Monday, June 22, 2020

நூறு மரக்கையேடு - A GUIDE TO 100 TREES


                            

நூறு மரக்கையேடு

A GUIDE TO 100 TREES

“நாங்களும் உங்களை மாதிரி ஒரு சிறுவனம் போடலாம்னு இருக்கோம், என்னென்ன மரங்களை நடலாம் ? நீங்க என்னென்ன மரங்களை நட்டிங்க ? அந்த பட்டியலை தர முடியுமா ? 

இப்படி ஒரு நாளைக்கு அஞ்சி போனாவது வந்துகிட்டு இருக்கு. அவுங்களுக்கு இந்த பட்டியல் ஒரளவுக்கு உதவியாக இருக்கும்னு நினைக்கறேன் ! 

இந்த பட்டியலை வச்சி சிறு வனமும் அமைக்கலாம் ! பெருவனமும் அமைக்கலாம் ! ஒரு மரமும் நடலாம் ! வாழ்த்துக்கள் !

இந்த பட்டியலில் உள்ளூர் பெயர் இருக்கு, பொதுப்பெயர் இருக்கு, அறிவியல் பெயர் இருக்கு ! 

தாவரக்குடும்பத்தின் பெயர் இருக்கு ! 

ஒரு சின்ன குறிப்பும் இருக்கு ! 

இந்த குறிப்புகளை கையில வச்சிகிட்டா இந்த மரங்களோட ஜாதகத்தையே அலசிடலாம் அலசி !

1. ஆலமரம், இந்திய யானைப்படையை அடுத்து மாவீரன் அலக்சாண்டரை மிரட்டிய நம் தேசியமரம்  (BANYAN - FICUS BENGHALENSIS -MORACEAE )

2. பனை, சுவடிகள் மூலம் சங்க இலக்கியங்களை பாதுகாத்துத் தந்த தமிழ்நாட்டின்  அரசு மரம். (PALMYRA - BORASSUS FLABELLIFER - ARECACEAE)

3. நாவல்மார்கண்டேயபுராணம் குறிப்பின்படி இந்தியாவின் பாரம்பரியப் பெயர் ஜம்பூத்விபா (நாவல் பழங்களின் பிரதேசம்) – தமிழ்நாட்டின் பூர்வீகப் பெயர் நாவலந்தீவு (JAMUN - SYZIGIUM CUMINI - MYRTACEAE).

4. அரசமரம் புத்தருக்கு ஞானம் தந்த போதி மரம். (PEEPAL – FICUS RELIGIOSA - MORACEAE)

5. பவளமல்லி,  சூரியதேவனின் காதலைப் பெறமுடியாத இளவரசி பாரிஜாதத்தின் அவதாரம்தான் இந்த மரம். (NIGHT JASMINE TREE – NYCTANTHES ARBOR-TRISTIS - OLEACEAE)

6. நந்தியாவட்டம்,    கோவில் பூஜைக்கு பூ தருவதற்காக பிறந்தது. (PINWHEEL FLOWER – TABERNAEMONTANA DIVERICATA - APOCYANACEAE)

7. மருதாணி,    உள்ளங்கைகளையும் விரல்களையும் அலங்கரிக்கும் அழகு சாதனம் . (HENNA - LAWSONIA INERMIS)

8. கறிப்பலா,    ஐந்து முறை வியாபார சினிமா எடுக்க கதை உபயம் செய்த  காய்கறி மரம். (BREAD FRUIT – ARTOCARPUS ALTILIS - MORACEAE)

9. முருங்கை    - கியூபாவின் பிடல்கேஸ்ட்ரோ சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் குழந்தைகளின் சத்து பற்றகுறையை சரிசெய்ய சிபாரிசு செய்த மரம். (DRUMSTICK – MORINGA OLEIFERA - MORINGACEAE)

10. நெல்லி -     அவ்வை அதியமானுக்கு நீண்டநாள் வாழ பரிசாகத் தந்தது. (INDIAN GOOSEBERRY – PHYLLANTHUS EMBLICA - PHYLLANTHACEAE)

