Friday, June 12, 2020

குரங்குபலா பலபயன் தரும் பழமரம் - KURANGUPALA MULTIPURPOSE FRUIT TREE


Artocarpus lakoocha

Artocarpus regidus



குரங்குபலா பலபயன் தரும் பழமரம்

KURANGUPALA MULTIPURPOSE FRUIT TREE


இந்தியாவிற்கு சொந்தமான மரம், தாவரவியல் பெயர் அர்டோகார்ப்பஸ் லகூச்சா, சுவைக்க இனிப்பான சுவை கூடிய பழம், கால்நடைகளுக்கு இலைத்தீவனம், தட்டுமுட்டு சாமான்கள் செய்ய தரமான மரக்கட்டைகள்,  அத்தனையும் தரும் லகூச்சா பலா, என்னும் குரங்கு பலா.  


பரவி இருக்கும் இடங்கள்:

ஆசியாவில் சீனா இந்தியா நேபாளம் சிக்கிம் மியான்மர் லாவோஸ் வியட்நாம் இந்தோனேசியா, இந்தியாவில்  அந்தமான் நிக்கோபார் தீவுகள், அசாம், பீகார், கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, நாகாலாந்து, தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்த மரங்கள் பரவியுள்ளன.

பயன்கள்:

இனிப்பும் புளிப்பும் மிக்க இதன் பழங்களை பறித்ததும் சுவைத்து சாப்பிடலாம்.

பழங்கள் மற்றும் பூக்களை கறிவகைகள், ஊறுகாய், மற்றும் சாஸ் என பக்குவமாக சமைத்தும் பதப்படுத்தியும் சாப்பிடலாம். .

இலைகள் கால்நடை தீவனம் தயாரிக்கவும் தரமான இதன் மரக்கட்டைகளில் பலவகை மரச்சாமான்கள் செய்யவும்  பயன்படுத்தலாம்.

இதில் பிளேவனாய்டுகள் மற்றும் பினோலிக் ஆசிட் போன் தாவர ரசாயனங்கள் நிறைந்துள்ளன, அதனால் இதன் இலை பூ காய் கனி என அனைத்திலும் அரியவகை மருந்துகள் செய்யலாம்.

இதன் வயிரப் பகுதி கட்டைகளில் சருமத்தை வெள்ளையாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிரம்ப உள்ளதால் சிகப்பழகு கிரீம்கள் தயாரிக்கலாம்.

மொத்தத்தில்  குரங்குபலா பலபயன் தரும் பலாமரம் என்று சொல்லலாம்.

மருத்துவ பயன்கள்

பட்டையிலிருந்து வழியும் பாலை முகப்பரு, சிறுகட்டிகள், வெட்டுக்காயங்கள் ஆகியவற்றில் தடவ குணமாகும், பட்டைகளை தூளாக்கி, நனைத்து சூடாக்கி அவற்றை ஒத்தடம் கொடுக்க தசை பிடிப்பு தசை வலி உடல் வலி ஆகியவையும் குணமாகும்.

இதன் பட்டையை தூளாக்கி நீரிட்டு கூழாக்கி நெற்றியில் பற்று போட தலைவலி குணமாகும்.

இதர வகை பயன்கள்

இதன் உட்புற பட்டையில் உறித்து எடுக்கும் நாறிநை கயிறுகள் தயாரிக்க பயன்படுத்தலாம், பட்டைகள் மற்றும் வேர்களில் இருந்து எடுக்கும் சாயத்தின் மூலம் துணிகளுக்கு நிறம் ஏற்றலாம்.

மரத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் எடுக்கப்படும் பாலை பலவிதமாக பயன்படுத்துகிறார்கள்.

கட்டுமான வேலைகள் உட்பட பல வகை மரச்சாமான்கள் செய்ய  அற்புதமான மரம் இது.

வளர்ப்பு முறை

நேரடியாக விதைகளை பழங்களிலிருந்து சேகரிக்கலாம், நாள்பட்ட விதைகள் சரிவர முளைக்காது, அதனால் புதிய விதைகளை தாமதிக்காமல் விதைக்க வேண்டும்.

