Sunday, May 3, 2020

கோவில்பட்டி கடலை மிட்டாய் பெற்ற புவிசார் குறியீட்டு எண் KOVILPATTY KADALAI MITTAI



கோவில்பட்டி கடலை மிட்டாய் பெற்ற

புவிசார் குறியீட்டு எண்
KOVILPATTY KADALAI MITTAI GETS 
 GEOGRAPHICAL INDICATION NUMBER  

 

GEOGRAPHICAL INDICATION FOR 
KOVILPATTY KADALAI MITTAI
 
(கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீட்டு எண் தற்போது கிடைத்துள்ளதுசெய்தி)

மதுரை என்று சொன்னால் உடனே மீனாட்சி நினைவுக்கு வரும், காஞ்சிபுரம் என்று சொன்னால் காமாட்சி நினைவுக்கு வரும், காசி என்று சொன்னால் விசாலாட்சி  நினைவுக்கு வரும், அதுபோல மணப்பாரை என்றால் முறுக்கு ஞாபகத்துக்கு வரும், சேலம் என்றால்  என்றால் மாம்பழம் ஞாபகத்துக்கு வரும், ஆம்பூர் வாணியம்படி என்றால் பிரியாணி ஞாபகத்துக்கு வரும், கோவில்பட்டி என்று சொன்னால் கடலை மிட்டாய் ஞாபகத்துக்கு வரும்

புவிசார் குறியீட்டு எண்

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீட்டு எண் தற்போது கிடைத்துள்ளது, அது என்ன புவிசார் குறியீட்டு எண் ? இதனால் சர்வதேச அளவில் கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது, இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து நிறைய ஆர்டர்கள் கிடைக்கும், கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி அதிகரிக்கும், இதனால் கோவில்பட்டியில் கடலை மிட்டாய் கடைகள் வைத்திருப்போருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு உருவாகி உள்ளது, இதனை நம்பி இருக்கும் தொழிலாளர்களும் பயன் பெறுவார்கள் என்று சொல்லுகிறார் விவிஆர் ராமச்சந்திரன், இவர் கோவில்பட்டி கடலை மிட்டாய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் துணைத்தலைவராக உள்ளார்

கோவில்பட்டி கடலை மிட்டாயில் என்ன விசேஷம்

கோவிலபட்டியில் எப்போது இந்த கடலை மிட்டாய் செய்யும் தொடங்கியது என்று யாரைக்கேட்டாலும் சொல்லுகிறார்கள்.

‘1920 ம் வருஷமே இங்க இந்த தொழில ஆரம்பிச்சுட்டாங்க.”

யாரு இதை தொடங்கினாங்க ?’

பொன்னம்பல நாடாருதாங்க முதல்ல தொடங்கினாரு

இப்போ எவ்ளோ பேரு இந்த கடலை மிட்டாய் செய்வாங்க ?’

எப்படியும் ஒரு இருநூறு யூனிட்டு தேரும்க..அய்யாயிரம்பேருக்கு குறையில்லாம இந்த வேலை பாப்பாங்க..”

அப்பிடி இந்த கோவில்பட்டி கடலை மிட்டாய்ல என்ன விஷேம்ங்க ?

முக்கியமா இது கரிசல் காட்டுல வெளையற கடலைல செய்யறது, கலப்படம் இல்லாத பதமான மண்டை வெல்லம், எல்லாத்துக்கும் மேல தாமிரபரணி தண்ணிங்க..இதுதாங்க முக்கியமான காரணம்”

கடலை எங்க கொள்முதல் செய்யறீங்க ?’

அம்புட்டும் இங்கனதாங்க..அருப்புகோட்டை, சங்கரங்கோயில், கழுகுமலை சுத்துவட்டாரத்துலதாங்க.. அதுக்கும் மேல கடலைமிட்டாய் செய்யறவங்க கை பக்குவம் இருக்குங்கள, அது சரியா இருக்கணும்ங்க..அதனாலதாங்க கோவில்பட்டி கடலை மிட்டாய்கிட்ட எதுவும் ஓரத்துலகூட நிக்காதுங்க..”
தற்போது ஒரு கிலோ கடலை மிட்டாய் 150 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள், இந்த விற்பனை விலை இன்னும் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள், இப்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மவுசு கூடி உள்ளது.

அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம்

இனி இதனை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு அதிகரிக்கும், கடலை மிட்டாயை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம் ஆனால் புவிசார் குறியீட்டு எண்  பெற்ற கடலை மிட்டாய்க்குத்தான் முதலிடம் கிடைக்கும், இனி கோயம்பேட்டில் செய்த கடலை மிட்டாயை இது கோவில்பட்டி கடலை மிட்டாய் என்று  சொல்லமுடியாது.