11. செண்கம்,  உலகின் மிகச்சிறிய ஹம்மிங் பேர்ட்ஸ் விரும்பும் பூமரம். (CHAMPAK – MAGNOLIA CHAMPAKA - MAGNOLIACEAE)

12. தேக்குடைட்டானிக் கப்பல் செய்ய உதவிய காதல் மரம். (TEAK – TECTONA GRANDIS - LAMIACEAE)

13. மரமல்லிகை,     பர்மாவின் பொம்மலாட்டத்தில் பயன்படுத்தும்  பொம்மைகள் இந்த மரத்தில் செய்தவைதான். (TREE JASMINE – MILLINGTONIA HORTENSIS - OLEACEAE)

14. வில்வம்,     சிவன்கோவிலில் வில்வமர வழிபாட்டை முதன்முதலில்  தொடங்கியவன் கருர் சோழ மன்னன் முசுந்தன். (INDIAN BAEL – AEGLE  MARMELOS - RURACEAE)

15. கொடுக்காப்புளி,   இதன் சொந்த ஊர் மெக்சிகோ ஆனால் எல்லோரும் சொல்லுவது மெட்ராஸ் தார்ன். (MADRAS THORN – PITHECELLOBIUM DULCE - FABACEAE)

16. அத்திஒரு அத்திப் பழம் 5000 முதல் 7000 பூக்களின் தொகுதி. ஆனால் "அத்தி பூத்தமாதிரி வந்திருக்கிங்க" என்பது பழமொழி (INDIAN FIG – FICUS RACEMOSA- MORACEAE) 

17. பலா,  உலகிலேயே பெரிய பழம் தரும் மரம். (JACK FRUIT TREE – ARTOCARPUS HETEROPHYLLUS - MORACEAE)

18. ஆத்தி,       ஆத்திசூடிக்கு பெயர் தந்து அவ்வையை கவர்ந்த மரம். (MOUNTAIN  EBONY- BAUHINIA VARIEGATA - FABACEAE)

19. இலுப்பை,  பழங்காலத்தில் கோவில்களில் விளக்கு எரிய எண்ணைய் தந்த மரம்; (MAHUA – MADHUCA LONGIFOLIA - SAPOTACEAE)

20. வேம்பு,       கிராம மருந்துக்கடை என்று வெள்ளைக்காரர்கள் சொல்லும் மருந்து மரம்  (NEEM – AZADIRACHTA INDICA - MELIACEAE)

21. புளி,  இது இல்லாமல் தென்னிந்தியாவின் சமையல் இல்லை. (TAMARIND – TAMARINDUS INDICA - FABACEAE)

22. பூவரசு     குழந்தைகள் விளையாட பீப்பி, பம்பரம் தந்த மரம். (PORTIA TREE – THESPESIA POPULNEA - MALVACEAE)

23. மயில்கொன்றை,  இந்த பூக்களுக்கு நிறம் தந்தது கிறிஸ்து ஏசுவின் ரத்தம் தெரியுமா ?. (ROYAL POINCIANA – DELONIX REGIA - FABACEAE)

24. நொச்சி    நம்ம ஊரில் கொசு விரட்டி அமெரிக்காவில் அழகு மரம். (CHASTE TREE – VITEX NEGUNDO - LAMIACEAE)

25. கறிவேப்பிலை    தென்னிந்திய சமையலுக்கு மணம் தருவது. (CURRY LEAF TREE – MURRAYA KOENIGII - RUTACEAE)

26. சரக்கொன்றை,    சர்வதேச அழகு மரங்களில் ஒன்று, கொன்றை வேந்தனுக்கு பெயர் தந்தது. (GOLDEN SHOWER TREE - CASSIA FISTULA - FABACEAE)

27. முந்திரி மரம்,     முந்திரி கொட்டை என்று நாம் சொல்வது தவறு. அது  அதன் பழம். முந்திரிப் பழம் என்பது தவறு. அது  அதன் காம்பு. (CASHEW TREE – ANACARDIUM OCCIDENTALE - ANACARDIACEAE)

28. செஞ்சந்தனம்,     அணுக்கதிர் தடுக்கும் உலகின் ஒரேமரம். (REDSANDER – PTEROCARPUS SANTALINUS - FABACEAE).

