Tuesday, April 14, 2020

MOON ROCK அந்த நிலவத்தான் நான் கையில புடிச்சேன்





சுமித்சோனியன் மியூசியம்
உலகின் மிகப்பெரிய  
மியூசியம்

SMITHSONIAN MUSEUM 
NATIONAL MUSEUM OF
NATURAL HISTORY 
WASHINTON, D.C.,




அன்பின் இனிய  நண்பர்களுக்கு வணக்கம் !

அமெரிக்காவில், வாஷிங்டன் டிசி யில், இருக்கும் சுமித்சோனியன் மியூசியம், உலகின் மிகப்பெரிய மியூசியம், இதனை பார்த்துவிட்டு வெளியே வந்ததும், ‘இது மாதிரியான ஒரு இடத்தை பார்க்க பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும்என்று நான் சொல்ல, என் மனைவி ஆமாம்என்றாள். 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தைக்கு என்னோற்றான் கொல் எனும் சொல்’ என்ற திருக்குறளை நான் சொல்லிவிட்டு  என்மகன் ராஜுக்குநன்றி சொல்ல வேண்டும் என்றேன். 

இதெல்லாம் ரொம்ப ஜாஸ்திஜிஎஸ்பி’’ என்று சொல்லி ராஜு, என்னைப்பிடித்து கிள்ளினான். 

ஜிஎஸ்பிஎன்பது நான். 
 
உலகத்திலேயே மிக அதிக நபர்களால் விரும்பி பார்க்கப்படும் மியூசியம், அமெரிக்கவின் வாஷிங்க்டன் டிசியில் உள்ள ஸ்மித்சோனியன் மியூசியம், 1976 ம் ஆண்டு தொடங்கப்பட்டது, ஒரு பிரம்மாண்டமான கட்டிடத்தில் இரண்டு தளங்கள், அவற்றில் உள்ளவற்றில் 100 க்கு 99 சமாச்சாரங்கள் நம்மை மிரட்டுபவை

நமது சராசரி அறிவுக்கு எட்டாதவை.

இந்த மியூசியத்திற்குள் நுழைந்ததும், தலைக்குமேல் ஒரு ஏரோப்ளேன், இடதுகைப் பக்கம்  ஒரு ராக்கெட்டு, வலதுகை பக்கம்  ஒரு ராக்கெட்டு, கீழ் பக்கம் அதன் மூக்கு, வால், உடம்பு, இதர உதிரி பாகங்கள், ஏரோப்ளேனின் முன்னால் பயன்படுத்திய பலூனின் மாடல்கள், ஏரோப்ளேனுக்கு பின்னால் பயன்படுத்திய ராக்கெட்டுகளின் மாடல்கள், எல்லாமே நமக்கு புதுசாய் இருக்கின்றன, ஏரோப்ளேன் . மற்றும் ராக்கெட்டுகள் விற்பனைக்கு வைத்த ‘பங்க் கடை’ மாதிரி தோன்றியது.

சைக்கிள்கடை வைத்திருந்த ஆர்வில்ரைட், வில்பர் ரைட் சகோதரர்கள் முதன் முதலாக கண்டுபிடித்த ஒரிஜினல் ஏரோப்ளானை, பார்த்திருக்கிறீர்களா ? அதன் பிறகு பல்வேறு காலகட்டங்களில், கண்டுபிடிக்கப்பட்ட ஒரிஜினல் விமானங்களை, பார்த்திருக்கிறீர்களா ? இங்கு சுமித்சோனியன் மியூசியத்தில் நாங்கள் பார்த்தோம்.

ஆர்ம்ஸ்ட்ராங் சந்திரனில் எடுத்து வைத்த முதல் அடி, மனித குலத்தின் பாய்ச்சல், என்றோம், அந்த  சாதனையை செய்து முடிக்க ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் பிரயாணம் செய்த  அப்பொல்லோ 11 ஐ பார்த்திருக்கிறீர்களா ? இங்கு சுமித்சோனியன் மியூசியத்தில் நாங்கள் பார்த்தோம்.

சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட கல்லுக்கு மூன்ராக் (MOON ROCK) என்று சொல்லப்படும் சந்திரக்கல்பார்த்திருக்கிறீர்களா ? இங்கு சுமித்சோனியன் மியூசியத்தில் பார்க்கலாம்

அந்த சந்திரக்கல்லை தொட்டுப்பார்த்துவிட்டு  அந்த நிலாவைத்தான்நான் கையில புடிச்சேன்என்று பாடவும்முடியும்,  அதற்கு வசதியாக அங்கு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கிறது சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட உண்மையான சந்திரக்கல்

வேற்று கிரகத்தின் ஒரு பொருளை நான் தொட்டுப்பார்த்திருக்கிறேன் என்று சொல்லலாம்.

