Tuesday, April 14, 2020

மழை - சிறுகதை THE RAINS - SHORT STORY





ஞானசூரியன் 
கதைகள்

(மழையால் தீர்மானிக்கப்படும் ஒரு இந்திய மானாவாரி விவசாயியின் மாதிரி வாழ்க்கை இது)
மழை - சிறுகதை
THE RAINS - SHORT STORY

மழை குறைவதாகத் தெரியவில்லை. மழை பார்த்து நாளாகி;ப் போன மண் சந்தோஷப்பட்டது. காற்று வேஷங்கட்டி ஆடியது.
சற்றுத் தொலைவில் மணியின் வயலில் வாடிக்கிடந்த மணிலாச் செடிகள்  கம்பிகளாய் இறங்கிய மழையில் தளதளத்தன.
      இந்த ஒற்றைப் பனையின் தயவில் வெகு நேரம் ஒதுங்க முடியாது. பனை மட்டையில் தொங்கிய  குருவிக்கூடு ஒன்று காற்றில் பறக்க. அதிலிருந்த குருவிகள் இரண்டும் மட்டைகளில் ஒண்டியவாறு மழை இறைச்சலை மீறி கத்திக் கொண்டிருந்தன.
      மனைவி சரோஜா அடகில் மீண்ட நகைகளின் மத்தியில் சிரித்தாள்.
    மணி விழித்துப் பார்த்தான். வீட்டில் படுத்திருப்பது தெரிந்தது. எல்லாம் கனவு. மழை இல்லை. மனசுள் புழுக்கம்.
      மழையைப் பார்த்து இரண்டு மூன்று வருஷம் ஆகிப் போனதால்  குளம் குட்டை கிணறு சகலமும் வறண்டு பாளம்பாளமாய் வெடித்துப்  போய்விட்டன. விவசாயம் செத்துப்போய்விட்டது.
      எழுந்து உட்கார்ந்தான். வீட்டின் பின்னால் இருந்த பனை மரங்களின் நிழல்கள் வாசலில் குறுக்காகப் படுத்துக்கிடக்க சாயங்கால  மாயிருந்தது.
      ஒன்றிரண்டாய் விழுந்த தூற்றலில் விதைத்த மணிலாப் பயிர் அதோகதிதான். அதற்கு மேல் அவனால் நினைக்க முடியவில்லை.
      கழுத்திலும் மார்பிலும் ஊற்றெடுத்த வியர்வைக் கசிவுகள் வயிற்றின் ரோமக்கற்றைகளின் ஊடாய் வடிந்தன. தலைமாட்டில் கிடந்த துண்டை எடுத்து அழுத்தித் துடைத்தபடி வெளியே வந்தான். திண்ணையில் தூசுதட்டி குத்துக் காலிட்டு உட்கார்ந்தான்.
      அந்தண்டை திண்ணையில் சரோஜா பையனுக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். கல்யாணம் கட்டிய மூணு வருஷத்தில் வீட்டிலும் வயல்காட்டிலும் செக்கு மாடாய் பாடெடுத்து இப்படி ஓடாகிவிட்டாள்.
      பழைய சரோஜாவின் அடையாளங்கள் அவளிடம் முழசாய் போய்விட்டிருந்தது. எதற்கும் சிடுசிடுத்தாள். வெறுப்பும் விரக்தியும் அவள் மனசு முழுவதுமாய் பரவிக்கிடந்தது.
      'மழை இப்பவும்  வராம Poயிட்டா..  சரோஜா கேட்டதை நினைக்கும்போது பயிர் செய்நேத்தி செலவில் ஏறிய கடன்கள் நெஞ்சில் சுமைகளாய் இறங்கின.
      ஒழுங்கா பாலக் குடிக்காம மாரக்கடிச்சுக் கொதறுது சனியன் …” சொத்தென்று ஒரு சாத்து சாத்தினாள். பையன் மார்பை விட்டுவிட்டு வரட்டுக் கத்தலாய் கத்தினான்.
      'இது பொறந்த வேளையோ என்னமோ எல்லாம் போச்சி ஆளு மட்டுந்தா உருவா இருக்கு. அதுவும் ஏண்டி இருக்கேன்னு கடிச்சிக்கொதர்றான்…”
      அவள் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.
