வாஷிங்டன் டிசி யில்
ஆபிரகம்லிங்கன்
நினைவகம் பார்த்தோம்
WE MADE A VISIT TO
LINCOLN MEMORIAL IN
WASHINGTON DC
இந்த நினைவகத்தின் அருகில் கால்கூசும் புல்வெளியில்
எங்களை இறக்கிவிட்டுவிட்டு காரில் பறந்தான் என் மகன், நான்,
என் மனைவி, என் மறுமகள் மூவரும் நடந்தோம்,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப்பசேல் புல்வெளி, அதன் ஊடாக அதிகமாக செர்ரி மரங்கள் கொஞ்சம் குறைவான எண்ணிக்கையில் மேப்பிள்
மரங்கள், அதற்கு சமமாக கோனைஐஸை நிமிர்த்தி பிடித்தது மாதிரியான
பைன் மரங்கள், நடுவில் வெண்ணிற மண்டபம்,

லிங்கன் மெமோரியல் என்னும் ஆபிரகாம் லிங்கனின் நினைவகத்தின்
மொத்த பரப்பளவு , 27336 சதுர அடி, நினைவகத்திற்கு பொறுப்பேற்ற ஆர்க்கிடெக்ட்
ஹென்றி பேகன், சிலை செய்த சிற்பி டேனியல் செஸ்டர் பிரென்ச்,
இன்று ஒரு நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம்பேரும் ஓர் ஆண்டில் 36 லட்சம் பேரும் இந்த நினைவகத்தை
பார்வையிடுகிறார்கள்.
ஆபிரஹாம் லிங்கனின் நினைவகத்தை அமைத்தவர் ஹென்றி பேகன் (HENRY BACON) என்பவர்,
இவர் ‘டோரிக் டெம்பிள்’ என்ற
கிரேக்க கட்டிடக்கலையின் பாணியில் அமைத்தார், மண்டபத்தின் உயரம், 99 அடி சிலையின் உயரம் 19 அடி, சிலைக்கு அமைக்கப்பட்ட
மேடையின் உயரம் 11 அடி, இந்தச்சிலை ஜார்ஜியா மார்பிள் என்னும் சலவைக்கல்லில்
உருவாக்கப்பட்டது, சிலையின் மொத்த எடை 170 டன்.
உயர்ந்த
நாற்காலி, மேல்பட்டன்கள் கழற்றப்பட்டு உடம்பை கவ்விப்பிடித்த மாதிரியான உட்புறகோட்டு,
உள்ளே ஒல்லியான உடலில் ஒட்டிப்பிடிக்காத சட்டை
மற்றும் கால்சராய், எப்போதும்போல அவருக்கு பிடித்தமான ‘போ டை’ மொத்த்த்தில் மிடுக்குடன்
கூடிய உடுப்பு, நாற்காலியின் பின்புறத்திலும் பக்கவாட்டிலும் மூடியபடி இருக்கும் அமெரிக்கக்கொடி,
நாற்காலியின் முனையை அழுந்த பற்றியிருக்கும் வலது கைவிரல்கள், மூடி வைத்திருப்பது போல
இறுக்கமாக மடக்கியிருக்கும் இடது கைவிரல்கள், நாற்காலியின் கைகளோடு இணைந்து படிந்திருக்கும்
அவரின் நீளமான கைகள், கால் முட்டிவரை நீண்டிருக்கும் மேலங்கி, கொஞ்சம் முன்னால் வைத்திருக்கும்
வலது கால், சற்று பின்னால் தள்ளி வைத்திருக்கும் இடது கால், ஷூக்கள் அணிந்த பாதங்கள்,
அந்தப்பாதங்கள் பதித்துவைக்க சற்று உயரமான மேடை, கம்பீரமான நம்பிக்கயுடனும் தாழ்ச்சியுறாத பார்வையுடனும்,
அமர்ந்திருக்கும்படியான சிலையாக, தும்பைப்பூ மாதிரியான ஜார்ஜியா மார்பிளில் ஆபிரகாம்
லிங்கன்.
இந்த
சிலை ‘ஜார்ஜியா மார்பிள்’ என்னும் சலவைக்கல்லால் செய்யப்பட்டது, ஜார்ஜியா என்பது அமெரிக்காவின்
ஒரு மாநிலம், இந்த மார்பிளை ஏற்பாடு செய்தது ஜார்ஜியா மார்பிள் கம்பெனி, இதன் உண்மையான
பெயர் ‘கிரியோல் மார்பிள்’, இவை ஜார்ஜியாவில் தயாராவதால் ஜார்ஜியா மார்பிள் என்று பெயர்,
நான் இதைச் சொல்லும்போது, தாஜ்மகாலில் பயன்படுத்தியது என்ன மார்பிள் என்று கேட்கத்
தோன்றும், ஷாஜகான் தாஜ்மகாலில் பயன்படுத்தியது மக்ரானா மார்பிள், இந்த மக்ரானா மார்பிள்
வகை ராஜஸ்தானில் நகரில் எடுக்கப்பட்டவை. இந்தியா, அமெரிக்கா, கிரீஸ், ஸ்பெயின், ருமேனியா,
சைனா, ஸ்வீடன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் மார்பிள் தயாராகின்றன, இவற்றில் உலகில்
உயர்தரமான மார்பிள் தருவது இத்தாலி நாடு.