ஏரோப்பிளானை கொஞ்சம் கிட்டக்க பார்த்தாலே அதையே ஒரு வருஷம் சொல்லிக்கொண்டிப்பேன் நான், வானத்தில் பொம்மை மாதிரி பறந்துபோகும் விமானத்தை பார்த்தே பூரிப்படைந்த காலங்கள் உண்டு, அது மட்டுமல்ல, நான் சிறுவனாக இருக்கும்போது கீற்றுக்கொட்டாயில் சினிமாவுக்கு போவோம், படம் தொடங்குவதற்கு முன்னால் கருப்பு வெள்ளயில் ‘வார்ரீல்போடுவார்கள், அதில் பெரும்பாலும் உலகப்போரில் ஏரோப்ளான்கள்தான் அடிக்கடி பறக்கும், திடீர்திடீர் என குண்டுகளை வீசும், படீர் படீர் என வெடித்து சிதறும், செத்துப்போன ஒரு ஐந்தாறு பேர்களை தூக்கிகொண்டு ஓடுவார்கள், அதற்குப்பிறகு ஒரு சோகமான மியூசிக் போடுவார்கள், அதுதான் நான் முதன் முதலாக ரசித்த இசை, நான் அதிகமான விமானங்களை இப்படிப்பட்ட சண்டை காட்சிகளில்தான் பார்த்திருக்கிறேன், அப்படி வார்ரீலில் பார்த்தவை எல்லாம் சுமித்சொனியன் மியூசியத்தில் காட்சிபொருளாக நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

யுத்தங்களில், அதாவது உண்மையான சண்டை காட்சிகளில் கலக்கிய விமானங்கள், அவற்றின் உதிரி பாகங்கள், ஜெட் விமானங்கள், அவற்றின் இயந்திரங்கள், உலகிலேயே முதன் முதலாக பயன்படுத்திய சண்டை விமானம், முதல் உலகப்போருக்கு முன்னால் உருவாக்கப்பட்ட மானோப்ளான் (PRE WORLD WAR MONO PLANE), ஆள் இல்லாமல் பறந்து சென்று எதிராளிகளின் இலக்குகளை தாக்கும் போர்விமானங்கள், விண்வெளி வீர்ர்கள் போட்டு கழற்றிய சட்டைகள், கால்சராய்கள், தலைக்கவசங்கள், கைகால் உறைகள், பாதித் தலையை மறைத்து மூடும் கண்கண்ணாடி, இதர பொருட்கள் அத்தனையும்  அங்கே பார்க்க முடிகிறது.

உலகப்போரில் ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன், இத்தாலி மற்றும் அமெரிக்கா பயன்படுத்திய போர்விமானங்கள், செவ்வாய் கிரகத்திற்கு பயன்படுத்திய விண்கலன்கள், 1920 முதல் 1930 க்குள் விமானங்கள் உருவாக்கத்தில் ஏற்பட்ட வளர்ச்சி நிலைகள் தொடர்பான அசல் மற்றும் மாதிரிகளைக்கொண்டு பார்த்துப்பார்த்து செய்த பிரம்மாண்டமான மியூசியம். நம்ம ஊர் சினிமாடைரக்டர் சங்கர் மாதிரி, ஒரு ஆளுக்கு டெண்டர் விட்டிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். பெரியபெரிய பொருட்களைக்கொண்டு செய்த பெரிய மியூசியம்.

இவை தவிர, ஏடிஎம் செண்டர்கள், எலிவேட்டர்கள், எஸ்கலேட்டர்கள், ரெஸ்ட் ரூம்கள், தகவல் மையம், டிக்கட் கவுண்டர்கள், நடக்க முடியாதவர்களுக்கு வீல்சேர்கள், பீசா, பர்கர், ஐஸ்கிரீம், கோக்கடைகள், தகவல்மையம், தொலைபேசியகம், ஆகியவை  நமக்கு மியூசியம் தரும் இதர வசதிகள். 

நினைவுப்பொருட்கள் மற்றும் கிஃப்ட் கடைகள் இருக்கின்றன, அதற்காக ‘அந்த மூன்ராக் கால்கிலோ குடுங்க’ என்றெல்லாம் விலைக்கு வாங்க முடியாது.  பீசா பர்கர் கோக் ஐஸ்கிரீம் ப்ப்ஸ், பாப்கார்ன் இந்த மாதிரி சமாச்சாரங்கள் எல்லாம் ராக்கெட் விலைக்கு ! சுலபமாக கிடைக்கும் ! காசு கொடுக்க வேண்டாம் கார்டு தடவினால் (‘சுவைப்’) போதும். 