29. கடுக்காய்,  காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே, விருத்தன் என்றால் பெருசு’ (INDIAN GALL NUT – TERMINALIA CHEBULA - COMBREACEAE)

30. வன்னி,     உலகிலேயே 363 பேர் உயிர் தந்து காப்பாற்றப்பட்ட ஒரேமர வகை (PROSOPIS CINERARIA - FABACEAE).

31. கல்யாணமுருங்கை,    ஜப்பான் நாட்டு தேசிய கீதம் கல்யாணமுருங்கை மரம் பற்றியதுதான் (TIGER CLAW TREE- ERYTHRINA INDICA - FABACEAE).

32. குடைவேல மரம், ஆட்டுத்தீவன மரம், கருவை மரத்தின் ஒண்ணுவிட்ட தம்பி (UMBRELLA THORN TREE – ACACIA TORTILIS - FABACEAE)

33. டீராகன் பிளட் மரம்,    அலக்சாண்டரின் குருநாதர் அரிஸ்டாடில் தனது மருத்துவ முறைகளில் பயன்படுத்திய மரம். (DRAGON BLOOD TREE- DRACAENA CINNABARI -ASPARAGACEAE )

34. மஞ்சள் கொன்றை (பொன்னாவாரை),     வறண்டு போன தரிசு நிலங்களில் நிலைத்து வளரும் மரம்  (YELLOW CASSIA - CASSIA SCIAMEA - FABACEAE).

35. மலை வேம்பு, பழங்கள் பாடும்பறவைகளுக்கு டாஸ்மாக் சரக்கு மாதிரி. (INDIAN LILAC - MELIA AZEDARACH - MELIACEAE )

36.. மலைச்சவுக்கு, பூங்கொத்துக்களை பிடித்து உலுக்கினால் தூரலாக சிந்தும் தேன். (SILVER OAK –N GREVILLEA ROBUSTA -PROTEACEAE)
37. நுணா,      உலகம் முழுவதும் சக்கைப்போடு போடுவது நோனி டானிக். நோனியின் பெரியண்ணன்தான் நுணா. (INDIAN MULBERRY - MORINDA TINCTORIA - RUBIACEAE).
38. மங்கி பஸ்சில் ட்ரீ, குரங்கு ஏறா மரம்   அழகு மரம் (MONKEY PUZZLE TREE - ARAUCARIA ARAUCANA - ARAUCARIACEAE)
39. ஆனைத்தொண்டி, எலும்புறுக்கி நோயை குணப்படுத்துவதில் அசாத்தியமான மூலிகை மரம் (MOTHAGAVALLI - PTERYGOTA ALATA, STERCULIACEAE)

40. மராமரம்,    கடலும் நிலமும் சேரும் சடுப்பு நிலங்களில் வளர்ந்து கடல் அரிப்பை கட்டுப்படுத்தும் மரம் (SONNERATIA – SONNERATIA APETALA, SONNERATIACEAE).

41.கருப்புகுங்கிலியம், மரங்களில் வடியும் வாசனைப்பிசினைத்தான் நாம் சாம்பிராணி என்கிறோம். (BLACK DUMMAR TREE – CANARIUM STRICTUM - BURSERACEAE)

42. காட்டாமணக்குலவை செய்த துணிகளில் குறிபோட இதன் இலைப்பால்தான் பயன்படுத்தப்பட்டது. (JATROPHA – JATROPAHA CURCAS - UPHORBIACEAE )

43. பரங்கி சாம்பிராணி,     பலநூறு ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்திற்கு சாம்பிராணி தந்த மரம். (INDIAN FRANKINCENSE – BOSWELLIA SERRATA - BURSERACEAE)

44.தேற்றாங்கொட்டை, திருக்குவளை திருக்கோவிலின் ஸ்தலவிருட்சம். (CLEARING NUT TREE - STYCHNOS POTATORUM - LOGANACEAE)

45. தங்க அரளிஉள்ளுர் மரம்போல இந்தியா முழுவதும் பரவியிருக்கும் தினமும்  பூக்கும் தென்அமெரிக்க மரம் (YELLOW BELLS – TECOMA STANS - BIGNONIACEAE).

