Saturday, June 27, 2020

மியாவாக்கி மாடல் மினி ஃபாரஸ்ட் நீங்களே அமைக்கலாம் - MIYOWAKI MINI FOREST DO IT YOURSEL




மியாவாக்கி மாடல்

மினி ஃபாரஸ்ட்

நீங்களே அமைக்கலாம்

 

 MIYOWAKI MINI FOREST

DO IT YOURSEL 


 
சமீபகாலமாக தமிழ்நாட்டில் எல்லோரும் மியாவாக்கி மாடலில் மரங்களை நட விரும்புகிறார்கள், என நாம் இது பற்றிய சந்தேகங்கள் கேட்டு ஒரு நாளைக்கு அதிகபட்சம் ஐந்து போன்கால்’லாவது வரும்,  அதுக்கு காரணம் மக்கள் தொலைக்காட்சி, தந்திடிவி, புதியதலைமுறை, முரசு டிவி, இப்படி மாறிமாறி என்னோட ஒருமரக்காடு பற்றிய செய்தியை ஒளிபரப்பு செய்த்துதான், ‘ஒரு மரக்காடுன்னா என்னோட மினி ஃபாரெஸ்ட், சிறுவனம், அடர்வனம், அதிகமில்லை அது 210 சதுரமீட்டர் பரப்புதான், அதில் 1100 மரங்கள், 100 வகையான மரங்கள், இப்போ அதுக்கு வயசு மூணு வருஷம், இதை செய்ததுக்காக நான் பெருமைப்படறேன், இது இந்த பிரபஞ்சத்துக்கு என்னோட நன்றிக்கடன்.


என்னோட ஒருமரக்காட்டினை நான் மியவாக்கி மாடலில் அமைச்சி இருக்கேன், மியாவாக்கி ஒரு ஜப்பான்காரர், அவர் உருவாக்கிய முறைதான் இது, பொதுவா காடுகள் அப்பிடின்னா அது நூத்துக்கணக்கான ஏக்கர்ல இருக்கணும், ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மரங்கள் இருக்கணும்,  அப்பிடின்னுதான் ஒரு நினைப்பு எனக்கு இருந்தது, காடுகள் அப்படின்னா அதை அரசாங்கம்தான் உருவாக்க முடியும் அப்படின்னு ஒரு எண்ணம் என் மனசுக்குள்ள இருந்திச்சு, அதை மியாவாக்கி சுக்கு நூறா உடைச்சி நொறுக்கிட்டார்


மரம்நட மனசு இருந்தா போதும், யார் வேணும்னாலும் நடலாம், இந்த பூமியில காற்றை சுவாசித்து வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் வனங்களை உருவாக்க, பாதுகாக்க பராமரிக்க  மேம்படுத்த கடமை இருக்குஇதுதான் மியாவாக்கி மாடல் அப்படின்னு நான் புரிஞ்சிகிட்டேன்

இந்த அனுபவத்தை பதிவு செய்து டீவிகாரங்க ஒளிபரப்பியது சுமார் ஆறு மாதத்திற்கு முன்னால் நடந்தது, இது தற்போது அந்த வீடியோ பதிவு யூட்யூபில் உள்ளது, அதனைப் பார்ப்பவர்கள் அதனால் கவரப்பட்டு எனக்கு போன் செய்வார்கள்,  சிலர் தாங்களும் செய்வதாக சொல்லி எனக்கு போன் போடுவார்கள், அந்தமாதிரி சந்தேகங்கள் இருப்பவர்களுக்கு உதவத்தான்  இந்தப் பதிவு.

மியாவாக்கி மாடலில் மரங்களை நடவு செய்வது எப்படி ? அதுக்கு சுருக்கமான 10 வழிமுறைகளை பார்க்கலாம்.

சிறுவனம் உருவாக்குவது எப்படி என்று பார்க்கலாம் எனது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இதனை உங்களுக்குச் சொல்லுகிறேன்.



