Saturday, April 25, 2020

தே னீ க் க ள் நா ளை வ ரு ம் - சிறுகதை THENEEKKAL NAALAI VARUM - SHORT STORY







தே னீ க் க ள்  நா ளை வ ரு ம் - சிறுகதை
THENEEKKAL  NAALAI VARUM - SHORT STORY

எங்கள் தோட்டம் சிறியதுதான். ஓண்ணரை ஏக்கருக்கும் கொஞ்சம் குறைவு. மா, சப்போட்டா, ஜம்புநாவல், ஆரஞ்சு என கிட்டத்தட்ட நூற்றியம்பது பழமரங்கள், அது போக இதர ஜாதி காட்டு மரங்கள் என ஆயிரத்துக்கும் மேல் மினி தோப்பாக இருக்கும். அதில் கட்டிய தேன்கூடுதான் இது. ஈக்களோடு அதை பார்த்தபோது அது எங்கள் தோட்டத்திற்கு இயற்கை தந்த சீதனம் என்று நினைத்தேன். பெருமையாக இருந்தது.

மலைத்தேனீக்கள் கூடுகட்டும் பெருமைக்கு உரியது எங்கள் தோட்டம்.

இப்போ அழிச்சா கூட ரெண்டு மூணுகிலோ தேன் எடுக்கலாம் சார் ; என்றான் குமார், அதை முதன்முதலில் பார்த்தபோது, அவன் எங்களோடு வேலை பார்க்கிறான் டிரைவராக, கொஞ்சம் கூடுதலாக நாக்குருசி கொண்ட ஆசாமி, எப்போதும் முயல், உடும்பு, காட்டுப்பூனை என்று பேசிக்கொண்டிருப்பான், நரிக்குறவர்கள் இந்த பக்கம் வந்தால் இவனை பார்க்காமல் போகமாட்டர்கள், இவன் மூலமாக எனக்கும் இரண்டு நரிக்குறவர்கள்கூட பழக்கம். வந்தால் வித்தியாசமாக ‘வணக்கம் சாமி’ சொல்லிவிட்டு போவார்கள்.

இது மலைத்தேனி.  சாதாத்தேனி மாதிரி அழிச்சுட முடியாது என்றார்; வெங்கடேசன். இவர் ஆரம்ப காலத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு பதினஞ்சி வருஷமாக என்னோடு இருப்பவர்,  எதையும் தெரியாது என்று சொல்ல மாட்டார், முடிந்தவரை எதையும் அவரே செய்து முடிக்கப்பார்ப்பார்,  

கடைசியாக நீங்க சரின்னு சொல்லுங்க தேன்அழிக்க எங்க ஊர்ல ஆட்கள் இருக்காங்க என்றார் கவுரி> அறிவியல் ரீதியாகத்தான் அவர் பெண்பிள்ளை, வேலை பார்ப்பதில் இரண்டு மூன்று ஆம்பளைங்க செய்யும் வேலையை அனாவிசியமாக செய்து முடிப்பார், அவர்களோடு என் மனைவி கல்யாணியையும் சேர்த்தால் அது நால்வரணி, இந்த நால்வரணி இல்லாமல் நான் எந்த ஆணியையும் கழற்ற முடியாது, இல்லை என்றால் அவர்கள் முடிவெடுத்துவிட்டு ‘சரி’ என்று தலையாட்ட மட்டும்தான் எனக்கு வாய்ப்பு தருவார்கள்.

முகம் தலை உடம்பு எல்லாம் துணிசுற்றிக்கொண்டு கையில் பந்தத்துடன் போனால் எப்படிப்பட்ட தேனீக்களும் பறந்துடும்.; இது என் தம்பி> அவன் சின்ன வயசிலிருந்தே கணக்கில் புலி, எப்போதும் ஒரு கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பான், பவுடர் மட்டும் ஒரு அரை இன்ச் முகத்தில் எப்போதும் குடியிருக்கும்,  பெயர் ஜெகத்ரட்சகபகவான், நாங்கள் அண்ணன் தம்பி என்னையும் சேர்த்து ஆறுபேர், எல்லோருடைய பெயருக்கும் கடைசியில் பகவான் என்று முடியும், எங்கள் எல்லோருடைய பெயருமே குறைந்தது ஒண்ணரையடி நீளமாவது இருக்கும். அது எங்க அப்பாவின் உபயம்.

மலைத்தேனீக்கள் அவ்ளோ சுலபமா பறந்துடாது. துரத்தி துரத்தி கொட்டும். மலைத்தேனிக்கு விஷம் ஜாஸ்தி. கொட்டினா பிழைக்கறது கஷ்டம். இந்த கூட்டை கலைக்க வேண்டாம் இப்படி தீர்மானமாய் முடிவெடுத்தாள் என்; மனைவி. வழக்கம்போல ஆமென் என்று சொல்ல தேன்கூட்டுக்கு தலை தப்பியது. நாங்கள் அங்கிருந்து புறப்பட்டோம் தேன்கூட்டைப்பார்க்க.

தேன்கூட்டிலிருந்து நாங்கள் எல்லோருமே மரியாதைக்குரிய தொலைவில் பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தோம்.

