மியாவாக்கி
மாதிரி காடுகள் உருவாக்க
பதினெட்டு
வழிமுறைகள்
EIGHTEEN GUIDELINES OF
MIYAWAKI FORESTS
மியாவாக்கி என்பவர் யார் ? மியாவாக்கி மாடல் காடுகள் என்றால் என்ன ? அதனை நாம் எப்படி செய்யலாம் ?
இவை எல்லாமே
ஓரளவுக்கு நமக்கு தெரிந்தவை தான், ஆனால் ‘மேன் மேய்ட் பாரஸ்ட்’ என்று சொல்லும்
மக்களால் உருவாக்கப்படும் காடுகளை எப்படி அவர் உருவாக்கினார்,
நாம் அவற்றை மக்கள் காடுகள் என்று சொல்லலாம், ‘பீப்பிள்ஸ் ஃபாரெஸ்ட்’. பேரு என்னவேணும்னாலும்
வைக்கலாம், ஆனா அது பேருக்கு இருக்கக்கூடாது, என்ன சொல்றீங்க ?
மியாவாகி ஜப்பான்காரர், தொண்ணூற்று இரண்டு வயசு இளைஞர்,
தாவரவியல் அறிவியல் வல்லுநர், காடுகள் உருவாக்குவதில் நிபுணர், சர்வதேச அளவில் அதற்காக
‘புளூ பிளானட் அவார்ட்’ வழங்கப்பட்டவர், இதுவரை 40 மில்லியன் மரங்களை நட்டவர் என்ற
சாதனையாளர், இவர் பெயரில்தான் இந்த அடர் நடவு காடுகள் உலகம் முழுவதும் உருவாக்கப்பட்டு
வருகின்றன.
மியாவாக்கியின் காடுவளர்ப்பு அனுபவங்களில் நமக்கு
பயன்படக்கூடிய அனுபவங்களை மட்டும் இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுவனங்கள் உருவாக்குவதில் உள்ளூர் மரங்களைத் தேர்வு
செய்வது, அருகிவரும் மரங்களைக் கண்டுபிடிப்பது, மரங்களின் தலைப்பகுதியை வைத்து மரங்களை
வகைப்படுத்த கற்றுக்கொள்ளுதல், கிராமங்களில் உள்ளூர் மரங்களின் விதைகளைச் சேகரித்தல்,
அவற்றிலிருந்து கன்றுகளை உருவாக்குதல், கோயில்கள் இடுகாடுகள், மற்றும் கல்லறைகளில்
சிறு வனங்களை உருவாக்குதல், கிராமப்புற பொது
இடங்கள், குளம்குட்டை ஏரிக்கரைகள், நகர்ப்புறங்கள், மலைப்பகுதிகள் ஆகியவற்றில் மரங்களை
நிரப்புதல் இதெல்லாம்தான் மியாவாக்கியின் பாக்கெட்டிலிருந்து நாம் உருவவேண்டிய சமாச்சாரங்கள்.
மியாவாக்கி ஒரு தாவரவியல் அறிஞர் தாவரங்களைப்
பற்றி படித்தவர் தாவரங்கள் பற்றி அக்குவேறு ஆணிவேராக ஆய்ந்து ஆராய்ச்சி செய்தவர்.
விதைகள் இயற்கை காடுகள் ஆகியவற்றில் ஆழமான அறிவும்
அனுபவமும் உள்ளவர், உலகம் முழுவதும்
அறியப் பட்டவர்.
குறிப்பாக மெலிந்து போன நலிந்து போன காடுகளில் ஓட்டை உடைசல்களை
பழுதுபார்த்து வளமான காடுகளாக மீண்டும் உருவாக்குவதில் வல்லவர்.
ஹிரோஷிமா யுனிவர்சிட்டி மற்றும் டோக்கியோ
யுனிவர்சிட்டியில் பட்டப்படிப்பு படித்தவர், இதுவரைக்கும் இவர் ஆற்றிய
பணிகளுக்காக புளூ பிளானட் அவார்டு (BLUE PLANET AWARD)
என்ற விருதினைப் பெற்றவர்.
