Monday, June 15, 2020

வெட்டுக்கிளியின் அச்சத்தில் தமிழ்நாடு THE FEAR OF LOCUST IN TAMILNADU




வெட்டுக்கிளியின் அச்சத்தில் தமிழ்நாடு

THE FEAR OF LOCUST IN TAMILNADU

00000000000

பச்சைப் புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது, வெட்டுக்கிளி விட்டதை பச்சைக்கிளி தின்றது,  பச்சைக்கிளி விட்டதை மூசுக்கட்டைப் பூச்சி தின்றது’ (பைபிள் வசனம்)
 
வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கம் கொண்டாடுகிறது, விளைச்சல் அழிக்கப்ட்டது, புது திராட்சைரசம் வற்றிப் போயிற்று, எண்ணெய் மாண்டு போயிற்று’ (பைபிள் வசனம்)
 
மேலே இருப்பவை இரண்டும் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் பற்றிய பைபிளின் வசனங்கள். 

வெட்டுக்கிளிகளின் தாக்குதலில் பயிர்கள் என்ன ஆகும் தெரியுமா ? அதையும் பைபிள் சொல்லுகிறது தொடர்ந்து படியுங்கள்.

திராட்சைச் செடி வதங்கி, அத்திமரம் சாரம் அற்றுப் போகிறது, மாதுளை பேரீச்சம், கிச்சிலி, முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயி, சந்தோஷம் மனு புத்திரரை விட்டு ஒழிந்து போயிற்று’ (பைபிள் வசனம்) 
  
பயிர்களை, செடிகொடிகளை மரங்களை அழிக்க வெட்டுக்கிளிகள் எப்படி செல்லும் என்பதையும் சொல்லுகிறது பைபிள்.

அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது, அவைகள் குதிரைகளைப்போல ஓடும். (பைபிள் வசனம்)
 
அவைகள் பராக்கிரமசாலிகளைப் போல ஓடும், யுத்த வீரரைப் போல வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் அணியிலே செல்லும். (பைபிள் வசனம்)
   
அவைகள் பட்டணம் எங்கும் செல்லும், மதிலின் மேல் ஓடும், வீடுகளின் மேல் ஏறும், பலகணி வழியாக திருடனைப் போல உள்ளே நுழையும். (பைபிள் வசனம்)
 
பைபிள் பழைய ஏற்பாட்டில் ‘யோவேல்’, மற்றும் ‘ஒசியா’  ஆகிய இரண்டு ஆகமங்களிலும்  வெட்டுக்கிளிகள் பற்றிய பல செய்திகள் என்னை ஆச்சரியப்படுத்தின.

தமிழ்நாட்டுக்கு வெட்டுக்கிளி வர வாய்ப்பில்லை  என்று  சொன்னால் கூட வந்தாலும் வரலாம் என்றும் சொல்லுகிறார்கள், ‘அங்கே வெட்டுக்கிளி இங்கே வெட்டுக்கிளி’ என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

கிருஷ்ணகிரியில் வாழையில் வெட்டுக்கிளி வந்தது எண்றார்கள், உடனே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நிபுணர்கள் அங்கு போனார்கள், தோட்டக்கலைத் துறையின் அலுவலர்கள் போனார்கள், பார்த்துவிட்டு லோகஸ்ட் அல்ல சாதா வெட்டுக்கிளிதான் என்றார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பரில் வெட்டுக்கிளி என்றார்கள், அங்கும் பல்கலைக்கழகமும் போனது, தோட்டக்கலைத் துறையும் போனது, அங்கேயும் அது சாதா வெட்டுக்கிளிதான் என்று சொன்னார்கள்.

இப்போது நாமக்கல்  மாவட்டத்தில் கொல்லிமலையில் மிளகு பயிரில் வெட்டுக்கிளி என்றார்கள், அங்கு தோட்டக்கலைத் துறை போனது, வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வெப்ப எண்ணையை வெற்றிகரமாக தெளிக்க ஏற்பாடு செய்தது, அங்கேயும் அது சாதா வெட்டுக்கிளிதான் என்று சொன்னார்கள்.



வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத் வேப்ப எண்ணையை தெளிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் சிபாரிசு செய்கிறது, அதனால் தமிழ்நாட்டு விவசாயிகள் அனைவரும் போதுமான வேப்பேண்ணையை தயார் நிலையில் வைத்து கொள்ளவேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வெட்டுக்கிளியை கட்டுப்படுத்த வேப்ப எண்ணையை தெளிக்க ஏற்பாடு செய்தவர் நாமக்கல் உதவி தோட்டக்கலை இயக்குனர், மணிகண்டன் அவர்கள்,  அவர் அதை வெட்டுக்கிளிகள் தானே தவிர லோகஸ்ட் அல்ல என்றும் அதற்காக விவசாயிகள் பயப்பட வேண்டாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
 
இதனால் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் வெட்டுக்கிளிகளை கூட வேப்ப எண்ணெய் மூலமாக வேம்புப்  பொருட்கள் மூலமாக கட்டுப்படுத்த முடியும் என்பதுதான்.
 
அதனால் நம்முடைய விவசாயிகள் வேப்பஎண்ணை, வேப்பங்கொட்டை, வேப்பம்பிண்ணாக்கு ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்வது நல்லது.

இப்போது நாம் வெட்டுகிளிகளைப்பற்றிய சில முக்கிய விவரங்களை நாம் பார்க்கலாம்.

சமீபகாலமாக சர்வதேச அளவில் கிழக்கு ஆப்பிரிக்கா மிடில் ஈஸ்ட் மற்றும் இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கவலை அளிப்பதாக உள்ளது.

ஆப்பிரிக்கா ஆசியா மத்திய மெரிக்கா தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள்தான் வெட்டுகிளிகளின் உறைவிடமாக உள்ளன.
 
உலகம் முழுவதும் இருக்கின்ற எட்டாயிரம்  வகையான வெட்டுக்கிளிகளில் சுமார் 20 வகை லோகஸ்ட் ஆக மாறி பேரழிவை ஏற்படுத்தும் வகைகள்.

கடுமையான வரட்சியும் தொடர்ந்து வரும் புயல்மழைகள்தான் சாதுவாக இருக்கும் வெட்டுக்கிள்ளிகளை ராட்சசத்தனமான லோகஸ்ட்டுகளாக மாற்றுகின்றன.

மனிதன் பாதி மிருகம் பாதி என்பதுபோலத்தான் இவையும்,   வெட்டிகிளி பாதி நம்உணவை தட்டிப்பறிக்கும் லோகஸ்ட் பாதி.
 
அதிகழிவு தராமல் அமைதியாக இருக்கும் வெட்டுக்கிளிகளின் நிலையை தனித்திருக்கும் நிலை என்கிறார்கள், இதற்கு ஆங்கிலத்தில் சாலிட்டரி பேஸ்.

அழிவு சக்தியாக மாபெரும் கூட்டமாக சுற்றித்திரியும் வெட்டுக்கிளிகளுக்கு  பெருங்கூட்ட நிலை’, ஆங்கிலத்தில் கிரிகேரியஸ் பேஸ்’ என்கிறார்கள்.

தனித்திருக்கும் நிலையிலிருந்து பெரும் கூட்டம் நிலைக்கு ஏன் மாறுகின்றன ? அதற்கு என்ன காரணம் ?  சாதுவாக தத்துக்கிளிகளாக இருக்கும் வெட்டுக்கிளிகள் வெட்டரிவாளும் கையுமாக அலைவது எதனால் ?
 
அதற்குக் காரணமாக இருப்பது செரடோனின்’ என்னும் மாயாஜால வஸ்துதான் அது,  அது என்ன செரட்டோனின் ? அது எங்கிருந்து வந்தது ?
மனிதர்கள் மற்றும் பிராணிகளின் மூளையில் சுரக்கும் ஒருவகை ஹார்மோன் தான் இந்த செரட்டோனின்.
 
இந்த செரட்டோனின் வெட்டுக்கிளிகளின் மூளையில் ஒருபங்கு சுரந்தால் சாதா அல்லது சோதா வெட்டுக்கிளி, அதுவே மூன்றுபங்கு சுரந்தால் அது முரட்டு லோகஸ்ட்.

வெட்டுக்கிளிகளால் ஏற்படும் அழிவுகள் எப்படி இருக்கும் என்று பைபிள் காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள்.