ஆனால் இத மாதிரி இடத்திற்கு போகும்போது என் மகன் ராஜு மாதிரி, ஒரு ஆள் கூட இருப்பது நல்லது. இல்லை என்றால் பாப்கார்ன் வாங்கலாம், யுனிவெர்சலி சீப்ப்.  

சந்திர மண்டலத்து விஞ்ஞானியைப்போல நானும் என் மனைவியும், என்மகன்,  மோஷி நால்வரும், ஏரோப்ளேன்கள் மற்றும் ராக்கெட்டுகளின் ஊடாக நடந்துசெல்ல, ஒரு இடத்தில் மட்டும் ஒரு கியூ வரிசை, நாங்களும் போய் நின்றோம், அருகில் போனபின்னால்தான் தெரிந்த்து, தொட்டுப்பார்க்க தோதாக சந்திரமண்டலத்திலிருந்து கொண்டு வந்திருந்த ஒரு கல் அங்கு இருந்தது, அதன் பெயர் ‘மூன்ராக்’, அந்த கல்லைத் தொடுவதற்கு எல்லோரும் முண்டியடித்தார்கள். 

பூமியைத்தவிர வேறு ஒரு கிரகத்தைச்சேர்ந்த ஒரு பொருளைத் தொடுவது இதுதான் முதல்முறை. நான் இப்போது சந்திரனைத் தொட்டவன் ஆகிவிட்டேன்.
  
நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன்என்று ஹம் பண்ணிக்கொண்டே நடந்தோம், ரைட் சகோதரர்களின் முதல் ஏரோப்ளேன் என்ற போர்டைப் பார்த்த்தும் எங்கள் கால்கள் தானாக நின்றன. 

அந்த கூடத்தில் நுழைந்ததும், ஆர்வில்ரைட் வில்பர்ரைட் இருவரும் வாயிலில் கட்டவுட்டாக நின்று எங்களை வரவேற்றார்கள், அவர்களுக்கு பக்கத்தில் நாங்கள் நிற்க என் மகன் போட்டோ எடுத்தான், பழைய இரும்பு வியாபாரம் செய்து பின்னர் சைக்கிள் கடையில்  வைத்திருந்த சைக்கிள், முதன் முதலாய் அவர்கள் தயாரித்த ஆகாய விமானத்தின் ஒரிஜினல் இறக்கைகள், அதன் மூக்கு, உடல், வால் இதர உதிரி பாகங்கள், ஆரம்பகால ஆகாய விமானங்களோடு ரைட் சகோதரர்கள்  எடுத்துகொண்ட பழைய புகைப்படங்கள், இவற்றை எல்லாம் பார்க்கக் கிடைத்த அரிதான வாய்ப்பு சாதாரணமானதல்ல.

நாங்களே ஏரோப்பிளேன் கண்டுபிடிச்சமாதிரி இருந்தது.

மியூசியத்தில் இன்னொரு இடத்திலும் கூட்டம் அலை மோதியது, அங்கு இருந்தது சந்திரனில் இறங்கிய அப்பொலோ பதினொன்று ராக்கெட்டின்கேரேஜ்அதில் இருந்துதான் ஆர்ம்ஸ்ட்ராங் சந்திரனில்,  மனிதகுலத்தின் முதல் அடியை எடுத்து வைத்தார். அதை பார்த்துவிட்டு வந்ததும் அப்போலோவிலிருந்து இறங்கி வந்தமாதிரி ஒரு பிரமை.

இயற்கை சரித்திர மியூசியம்

இதனை ஒழுங்காய்ப் பார்த்து முடிக்க  ஒரு வாரம் ஆகும், தேசிய இயற்கை சரித்திர மியூசியம் (NATIONAL MUSEUM OF NATURAL HISTORY),என்பது சுமித்சோனியன் மியூசியத்தின் ஒரு பகுதி.  

