Friday, May 15, 2020

புத்தரும் பேய் மனிதனும் - சிறுகதை LORD BUDDHA AND THE DEVIL-MAN - SHORT STORY


புத்தரும் பேய் மனிதனும் - சிறுகதை
LORD BUDDHA AND THE DEVIL-MAN - SHORT STORY

அங்குலிமாலா என்ற ஒரு பேய் மனிதன் பற்றிய கதையை உங்களுக்கு நான் சொல்லப் போகிறேன், இது உண்மையாக நடந்த கதை, புத்தர் வாழ்ந்த காலத்தில் நடந்தது.
 
அங்குலிமாலா எப்படிப்பட்டவன் தெரியுமா ? ஒரு பயங்கரமான மனிதன், அவன் கண்ணில் யார் பட்டாலும் அவர்களை வழிமறிப்பான், அவரிடம் இருக்கும் பணம் பொருள் எல்லாவற்றையும்  கொள்ளை அடிப்பான், கொள்ளை அடித்து முடித்ததும் அவர்களைக் கொலை செய்வான், கொலை செய்ததும், அவர்கள் கையில் இருக்கும் ஒரு விரலை மட்டும் வெட்டி எடுப்பான், அதனை ஒரு கயிற்றில் கட்டி தன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொள்ளுவான், இப்போது அவன் கழுத்தில் அந்த விரல் மாலையில் எத்தனை விரல்கள் இருக்கும் சொல்லுங்கள் பார்ப்போம்.

நான் இப்போது சொன்னது போல 999 பேரை கொன்றுவிட்டான் அங்குலிமாலா, இப்போது அவன் கழுத்தில் 999 விரல்கள் மாலையாக தொங்கிகொண்டிருந்தன, இன்னும் ஒரு விரல் சேர்ந்தால் ‘ஆயிரம் விரல் அங்குலிமாலா’ ஆகிவிடுவான், இன்னும் ஒரு விரல் குறைவாக இருந்தது, இப்படி மொத்தம் ஆயிரம் விரல்களை மாலையாக போட்டுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டான் அங்குலிமாலா, அங்குலிமாலா என்ற பெயருக்கு என்ன அர்த்தம் தெரியுமா ? விரல்மாலை போட்டவன் என்று அர்த்தம், அந்த ஆயிரமாவது விரலுக்காக அங்குலிமாலா காத்துக் கொண்டிருந்தான்.
 
அங்குலிமாலா கோசலை நாட்டில் இருந்தான், அந்த நாட்டின் கிழக்குப்பகுதி மலைகளும் காடுகளும் நிறைந்தது, காடு என்றால் சாதாரண காடு இல்லை அடர்த்தியான காடு. அந்த காட்டின் மரங்களுக்குமேல் சூரியன் பளிச்சென்று காயும், அப்படியும் காட்டுக்குள்ளெ வெளிச்சம் பொட்டு பொட்டாகத்தான் தெரியும், காட்டுக்கு மேலே மழை கொட்டு கொட்டு என்று கொட்டும் அப்படியும் ஒரு சொட்டு தண்ணீர் தரையில் பட அரைமணி நேரம் ஆகுமாம், அந்த சமயம் அவனைத்தேடி போனார் புத்தர், புத்தர் அவனை சந்தித்தாரா ? புத்தரை பேய்மனிதன் அங்குலிமால் என்ன செய்தான் ? அப்போது என்ன நடந்தது ? அதுதான் இந்த கதை.
 
கோசல நாட்டு மக்கள் அந்த கிழக்கு மலைப்பக்கம் பக்கம் போக பயப்படுவாங்க, அந்த சமயம்தான் அந்த கோசலை நாட்டுக்கு வருவதாக  சொல்லி இருந்தார் கவுதம புத்தர், புத்தர் வருகிறார் என்ற செய்தி காட்டுத்தீ மாதிரி அந்த நாட்டில் பரவியது, எல்லோருக்கும்  ரொம்ப மகிழ்ச்சி, அவரை வரவேற்க ஆவலுடன் இருந்தாங்க, முக்கியமாக ந்த நாட்டு ராஜாவுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி, அந்த ராஜா எப்போதும் தான் புத்தரின் மாணவர் என்று சொல்லுவார், அவருக்காக நான் என் உயிரையும் தருவேன் என்று அடிக்கடி சொல்லுவார்.