46. வாதநாராயணன்,  முதியோர் ஸ்பெஷல் – மூட்டுவலி> மூட்டுப்பிடிப்பு> மூட்டுவாதம் அத்தனைக்கும் குரு. (WHITE GULMOHR – DELONIX ELATA - FABACEAE).

47. தூங்குமூஞ்சிமரம்,      தொட்டால் மட்டுமே சுருங்கும், தொட்டாச்சிணுங்கி இலைகள். தொடாமலே சுருங்கும் தூங்குமூஞ்சி இலைகள்  மாலை ஆனால் போதும்  (RAIN TREE – SAMANEA SAMAN - MIMOSACEAE).

48. கூந்தல்பனை,    இதன் பூக்கள் பூத்து காய்த்து பழுத்துக் கனிந்தவுடன் மரம் உலர்ந்து மடிந்துபோகும் (FISHTAIL PALM – CARYOTA URENS - ARECACEAE).

49. நாட்டு வாதாம் கொட்டை,    அழகு மரமாக இருந்தாலும் இதன் விதைகளிலிருந்து யோடீசல் தயாரிக்கலாம். (INDIAN ALMOND TREE – TERMINALIA CATAPPA- COMBRETACEAE)

50. குங்கிலிய மரம்இந்திய காடுகளின் பரப்பில் 14 சதம் இருக்கும் சால் என்னும் மரவகை - (SAL TREE - SHOREA ROBUSTA - DIPTEROCARPACEAE)

51. திருவோட்டு சுரைக்காய்,      நமக்குத் தெரிந்தது கொடிச்சுரை. இது மரத்தில் காய்க்கும் மரச்சுரை. (CALABASH TREE – CRESCENTIA CUJETE - BIGNONIACEAE)

52. மான்செவிக்கருவை,    இது சுற்றுச்சூழலுக்கு மற்ற மரங்களைவிட மிகவும் ஏற்புடைய மரம். (MANGIUM - ACACIA MANGIUM -  MIMOCEAE)

53. சிவக்குண்டலமரம்,     இந்திய கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் இந்த மரம் ஒரு ஆப்ரிக்க மரம் (SAUSAGE TREE – KIGELIA PINNATA - BIGNONIACEAE)

54. சிங்கப்பூர்செர்ரி,    கொஞ்சம் அணில்கள்;> கருவாட்டுக்குருவிகள்> வண்ணாத்திக் குருவிகள்> தேன்சிட்டுக்கள் என எப்போதும் கொட்டம் அடித்துக் கொண்டிருக்கும் மரம். (STRAWBERRY TREE – MUTINGIA CALABURA - MUTINGIACEAE)

55. புரசு மரம், பிளாசி   என்ற ஊரில் நடந்ததால்தான் அதன்பெயர் பிளாசி யுத்தம்.; பிளாசி மரங்கள் அதிகம் இருந்தால்தான் அந்த ஊருக்கு பெயர் பிளாசி.  வங்காள மொழியில் பிளாசி என்றால் புரசுமரம்.; (FLAME OF FOREST – BUTEA MONOSPERMA - )

56. சந்தன மரம், சந்தன மரங்கள் அதிகம் இருந்ததால்தான் அதற்கு ஜவ்வாதுமலை என்று பெயர் வந்தது. (INDIAN SANDAL WOOD TREE – SANTALUM ALBUM - SANTALACEAE)

57. காயா மரம்,      கிருஷ்ணபரமாத்மாவுக்கு உரிய தெய்வீக மரம். (IRON WOOD TREE – MEMECEYLON UMBELLATUM - MELASTOMATACEAE)

58. மூங்கில்,    மூங்கில் இலைமேலே தூங்கும் பனிநீரே என்பது பரபலமான ஏற்றப்பாட்டு. (BAMBOO- DENDROCALAMUS STRICTUS-BAMBOOSA ARUNDINACEAE -   POACEAE )