வாஷிங்டன் டீசியில், 1910 ஆண்டு கட்டிடம், பீயக்ஸ் ஆர்ட்ஸ் பில்டிங்க்ல், 18 காட்சிக்கூடங்களில், பூமி மற்றும் மனிதன் உட்பட விலங்குகள், பறவைகள், பூச்சிகள், போன்றவை காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றங்களை, மாதிரிகள், பதப்படுத்தப்பட்ட உயிரினங்களின் உடல்கள், எலும்புகள், பாறையோடு பாறையாக மாறிப்போன பாறைப்படிவங்கள் (FOSSILS) என ஆயிரக்கணக்கான காணக்கிடைக்காத அபூர்வமான காட்சிப்பொருட்கள், குரங்கிலிருந்து படிபடியாக மாறின மனித இனங்கள், மனிதன் மட்டும்தான் உயிரினங்களிலேயே சிரிக்கத்தெரிந்தவன் என்பதை நிரூபிக்கும்படியாக எப்போதோ இறந்தும் இப்போதும் சிரித்தபடி இருக்கும் மண்டை ஓடுகள், சரம்சரமான எலும்புகளை  இடம் மாறிவிடாதபடி, சீராக அடுக்கியும், கோர்த்தும் ஆகாயவிமானம் சைஸ்சில் தொங்கவிடப்பட்ட ஒரு டைனொசரஸ் மற்றும் அதற்கு சற்றும் சளைக்காத வகையில் அவற்றின் எலும்புகளில் உருவாக்கப்பட்ட அபூர்வமான சரித்திரகால மிருகங்கள், எல்லாம் ஆச்சரியத்தில் அகல விரித்த கண்களோடு பார்க்கச்செய்யும் அமெரிக்காவின் அரிய மியூசியம்.

இந்த மியூசியம் அமைந்துள்ள இடம் 10 வது தெரு, கான்ஸ்டிட்யூஷன் அவென்யூ, வாஷிங்டன் டிசி, தொடங்கியது 1910ம் ஆண்டு, 100 வது ஆண்டு விழாவை நடத்தி முடித்திருக்கிறார்கள், ஓர் ஆண்டில் இங்கு வந்து போகும் பார்வையாளர்கள் 55 லட்சம்பேர், இதில் உள்ள காட்சிப்பொருட்கள் மட்டும் ஒரு கோடியே 26 லட்சம், ஒரு நாளில் வந்து போவோர் மட்டும் குறைந்தது 15000 பேர் என்று இந்த மியூசியத்தின் பெருமைகளை பட்டியல் போடலாம்

நிலவியல், மனித இனம் தோற்ற வரலாறு, டயனோசர்களின் காலம், பாலூட்டிகள், பூச்சிகள் உலகம், கடல் மற்றும் கடல் வாழ் உயிரினம், பூச்சிகள் உலகம், கடல் மற்றும் கடல் வாழ் உயிரினம், ஆஃப்ரிகாவின் குரல், பட்டாம்பூச்சிகள், மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம், கொரியன் கலாச்சாரம், எலுபுகளியல், ஆகிய 11 நிரந்தர காட்சிக்கூடங்கள் அடுக்கடுக்கை இருக்கின்றன. 

அத்துடன் ஜமைக்கா மக்களின் கலாச்சாரம், மண்ணியல், ஃபொரென்சிக் ஃபைல்ஸ், விவசாயிகள், போர்வீர்ர்கள், கட்டுமானக்கலைஞர்கள், எறும்புகளின் வாழ்க்கை முறை, போன்ற 7 தற்காலிக காட்சி கூடங்களிலும் இந்த மியூசியத்தின் 126 மில்லியன் காட்சிபொருட்கள் அடங்கியுள்ளன

ஒரு 26 காட்சி பொருட்களையாவது இந்திய கலாச்சாரம் பற்றி இருக்காதா என்று தேடியது என் கண்ணும் மனசும்.

இந்த 18 காட்சிக்கூடங்களில் மனித இன தோற்ற வரலாறு, டயனோசரின் காலம், ஆஃப்ரிக்காவின் குரல் ஆகியவை எங்களை மிகவும் கவர்ந்தன, அதிலும் குறிப்பாக பல்வேறு மனித இனங்களின் சிரிக்கும் மன்டை ஓடுகளைப் பார்க்கும்போதும், குரங்குகளைப் பார்க்கும்போதும், குரங்குகளுக்கும் நமக்கும் உள்ள பாரம்பரியத் தொடர்பை உறுதி செய்யும்படியாக இருந்தது.

இன்னொரு இட்த்தில் நாம் பழங்கால மனிதனாக இருந்தால் எவ்வளவு அழகாக இருப்போம் என்று நிஜமான ஒரு செயல்விளக்கம் செய்கிறார்கள், டீவி போல ஒரு மானிடர் வைத்திருக்கிறார்கள், அந்த மானிட்டர் திரையில் நமது கண்கள், மூக்கு, வாய் ஆகியவை பொருந்துமாறு முகத்தை வைத்து சில வினாடிகள் பார்க்கவேண்டும்,  அது நமக்கு தாடி மீசை நீளமான சடைமுடி எல்லாம் ஒட்டவைத்து இன்னொரு திரையில் நம்மை பழங்கால மனிதனாக் மாற்றி ஒரு படத்தை காட்டுகிறது.  