விதைகளின் தோல் மிகமெல்லியதாக இருப்பதால் இதை கவனமாக கையாளவேண்டும்,  விதைகள் விரைவாக முளைத்தெழும்.

இரண்டு முதல் மூன்று வாரங்கள் வளர்ந்த ன்றுகளில்  சுமார் ஒரு அடி வளர்ந்த கன்றுகளை எடுத்து நடவேண்டும்.

மரங்களின் அடியில் வளர்ந்திருக்கும் வேர்ச்செடிகளையும் மற்றும் விண்பதியன் கன்றுகளையும் நடலாம்.


குணப்படுத்தும் நோய்கள்

செரிமானம் சம்பந்தப்பட்ட நோய்கள், உடல் பருமன் நோய், ஆண்மை குறைபாட்டு நோய்.




மரங்களின் இயல்பு

இலை உதிர்க்கும் மரம், ஆறு முதல் பதினெட்டு  மீட்டர் உயரமாக வளர்கிறது, உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்ய முக்கிய உற்பத்தி பொருளாக  பழங்கள் தருகிறது.

மருந்துகள் உற்பத்திசெய்ய மரக்கட்டைகள் தருகிறது, சாலைகளிலும் சோலைகளிலும் நட்டால் அழகும் நிழலும் தருகிறது.

கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரம் வரை உள்ள இடங்களிலும், கூடுதலான வெப்பம் இல்லாத பகுதிகளிலும் அதிகமான மழை உள்ள பகுதிகளிலும் தனக்கு பிடித்தமான சூழல் என்கிறது.

நல்ல வடிகால் வசதியுள்ள மண் கண்டமும் இளஞ்செடிகளுக்கு ஓரளவு நிழலும் கார அமிலத்தன்மை 5 முதல் 6.5 வரையும் தேவை என்கிறது.

இந்தோனேசியாவின் மலேசியாவின் குரங்குப்பலா

இந்த குரங்குப்பலா இந்தோனேசியா மற்றும் மலேசியாவில்  அதிகம் வளரும் ஒரு வகை காட்டுபலா, இதன்  தாவரவியல் பெயர் அர்டோகார்ப்பஸ் ரிஜிடஸ் (ARTOCARPUS REGIDUS), துவும்மங்கி ஜாக் புரூட்தான்.

இந்த குரங்குப்பலா மரங்கள் 45 மீட்டர் உயரம் வளரும், அடிமரம் 3 மீட்டர் வரை அகன்று பருத்து வளரும்.

இந்தொனேசியா மற்றும் மலேசியாவில் இந்த குரங்குபலா மரங்கள் அதிகம் காணப்படுகின்றன.

பழங்கள் சுவையாக இருக்கும், கொட்டைகளையும் சாப்பிடலாம், பழங்கள் 7 முதல் 15 செ.மீ. அகலம் இருக்கும்.

சிறிய இதன் பழங்களின் மேல் காணப்படும் முட்கள் சிறியவையாக   குட்டையாக இருக்கும்.

பரவி இருக்கும் இடங்கள் (DISTRIBUTION)

இந்த குரங்குப்பலா வகை ஆசியாவில் மலாய் தீபகற்பம், சிங்கப்பூர், தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியோ ஆகிய நாடுகளில் பரவியுள்ளது.

இவை தாழ்வான நிலப்பகுதிகளிலும் குன்றுகளில் காணப்படும் காடுகளிலும் அதிகம் விரும்பி வளருகின்றன.

வேண்டுகோள்: அருகிவரும் மரங்களை நம் தோட்டத்தில் ஒன்றிரண்டை நட்டு இந்த வகை மரங்களை பாதுகாக்கலாம், விதைகளை சேகரித்து நண்பர்களுக்கு கொடுத்து அறிமுகம் செய்யலாம், இதன் பழங்களை உங்கள் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம்.

தே.ஞானசூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம், போன்: +91 8526195370.

FOR FURTHER READING

2. www.floersofindia.net/ Lakoocha – Monkey jack
3. www.researchgate.net/ Nutritional Value and Medicinal Uses of Moonkey Jack Fruit (Artocarpus Lakoocha)

8888888888888888888888

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...