புவிசார் குறியீடு என்றால் என்ன ?

ஒரு குறிப்பிட்ட புவி சார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ (.கா. நகரம், வட்டாரம், நாடு) குறிக்கும்படி ஒரு பொருளின்மீது பயன்படுத்தும் சின்னம் அல்லது குறியீட்டுக்கு புவிசார் கூறியீட்டு எண் என்பார்கள், இதை ஆங்கிலத்தில் ஜியாக்ரஃபிகல் இண்டிகேஷன் (GEOGRAPHICAL INDICATION) என்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 624 பொருட்களுக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது, தில் அதிக எண்ணிக்கையில் புவி சார் குறியீடு வாங்கியிருக்கும் மாநிலம் கர்நாடகா

எல்லா ஊரிலும் லட்டு செய்தாலும் திருப்பதி லட்டுக்கு இணை ஆகாது, அதுபோல பட்டு என்றால் காஞ்சிபுரம் பட்டு, முறுக்கு என்றால் மணப்பாறை முறுக்கு, இதைத்தான் புவிசார் குறியீடு என்பது, இதுவரை தமிழ்நாட்டில்  30 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு இதுபோன்ற ஜியாக்ரஃபிகல் இண்டிகேஷன் என்னும் புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது, அவை என்னென்ன என்று கீழே உள்ள பட்டியலில் பார்க்கலாம்.

பண்ருட்டி பலாப்பழத்திற்கு புவிசார் குறியீடு வாங்கியிருக்கிறார்கள், உலகத்தில் பலாபழம் அதிக உற்பத்தி செய்வது இந்தியாதான், அதுவும் பெரிய பழங்களை காய்ப்பது பண்ருட்டியில்தான், நான் பண்ருட்டிக்கு பக்கத்து ஊர்க்காரன். 

பரங்கிப்பேட்டை அல்வாவுக்கு வாங்கியிருக்கிறார்கள் புவிசார் குறியீடு, 1972 ல் முதன்முதலாக நான் வேலை பார்த்த ஊர் பரங்கிப்பேட்டை, அப்போது தெரியாமல் போச்சு, பரங்கிப்பேட்டை அல்வா சாப்பிடவில்லையே, தெரியாமல் போச்சே என்று இப்போது ஆதங்கமாக இருக்கிறது.

திருநெல்வேலி அல்வாவுக்கும் கொடுத்திருக்கிறார்கள் புவிசார் குறியீடு, இருட்டுக்கடை அல்வாவுக்கு கொடுத்தார்களா என்று தெரியவில்லை, ஒருவேளை அதற்கு அல்வா கொடுத்து விட்டார்களா, அதுவும் தெரியவில்லை ? கொஞ்சம் விளக்கமாக போட்டிருக்கலாம், இருட்டுக்கடையா, பகல் கடையா என்று.

தூத்துக்குடி மக்ரூன்’ க்கு கொடுத்திருக்கிறார்கள், எனக்கு ஆற்காடு மக்கன்பேடாவுக்கு கொடுக்கவில்லயே என்று வருத்தமாக இருக்கிறது, மக்கன்பேடா என்பது டிரை ஜாமுன் மாதிரி ஒரு ஸ்வீட், ஆற்காடு நகரில் திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இருக்கும் அஞ்சாறு கடைகளில் இன்றும் கிடைக்கும், ஸ்வீட் என்றால் அப்படி ஒரு ஸ்வீட்.

ஆம்பூர் பிரியாணிக்கும் கிடைத்திருக்கிறது, வாணியம்பாடி பிரியாணிக்கும் கிடைத்திருக்கிறது இந்த புவிசார் குறியீடு, மகிழ்ச்சி,  ஆனால் ஆற்காடு ஸ்டார் பிரியாணிக்கும் திண்டுக்கல் தலைப்பாகட்டிக்கும் யாரும் மனு செய்யவில்லை என தோன்றுகிறது, வருத்தமாக இருக்கிறது.

கோவில்பட்டி கடலை மிட்டாய் மாதிரியே ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவும் பிரபலம், அங்கு ஒரு கூட்டுறவு சங்கமே செயல்படுகிறது, அதன் அங்கத்தினர்கள் எல்லாமே பால்கோவா செய்து சங்கத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள், அதுபற்றி 1988 ல் மதுரை வானொலியில் ஒரு நிகழ்ச்சி தயாரித்து ஒலிபரப்பு செய்தேன், அதற்கும் இன்று புவிசார் குறியீடு கிடைத்துள்ளது, நினைப்பில் இனிக்கிறது.