      வாசலில் மொளக்குச்சியில் கட்டிக்கிடந்த உழவு மாடுகள் இரண்டும் மாறிமாறி கத்திக் கொண்டிருந்தன. எலு;ம்புகள் வயிற்றில்  வில்வில்லாக  வளைந்துக் கிடந்தன.
      ஊரில் பாதிக்குமேல் ஆடுமாடுகள் கசாப்புக்கடைக்கு போய் சேர்ந்துவிட்டன. ஊர்; பேர் தெரியாத நோய்கள் வந்து கொஞ்சம் எமலோகம் போய்ச் சேர்ந்தன. மிச்சம் மீதியாய் இருப்பவை அகப்பை நோய்  அவஸ்தையில் கட்டாந்தரையை நக்கிவிட்டு கட்டுத்தறியில் வெறுமே அசைபோட்டுக் கிடந்தன.
      'வணக்கம் கவுண்டரே."
      திரும்பிப் பார்த்தான். சைக்கிளோடு வந்தார் விவசாய மேஸ்திரி. சைக்கிளை ஸ்டேண்டு போட்டார்.
      மடித்துக்கட்டிய வேஷ்டியை அவிழ்த்து தொங்கவிட்டபடி வந்தார்.
      மணி குனிந்து பார்த்தான் திண்ணையில் இருந்தபடி.
      'வாங்க வந்து உட்காருங்க."  சிரிக்கப் பார்த்தான். 
      உட்கார்ந்தார் மேஸ்திரி.
      'தாகத்துக்கு ஏதாச்சும் "
      'ஒண்ணும் வேணாங்க…”
      'தயக்கத்தோடு ஆரம்பித்தார் மேஸ்திரி. ரோம்ப கெடுபிடி மீதிப்பணத்தை கட்டலேன்னா சஸ்பெண்ட் பண்ணிடுவேன்னு சொல்லிட்டாங்க ஆபிஸ்:ல. இன்னும் நூத்தியம்பது தானுங்களே  நாளைக்கு சாயங்காலமா வர்றேன். கையில இல்லன்னாலும் கடனாவது வாங்கி வையுங்க"
               'வந்து" ஏதோ பேச ஆரம்பித்தான் மணி.
      மேஸ்திரி முந்திக் கொண்டார்.
      'கஷ்டம் எல்லாருக்கும்தான் இருக்கு. ஊட்டுக்கு ஊடு வாசப்படி. பாழாப்போன மானம் நம்ம பாவத்துல காயறுக்குது" எழுந்து போனார் மேஸ்திரி.
      இப்படித்தான் ஒருநாள் இதே திண்ணைஙில்தான் வந்து உட்கார்ந்தார் மேஸ்திரி.
      'நீங்க இந்த கடலைய வாங்கிப் போடுங்க. அப்பொறம் பருங்க"
      பேப்பரில் மடித்திருந்த பொட்டலத்தை மணியிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தபோது மணிலா சொன்ன மாதிரியே மூக்கும் முழியுமாய் தெறிப்பாக இருந்தன. உறித்துப் பார்த்தான்.  சின்னக் குருவி முட்டை மாதிரி கருஞ்சிவப்பும் வெள்ளையுமாய் இருந்தது. பருப்பு ஒன்றை நசுக்கிக் காட்டினார். எண்ணெய்;  ;பொங்கியது.
      'பத்தாம் நெம்பர் கடலைங்க நம்ம மெத்த ஊட்டுக்காரர்கூட இதான் வாஙகியிருக்காரு.
              அடுத்த நாள் இரண்டு மணிலா மூட்டைகள் வாசலில் வந்து இறங்கின. கடனில்தான்.
      மணிக்கு மேஸ்திரியோடு அஞ்சாறு வருஷப் பழக்கம். வருஷா வருஷம் மேஸ்திரிதான் விதை மணிலாவை கடனில் கொடுத்து உபயம் பண்ணுவார். ஆனால் மணி காசு விஷயத்தில் கறார் பேர்வழி. கொடுக்கல் வாங்கல் எல்லாம் காதும்காதும் வைத்த மாதிரி நடந்துவிடும். ஊரில் மணிக்கு மானஸ்தன் பட்டம்   உண்டு.
