Monday, May 11, 2020

கற்பூரவள்ளி வீட்டுத்தோட்ட மூலிகை KARPURAVALLI HOME GARDEN HERB




கற்பூரவள்ளி  வீட்டுத்தோட்ட மூலிகை




KARPURAVALLI HOME GARDEN HERB


பொதுப் பெயர்கள்:  

இந்தியன் போரேஜ் (INDIAN BORAGE)
மெக்சிகன் மின்ட் (MEXICAN MINT)
கியூபன் ஒரிகநோ (INDIAN ORIGANO)
இந்தியன் மின்ட் (INDIAN MINT)


தாவரவியல் பெயர்: பிளெக்டேரந்தஸ் அம்போனிகஸ் (PLECTRANTHUS AMBONICAS)

தாவரக்குடும்பம்: லேமியேசி (LAMIACEAE)

கிராமம் நகரம் என்ற வித்தியாசமின்றி ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய ஒரு மூலிகைச்செடி, வீட்டு தோட்டத்தில், மூலிகை தோட்டத்தில், அப்பார்ட்மெண்ட் வீடுகளில், மாடித் தோட்டங்களில் இதனை வளர்க்கலாம், பாரம்பரிய மூலிகைச் செடி நறுமண தாவரம் அழகுச் செடி, ஜலதோஷம் தும்மல் இருமல் மூக்கு ஒழுகுதல் மூக்கடைப்பு ஆஸ்துமா செரியாமை ஆகியவற்றை குணப்படுத்தும் கை வைத்தியத்திற்கு ஏற்ற செடி.
 
பயன்கள்

கிராமங்களில் தாய்மார்கள் சளி ஜுரம் வந்த குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி சாற்றினை கொடுப்பார்கள், ஐந்தாறு இலைகளை பறித்து நெருப்பில் வாட்டி எடுத்து, முறுக்கிப்பிழிவார்கள், அதிலிருந்து வடியும் சாற்றினை பாலாடையில் சேமிப்பார்கள், பாலாடையின் நுனியை எடுத்து குழந்தைகளின் கடைவாயில் வைத்து ஊற்றுவார்கள், இரண்டு மூன்று நாள் தொடர்ந்து ஊற்ற சளி ஜுரம் சரியாகும்.

சமீபத்தில் சீனாவில் இருந்த போதே எனக்குத் தெரிந்த ஒருத்தர் தினமும் ஒன்றிரண்டு கற்பூரவல்லி இலைகளைப் பறித்து மெல்லுவார், கடைவாயில் சாறு வழியும், எனக்கு அப்போது ஜலதோஷம் தொடர் கதையாக இருந்தது அவர் நச்சரிப்புத் தாங்காமல் கற்பூரவள்ளி இலையை வைத்து பஜ்ஜி தயாரித்து எல்லோரும் சாப்பிட்டோம்,  அடுத்த நாள் பெருமையாக எங்கள் குடும்ப டாக்டரிடம் சொன்னேன், அவர் குடும்ப நண்பரும் கூட, அவர் சொன்னார் உங்களுக்கு வயசு 71 இந்த வயசில் எண்ணெய் பண்டங்கள் பஜ்ஜி போண்டா மூச் விடக்கூடாது என்று சொன்னேனே’ என்றார், பிறகு சொன்னார், கற்பூரவள்ளி இலைகளை மட்டும் தனியாக வேண்டுமானால் சாப்பிடுங்கள் என்றார்.


பலவிதமான நோய்களை குணப்படுத்தும் 

தோல் சம்பந்தமானவை
எலும்பு தேய்மானம்
புற்றுநோய் எதிர்ப்பு
கண் சம்மந்தமான நோய்கள்
மன இறுக்கம் மற்றும் படபடப்பு
சிறுநீர் பெருக்கம்
வயிற்று உபாதைகள்



இதில் இருக்கும்
தாவர ரசாயனங்கள் (ஃபைட்டோ கெமிக்கல்ஸ்)

கார்வக்ரால், தைமால்,  முருலின்,  அண்டெகனால், டெர்பினேன், பி-சைமென், கேரியோ பில்லேனி ஆக்சைட், டெர்பினியால் உட்பட 18 வகையான தாவர இரசாயனங்கள் இதில் இருக்கு .

இவை தவிர ஆன்டி ஆக்சிடென்ட்கள், நோய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி எல்லாம் கணிசமாக இருக்கு.



 எங்கு வளர்க்கலாம் ?

வீடுகளின் முன்புறம் பின்புறம் ஜன்னல் பக்கம் நடைபாதைகள் மாடி தோட்டங்கள் அப்பார்ட்மெண்ட் வீடுகளில், எல்லா இடத்திலும் வளர்க்கலாம், நடுத்தரமான அளவு தொட்டிகளில் பெட்டிகளில் மற்றும் அழகிய சட்டிகளில் கூட நடலாம்.
 
செடிகள் எங்கு கிடைக்கும் ?
 
எல்லா நர்சரிகளிலும் கிடைக்கும், அதிக விலையிருக்காது, அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் வீடுகளிலிருந்து கற்பூரவல்லி செடியின் சிறிய தண்டுகளை உடைத்துக் கொண்டு வரலாம், 

செடிகள் எப்படி இருக்கும் ?

வளர்ந்த செடிகள், மூன்று அல்லது நான்கு அடி உசரம் வளரும், இலைகள் இளம் பச்சை நிறமாக முட்டை வடிவில் இருக்கும், மடக்கினால் கூட மடக்கென உடையும் இலைகளில் , சாறு நிரம்ப  இருக்கும், இதன் தண்டுகள்கூட மெல்ல  உடைத்தாலும் உடையும், பல்லாண்டு வளரும் செடி, சொந்த நாடு ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா, லைகளின் மேற்பரப்பை தொட்டுப் பார்த்தால் மெத்மெத்’ தென இருக்கும், டர்பெண்டைன்  வாடை வீசும்,  

பயிர்பெருக்கம்:
 
தண்டுத்துண்டுகள்
விதைகள்

ஏற்ற பருவம்
வெப்ப மண்டலப் பகுதிகள்
மித வெப்ப மண்டலப் பகுதிகள்
குளிர்ச்சியான பகுதிகளில் நன்கு வளரும்
ஓரளவு நிழல் பாங்கான இடங்களில் நன்றாக வளரும்

பூக்கள்
குட்டையான காம்புகள் பூக்கும்
இளம் ஊதா நிறப் பூக்கள்
10 முதல் 20 பூக்கள் நெருக்கமான அடுக்குகளில் இருக்கும்.

விதைகள்
மிருதுவானவை
மங்கலான காவி நிறம் தட்டையான வட்ட வடிவத்தில் இருக்கும்
பரவி இருக்கும் இடங்கள்
தெற்கு ஆப்பிரிக்கா, கிழக்கு ஆப்பிரிக்கா, அங்கோலா, மொசாம்பிக், கென்யா, தான்சானியா மற்றும் இந்தியா.


வளர்த்துப் பாருங்கள்
நல்லசெடி கற்பூரவள்ளி
நம்மை விட்டுப்போகும்
சளியும் ஜுரமும் வெகுதூரம் தள்ளி
 
எழுதியவர் தே ஞான சூரிய பகவான் போன் நம்பர் 85 26 19 53 70
உங்கள் கருத்துக்களை எனக்கு தெரிவியுங்கள், எனது ஈமெயில்; gsbahavan@gmail.com


No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...