Thursday, June 11, 2020

ஈரப்பலா தமிழகத்தின் கோயில்மரம் ERAPALA TEMPLE TREE OF TAMILNADU





ஈரப்பலா தமிழகத்தின் கோயில்மரம்


ERAPALA  TEMPLE TREE OF TAMILNADU

 ஈரப்பலா பசுமை மாறா மரம், இனிப்புப்பலா அல்ல புளிப்புபலா, பழங்களை சாப்பிடலாம், சமையலுக்கு பயன்படுத்தலாம், ஜாம் ஜெல்லி செய்யலாம், மரங்களில் கரையான் அரிக்காத மரச்சாமான்கள் செய்யலாம், மருத்துவ குணங்கள் கொண்டது, சிவன் கோயில்களில் தலவிருட்சமாக உள்ளது.

ஈரப்பலா மரங்கள் நல்ல உயரமாக வளரும், பத்து மீட்டர் வரை கிளைகளே இல்லாமல் நெடுநெடுவென வளரும்.  நடுத்தரமான மரமாக 40 மீட்டர் உயரம் வரை வளரும். மரத்தின் பட்டை சாம்பல் நிறமாக இருக்கும், பட்டைகள் ஆச்சரியப்படும் வகையில் காகிதம்போல மெல்லியதாக, நீண்ட வெடிப்புகளுடன் தென்படும், ஈரப்பலா பழங்களை சாப்பிடலாம், மரங்கள் பலவிதமான மரவேலைகளுக்கும் பயன்படும், இந்தியா உட்பட விரல்விட்டு எண்ணக்கூடிய ஆசிய நாடுகளில் ஈரப்பலா பரவியுள்ளது,

  • தாவரவியல் பெயர் : அர்டோகார்பஸ் கொமெசியானஸ் (ARTOCARPUS GOMEZIANUS)
  • பொதுப்பெயர் ; பேப்பர் மல்பெரி (PAPER MULBERRY)
  • தாவரக்குடும்பம் : மோரேசியே (MORACEAE) என்னும் மல்பெரி குடும்பத்தைச்சேர்ந்தது.
  • தாயகம்: இந்தியா

பலமொழிப் பெயர்கள் (NAMES IN OTHER LANGUAGES):

  • தமிழ்: ஈரப்பலா (IRAPALA)
  • இந்தி: தான் (DHAUN)
  • கன்னடா: ஈசுலுகுலி (ISULIHULI)
  • மலையாளம்:சிம்ப்பா (CHIMPA)
  • சமஸ்கிருதம்: அம்லக்கா (AMLAKA)

பயன்கள் (USES)

  • இதன் புளிப்பு சுவையை தண்டியும் இதன் பழங்களை சாப்பிடுவார்கள், ஸ்ரீலங்கா மற்றும் தென்னிந்தியாவில் வீட்டுத்தோட்டங்களில்  விரும்பி வளர்க்கிறார்கள்.
  • பழங்கள் அளவில் சிறியதாக 8 சென்டி மீட்டர் குறுக்களவு கொண்டதாக இருக்கும்.
  • புளிப்பு அதிகமாக இருந்தாலும் ஜாம் ஜெல்லி செய்வதற்கும் ஊறுகாய் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பல கிராமங்களில் சமையலில் புளிக்கு பதிலாக ஈரப்பலா பழங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
  • சில கிராமங்களில் வெற்றிலையுடன் பாக்குக்கு பதிலாக இதன் பட்டையை போட்டு மெல்லுவது வழக்கமாக இருக்கிறது.
  • மரம் வெண்மையாக இருக்கும், இதனைத் தரமான மரவேலைகளுக்கு பயன்படுத்த முடியும், கரையான் தாக்காத மரம் என்னும் சிறப்புக்கு உரியது
  • ஈரப்பலா மரங்களில் தயார் செய்யும் ஒட்டுபலகைகளை கரையான்கள் தாக்காது என்னும் பெருமைக்கு உரியது.
  • இந்த மரத்தினை ஆய்வு செய்ததில் ஆல்கலாய்ட்ஸ், பிளேவனாய்ட்ஸ், டேனின்ஸ், பீனால்ஸ்,  ஸ்டீராய்ட்ஸ், கிளைகோசைட்ஸ், டேனின்ஸ்,  போன்றவை இந்த இந்த மரத்தில் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள், இவைதான்  இந்த மரத்தின் மருத்துவ குணங்கள் என்று சொல்லுகிறார்கள்.