கௌதம புத்தருக்கு ரொம்ப பெரிய வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்தார் கோசலை நாட்டு ராஜா,

அவர் வரும்போது தஞ்சாவூர் தவில் தாரை தப்பட்டைகள் முழங்க வேண்டும்.. 
அங்கு படபடவென  சீனப்பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.  
அவருக்கும் அவர் சீடர்களுக்கும் மதுரை ராமேஸ்வரம் மல்லிகை மாலைகள் ஆயிரம் அணிவிக்க வேண்டும்.
அங்கு விருந்தில் அளிக்க சிறுமலைவாழையும், ஜவ்வாது மலை எலக்கியும்    பண்ணுருட்டிபலாவும், சேலம் மாம்பழமும் தர வேண்டும்.,
அவர் பாதம் பதியும் பாதை முழுக்க பாரசீகக் கம்பளம் விரிக்க வேண்டும்.
 
இந்த செய்தி புத்தர் காதுகளுக்கு போனது, அரண்மனை வாழ்க்கை வேண்டாம் என்று அனாதியாய் நடுத்தெருவுக்கு வந்தவர் புத்தர், அவருக்கு இதெல்லாம் பிடிக்குமா ? எளிமையை போதிக்கும் மகானுக்கு இதெல்லாம் பிடிக்குமா ? ‘வேண்டாம், இவை எதுவுமே வேண்டாம், இவற்றை எல்லாம் நிறுத்துங்கள், நான் கூட அரண்மனைக்கு வருவேன் ஆனால் தங்கமாட்டேன், உங்கள் ஊர் சத்திரத்தில் நானும் எனது மாணவர்களும் தங்கிக்கொள்ளுவோம், இதற்கு சம்மதம் என்றால் நான் வருவேன், என்று ராஜாவுக்கு புத்தர் தகவல் அனுப்பினார்.

இதற்கு சம்மதம் தாங்கள் வந்தால் போதும்’ என்று தகவல் அனுப்பினார் ராஜா, கௌதம புத்தர் கோசலையில் வந்து இறங்கினார், ராஜாவும் மந்திரிகள் சேனாதிபதிகள் ராஜ ரிஷிகள் அரசவைப் புலவர்கள், பொதுமக்கள் எல்லோரும் புத்தரை வரவேற்றார்கள்.

புத்தம் சரணம் கச்சாமி
புத்தம் சரணம் கச்சாமி
புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லி புத்தரை அனைவரும் வணங்கினார்கள்.
 
அரசே உள்நாட்டில் நாங்கள் பயணம் செய்யவும் அறிவு கூட்டங்கள் நடத்தவும் எங்களுக்கு தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார் புத்தர் பெருமான்.

தாங்கள் வந்ததும் எங்கள் நாட்டில் பயணம் செய்ய இருப்பதும் எங்கள் பாக்கியம். அப்படி இருக்கும் போது எங்களிடம் அனுமதி என்று கேட்காதீர்கள், இது உங்கள் நாடு, நாங்கள் உங்கள் பிள்ளைகள்’  என்றார் ராஜா.

அரசே நீங்கள் சொல்லுவதை கேட்க எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” 

‘ஆனால் ஒரு உண்மையை தங்களுக்கு சொல்ல வேண்டும், அங்குலிமாலா என்ற பேய்மனிதன் எங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தங்கி இருக்கிறான், அவன் ஒரு கொலை பாதகன், அவனால் உங்களுக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது’

‘என்ன சொல்லுகிறீர்கள் ?’

நாங்கள் உங்களை பலி கொடுக்க தயாராக இல்லை, அதனால் கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதி தவிர எல்லா இடங்களுக்கும் தாங்கள் போகலாம் என்றார் ராஜா என்று சொல்லிவிட்டு அங்குலிமாலா பற்றி எல்லா செய்திகளையும் விளக்கமாக சொன்னார் ராஜா. 

‘நான் அரசன் என்று சொல்ல வெட்கமா இருக்கு, இதுவரைக்கும் அவன் 999 பேரை கொண்ணுட்டான். இதற்கும் தாங்கள்தான் ஒரு வழி சொல்ல வேண்டும் சுவாமி’ என்று அரசன் புத்தருடைய கால்களில் விழுந்தான். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார் புத்தர்.