ஆபிரகாம் லிங்கன் பிப்ரவரி 12 ம் நாள் 1809 ம் ஆண்டு
அமெரிக்காவின் கெண்டக்கியில் ஹார்ட்டின் என்னும் நகரத்தில் பிறந்தார், 1831
ல் ஒரு ல் நியூசேலம் என்னுமிடத்தில் ஒரு கடையில் வேலை பார்த்தார்,
அங்கு அவர் ‘ஹானெஸ்ட் அபி’ என்ற பெயரை சம்பாதித்தார், இலினாயிஸ் ஜெனரல் அசம்பிளியில்
1834 ல் தேர்ந்தெடுக்கப்பட்டார், வக்கீலாகவும்
தன்னை பதிவு செய்துகொண்டார், 1846 ல் அமெரிக்காவின் ஹவுஸ் ஆஃப்
ரெப்ரெசண்டேடிவ்ஸ் என்ற அமைப்பின் பிரதிநிதி ஆனார், 1860 ல் அமெரிக்காவின்
பிரசிடெண்ட் தேர்தலின் குடியரசு கட்சியின் வேட்பாளராக நின்று
ஜெயித்து ஜனாதிபதி ஆணார், 1864 ல் இரண்டாம் முறையாகவும்
ஜெயித்து அமெரிக்க ஜனாதிபதி ஆனார், 1865 ம் ஆண்டு
ஏப்ரல் 14 ம் நாள் ஃபோர்ட் தியேட்டர் என்னுமிடத்தில் ஜான் வில்கிஸ்
பூத் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார், கருப்பர் இனத்தவருக்கு
ஓட்டுரிமை தந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரை அவன் சுட்டுக்கொன்றான்,
இதுதான் ஆபிரகாம் லிங்கனின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு.
உலகப் பிரபலங்களில் எனக்கு மிகவும் மரியாதைக்குரியவர் என்று நான் கருதுவது ஆபிரஹாம் லிங்கன் அவர்கள். .அதற்கு இரண்டு
காரணங்கள் உள்ளன . ஒன்று பள்ளிக்கு போகாமலேயே பல நூறு புத்தகங்களைப் படித்து
பேரறிஞர் ஆனவர். மனிதனை மனிதன் அடிமைப் படுத்தி வாழ்ந்த நிலைக்கு முற்றுப்புள்ளி
வைத்தவர். மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். உலகிலேயே மிகச்சிறந்த மேடைப் பேச்சுக்களை, விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றில்
ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் ‘ஜெட்டிஸ்பெர்க்’ உரை மிகச் சிறப்புடையது. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சோகம்
நிரம்பியதாக இருந்தும்கூட நகைச்சுவை உணர்வுகொண்டவராக இருந்தார்.
ஆப்ரகாம்லிங்கன் இயற்கையிலேயே ஒரு நகைச்சுவையான மனிதர். நகைச்சுவையான கதைகளை
விரும்பிப் படிப்பார்.பத்திரிகைகளில் வருகின்ற ஜோக்குகளைக்கூட விரும்பிப்
படிப்பார். இதனால் அவருடைய எழுத்திலும் பேச்சிலும்
நகைச் சுவை நிரம்பியிருக்கும். இயல்பாகவே புத்திசாலிகள் நகைச்சுவை உணர்வு
கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
ஆப்ரகாம்லிங்கன் ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு ஏழை மனிதருக்கு வேலை
தரும்படி தனது நண்பர் ஒருவருக்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்தார். அதைப் படிக்கும் போது அழுத்தமான முகம் கொண்ட
ஆப்ரகாம்லிங்கனா இப்படி எழுதினார்..? என்று நினைக்கத் தோன்றியது. அந்தக்
கடிதத்தை அவர் அப்படித்தான் எழுதியிருந்தார்.
'நண்பா
.! இந்தக் கடிதம் கொண்டு வருபவர்
ஒரு பாவப்பட்ட ஆத்மா . அடுத்தவேளை சோற்றுக்கே வழியில்லாமல் திண்டாடி தெருவில் அலைந்தவர். அவருக்கு ஏதாவது ஒரு நியாயமான சம்பளத்திற்கு வேலை கொடு. ஜுலியஸ் சீஸரின் தலைமுடி என்ன
நிறம் என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்காதே.!
அவருக்கு பதில் தெரியவில்லையென்றால்கூட பரவாயில்லை. அவருக்கு சம்பளம் கொடு
. இப்படிக்கு என்றும் உன் ஆருயிர் ஆப்ரகாம்லிங்கன், என்று எழுதினார்.