59. வெட்சி மரம்,     ஆநிறைக்கவர்தல் என்பது ஒரு தமிழரின் போர்முறை. அதுபோது வீரர்கள் வெட்சிமலர் மாலை அணிந்து செல்வார்கள். (IXORA – IXORA COCCINIA - RUBIACEAE)

60. இலந்தை மரம்,   இன்று பத்ரிநாத் ஆலயம் இருந்த இடத்தில் இலந்தைத்தோப்பு இருந்ததால்தான் அது அந்த பெயர் பெற்றது. பத்ரி என்றால் இந்தியில் இலந்தை. (INDIAN JUJUBE – ZIZIPHUS JUJUBA - RHAMNACEAE)

61. கரும்பொரசு,      மரச்சாமான்களை அழகுபடுத்தும் வீனீர் என்னும் மரத்தகடுகள் செய்ய உதவும் மரம். (SATIN WOOD TREE - CHLOROXYLON SWIETENIA - RUTACEAE)

62. பாட்டில் மரம்,    உலகின் விச்சித்;ரமான தீவில் இருக்கும் ஒரு அதிசயப்பிறவி இந்த மரம். (DESERT ROSE BOTTLE TREE – ADENIUM OBESUM - APOCYNACEAE)

63. அகில்மரம், ஒரு கிலோ அகில் மரம் 2010 ம் ஆண்டு ஒரு லட்சம் டாலருக்கு விற்பனை ஆனதாம். (AGAR WOOD TREE – AQUILARIA AGALLOCHA - THYMELAEACEAE)

64. கருங்காலி, ஒரு காலத்தில் கப்பல்கட்ட உதவிய உறுதியான மரம். (EBONY - DIOSPYROS EBENUM, EBONACEAE)

65. நெட்டிலிங்கம்,    ஒரு காலத்தில் பிரிட்டீஷ் கப்பலில் கொடிக்கம்பமாக பயன்பட்ட மரம். (MAST TREE – POLYALTHIYA LONGIFOLIA - )

66. நீர்கடம்பை, நீர்கடம்பை மரத்திற்கு தமிழில் மட்டும் 50 பெயர்கள் உள்ளன. (ARJUNA TREE – TERMINALIA ARJUNA - COMBRETACEAE)

67. வேங்கை, வேங்கை மரத்திலிருந்து எடுக்கும் கினோ பிசின் பல தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள். (INDIAN KINO TREE- PTEROCARPUS MARSUPIUM - FABACEAE )

68. மகிழமரம், பூக்கள் வாடி வதங்கி காய்ந்துபோன பின்னால்கூட ரம்யமான வாசைன வீசிக்கொண்டிருக்கும். (BULLET WOOD TREE- MIMUSOPS ELENGI - SAPOTACEAE)

69. ஆனைப்புளிமரம்,  மழையின்போது ஒரு லட்சம் லிட்டர் தண்ணீரைக்கூட அடிமரத்தில் பிடித்து வைத்துக்கொள்ளும். (MONKEY BREAD TREE- BAO BAB – ADANSONIA DIGITATA - MALAVACEAE)

70. ஆர்கானியாமரம், பத்திருபது ஆடுகளைக்கூட தனது கிளைகளில் ஏறி மேய அனுமதிக்கும் பாலைவன மரம். (ARGAN - ARGANIA SPINOSA - SAPOTACEAE)

71. பூமருது மரம்,    அழகு மரமாக அமெரிக்க நகரங்களில் கொடிகட்டி பறக்கும் இந்திய பூமரம். (CRAPE  MYRTLE – LAGERSTROMIA INDICA - LYTHRACEAE )

72. குமிழ்,      வேகமாய் வளர்ந்து தீப்பெட்டி, தீக்குச்சி, ஒட்டுப்பலகை, சிறுவர்களுக்கு பழங்களும் தரும் மரம். (KUMIZH - GMELINA ARBOREA - VERBANACEAE)

