Sunday, April 19, 2020

சட்டிப்பானை முதல் சட்டசபை வரை - சிறுகதை SATTIPANAI MUTHAL SATTASABAI VARAI - SHORT STORY




ஞானசூரியன் கதைகள்

 (நண்பர் அகத்தியன்(இயக்குநர்) சொன்ன ஒரு செய்தி இந்த கதை எழுத காரணமாக இருந்தது. ஒரு முடி விழுந்ததனால் ஒரு அரசு முடி இழந்த கதை இது. முழுநீள நகைச்சுவை படம் எடுக்க தோதான கதை இது. சூதாட விருப்பம் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்.)

  சட்டிப்பானை முதல் சட்டசபை வரை - சிறுகதை 

SATTIPANAI MUTHAL SATTASABAI VARAI - SHORT STORY


      'அக்கினி ஏவுகணை என்றால் என்ன…?" இந்த கேள்வியை அசலூர் அண்ணா நகரில் குடியிருப்பு காலனியில் கேட்டால், இரண்டு பெயர்களைச் சொன்னார்கள். ஓன்று அலமேலு இரண்டு ரத்தினாம்பாள்.
      அப்படிப்பட்ட அலமேலுவும் ரத்தினாம்பாளும், இன்று எதிரும்புதிருமாக நின்று கோதாவில் நின்றுவிட்டிருந்தார்கள்.
      அந்தக் காலனியில் இருந்த சுமார் நானூறுக்கும் மேற்பட்ட குடும்பங்களும் காதில் பஞ்சை அடைத்தக் கொண்டு தொலைக்காட்சியில் மகாபாரதம் யுத்தக்காட்சி பார்க்கும் சுவாரசியத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
      அலமேலுவும் ரத்தினம்பாளும் மோதிக் கொண்டதில் இருவர் சம்மந்தப்பட்ட குடம்பத்தினர் மற்றும் மூதாதையர்கள் அவமானப்படுத்தப் பட்டார்கள். இவர்களின் அந்தரங்கமான சமாச்சாரங்கள் அலசி, ஆராயப்பட்டதில் அசலூர் முழுவதிலும் அழுகிய முட்டை மணம் நிரம்பி வழிந்தது.
      எப்போதும் எலியும் பூனையுமான இவர்கள் , அமெரிக்கா அலமேலு, ரஷ்யா ரத்தினம்பாள் என்று ரகசியமாக அழைக்கப்பட்டார்கள்.
      அமெரிக்கா தலை வாரிக் கொண்டிருக்கும்போது சீப்பைமீறிப் பறந்த ஒரு ஒற்றைமுடி. பால்கனியில் ரஷ்யா காப்பிகுடித்துக் கொண்டிருந்தபோது, டம்ளரில் விழுந்துவிட்டது. இவ்வளவுதான் நடந்தது.
      மாலை மூன்று மணிக்கு துவங்கிய யுத்தம், மூன்று மணி நேரம் நீடித்து, ஒரு அரைமணிநேர அவகாசத்தில், அமெரிக்கா ரஷ்யா புருஷன்மார்கள் ஆபிஸிலிருந்து திரும்ப இரண்டாவது சுற்று யுத்தம் துவங்கியது.
      யுத்தத்தின் முடிவில் சுமார் ஏழு மணிவாக்கில் அமெரிக்காவின் புருஷன் ஆனந்தனுக்கு, முன் மண்டையில் ஆல்ஃபா கிளினிக்கில், சுமார் அரை அடி நீளத்திற்கு, தையல் போடப்பட்டு  வீட்டிற்கு திரும்பியபோது, காலனி நிசப்தமாய் இருந்தது.
      தொடர்ந்து இரண்டு நாட்கள் இயல்பு மீறிய நிம்மதியும் நிசப்தமும், அசலூர் அண்ணாநகர் காலனிக்குள் வந்திருந்தது.
      மூன்றாவதுநாள் ரஷ்யாவிற்கு துரதிஷ்டநாளாக விடிந்தது. ரத்தினம்பாளின் புருஷன் ரங்கநாதனை இரண்டு போலீஸ்காரர்கள்,  கச்சேரிக்கு (போ. ஸ்டேஷன்) கூட்டிக் கொண்டு போனார்கள்;. சாயங்காலம்வரை ஆள் திரும்பவில்லை.