நம்மை ஒரு பழங்குடி மனிதனாக மாற்றிவிடுகிறது, என் மனைவி இந்த சோதனைக்கு ஒத்துக்கொள்ளவில்லை, நான் மட்டும் சரி என்றேன், மானிட்டர் திரையில் அவர்கள் சொன்னதுபோல  முகத்தை வைத்து சில வினாடிகள் பார்த்தேன், அடுத்த வினாடி அந்த காட்சி சாலையிலேயே இல்லாத மாதிரி என்னையே பயமுறுத்தும்படியான ஒரு மனிதமுகம் தோன்றியது. 

இதுதான் நீங்கள் என்றார் அந்த கருவியை இயக்கிய மியூசியப் பணியாளர், உங்கள் இமெயில் ஐடி சொல்லுங்கள் படத்தை அனுப்புகிறோம் என்றார், சொன்னேன், வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக மெயில் பார்த்தேன், அந்தஆதிவாசிநான்இமெயிலில் இருந்தேன், என் மனைவி, மகன், மறுமகள் எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தார்கள் ! சாரி சிரித்தார்கள் !

அதற்கு அடுத்தபடியாய் எங்களுக்கு ரொம்பவும் பிடித்தது டைனோசரின் ஜுராசிக்பார்க் காட்சிக்கூடம், உலகின் மெகாசைஸ் விலங்குகளின் எலும்புக்கூடம்

உடனே முன்னாலும் பின்னாலும் நின்று கிளிக் செய்துகொண்டோம், டைனோசர்கள் ஸ்பீல்பர்குக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சொன்னான் என் மகன் ராஜூ. 

உண்மைதான் ஜுராஸிக்பார்க் வரவில்லை என்றால் டைனோசர்கள் பாப்புலராகி இருக்காதுஎன்றேன் நான், இது வெண்ணைக்கு தொன்னையும் தொன்னைக்கு வெண்ணையும் மாதிரி ஆதரவுதான் என்று தீர்ப்பு சொன்னாள் என் சகதர்மினி, ஆக ஸ்பீல்பெர்க்சார்பில் நன்றி சொல்லிவிட்டு டைனோசர் காட்சிக்கூடத்திலிருந்து வெளியேறினோம்.

உலகின் இயற்கை ,மற்றும் மனித குல வரலாற்றையும், அத்துடன் மறக்காமல் அமெரிக்காவின் சிறப்புகளையும் பறைசாற்றும்படியான இந்த மியூசியத்தில் இந்தியாவைப்பற்றி எதுவும் இல்லையே என்று நான் வருத்தப்பட்டேன்.

நம் நாட்டிலேயே நம்மைப்பற்றிய சிறப்புக்களை ஆவணப்படுத்தாமல், அவர்கள் நம்மைப்பற்றி சொல்லவில்லை என்று வருத்தப்படுவது எந்த விதத்தில் நியாயம் ?’ என்று ராஜு கேட்டபோது நான் மவுனமாக தலையை குனிந்துகொண்டேன்

ஆனால் அதற்குப்பிறகுதான் 108 மரங்களை ஆவணப்படுத்திய முதல் நூல் 2022 ல் "தினம் தினம்வனம் செய்வோம்" 540 பக்கங்களில் வந்தது. 

இன்னொரு 108 மரங்களை ஆவணப்படுத்திய 2ம் நூல் 2023 ல் "பூமியை யோசி மரங்களை நேசி " 610 பக்கங்களில் வந்தது.

2024 ல் மோடிஜி பாணி லாவோஜி 3 வது நூலாக வந்தது. தமிழகத்தின் 100 ஆறுகளை ஆவணப்படுத்திய ஆறும் ஊரும் 4 வது நூலாக வந்தது.

எனது 5 வது நூலாக எனது அமெரிக்கப் பயணத்தை ஆவணப்படுத்திய நூலாக இந்த ஆண்டின் இறுதிக்குள் வரும்.

பூமி ஞானசூரியன்

(Updated on 15.09.2024)


3 comments:

Anonymous said...

தாங்கள் சென்ற இடங்களுக்கு எங்களையும் அழைத்துச் சென்றது போல இருந்தது ஐயா...

Anonymous said...

ம. ஹரிஹரன் , சென்னை

Anonymous said...

Very interesting. Eagerly waiting for your Adivasi photo. Pl share

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...