ஒரு தண்ணீர் தொட்டி, பக்கத்தில் வரிசையாக ஒரு மான் காது வேலமரம், அதற்குப்பக்கத்தில் தானாய் முளைத்த இரண்டு சீத்தா, குருவிகள் உபயத்தில் முளைத்த இரண்டு சந்தனம், பக்கத்தில், கடத்தலில் பிரபலமான இரண்டு செஞ்சந்தனம்,  அடுத்து ஒரு வேம்பு அதனடியில் நாங்கள் வரிசையாக நின்றுகொண்டு அந்த தேன்கூட்டை கவனித்தோம்.

ரொம்ப வருசத்துக்கு முன்னாடி என் நண்பர் ஒருத்தர் மலைத்தேனி கொட்டி ஒரு மாசம் மூச்சுப்பேச்சு இல்லாம ஆஸ்பத்திரியில் படுத்துக் கிடந்தார். உயிர் பிழைச்சி வர்றதுக்குள்ள ரெண்டு பெரிய நோட்டு செலவாச்சி. அவர் கொடைக்கானல் மலையில் ஒரு பழ ஆராய்ச்சி நிலயத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்தார், பிஎச்டி டாக்டரேட் வாங்கியவர்.

கொடைக்கானல் போகும் சாலையில் மலைப்பகுதியில் டூவீலரில் செல்லும்போது இது நடந்தது. லட்சக்கணக்கான மலைத்தேனி ஈக்கள் ஒரே சமயத்தில் அவரைக்கொட்டி சாய்த்தது. ரோடு வேலை செய்த ஜனங்கள் பந்தத்தைக் கொளுத்தி தேனீக்களை விரட்டினார்கள். இல்லையென்றால் அவர் அங்கேயே பிணமாகி இருப்பார். இந்த செய்தி பத்திரிக்கைகளில்கூட வந்தது.

இந்த சம்பவம் வருமாறு ரோடு என்ற தலைப்பில், குறுநாவல் ஒன்று எழுதினேன். அந்த ஆண்டின் சிறந்த குறுநாவல் என்று பரிசு தந்து பாராட்டியது கணையாழி பத்தி;ரிக்கை. ஒரு இரண்டாயிரம் பணமும் தந்தார்கள், அதற்கும்  முன்னதாகவே எனக்கு தேனீக்கள் மீது ரொம்ப மரியாதை. காரணம் உலகமே தேனீக்களை உழைப்பின் அடையாளமாக பகர்கிறது.

எங்கள் தோட்டத்தில் ஒரு ஜம்புநாவல் மரத்தில் கட்டி இருந்தது அந்த மெகா சைஸ் தேன்கூடு. வெறும் அய்ந்தடி உசரத்தில் தாழ்வான கிளைகளை இணைத்து கட்டி இருந்தது. ரொம்பப் பக்கத்தில் இருந்து பார்த்தால்கூட தெரியவில்லை. மண்டி இருந்த இலைகளும் கிளைகளும் அதை மறைத்திருந்தது. 

ஓங்கி உயர்ந்த மரங்களில்தான் நான் தேன்கூடுகளைப் பார்த்திருக்கிறேன்.
குறுநாவல் எழுதும்போது தேனீக்கள் பற்றி திரட்டிய தகவல்கள் என் நினைவுக்கு வந்தது. அவற்றை எல்லாம் உதறி எடுத்து சுத்தப்படுத்தினேன்.
அதுதான் இது.

சிட்டுக்களின் கூட்டினைப்போல தேன்கூடும் என்னை எப்போதும் சுண்டி இழுக்கும். அறுங்கோண வீடுகளைக்கொண்ட தேன்கூடு, குருவிக்கூட்டைவிட ஹைடெக். ஆனால் குருவிக்கூடு குடிசைவீடு தேன்கூடு அப்பார்ட்மெண்ட் வீடு.

சுமாராக அம்பதாயிரம் தேனீக்கள் குடியிருக்கும் தொகுப்புவீடுதான் ஒரு தேன்கூடு. வீடுகட்ட நாம் பயன்படுத்துவது சிமெண்ட். தேனீக்கள் உபயோகப்படுத்துவது ஒருவகை மெழுகு. வேலைக்கார தேனீக்கள் இந்த மெழுகை தன் வயிற்றிலிருந்து சுரக்கின்றன. இந்த மெழுகில்தான் இவை தங்களின் அழகான அறுங்கோண வீடுகளை அம்சமாய் கட்டுகின்றன.

நம்மைப்போலவே தேனீக்களும் பேஸ்மண்ட் போட்டுதான் வீடுகள் கட்டுகின்றன. இதற்கு விசேஷமான ஒரு பொருளை பயன்படுத்துகின்றன. அதன் பெயர் புரோபோலிஸ். இந்த புரபோலிஸ் பேஸ்போட்டு அதன்மீதுதான் தேனீக்கள் தன் வீடுகளை கட்டுகின்றன. தேனிவீடுகளை ஈரமும் பாக்டீரியாக்களும் தாக்காமல் தாங்கிப் பிடிப்பது இந்த புரோபோலிஸ் என்னும் வஸ்துதான்.