      உள்ளுர் வட்டம் வரதராஜன், ரங்கநாதனை ஜாமினில் எடுத்துக் கொண்டு வீடு திரும்பி ஒரு மாதம் ஆகியும் கூட எழுந்து நடக்க முடியாத அளவிற்கு போலீஸில் நசுக்கியிருந்தார்கள்.
      புருஷனுக்கு ஆட்டுக்கால் சூப்பு போடுவதற்கே ரத்தினாம்பாளுக்கு நேரம் சரியாக இருந்தது.
      லேசாக எழுந்து நடக்க ஆரம்பித்ததும் ரத்தினாம்பாளும்,     ரங்கநாதனும், உள்ளுர்  எம்.எல்.ஏ.வைப் போய் பார்த்தார்கள்.
      இரண்டுநாள் கழித்து அலமேலுவின் வீடடிற்கு இரண்டு போலீஸ் காரர்கள் வந்து ஆனந்தனை கச்சேரிக்கு அழைத்துப் போனார்கள். 
      அடுத்த நாள் ஜாமீனில் வந்த ஆனந்தன், படுக்கையில் படுத்தபடி இருந்தான்.
      அலமேலு அம்மிக்கல்லில் ஆட்டுக்காலை நசுக்கிக் கொண்டிருந்தாள் சூப்பு தயார் செய்ய….
      ஆனந்தன் எழுந்து நடக்க மூன்று மாதம் ஆனது.
      வட்டம் வரதராஜனுக்கு எம். ஏல். ஏ. வின் மீது கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
      'ஒன்ன அடிச்சது என்ன அடிச்ச மாதிரிஇனிமே இது என்னோட பிரச்சனை.  நானாச்சி அவனாச்சி…."
      வட்டம் வரதராஜன் கோபமாக டெலிபோனுக்கு முன்னால் உட்கார்ந்து டயலைச் சுற்றினார்.
      கோட்டையில் மந்திரி மஹிபாலன் ஹலோ என்றார்.
      அடுத்த நாள் மாலை பத்திரிகை ஒன்றில் எம்.எல்.ஏ. விடமிருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு என்ற தலைப்பில், இரண்டு காலம் செய்தி வந்திருந்தது.
      இன்னொரு பத்திரிக்கையில் வட்டம் வரதராஜன் மாவட்டம் ஆனார் என்று தலைப்பிட்டிருந்தது.
      மாவட்டம் முழுவதும் வட்டம் வரதராஜன் ஆளுயர போஸ்டர்களில்  சிரித்தபடி நின்றிருந்தார். பாராட்டுக் கூட்டங்கள் நடந்தன.
      எல்லாவற்றிற்கும் மேலாக எம்.ஏல்.ஏ. ஏகாம்பரத்தின் சொந்தஊர் சொணையூரில் ஒரு பனைமரம் உயரத்திற்கு வட்டம் வரதராஜனுக்கு கட்அவுட் வைத்திருந்தார்கள். மாலை ஊர்வலமும் பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
      ஊர்வலம் எம்.எல்.ஏ. ஏகாம்பரத்தின் சினிமா கொட்டகையைத் தாண்டி சென்றதும் சிறிது நேரத்தில் சினிமா கொட்டகை எரிந்து சாம்பலானது. இதில் பதினோரு ஆண்களும் பதினெட்டு பெண்களும் ஆறு குழந்தைகளும் எரிந்து கரிக்கட்டை ஆனார்கள்.
      ஏம.எல்.ஏ. ஏகாம்பரம் கோட்டைக்கு விரைந்து முதல் அமைச்சரை சந்தித்தார்.
      அடுத்தநாள் சொணையூர் தீ விபத்து குறித்த விசாரணைக் கமிஷன் ஒன்று நிறுவப்பட்டது.
      ஓய்வு பெற்ற நீதிபதி ஓமன் அவர்கள் விசாரணைக் கமிஷனுக்கு தலைமையேற்று விசாரித்து முப்பதே நாளில் அரசுக்கு தன் அறிக்கையை சமர்ப்பித்தார்;. முப்பத்தைந்து உயிரிழப்பிற்கு காரணம் சமூக விரோதிகள்தான். அவர்களைக் கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க வேண்டும். என்று தனது 125 பக்க கமிஷன் அறிக்கையில் கொடுத்தார் ஓமன்.