1. ஒரு சிறிய நிலப்பகுதி தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் நிலத்தின் ஒரு மூலை அல்லது ஒரு ஓரமாக இதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். ஒரூ சிறிய இடம் போதும், ஒரு சென்ட் இரண்டு சென்ட் இருந்தால் கூட போதுமானது, ஒரு சென்ட் என்பது 40 சதுர மீட்டர், ஒரு சென்டில் மியாவாக்கி மாடலில் இருநூறு மரங்களை நடவு செய்யலாம், ஒரே ஒரு சதுர மீட்டர் இருந்தால் ஐந்து மரங்களை நடலாம், கையளவு நிலத்தில் கனத்த அளவு மரங்களை நடலாம்.

2. வல்லுநர்கள் வழிகாட்டுதல் எதுவும் தேவை இல்லை, நமக்கு நாமே செய்துக்கொள்ளலாம்,  இதற்கு அக்ரி படிச்சிருக்க வேணாம், ஃபாரெஸ்ட்ரி படிச்சிருக்க வேணாம், தொழில்நுட்ப அறிஞர்கள் அல்லது அலுவலர்கள் யாரும் தேவையில்லை, நாமே உருவாக்கலாம், ஆனால் அதற்கான வழிமுறைகளை படித்து கேட்டு பார்த்து புரிந்துகொள்ள வேண்டும், நாமே ராஜா நாமே மந்திரி.  

2. அந்த இடத்தில் ஜேசிபி மூலம் மூன்றடி ஆழத்திற்கு நன்கு கிளறி விடுங்கள், மேல்மண் கீழாகவும் கீழ்மண் மேலாகவும் ஆகும்படி செய்யுங்கள்.

3. நிலத்தில் அடியிலிருந்து அல்லது மண் கண்டத்தில் இருந்து வெளிப்படும் கற்கள் அல்லது பாறைகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை சுத்தமாக அப்புறப்படுத்துங்கள். உடையாமல் இருக்கும் மண் கட்டிகளை உடைத்து விடுங்கள், இரண்டு நாட்கள் அப்படியே விட்டுவிடுங்கள்.

4. ஒரு சதுர மீட்டருக்கு 10 கிலோ என்ற அளவில் தொழு உரம், குப்பைஉரம்  அல்லது மண்புழு உரத்தை ஏற்பாடு செய்யுங்கள்.

5. அந்த இயற்கை உரத்தை போட்டு சீராக பரப்பி விடுங்கள், அப்போது அந்த அந்த மூன்றடி மண்ணுடன்  அது நன்றாக கலக்குமாறு ஒரு டிராக்டர் கொண்டு உழவு செய்யுங்கள்.

6. நன்கு உழவு செய்த பின்னர் அந்த இடத்தை நன்றாக சமப்படுத்துங்கள், பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள், தண்ணீர் தட்டுப்பாடாக இருந்தால் சொட்டுநீர்ப் பாசனம் அமையுங்கள்.

7. இதற்கு முன்னதாக உங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை வாங்கி தயார் செய்ய வேண்டும், நீங்கள் உங்கள் சிறு காட்டில் எத்தனை கன்றுகள் நடப் போகிறீர்கள், எத்தனை வகை மரக்கன்றுகளை நடப்போகிறீர்கள், என்று தீர்மானியுங்கள்.

8.மரக்கன்றுகளை உற்பத்தி செய்யப்போகிறீர்களா, நர்சரிகளில் வாங்கப்போகிறீர்களா என்று முடிவுசெய்யுங்கள்.

9. கன்றுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒரே தவணையிலும் நடலாம் அல்லது பல தவணைகளிலும் நடலாம், எங்கள் அனுபவத்தில் நாங்கள் நூறு வகையுடன் கூடிய 1100 மரக்கன்றுகளை அய்ந்து தவணைகளில் நான்கு மாத அவகாசத்தில் நட்டு முடித்தோம்.