அரசே கவலையை விடுங்கள், நாளை காலை நான் அங்குலிமாலை சந்திக்கிறேன், அங்குலிமாலுக்கு ஆயிரமாவது விரலை நான் தருகிறேன், உங்கள் பிரச்சினை தீர்ந்துவிடும், கவலை வேண்டாம்”  என்று அமைதியாக சொன்னார் புத்தர்.

இதனைக் கேட்டதும் அரசன் அதிர்ச்சி அடைந்தான், அரசனும் மற்ற ராஜப்பிரதானிகள், ‘அவன் ஒரு பேய்,  வன் ஒரு அரக்கன்,  அவன் ஒரு ராட்சசன், அவன் ஒரு கொடூரன், அவன் ஒரு பிசாசு, அவன் உங்களை கொன்று விடுவான், உங்களை எங்களால் இழக்க முடியாது, அன்பு கூர்ந்து தாங்கள் போக வேண்டாம்’  இப்படி பலபேர் பலவிதமாகச் சொன்னார்கள். அவர்கள் எவ்வளவு கெஞ்சி கேட்டுக் கொண்டும் புத்தர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அடுத்த நாள் புத்தர் தனி ஆளாக பிறகு கிழக்கு மலைக்குப் புறப்பட்டார், அவருடன் வருகிறேன் என்று பலர் சொல்லியும் புத்தர் மறுத்துவிட்டார், அவர் தனியாகவே சென்றார்.
 
கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி, காலை நேரம் கிழக்கில் சூரியன் மேலே எழுந்திருந்தது,  மலை உச்சியில் ஒரு பாறையின் உட்கார்ந்திருந்தான் அங்குலிமாலா. மரங்கள் அடர்த்தியாக ஒன்றுடன் ஒன்று பின்னியபடி இருந்தன, அவன் தலைக்குமேலே ஒரு பிரம்மாண்டமான நீர்கடம்பை மரம், குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது, மரங்களின் கிளைகள் லேசாக அசைந்தன,  இலைகள் சலசலத்தன, மணிக்கொட்ரு பறவை ஒன்று  அங்கும் இங்குமாக பறந்தபடி கத்திக் கொண்டிருந்தது, அந்த பகுதிக்கு புதிய நபர் அல்லது பிராணிகள் எது வந்தாலும் அந்த பறவை குரல் கொடுக்கும். 

அங்குலிமால் ஒருமுறை சுற்றிலும் திரும்பிப்பார்த்தான், மலைக்குக் கீழே செல்லும் பாதை வளைந்து வளைந்து போனது, அந்த பாதையில் யார் போனாலும் இங்கிருந்து பார்த்தால் தெரியும், ஆனால் யாரும் இந்த வழியில் வரமாட்டார்கள் என்று அங்குலிமாலுக்கு தெரியும்.
 
அப்போது புத்தர் அவனுக்கு பின்னால் வந்து ‘வணக்கம் அங்குலிமால்’ என்றார், அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது, திரும்பிப் பார்த்தான் அங்குலிமால், மணிக்கொட்ரு குருவி பறந்து போனது. 

புத்தர் அவனை உற்றுப் பார்த்தார், அவன் உடம்பு இன்னொரு மலை போல இருந்தது, அவன் கண்களில் நெருப்பு ஜ்வாலை வீசியது, அவன் கழுத்தில் அந்த விரல்மாலை தொங்கிக் கொண்டிருந்தது, அந்த விரல்கள் எல்லாம் உலர்ந்த குச்சிகள் போல இருந்தது, அவன் முரட்டு தோலால் செய்த ஆடை அணிந்திருந்தான், அவன் கைகள் யானையின் துதிக்கைபோல இருந்தது, அவன் கால்கள் ஆலமரத்தின் அடிமரம் போல இருந்தது, அவன் வயிறு விசாலமான தண்ணீர் தொட்டிபோல இருந்தது, அமைதியின் வடிவமாக நின்றார் புத்தர்.