கும்பகோணம் வெற்றிலைக்கு கிடைத்திருக்கிறது, தேனி கரும்புக்கு கிடைத்திருக்கிறது புவிசார் குறியீடு, எங்க ஊர் நெல்லிக்குப்பம் வெற்றிலைக்கு குடுக்கல, எங்க ஊர் நெல்லிக்குப்பம் சக்கரைக்கு குடுக்கல, எங்க ஊர் நெல்லிக்குப்பம் சாக்லட்டுக்கு குடுக்கல, எங்க ஊர் நெல்லிக்குப்பம் தேனீருக்கும் குடுக்கல, இவை எல்லமே பிரபலம், யாரும் மனு போட்டிருக்க மாட்டார்கள் போல.

விருதுநகர் புரோட்டாவுக்கு குடுத்து இருக்காங்க, பாராட்டணும், விருதுநகர் புரோட்டா கடை பெரும்பாலும் ரோட்டு மேலயே இருக்கும், பத்து பேருக்கு மேல உக்கார இடம் இருக்காது, தூரத்துல இருந்து பாத்தாலே தெரியும் புரோட்டா கடையில் பச்சை டியூப் லைட் எரியும், முட்டை பரோட்டாவும் கொத்து பரோட்டவும்தான் ஸ்பெஷல், பரோட்டாவை பிச்சிபோட்டு ஒரு மக்கு மட்டன் குருமாவை ஊத்திவிட்டா  எந்திரிக்க மனசு வராது.

எங்க ஊர் நெல்லிகுப்பத்திலயும் பரோட்டா கொத்து பரோட்டா ரெண்டுமே ரொம்ப பிரபலம், கொத்து பரோட்டா கொத்துறதை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருக்கலாம், கொத்து பரோட்டா மாஸ்ட்டருங்க கொத்திகிட்டே மியூசிக் வாசிப்பாங்க, சந்தனக்கூண்டு கொண்டாடும்போது இந்த கொத்து பரோட்டாதான் விசேஷமே, பரோட்டா போடுவதில் மாவு பிசைவது முக்கியம், கொத்து பரோட்டாவில் கொத்துவதுதான் முக்கியம்.

எங்க ஊரில் டீ போடுவதும் விஷேஷமானது, முதலில் சுத்தமாக கழுவிய 15 முதல் 20 ட்ம்ளர்களை வரிசையாக வைப்பர்கள், ஒரு குவளையில் பாய்லரிலிருந்து கொதிக்கும் தண்ணீரை பிடித்து அந்த டம்ப்ளர்களில் கால்கால் டம்ப்ளர் அளவுக்கு வரிசையாக ஊற்றிவிட்டு அதனை வடித்துவிட்டு, குவளையில் அளவாக பால் வார்த்து சக்கரை போட்டு டிகாக்க்ஷன் வடித்து எடுத்தால் டீ நிரம்பி இருக்கும், வலது கையினால் குவளையை மேலே தூக்கி விட்டால் அது நீள்வளைய வடிவில் டீ மாஸ்டரின் தலைக்கு இரண்டு அடிக்கு மேல் போய் திரும்ப இடது கை குவளைக்கு வந்து சேரும், அதனை அப்படியே அடுத்த நொடியில்    15 முதல் 20 டிகிளாசில் ஊற்றி, நமக்குக் கொடுப்பார்கள், அப்படிப்பட்ட டீமாஸ்டர்களை இப்போது பார்ப்பது அரிதாக இருக்கிறது, ஆனால் இதுமாதிரி டீமாஸ்டர்களுக்கு புவிசார் குறியீடு தருவார்களா ?

தமிழ்நாட்டில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருட்களின் பட்டியலைப்பார்த்தால் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும், இன்னும்கூட சிலவற்றிற்கு வாங்கியிருக்கலாமே என தோன்றும். கீழே தந்திருக்கும் பட்டியலைப்பாருங்கள்.