1960 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள பாரம்பரியமான காடுகளை
ஆய்வு செய்தார், அவற்றில் மெல்ல அழிந்துபோன அறுநூறுக்கும் மேற்பட்ட
காடுகளை பேருக்கு காடுகளாக இல்லாமல் பெயர்பெற்ற காடுகளாக மாற்றினார்.
பாரம்பரியமான காடுகள் காலப்போக்கில் மதிப்புமிக்க மரங்களை எல்லாம்
இழந்திருக்கும், அதில் பெரும்பகுதி முட்புதர்களாய் மண்டிக்கிடக்கும்.
அப்படி அழிந்துபோன காடுகளில் அவர் எப்படி சரி
செய்தார் அதற்கு எப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாண்டார் என்று
பார்க்கலாம்.
1. அழிந்துபோன காடுகளில் அதிகபட்சமாக
எவ்வளவு மரக்கன்றுகளை நட முடியுமோ அவ்வளவும் நடவேண்டும், அங்கு காலியாக
இருக்கும் நிலப்பரப்பிற்கு ஏற்ப கன்றுகளை நட வேண்டும்.
2. அப்படி அவர் தேர்வு
செய்யும் மரங்கள் எல்லாம் உள்ளூர் பிரபலங்களாக இருக்க வேண்டும், அந்தப் பகுதிக்கு உரிய மரங்களாக இருக்க வேண்டும்.
3. பெரிய, அகன்ற, அடர்த்தியான தலை
பகுதி உடைய, பசுமை மாறாத மரங்களாக இருக்க வேண்டும்.
4. நாம் தேர்வுசெய்யும் மரங்கள் ஒரே வகை மரங்களாக இருக்கக்கூடாது, பல வகை மரங்களைத் தேர்வு செய்து நடவேண்டும்.
5. பல வகை மரங்களை
தேர்வு செய்யும்போது பரந்தும் நீண்டும் வளரும் தன்மை உடைய மரங்களையும் அங்கொன்றும்
இங்கொன்றுமாக இருக்குமாறு நட வேண்டும்.
6. நீங்கள் நடும்
மரங்கள் 5 ஆண்டுகளில் நான்கு மீட்டரும் 10 ஆண்டுகளில் 8 மீட்டரும் 20 ஆண்டுகளில் 25 மீட்டர் உயரமாகவும் வளர வேண்டும்.
7. இந்த மரங்களை நட்டு
முடிந்த பிறகு 3 ஆண்டுகளுக்குப்பின் எவ்விதமான பராமரிப்பும் இதற்குத் தேவையில்லை.
8. மரங்களை நடுவது
நிறுவனங்களை உருவாக்குவதில் நலிவடைந்த காடுகளை மீண்டும் உருவாக்குவது போன்ற எல்லா
வேலைகளுக்கும் மியாவாக்கி முறை சிறந்ததாக இருக்கும் என்று உறுதியளிக்கிறார்
மியாவாக்கி.
9. குளிர்ச்சியான
தட்பவெப்பநிலைப் பகுதிகள், வெப்ப மண்டலப்
பகுதிகள் ஆகியவற்றில் புதிய காடுகளை உருவாக்கவும் பழைய நலிவுற்ற காடுகளை
சரிசெய்யவும் அடர்வன முறையை பயன்படுத்த முடியும் என்கிறார் மியாவாக்கி.
10. பல்லுயிர் ஓம்புதல், கார்பன் டை ஆக்சைடு வாயுவை கவர்ந்து இழுத்து சேமித்தல், சுவாசிக்க ஆக்சிஜன் தருதல், மண் அரிமானத்தை தடை
செய்தல் போன்ற முக்கியமான பணிகள் அனைத்தையும் மியாவாக்கி முறையில் உருவாக்கிய
அனைத்து மரங்களும் காடுகளும் செய்யும் என்றும் அவர் உறுதியளிக்கிறார்.