      அடுத்த நாள் எதிர்கட்சியினரின் அவுரங்கசீப்  காலைப் பத்திரிகையில் வட்டம் வரதராஜனும், 35 கொலைகளும் என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு ஒரு செய்தி….
      மாலைப் பத்திரிக்கை சண்டமாருதத்தில் வட்டம் வரதராஜனைக் கைது செய் ன்ற தலைப்புச் செய்திஎதிர்க்கட்சித் தலைவரின்       நாடு தழுவிய" போராட்டம் பற்றிய இன்னொரு அறிக்கை….
      முதல் அமைச்சரும் ஆளுங்கட்சி தலைவருமான ஆளவந்தார் அவசரமாக கட்சிப்பொதுக்குழுவைக் கூட்டினார்.
      ஆளுங்கட்சியின் வலதுசாரிகளின் தலைவராக மதிக்கப்படும், அமைச்சர் பூவரசன் வட்டம் வரதராஜன் கட்சியைவிட்டு விலக்க வேண்டும் என்றார்.
      இடது சாரிகளின் தலைவர் அமைச்சர் மஹிபாலன்        எம். ஏல். ஏ. ஏகாம்பரம் எதிர்கட்சி பத்திரிக்கைக்கு ரகசியமாக செய்தி கொடுத்தவர், எனவே அவரை முதலில் கட்சியை விட்டு விலக்க வேண்டும் என்றார்.
      ஆளுங்கட்சி இரண்டாக உடைந்தது. ஒருபாதி அமைச்சர்கள் அமைச்சர் பூவரசன் தலைமையிலும், இன்னொரு பாதி முதலமைச்சர் ஆளவந்தார் தலைமையலும் பிரிந்து நின்றனர்.
      உடைந்த கட்சியை ஒட்டவைப்பதற்காக ஆளவந்தார் பகீரதப் பிரயத்னம் செய்து கொண்டிருந்தார்.
      எதிர்க்கட்சித் தலைவர்; இன்பராஜன் நாடு முழுவதையும் ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
      அத்துடன் உடைந்த கட்சியின் உதிரி பாகங்கள் கிடைக்குமா...? என்று தேடிப்பிடிக்க ஒரு தனிக் கமிட்டியை அமைத்தார்.
      இதற்கிடையில் போராட்டம் வெடித்தது. ஊருக்கு ஊர் பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள்…. கடைகள் கட்டாயமாக அடைக்கப்பட்டன. அடைக்காத கடைகள் உடைக்கப்பட்டன. சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அரசு வாகனங்கள் தீக்கிரையாயின.
      காவல்துறை, கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடித்தனர். கண்ணீர்ப்புகைக்கும் கட்டுப்படாத இடங்களில் துப்பாக்கி குண்டுகளை வெடித்தனர்.
      துப்பாக்கிச் சூட்டில் செத்துப் போனவர்களின் எண்ணிக்கை நூற்று ஐம்பதைத் தாண்டியது.
      சென்ற வாரம் சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. அதில் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் ஓட்டெடுப்புக்கு வந்து அரசு கவிழ்ந்தது
      அசலூர் அண்ணாநகர் காலனியில் அரசுகவிழ்ந்த ரேடியோ செய்தியை ரத்தினம்பாள் உரக்க வைத்து உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தாள்.
     பொல்லாத ரேடியோஇவதான் வச்சிருக்காளாம்…. காதடச்சிகிட்டுப் போகுதுவர வர காலனியிலஇவ பண்ற அட்டகாசத்தை கேக்கறதுக்கு நாதியில்லாமப் பொச்சி…” என்றபடி படியிறங்கி வந்தாள் ரத்தினம்பாள்.
      அலமேலு முந்தானையை இழுத்து செருகிக் கொண்டு வெளியே வந்தாள். இருவரும் அடுத்த யுத்தத்தைத் தொடங்கினார்கள்.
                



No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...