   1.     பண்ருட்டி பலாப்பழம்
   2.     சேலம் மாம்பழம்
   3.     மதுரை மல்லிகைப்பூ
   4.     மதுரை சுங்குடி சேலை
   5.     மதுரை ஜிகிர்தண்டா
   6.     திருவண்ணமலை சாமந்திப்பூ
   7.     திருவண்ணமலை ஏலக்கி வாழைப்பழம்
   8.     திருவண்ணமலை குண்டு மாங்காய்
   9.     திருவண்ணமலை அரளிப்பூ
 10.     திருவண்ணமலை ஆரணிப்பட்டு
 11.     பழனி பஞ்சமிர்தம்
 12.     தூத்துக்குடி மக்ரூன்
 13.     தூத்துக்குடி உப்பு
 14.     கோவில்பட்டி கடலை மிட்டாய்
 15.     திருநெல்வேலி அல்வா
 16.     திருநெல்வேலி பத்தமடை பாய்
 17.     பரங்கிப்பேட்டை அல்வா
 18.     ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
 19.     செட்டிநாடு சமையல்
 20.     செட்டிநாடு கண்டாங்கி சேலை
 21.     தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை
 22.     தஞ்சாவூர் ஓவியங்கள்
 23.     தஞ்சாவூர் கலைத்தட்டு
 24.     தஞ்சாவூர் வீணை
 25.     காஞ்சிபுரம் பட்டுப்புடவை
 26.     திண்டுக்கல் பூட்டு
 27.     ஆம்பூர் பிரியாணி
 28.     சிவகாசி பட்டாசு
 29.     சிவகாசி நாள்காட்டி
 30.     திருப்பூர் உள்ளாடை
 31.     கும்பகோணம் பாக்கு சீவல்
 32.     கும்பகோணம் வெற்றிலை
 33.     கும்பகோணம் காஃபி
 34.     நாகர்கோயில் மட்டி
 35.     நாகர்கோயில் நேந்திரம்
 36.     நாகர்கோயில் வத்தல்
 37.     நாகர்கோயில் நாட்டு மருந்து
 38.     மார்த்தாண்டம் தேன்
 39.     தேனி கரும்பு
 40.     ஊத்துக்குளி வெண்ணை
 41.     பத்தமடை பாய்
 42.     திருச்செந்தூர் கருப்பட்டி
 43.     வாணியம்பாடி பிரியாணி
 44.     பவானி ஜமக்காளம்
 45.     ஆரணி பட்டு
 46.     சிறுமலை மலைவாழை
 47.     நாச்சியார்கோயில் குத்து விளக்கு
 48.     திருப்பாச்சேத்தி அரிவாள்
 49.     விருதுநகர் புரோட்டா
 50.     சின்னாளப்பட்டி சுங்குடி சேலை
 51.     அலங்கானல்லூர் ஜல்லிக்கட்டு
 52.     பாலமேடு ஜல்லிக்கட்டு
 53.     சோழவந்தான் வெற்றிலை
 54.     ராஜபாளையம் நாய்
 55.     பொள்ளாச்சி இளநீர்
 56.     ஈரோடு மஞ்சள்
 57.     சுவமிமலை வெண்கலச்சிலை
 58.     பெருந்துறைவேல் ஆயுதம்

இதைப்படித்த பின்னர் உங்களுக்கும் ஏதாவது ஒரு பொருளுக்கு புவிசார் குறியீட்டு எண் வாங்கவேண்டும் எனத் தோன்றும், கீழே படியுங்கள். இன்றெ அதற்கான வேலைகளை தொடங்குங்கள்.

இது மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு அங்கீகாரம், இதற்கு மத்திய அரசுக்கு மனு செய்ய வேண்டும், மத்திய அரசு ஆய்வு செய்து இந்த புவிசார் குறியீட்டுக்கான சான்றிதழை வழங்கும்,  அதன் பிறகு ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும் உலக அறிவுசார் சொத்து நிறுவனத்துக்கு மனு செய்ய வேண்டும்,  அங்கிருந்து சுலபமாக சான்றிதழ் பெறலாம், இதன் மூலம் அந்த பொருளின் வணிகத்தை உலகம் முழுவதும் செய்யலாம்.

தமிழ் நாட்டில் இருக்கும் அலுவலகம்

ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் இதற்கான அலுவலகம் தமிழ் நாட்டில் கிண்டியில்தான் உள்ளது, தேவையான ஆவணங்களை சரியாக சமர்ப்பித்தால் ஒரே ஆண்டில் இந்த புவிசார் குறியீட்டுக்கான சான்றிதழை வாங்க முடியும், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி என ஏழுபேர்கொண்ட குழு இதனைசரிபார்க்கும், வரலாற்று ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும், ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் இதன் ஆவணங்களை சரிபார்த்து இறுதி முடிவு எடுப்பார்கள்.

சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

GEOGRAPHICAL INDICATIONS REGISTRY, INTELLECTUAL PROPERTY OFFICE BUILDING, INDUSTRIAL ESTATE, GST ROAD, GUINDY- PHONE; 044 – 22502091 – 93 & 98,  FAX; 044 – 22502090, EMAIL : ipindia.gov.in., www.ipindia.nic.in

 தே .ஞான சூரிய பகவான் 

 

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...