1862
ம் ஆண்டு அமெரிக்காவில் அடிமைத்தனத்தை சட்டபூர்வமாக ஒழிக்க முற்றுப்புள்ளி
வைத்தார், நான் இயற்கையாகவே அடிமைத்தனத்திற்கு எதிரானவன்,
அடிமைத்தனம் என்பது சரி என்றால் எல்லாமே சரிதான் என்று சொன்னார்.
1863 ஆம் ஆண்டு, புத்தாண்டு தினத்தில். அடிமையாயிருந்த முப்பத்தியைந்து லட்சம் கருப்பர் இன மக்களுக்கு சட்டரீதியான விடுதலை அளித்தார் ஆப்ரகாம்லிங்கன். சிலர் இதை சரி என்றார்கள் . பலர் சரியில்லை என்றார்கள் . ஆப்ரகாம்லிங்கனுக்கு பித்து பிடித்துவிட்டது என்றார்கள் சிலர். சில பத்திரிகை
நிரூபர்கள் இதுபற்றி இதைப்பற்றி அவரிடம் கேட்டார்கள் ஆப்ரகாம்லிங்கன் அவர்களே .! அடிமைகளாக இருந்த கறுப்பர்களை சட்ட ரீதியாக
விடுவித்தீர்கள், இதைத் தவறு என்று பெரிய பெரிய அறிஞர்கள்
எல்லாம் சொல்லுகிறார்கள் . இதற்கு உங்களுடைய விளக்கம் என்ன ..?
இதற்கு ஆப்ரகாம்லிங்கன் அளித்த பதில் இதுதான். 'மனிதனை மனிதன் அடிமையாக நடத்துவது தவறு இல்லை என்ற சொன்னால், உலகில் வேறு எதுவுமே உலகில் வேறு எதுவுமே
தவறு இல்லையென்று, செய்யலாம் . நான் செய்தது தவறு என்று சொன்னால், அந்த தவறை நான் மறுபடியும் மறுபடியும்
செய்வேன் என்று உறுதியாக சொல்கிறேன் என்றார்.
ஆப்ரகாம்லிங்கன் அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதி ஆனாலும்
முதன்மையானவர் இவர்தான், இவருக்கு அடுத்தபடியானவர்கள்தான் ஜார்ஜ்
வாஷிங்க்டன் மற்றும் தியோடர் ரூஸ்வெல்ட்டும் என்று சொல்லுகிறார்கள், அதுமட்டுமல்ல குடியரசு கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத்தலைவரும்
இவர்தான், அமெரிக்காவில் முதன்முதலாக சுட்டுக்கொல்லப்பட்ட குடியரசுத்தலைவரும்
இவர்தான்.
சுற்றிலும் பிரம்மண்டமான நீளமான பெரிய வெண்ணிறத் தூண்கள், முழு மண்டபத்தின் அளவுக்கு
நீண்டிருக்கும் படிக்கட்டுகள், அப்படியே பின்னல் திரும்பிப்பார்த்தால்
சற்றுத்தொலைவில் சாயாத பைசாநகர் கோபுரம் மாதிரி, வாஷிங்க்டன்
அவர்களின் நினைவாலயம், அதே நேர்கோட்டில் அமெரிக்காவின் கேப்பிடல்
பில்டிங்க், சற்று உயரத்தில் அமைந்துள்ள எலிவேட்டர், எலிவேட்டரில் ஏறிப்போனால் அங்கேதான் ஆப்ரகாம்லிங்கன் அவர்களின்
நினைவுக்கூடம், ஒரு பக்கம் ஒரு புத்தகக்கடை அவ்வளவுதான்.
நினைவு மண்டபத்தில் நடுநாயகமாக அண்ணாந்து பார்க்கும்படியான உயரத்தில், பளீரென்ற வெள்ளை நிறத்தில்,
கம்பீரமான தோற்றத்தில், கோட்சூட் சகிதமாக,
இருக்கையை பற்றிக்கொண்டிருக்கும் நீண்ட கைகள், தலையின் முன்பகுதி மட்டும் பாலும்பழமும் சிவாஜி ஹேர்ஸ்டைல், அபியின் ஹேர்ஸ்டைல் பார்த்துதான்
சிவாஜிக்கு மேக்அப்
செய்திருப்பார்களோ !
நீண்ட அங்கியுடன் ஆஜானுபாகுவாக காட்சி தரும் தாடி வைத்த புரட்சிக்காரன், அடிமை விலங்கொடித்த மாவீரன்,
மனிதனை மனிதன் வியாபாரப்பொருளாக பாவித்த அடிமைத்தனத்திற்கு சட்டரீதியாக
வேட்டுவைத்து, கருப்பரின மக்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தருவதற்காக
தனது உயிரையும் தந்த மகாபுருஷன், இந்த பூவுலகைவிட்டு மறைந்தாலும்
மக்களின் மனச்சிம்மாசனத்தில் இன்றும் அமர்ந்திருப்பவர்,
அந்த மாபுருஷனின் காலடியில், நாங்கள் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு
அங்கிருந்து புறப்பட்டோம்.
1 comment:
Very informative and interesting information provided on Abraham Lincoln
Post a Comment