73. வாகை,     சலசலக்கும் இதன் நெற்றுக்கள் சங்க காலத்திலேயே பிரபலமானது. (WOMENS TONGUE – ALBIZIA LEBBECK - MIMOSACEAE)

74. துரிஞ்சி,     தேனி மாவட்டத்தில் இதன் பெயர் உசிலை. இந்த மரத்தின் பெயரால் அமைந்ததுதான் உசிலம்பட்டி. (OILCAKE TREE - ALBIZIA AMARA - FABACEAE)

75. இலவம்பஞ்சு,     இலவம்பஞ்சு மர எண்ணெயில் பயோ டீசல் தயாரித்து பருவநிலை மாற்றத்தை தள்ளிப் போடலாம். (KAPOK TREE - CEIBA PETANDRA - BOMBACACEAE )

76. சவுக்கு,     சவுக்கு உடனடி உணவு போல  மாதிரி பந்தல்கால்களாக கொடிக்கம்பங்களாக உடனே உபயோகிக்கலாம். (CASUARINA - CASUARINA  EQUSETIFOLIA- CASUARINACEAE)

77.  தோதகத்தி,      இது ஒரு மாண்புமிகு மரம். தேக்கு மரத்தைவிட விலை அதிகம். (ROSE WOOD – DALBERGIA LATIFOLIA - FABACEAE)

78. திவி திவி,  செயற்கை ரசாயனங்கள் வரும்வரை தோல்பதனிடும் நாடுகளின் அதிர்;ஷ்ட தேவதை இதுதான். (DIVI DIVI - LIBIDIBIA CORIARIA - FABACEAE)

79.ஜயண்ட் செகோயா மரம்,      உலகின் உயரமான பெரிய மரம். இதற்காக ஒரு Nதுசிய பூங்காகே உள்ளது. (GIANT SEQUOIA – SEQUOIADENDRON GIGANTEUM - TAXODIACEAE)

80. கற்பூர மரம்,      புத்திசாலித்தனத்தை இந்த மரத்துடன் ஒப்பிடுவார்கள். சராசரி மனிதர்களின் புத்திசாலித்தனம் 90 முதல் 110 ஐ கியூ. ஐன்ஸ்டினின் ஐ கியூ 160. (CAMPHOR TREE -CINNAMOMUM CAMPHORA -LAURACEAE )

81. சீத்தாப்பழமரம்,    இதில் ஒயின் தயாரிக்கலாம். பிலிப்பைன்சில் செய்கிறார்கள். (CUSTARD APPLE – ANNONA SQUAMOSA - ANNONACEAE)

82. விளாம்மரம்,      இதன் சிம்புகளிலும் கொம்புகளிலும் உள்ள முட்கள்தான் வவ்வால்களை இதன் பழங்களை ருசிக்கவிடாமல் செய்கின்றன என்கிறது ஒரு நாலடியார் பாடல். (WOOD APPLE - FERONIA LIMONIA - RUTACEAE)

83. தணக்குமரம், உள்ளே குடைந்துவிட்டு ஒற்றைமரப்படகு (டக் அவுட் கெனோ) செய்யலாம். (HELICOPTER TREE - GYROCARPUS AMERICANUS - HERNANDACEAE)

84. பூவன்மரம், இயற்கை கொண்டாடும் ஹோலிப்பண்டிகை,  வண்ணமயமான இலைகளையுடைய இந்த மரம். (KUSUM - SCHLEICHERA OLEOSA - SAPINDACEAE)

85. கொய்யாமரம்,     பிரேசில் கொய்யாவின் சொந்தநாடு. உலகில் அதிகம் உற்பத்;தி செய்வது இந்தநாடு. (GUAVA - PSIDIUM GUJAVA, MYRTACEAE)

86. ஆஸ்பென், தனிமரம் தோப்பாகும் என்று நிரூபிக்கும் ஒரு அமெரிக்க மரம். (QUAKING ASPEN - POPULUS TREMULOIDES - SALICACEAE)