இப்போதெல்லாம் ஒரே வீட்டிற்கு இரண்டு வாசல் வைத்துக்கட்டுவது வாடிக்கை. ஆம்பதாயிரம் வீடுகளைக் கொண்ட தேன்கூட்டிற்கு ஒரேஒரு வாசல்தான். நம்பமுடியவில்லையா நம்பித்தான் ஆகவேண்டும்.

அம்பதாயிரம் ஈக்களும்  அந்த ஒரு வாசலில்தான் வந்துபோக வேண்டும்>
தனது எடையைப்போல முப்பது மடங்கு எடையை ஒரு தேன்கூடு தாங்கும்.

தேன்கூட்டில்  தேனீக்கள் என்னென்ன வைத்திருக்கும் ? அதுல தேன்குடங்கள் வைத்திருக்கும், அதில் தேன் இருக்கும், தண்ணீர் குடங்கள் வைத்திருக்கும், அதில் தண்ணீர் இருக்கும். அடுத்து மகரந்தப்பெட்டிகள் வைத்திருக்கும், அதில் மகரந்தத்தூள் நிறைந்திருக்கும்;.

அடுத்து முட்டைகள் வார்ட் ஒண்ணு, இளம்புழுக்களுக்கான வார்ட்  இன்னொண்ணு,  அடுத்து வேலைக்கார தேனீக்களின் குவாட்டர்ஸ், அடுத்து ராணித்தேனியின் அந்தப்புறம், அந்த கூட்டின் மேற்புறம் தேன் இருக்கும். அடிப்பக்கம் ராணி வசிக்கும்.

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை பண்ணிப்பார்ன்னு சொல்லுவாங்க. தேனீக்களுக்கும் தேன்கூடு காஸ்ட்லி சமாச்சாரம், ஒரு அவுன்ஸ் மெழுகு தயாரிக்க எட்டு அவுன்ஸ் தேனை செலவாக்கும், இரண்டு முதல் மூன்று வார வயது தேனீக்கள்தான் தரமான மெழுகினை சுரக்கும், வயசாளி தேனீக்கள் சுரக்கும் மெழுகு தரமானதாக இருக்காது.

சுமார் மூன்றுமாத காலம் எங்கள் தோட்டத்தில் இருந்தது அந்த ராட்சச தேன்கூடு, அதற்குப்பிறகு எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த தண்ணீர் குழாயில் சொட்டும் தண்ணீரைக் குடித்துவிட்டு போகும். தேனடையில் தண்ணீரைக்கூட சேமிக்கின்றன என்று தெரிந்ததும், அவை அதை எடுத்துக்கொண்டும் போகும் என தெரிந்தது.

தேன்கூட்டிலிருந்து இரண்டு மீட்டர் தொலைவில் இருக்கிறது ஒரு சிறிய தண்ணீ;ர் தொட்டி, ஒரு பிளாஸ்டிக் தட்டில் தண்ணீர் பிடித்து கொஞ்சம் கூட்டுக்குப் பக்கத்தில் வைத்தோம் அவை தட்டில்வைத்த தண்ணீரை சட்டை செய்யவில்லை. குழாய் தண்ணீரை குடிக்கவே படையெடுத்து வந்தன எங்கள் வீட்டுக்கு. கசியும் அல்லது சொட்டும் தண்ணீரை நேரடியாகவே வாய்வைத்து ரசித்து ருசித்து குடிக்க ஆசைப்படுகின்றன தேனீக்கள்.

மூன்று மாதம் போனது. இந்த வருஷம் ஜனவரியே மார்ச் மாதம் மாதிரி ஆனது  வெயில் நெருப்பாய் கொளுத்தியது> நாவல் மரங்கள்; அளவாய் இலைகளை உதிர்த்தன மாமரங்கள் இன்னும் இலைகளில் பசுமை காத்தன, வெப்பாலை பஞ்சுகள் பறக்க  காய்களை வெடித்து சிதறவிட்டுக்கொண்டிருந்தன, சிறுசெடிகளும் புற்களும் பொசுங்கிப்போக ஆரம்பித்த. சோற்றுக்கற்றாழைச் செடிகள்கூட முகத்தில் வாட்டம் காட்டின.

இன்னும் எத்தனை நாட்கள் தாக்குப்பிடிக்கும் இந்த தேனீக்கள் இங்கு ? என்று நினைத்துக் கொண்டே தோட்டத்துக்குப் போனேன். மருந்துக்குக்கூட ஒரு தேனியும் இல்லை தேனும் இல்லை, அந்தத்தேன்கூடு காலியாக இருந்தது. அத்துடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்துக்கொண்டேன்.

ஒரு நாள் அந்த தேனீக்கள் மறுபடியும் வரும்.



  





No comments:

SRI CITY FLAMINGO FESTIVAL - பூநாரைத் திருவிழா

    கடித எண் 1/ 2025   பூ நாரைத் திருவிழா SRI CITY FLAMINGO FESTIVAL அனைவருக்கும் வணக்கம்! எப்படி இருக்கிறீர்கள் ? இன்று முதல் ...