10. நாங்கள் மரக்கன்றுகளை வாங்கும்போது உயரம் மற்றும் வயது ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரவில்லை, கிடைக்கும் மரக்கன்றுகளை வாங்கி நடவு செய்தோம், காரணம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வோர் மிகவும் குறைவு.

சில முக்கிய குறிப்புகள்

1. இதற்கு பராமரிப்பு என்பது அதிகம் இல்லை, காட்டுக்கு சொந்தக்காரரின் காலடி மண் தினமும் அதில் விழுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும், மூணு வருஷத்துக்கு பின்னாடி பராமரிப்பு என்பதுலேதுண்டி என்கிறார் மியவாக்கி.

2. பராமரிப்பில் முக்கியமானது தண்ணீர்தான், நட்டவுடன் கொடுப்பது உயிர் தண்ணீர், அடுத்து ஒரு வாரம் தினசரி ஒரு தண்ணீர்,  அப்புறம் வாரம் இரண்டு, ஒன்று என குறைத்துக்கொண்டே வரலாம்.

3. ஆனால் வாரம் ஒரு தண்ணீர் அவசியம், எங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்பதால் சொட்டுநீர்தான், அதற்கும் தட்டுப்பாடு வந்தால் லாரி தண்ணீர்தான். எப்போது தண்ணீர் வேண்டும் என்று செடிகளின் இலைகள் உங்களிடம் கேட்கும், அதை வைத்து நீங்கள் உங்கள் மரங்களுக்கு தண்ணீர் கொடுக்கலாம்.

4. மழைக்காலத்தில் தண்ணீர் வேண்டாம், நீண்ட இடைவெளி இருந்தால் அப்போதும் நாம தண்ணீர் கொடுக்க வேண்டும், கோடையில் கொளுத்தும் வெய்யில் காலத்தில் குழந்தைகளைப்போல பாதுகாக்க வேண்டும்.

5. இளஞ்செடிகளில்  களை எடுக்க வேண்டும், அனேகமாய் ஆறுமாதம்வரை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை எடுக்கலாம், களைகளின் வளர்ச்சியை வைத்து முடிவெடுக்கலாம்.

6. கன்றுகள் தழையும் தாம்புமாக வளரும்போது தரையடியில் நிழல் காக்கும், அந்த நிழல் களைகளை முளைக்க விடாமல் செய்து விடும், அடர் நடவு என்பதால் களைஎடுப்பது அதிகபட்சமாக ஒரு ஆண்டுக்குமேல் தேவைப்படாது.

7. மியாவாக்கி மாடலில் மரங்கள் விரைவாக வளர்கின்றன, இவை இரண்டே ஆண்டுகளில் 15 முதல் 20 அடிக்கு வளர்ந்து உயருகின்றன, இது எங்களுடைய அனுபவம்.

8. மியாவாக்கி அவர்களின் கருத்துப்படி பத்து ஆண்டுகளில் மரங்கள் என்று சொல்லும்படியாக வளர்ச்சி அடைகின்றன, அரசுத் துறைகளின் மூலம் போதுமான இடைவெளி தந்து உருவாக்கம் செயற்கைக்காடுகளில் அதே வளர்ச்சி அடைய 30 முதல் 40 ஆண்டுகள் ஆகின்றன என்கிறார் அகிரா மியாவாக்கி.

9. மியோவாக்கி மாடலில் வளரும் எல்லா மரங்களும் ஒரே அளவில் வளர்வதில்லை, பல்வேறு வகைகளிலான மரங்களை இதில் வளர்ப்பதால் பல்வேறு வகையாக அவை வளர்கின்றன.

10. முந்திரிகொட்டை மாதிரி சில அவசர அவசரமாக வளரும், சில ஆமை வேகத்தில் வளரும், சில அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் இரண்டுங்கெட்டானாக வளரும்.