பரவி உள்ள இடங்கள்: (DISTRIBUTION)

  • ஆசியாவில், இந்தியா, சைனா, மியான்மர், பிலிப்பைன்ஸ்,  வியட்நாம் ஆகிய நாடுகளில் இம்மரங்கள் பரந்துள்ளது.
  • இந்தியாவில் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது.
  • மகாராஷ்ட்ராவில் கொங்கன் பகுதிகள், கர்னாடகாவில் மைசூர், வடக்கு கேனரா, கேரளாவில் பாலக்காடு, இடுக்கி, மற்றும் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

மரங்களின் இயல்பு (PROPERTIES)

பட்டை :  மரத்தின் பட்டை சாம்பல் நிறமாக இருக்கும், பட்டைகள் ஆச்ச்ரியப்படும் வகையில் காகிதம்போல மெல்லியதாக, நீண்ட வெடிப்புகளுடன் தென்படும்,

பலா வகைகள் (VARITIES)

ஆர்டோகார்ப்பஸ் இனத்தில் சுமர் 60 வகையான மரங்கள் இருக்கின்றன, பலா மரங்களின் குடும்பத்தை மல்பெரி குடும்பம் என்பார்கள்.

இவற்றில் ஆர்டோகார்ப்பஸ் ஹெட்டரோபில்லஸ் (ARTOCARPUS HETEROPHYLLUS) என்பதுதான்  நம்மூர் பலா, அதுதான் முக்கனிகளில் ஒன்று.

ஆர்டோகார்ப்பஸ் கம்முனிஸ் (ARTOCARPUS COMMUNIS) என்பது கறிப்பலா, இதைத்தான் நாம் சமைக்கிறோம். இவை தவிர குரங்குபலா, அயினிப்பலா, செம்பலா என பலவகை உண்டு,  

பால்வடிக்கும் பலாமரங்கள்:

ஆர்டோகார்ப்பஸ் வகையைச்சேர்ந்த பெருமரங்கள், குறுமரங்கள், செடிகள் அத்தனையும் பால் வடிக்கும் தன்மை உடையன.
இவற்றின் மரம், கிளை, இலை, சிறுகுச்சிகள், பூக்கள் இப்படி எதை கிள்ளினாலும் காயப்படுத்தினாலும் பால் வடியும், இவற்றின் பால் அனைத்துக்கும் ஒட்டும் தன்மையுண்டு.

இந்த பாலைப்பயன்படுத்தி கிராமங்களில் சிறுவர்கள் பறவைகள் பிடிப்பதை பார்த்திருக்கிறேன், இதன் பால் அவற்றின் இறக்கைகளில் ஒட்டிக்கொண்டால் அவற்றால் பறக்கமுடியாது, சுலபமாக அவற்றை பிடித்துவிடலாம்.

பழங்களை வெட்டி எடுக்கும்போதுகூட அதன் மேல்தோலில் பால் வடியும், பலாச்சுளைகளை நீக்கும்போதும் கைகளில் நல்லெண்ணை அல்லது கடலை எண்ணை தடவிக்கொண்டால் எளிதாக சுளைகளை பழத்திலிருந்து பிரித்து எடுக்கலாம்.

பூக்கள்:

இந்த மரங்கள் இருபாலினப்பூக்களை உடையவை, இதனை தாவரவியலில் மானோசியஸ் (MONOCIOUS) என்று சொல்லுவார்கள், அதாவது ஆண்பூக்கள் மற்றும் பெண்பூக்கள் ஒரே மரத்தில் பூக்கும்.

நடவு செய்த 4 முதல் 5 ஆண்டுகளில் பூத்து காய்க்க ஆரம்பிக்கும், இதன் பூக்கள் தேனீக்களால் மகரந்தசேர்க்கை அடைகின்றன.
தலவிருட்சம்

ஈரப்பலா  தலவிருட்சமாக கோயில் மரமாக உள்ள கோவில்கள் மற்றும் இடங்களைப் பார்க்கலாம்.

  • குறுங்காளீஸ்வரன் கோயில், சென்னைகோயம்பேடு
  • திருக்குற்றாலநாதர் கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்
  • காங்கேசப்பெருமான் கோயில், காங்கேசநல்லூர், ஈரோடு மாவட்டம்.
  • தாந்தோன்றீஸ்வரன் கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.

வளர்ப்பு முறை (PROPAGATION)

விதைகளை நேரடியாக விதைக்கலாம், கன்றுகளை உற்பத்தி செய்து நடலாம், இவை பெரும்பாலும் காட்டு மரங்களாகவே இருக்கின்றன.

எழுதியவர்: தே.ஞானசூரிய பகவான், தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு மையம், தெக்குபட்டு, திருப்பத்துர் மாவட்டம், போன்:+918526195370.

FOR FURTHER READING

  1. www.indiabiodiversity.org/ Artocarpus gomezianus
  2. www.tropical.theferns.info/ Artocarpus gomezianus
  3. www.npor.niscais.res.in/ Phytochemical studies of Artocarpus gomezianus fruits collected from various altitudes of central Western Ghats.

8888888888888888888888888

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...