11. அதிக உயரமான தலை
அமைப்பு கொண்டவை, நடுத்தர உயரமாக அமைப்பு கொண்டவை, சிறியவை மற்றும் புதர்ச்செடிகள் என்று நான்கு விதமாக மரங்களை
வகைப்படுத்துகிறார்.
12. நாற்றங்காலில் விதைகளை விதையுங்கள்,
முளைத்து வரும் கன்றுகளில் இரண்டு மூன்று
இலைகள் வந்தவுடன் அவற்றைத் தொட்டிக்கு அல்லது பாலித்தீன் பைகளுக்கு மாற்றுங்கள்.
13. தொட்டிகள் அல்லது பாலிதீன் பைகளில் வேர்கள் நிரம்பும் அளவிற்கு
அவற்றை வளர்த்து பிறகு நடவு செய்யுங்கள்.
15. தொட்டியில் நடவு
செய்த பிறகு 60 சதம் வெயில் குறைக்கப்பட்ட நிழலறையில் வைத்து ஒன்று
அல்லது இரண்டு மாதங்கள் பராமரிக்க வேண்டும்.
16. அதன் பின்னர் அந்த
தொட்டிச் செடிகளை 40% வரை வெயில் குறைக்கப்பட்ட நிலையில் நிழலறையில்
வைத்து ஒன்றிரண்டு
மாதங்கள் பராமரிக்கவேண்டும்.
17. பின்னர் இயற்கையான சூழலில் அந்த கன்றுகளை ஒரு வாரம் முதல்
ஒரு மாதம்வரை வைத்திருந்து பராமரிக்க வேண்டும்.
18. அதன் பிறகு அந்த கன்றுகளை எடுத்து நடவு
செய்ய வேண்டிய இடங்களில் நடலாம்.
0000000000
இந்தியா முழுக்க இப்போது மியாவாக்கி முறையில்
சிறுவனம் உருவாக்குவது
அறிமுகமாகி உள்ளது, ஆனாலும் கூட விதை சேகரம் செய்து
கன்றுகளை உருவாக்குவதில்லை, கையில காசு
வாயில தோசை கிடைக்குமா என்றுதான் பார்க்கிறோம்.
இப்படி மரங்களை சேகரிப்பதற்காக விதை வங்கிகளை எப்படி
அவர்
தொடங்கினார் ?
அந்த விதை வங்கிகள் மூலமாக எப்படி கன்றுகளை
தயாரித்து அதை எப்படி பல்வேறு இடங்களில் அதை காடுகளை உருவாக்க பயன்படுத்தினார் ?
கோவில்கள், இடுகாடுகள்
மற்றும்
கல்லறைகளில் இருந்த தோட்டங்களை எப்படி சீரமைத்தார் ?
ஜப்பான் தவிர இதர நாடுகளில் எப்படி காடுகள் உருவாக்கும்
பணியை விரிவுபடுத்தினார் என தனியாக ஒரு கட்டுரையில் பார்க்கலாம். இது பற்றி உங்களுக்கு
அனுபவங்கள், சொல்ல தகவல்கள் அதாவது இருந்தால் எனக்கு சொல்லுங்கள்.
எழுதியவர்: அக்ரி தே.ஞான சூரிய பகவான், (முன்னாள் பண்ணை வானொலி அலுவலர், அகில
இந்திய வானொலி) தலைவர், பூமி இயற்கைவள பாதுகாப்பு
மையம், தெக்குப்பட்டு, திருப்பத்தூர் மாவட்டம்
– 635801, போன்: +91 8526195370, இமெயில்:
bhumii.trust@gmail.com
FOR
FURTHER READING:
www.mitsubshicorp.com / Recreating Native Forests with Native Trees
www.en.m.wikipedia.org / Akira Miyawaki
www.reforestation.com /Akira Miyawaki, Creator of Primary Forests / Reforest
Action
www.researchgate,net/
Effectiveness of the Miyawaki method in Mediteraranean forest
0000000000000000000000000