11. மியோவாக்கி மாடலில் கன்றுகளின் இழப்பு அல்லது இறப்பு சதவிகிதம் குறைவாக இருக்கும் இதில் அதிகபட்சமாக 5 முதல் 10 சதவீதம் மட்டுமே இருக்கும்.
 
12. ஆனால் இதர முறைகளில் உலகம் முழுக்க அரசினால் அமைக்கப்படும் காடுகளில் 40 முதல் 60 சதம்வரைகூட இருக்கும் என்கிறார் மியாவாக்கி அவர்கள்.

13. நகர்ப்புறத்தில் பசுமையாக்கும் திட்டத்திற்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும், தற்போது உலகம் முழுவதும் நகர்ப்புறங்களில் காடுகளை உருவாக்கி மாசுக்களை கட்டுப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

14. குறைவான இடத்தில், குறைவான பணச்செலவில், குறைவான இடுபொருட்களுடன், குறைவான பராமரிப்புடன், வெற்றிகரமாக காடுகளைஉருவாக்குவது என்பதுதான் மியவாக்கி மாடல்.

15. மரக்கன்றுகளை வெளியில் வாங்கி நடுவதை அவர் ஏற்றுக் கொள்வதில்லை, உள்ளூர் மரங்களின் விதைகளை முன்னதாக சேகரிக்க வேண்டும்,  அந்த விதைகளில் இருந்து கன்றுகளை உற்பத்தி செய்து அதைத்தான் நட வேண்டும் என்கிகிறார் மியாவாக்கி.

16. அதுமட்டுமல்ல, உள்ளூரில் இருக்கும் மரவகைகளை ஆய்வு செய்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும், அவை உள்ளூர் மரங்கள் என்று உறுதி செய்துகொள்ள வேண்டும், பின்னர்தான் கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்கிறார்.

17. நாங்கள் அக்கம் பக்கத்து ஊர்களில் உள்ள நர்சரிகளுக்குச் சென்று கிடைக்கும் உள்ளூர் செடிகளை எல்லாம் வாங்கி கொள்வோம், சில அரிதான மர வகைகளை சொல்லி வைத்துக் காத்திருந்தும் வாங்குவது உண்டு.

18. எங்களுடைய சிறுவனத்திற்கு நாங்கள் ஒரு மரக் காடு என பெயரிட்டுள்ளோம்,  உங்களால் ஒரே ஒரு மரம் நட முடியும் என்றால்கூட அது ஒரு காட்டுக்கு சமம் என்பதுதான் அதன் பொருள். இப்போது எங்கள் ஒருமர்க்காட்டிற்கு மூன்று வயது ஆகிறது,

19. எங்கள் ஒரு மரக்காட்டில் பிரியாணி இலைமரம், சாம்பிராணி மரம், கருமருது, ஆனை குண்டுமணி,  சீயக்காய், சந்தனம், செஞ்சந்தனம், முள் சீத்தா, மராமரம் போன்ற அபூர்வமான மரங்கள் எல்லாம் கூட இருக்கின்றன.

எழுதியவர்: தே.ஞான சூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம் – 635801, போன்: +91 8526195370, இமெயில்: bhumii.trust@gmail.com

FOR FURTHER READING:
www.e.m.wikipedia.org / Akira Miyawaki
www.drishitiias.com/ Miyawaki Method
www.boomforest.org / Miyawaki Method – Boom Forest – Let’s restore Native Forests together

000000000000000000000000

No comments:

A CITY COLLEGE EDUCATE STUDENTS TO CONSERVE RIVERS - ஆறுகள் பாதுகாப்புக் கல்வி நூல் வெளியீடு

  ஊர் கூடி  தேர் இழுக்கலாம்  வாங்க (ஆறும் ஊரும் தமிழ் நாட்டின் நூறு ஆறுகளின் கதை சொல்லும் நூலிலிருந்து ஒரு பகுதி)   நான் எழுதிய “ஆறும்...