத்த
மரங்களுக்கிடையே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
"என்னைப் பார்க்க விரும்பினால் சுற்றிலும் பாருங்கள்" - ஹியூகோ பிரான்சிஸ் ஆன்ட்ரூ வுட் (1870-1933)
என்று அவர்
கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதோ மரங்களுக்கருகிலேயே உறங்கிக்கொண்டிருக்கிறார் அந்த மாமனிதர்.
குறிப்பு: மேலே புகைப்படத்தில்
இருப்பது உள்ளது டாப்சிலிப்பில் உள்ள அவருடைய கல்லறை.
வனத்துறை அலுவலர் வெள்ளைக்காரர் பிரான்சிஸ் ஆன்ட்ரூ வுட், அங்கு வரவில்லை என்றால்
ஆனைமலையும் இருக்காது, ஆனைகளும் இருக்காது, இன்று அடர்ந்த காடுகளாக இருக்கும் ஆனைமலை வறண்ட பூமியாக
இருந்திருக்கும்.
மேற்கு தொடர்ச்சி மலை குஜராத்தில் தொடங்கி 1600 கிலோ மீட்டர்
தொலைவிற்கு தென்னிந்தியாவில் தொடர்கிறது, அது தென்மேற்கு பருவமழை செல்லும் பாதையில் செல்லுவதால்,
தென்மேற்கு பருவமழையின் மூலம் நல்ல மழை கிடைக்கிறது.
இதன் காரணத்தினால்தான் மேற்கு தொடர்ச்சி மலையில் தாவர
மற்றும் பிராணிகள் நிறைந்து பயோடைவர்சிட்டி களஞ்சியமாக இருக்கிறது, உலகின் எந்தப் பகுதியையும் விட சிறப்பாக இருக்கிறது, அதனால் தான் இதனை வேர்ல்டு ஹெரிடேஜ் சைட் என
தேர்வு
செய்துள்ளார்கள்.
200 ஆண்டுகளுக்கு முன்னால் வரை ஆனைமலையில்
வனப்பகுதியில் பழங்குடி மக்கள்தான் வசித்தார்கள், ஆனால் மேற்கு
தொடர்ச்சி மலையின் உயரமான பகுதி அது, கடல் மட்டத்திலிருந்து இதன் உயரம் 2,695 மீட்டர்.
1820 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசும் கிழக்கிந்திய
கம்பெனியும் ஆனைமலை சர்வே செய்வதற்காக சென்றது அந்த குழுவில் போன வெள்ளைக்காரர்கள் அங்கிருந்த ராட்சசமாக
வளர்ந்திருந்த தேக்கு மரங்களைப் பார்த்து மிரண்டு போனார்கள். அதன்பிறகுதான் அவற்றை வெட்டி சாய்த்து துடைத்து எடுத்தார்கள்.
அது இன்றைய கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த
வனப்பகுதிகளாய் அன்றைய மெட்ராஸ் பிரசிடென்சியின் கீழ் இருந்தது, இந்த பகுதியை இன்று நாம் டாப்ஸ்லிப் என்று சொல்லுகிறோம்.
டாப்ஸ்லிப் என்ற பெயர் எப்படி வந்தது என்பது சுவாரசியமான செய்தி, ஆனால் அதே சமயத்தில் ஒரு சோகமான கதையும் கூட.
பிரம்மாண்டமான ஆனைமலையின் தேக்கு மரங்களை
வெட்டி சய்த்தார்கள், அந்த மரங்களை மலைகளின் செங்குத்தான அந்த சரிவுகளில் உருட்டித்
தள்ளினார்கள், அவை சறுக்கி சறுக்கி சரிந்து
மலையடிவாரத்தை அடைந்தன.
இப்படி உயரத்திலிருந்து மரங்கள் சறுக்கி கொண்டுசெல்வதை
‘டாப்சிலிப்’ என்று குறிப்பிட்டார்கள் வெள்ளைக்காரர்கள்,
காலப்போக்கில் அந்த இடம் ‘டாப்சிலிப்’ என்றே
ஆனது.
1750 ஆம் ஆண்டு வாக்கில் டாப் ஸ்லிப்பில் இருந்து
வால்பாறைக்கு கேப்டன் ஜேம்ஸ் என்பவர் ஒரு சாலையை அமைத்தார், 1856 ல் கேப்டன் ஜார்ஜ்
என்பவர் டாப்சிலிப்பில் இருந்து பரம்பிக்குளத்திற்கு ஒரு சாலையை அமைத்தார், இவை இரண்டும் சாலையும்
வந்த பிறகு பிரச்சினை இல்லாமல் இந்திய தேக்கு மரங்கள் வெளியூர்களுக்கும்
வெளிநாடுகளுக்கும் பயணப்பட்டன.
இப்படி டாப்சிலிப்பில் ‘சிலிப்’ ஆன தேக்கு மரங்கள்
இங்கிலாந்தின் கடலில் எப்படி போர்க்கப்பல்களாக உலாவந்தன என்று இன்னொரு கட்டுரையில்
பார்க்கலாம்.
தகவல் மற்றும் செய்தி
வழங்கல்: திருமிகு. வி.சாம்பசிவம் I F S, (ஓய்வு) வனத்துறை, தமிழ்நாடு
எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி
இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91
8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com
FOR
FURTHER READING:
www.downtoearth.org.in
/ Tamilnadu Innovative Method of Plantation – V.Sundarrajan
www.livomint.com / Hugo Wood : The man who saved the Western Ghats –
Deepa Kandasamy
www.topslip.co.in /Topslip - Parambikulam
www.timesofindia.indiatimes.com / Topslip
- Pollachi
0000000000000000000000000
No comments:
Post a Comment