87. பாதிரி,      குணசிந்தாமணி வைத்திய நூலில் மதனகாமேஸ்வரப்பூ என்று அகஸ்தியர் குறிப்பிட்டது இதுதான். (POOMPATHIRI – STERIOSPERMUM CHELONOIDES -BIGNONIACEAE )

88. முள்சீத்தா, நாம் டீ சாப்பிடுவது மாதிரி கியூபா நாட்டினர் இந்த பழத்தை பாலுடன் சேர்த்து பருகுகிறார்கள். (SOURSOP - ANNONA MURICATA, ANNONACEAE)

89. மாமரம்,     கிறிஸ்துஏசு பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் பிரபலமானது மாசாகுபடி. (MANGO – MANGIFERA INDICA - ANACARDIACEAE)

90. புன்னை,    புன்னை எண்ணெய்க்குப் பெயர் தமனு எண்ணெய். இது இளமையை பாதுகாக்கும் எண்ணெய் இது. (ALEXANDRIAN LAUREL TREE, CALOPHYLLUM IONOPHYLLUM - CLUSIACEAE)

91. புங்கன்,     பயோ டீசல் தயாரிக்க ஏற்ற மரம் (PONGAM, DERRIS IDICA, FABACEAE)

92. பெருமாள், அரளி  பிராங்கிப்பாணி இத்தாலி நாட்டின் பிரபலமான வாசனைத் திரவியம் இதன் பூக்களில்தான் தயாரிக்கிறார்கள். (PAGODA TREE – PLUMARIA ALBA - APOCYANACEAE)

93. ருத்ராட்சமரம்,     ;இருபத்தியோரு கோடுகள் இருக்கும் ஒரு ருத்ராட்ச விதை 10 லட்ச ரூபாய்க்குக்கூட விற்பனை ஆகும். (RUDRAKSH - ELAEOCARPUS GANITRUS - ELAEOCARPACEAE )

94. மாதுளை மரம்,   மூலிகையாக மூவாயிரம் ஆண்டுகளாக புழக்கத்தில் இருக்கும் பழமரம். (POMEGRANATE –PUNICA GRANATUM - LYTHRACEAE )

95. ஏழிலைப்பாலை, பழந்தமிழகத்தில் பாலை நிலத்தின் அடையாள மரம் இன்று சென்னை சாலைகளில் நூற்றுக்கணக்கான மரங்களை பார்க்கமுடிகிறது.(BLACK BOARD TREE – ALSTONIA SCHOLARIS - APOCYANACEAE)

96. வஞ்சி மரம்,      முருகன் அவ்வைக்கு பாடம் சொன்னது நாவல் மரத்தடியில். சிவபெருமான் பிரம்மாவுக்கு பாடம் சொன்னது வஞ்சி மரத்தடியில்.

97. கருமருது, இதன் அடிமரத்தில் அரையடி ஆழத்திற்கு வெட்டினால் நான்கு லிட்டர் நீர் பீச்சியடிக்குமாம். (KARUMARUTHU - TERMINALIA TOMENTOSA - COMBRETACEAE)

98.செம்மரம், கட்டுமானப்பணிகளுக்கு, பல்வேறு மரவேலைகளுக்கும், மரச்சாமாங்கள் செய்யவும் பயன்படும். (APAHANAMIXIS POLYSTACHYA, MILIACEAE )

99. கருநொச்சி, கருநொச்சியிலிருந்து தயாரித்த ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை விரைவில் வர உள்ளது. (VITEX NEGUNDO)

100. ஓடல்,      யானைகளைக் கட்ட அந்தகாலத்தில் இதன் பட்டையிலிருந்து தயாரித்த கயிறுகளைத்தான் பயன்படுத்துவார்கள். (ELEPHANT ROPE TREE- STERCULIA VILLOSA - MALVACEAE)

தே.ஞானசூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர்), இயக்குநர், பூமி அறக்கட்டளை, இயற்கைவள பாதுகாப்பு மற்றும் பயிற்சி மையம், தெக்குப்பட்டு, வேலூர் மாவட்டம் – 635801, போன்: 91-8526195370, Email: gsbahavn@gmail.com
0000000000000000000000000000

No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...