வழக்கமாக அவனைப் பார்த்தால் சிலர் பயந்து ஒடுவார்கள், சிலர் கெஞ்சி கதறி அழுவார்கள், சிலர் அதிர்ச்சியில் உறைந்துபோய் நிற்பார்கள், யாரும் இவனைத் தேடி வந்தவர்கள் கிடையாது, இன்னும்கூட புத்தர் முகத்தில் அமைதியும் சாந்தமும் புன்னகையும் தவழ நின்றிருந்தார்.

நீங்கள் யார் யாரை தேடி வருகிறீர்கள் ?’
 
‘உங்களைத்தான்’ 

‘என்னையா ?’

‘ஆமாம் உங்களைத்தான் ‘

‘நான் யார் என்று தெரியுமா ?’

‘நீங்கள் படித்தது தெரியும், நல்ல மணவனாக இருந்தது தெரியும், ஒரு ஆசிரியர் உங்களை தவறாக வழிகாட்டியது தெரியும், அதனால் ஆயிரம் பேரைக் கொன்று அவர்களின் விரல்களை மாலையாக போட்டுக்கொள்ள சபதம் எடுத்துக்கொண்டது தெரியும், இதுவரை 999 பேரைக்கொன்றதும் தெரியும், இன்னும் ஒருவிரல் மிச்சம் இருப்பதும் தெரியும்..’

புத்தர் சொன்னதைக் கேட்டதும் அங்குலிமாலா அதிர்ச்சி அடைந்தான். புத்தர் தொடர்ந்து பேசினார்.

அங்குலிமாலா நான் உனக்கு ஆயிரமாவது விரலாக எனது விரலை தருவதற்காக வந்திருக்கிறேன்,  ஆனால் எனக்கு ஒரு வாக்குறுதி தர வேண்டும், என்னை கொலை செய்து என் விரலை வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள், அதற்கு பின்னால் நீங்கள் யாரையும் கொலை செய்யக்கூடாது யார் விரலையும் வெட்டக்கூடாது, சம்மதமா என்று கேட்டுவிட்டு அவன் முகத்தை உற்றுப் பார்த்தார்.
 
அங்குலிமாலா, பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான், இவர் யாராக இருக்கும் ? இப்படி யாராவது தங்கள் உயிரைத் தரத்தயாராக இருப்பார்களா ? எந்த ஒரு தேவையும் இல்லாமல் இப்படி வருவார்களா என் பெயரை கேட்டாலே காத தூரம் ஓடுவார்கள் அப்படி இருக்கும்போது யாராவது இப்படி தனது உயிரை கூட பொருட்டாக மதிக்காமல் யாராவது உலகில் இருப்பார்களா ? இப்படி அவன் மனதில் நூற்றுக்கணக்கான கேள்விகள் தோன்றின, யார் இவர் ? என்று யோசித்தான், பிறகு சொன்னான்.

உங்களுக்கு நான் வாக்குறுதி தருகிறேன், உங்களுக்கு பிறகு நான் யாரையும் கொலை செய்ய மாட்டேன், யாருடைய விரலையும் கேட்க மாட்டேன், ஆனால்  நீங்கள் யாரென்று சொல்லுங்கள் என்றான் அங்குலிமாலா.

நான் உனக்கு நன்றி சொல்லுகிறேன், எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி,  என் பெயர் கௌதம புத்தன் ..’ 

அவர் சொன்னதைக் கேட்டதும் அங்குலிமால் வாயடைத்துப் போய் நின்றான்,  புத்தரைப்பற்றி அவன் நிறைய கேள்விப்பட்டிருந்தான், அவனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, அடுத்த நொடி அவன் புத்தரின் காலடியில் விழுந்து அவர் பாதங்களைப் பற்றிக்கொண்டான், ஒரு குழந்தையைப்போல தேம்பி அழுதான், அவன் தோள்களைப்பற்றி  அவனைத்தூக்கி நிறுத்தினார், 

அன்று மாலை புத்தர் கோசல நாட்டு மன்னனைச் சந்தித்தார், அவருடன் அங்குலிமாலா போனான் புத்தரின் சீடனாக. அங்குலிமாலா சாகும்வரை சொல்லிக்கொண்டிருந்தான் ‘பேயாக இருந்த என்னை மனிதனாக மாற்றினார் புத்தர் என்று’ 


எழுதியவர் ;.ஞான  சூரிய பகவான் 




No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...