வறுத்தெடுத்த வறட்சி, தீயாக காய்ந்த  வெய்யில், சுட்டெரித்த வெப்பம், அனலாக வீசிய காற்று, அடுத்தடுத்து  வந்து சுழன்றடித்த சூறாவளியும் பேய் மழையும்தான், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெட்டுக்கிளிகள் முட்டை போட்டு குஞ்சுபொறிக்க   பட்டுக்கம்பளம் விரித்தது.

ஒரு இடத்தில் பெருமளவில் இனப்பெருக்கம் அடையும் வெட்டுக்கிளிகள் அங்கிருக்கும் தாவரங்களையும் பயிர்களையும் முழுமையாக தின்று தீர்க்கும்.

அதை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்த இறைக்கான  இடம் தேடி அவை இறக்கையை விரிக்கின்றன, ஒரு நாளில் 100 முதல் 150 கிலோ மீட்டர் வரை பறக்கின்றன.

கென்யா சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து புறப்படும் இந்த வெட்டிக்கிளி படைகள் சவுதி அரேபியா போகின்றன, சவுதி அரேபியா விலிருந்து ஏமன் போகின்றன, ஏமனில் இருந்து ஈரான் போகின்றன, ஈரானில் இருந்து பாகிஸ்தான் போகின்றன, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை அடைகின்றன.
 
வெட்டுக்கிளிகள் இந்தியாவிற்கு வர இரண்டு வழிகள் உண்டு, குஜராத் கடற்கரை வழியாக ஒருவழி, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ராஜஸ்தான் மாநிலம்  இரண்டாவது வழி.

1920, 1930, 1940, 1960, 1980 ஆகிய ஆண்டுகளில்தான் இதற்கு முன்னால் உலகம் முழுவதும் பரவலாக இருந்தது இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல், ஒரு நூறு ஆண்டுகளாக அமெரிக்காவில் இந்த பிரச்சனை இல்லை, ஆனால் மேற்கு அமெரிக்கப் பகுதியில் அதற்கு முன்னால் 19ம் நூற்றாண்டில்  கடுமையாக இருந்தது என்று சொல்லுகிறார்கள்.
 
இனி வரும் காலத்திலும் இந்த வெட்டுக்கிளிகளின் இனப்பெருக்கம் பெருமளவு இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

 
பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பது மட்டும் தான் தற்போது நம்மிடம் உள்ள ஒரே தீர்வு என்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு.
 
ரசாயன பூச்சிக்கொல்லிகளை தெளிப்பது என்பது ஒரு நிரந்தரமான தீர்வாகாது, அதனால் ஏற்படும் விளைவுகள் நாம் அறியாதது அல்ல.

பயலாஜிகல் கன்ட்ரோல் மட்டும்தான், பிராணிகளையும் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காதது, அந்த வகையில் ஒரு பூசணத்தையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். 

இந்த பூசணம் விரைந்து செயல்படுவதில்லை, நிதானமாக செயல்படுகிறது, தொண்ணூறு சத  வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த முடியும்,  என்று சொல்லுகிறார்கள். 

ஆனால் நமக்கு வேம்பு எண்ணை அற்புதமாக செயல்படும், அதனால் வெட்டுக்கிளிகள்பற்றி நாம் கவலைப்பட வேண்டாம் என்கிறார்கள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

எழுதியவர் தே. ஞானசூரிய பகவான், தலைவர், பூமி இயற்கை வள பாதுகாப்பு தகவல் மையம்,  தெக்குப்பட்டு & அஞ்சல், திருப்பத்தூர் மாவட்டம், பின்கோடு 635801,  போன் நம்பர்: +91 8526195370.

FOR FURTHER READING:
1. Pakisthan Locust Plague: Locals Collect Insects For Chicken Feed - BBC News - You Tube -10.06.2020.
2.  கொல்லிமலையில் இருப்பவை பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை - Daily Dhanthi News - 14.06.2020.
3. www.fromforbes.com / What's Up With Those Locust Swarms ?
4. www.bbc.com / Hundreds of billions of locusts swarm in East Africa - BBC News
00000000000



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...