      மணிலா செடிகள் வயலில் கரகரவென வளர்ந்தது. மணியும் சரோஜாவும் சந்தைக்குப் போய் கல்யாண பூசணிக்காய் வாங்கி கரும்புள்ளி செம்புள்ளி குத்தி வயலுக்கு எதிரில் உடைத்து கண்ணேறு கழித்தார்கள்.
      ஒரு பெருமூச்சில் அந்த நினைவுகளை அழித்தபோது தூரத்தில் அவன் தங்கை மாப்பிள்ளையோடு வந்து கொண்டிருந்தாள்.
      மணி எழுந்துபோய் வாசலில் நின்றான். சரோஜாவும் பையனை தூக்கிக்கொண்டு போனாள்.
      'வாம்மா வா மாப்பிள சரோஜா பாப்பாவ உள்ள கூட்டிப்போ. அந்தப் பைய  வாங்கு புள்ள. என்ன மாப்பிள ஒரு கடுதாசி போடக்கூடாது வாரம்னு" 
      அம்மாகூட சொல்லிச்சு நம்ம ஊட்லயே பாத்துக்கலாம்னு கௌரிதான் ஒட்டாரமா அண்ணாத்த ஊட்டுக்குத்தான் போவேன்னது.  மாப்பிள்ளை கூச்சத்தோடு கௌரியை பார்த்தார்.
      கௌரி வெட்கத்தில் நிறைமாதத்துடன் குனிந்து சிரித்து நின்றாள்.
     அதனால என்னா மாப்பிள?  இதுக்குன்னுட்டா ஓரு ஒலை வைக்கப் போறோம்? இது என்னா மாசம்?
      'ஏழு"  மீண்டும் மாப்பிள்ளை கூச்சப் பட்டார்
      பிரசவ செலவு மனசுள் கணக்குப் போட்டான் மணி.
      சரோஜா சரோஜா கந்துவட்டி கடைக்காரப்பாட்டி வெற்றிலையை அசை போட்டபடி அங்கு நின்றிருந்தாள்.
      'ஏண்டியம்மா அவசரம்னு வாங்கனிய அசலுதான் குடுக்க முடியல வட்டியாவது குடுக்கலாமில்ல?"
      'இந்த வாரத்துல பாத்து தரேன் பாட்டி…”இது சரோஜா.
              'ஆமா ஆறு மாசமா பாத்து தர்றே?  நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனுஷாளுக்கு ஒரு சொல்லு"
         வார்த்தைகள் முள்ளாய் குத்திக் கிழித்தன.
      உதட்டின் குறுக்கே விரல்களை அகட்டி வைத்து வெற்றிலை  எச்சை புளிச் சென்று துப்பிவிட்டுத் திரும்பிப் போனாள் கந்துவட்டி
      கடைக்கார பாட்டிக்கு என்ன பெயர் என்று ஊரில் யாருக்கும் தெரியாது. ஆனால் கந்துவட்டிபாட்டி என்றால் குஞ்சு குசுமானுக்குக்கூட தெரியும். பாட்டியிடம் வட்டியில் சேர்ந்த பணம் நிறைய இருந்தது. ஆனால் அவளுக்கு உற்றார் உறம்பறை யாரும் கிடையாது. நல்லவர்கள் யாருக்கும் அவள் நாற்றம் ஆகாது. வேறுவழி இல்லாதவர்கள்தான் அவளிடம் போவார்கள்.
      மணி தலைகவிழ்ந்தபடி வீட்டைவிட்டு வெளியே வந்தான். அவன்முகம் உயிரின்றி செத்துக் கிடந்தது. ஏதோ கேட்கப்போவது மாதிரி பின்னாலேயே சென்ற சரோஜாவை ஒருமுறை மௌனமாய் பார்த்துவிட்டு பின்னர் பேசாமல் திரும்பி நடந்தான்.
      மணி நான்கிருக்கும். வெய்யில் தோலை உரித்தது. சனி மூலை வெளுத்திருந்தது.
      எத்தனைமுறை பார்த்தாலும் மழை வரப் போவதில்லை.
      தொடர்ந்து நடந்தான். போ எலக்க்ஷனுக்கு கொஞ்சம் முன்னால் போட்ட பஞ்சாயத்து ரோட்டில்; ஜல்லிக்கற்கள் உதட்டை மீறிய முன்னம் பற்களாய் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன.
      மானாவாரி கடலை விதைத்த இடங்களில் சின்னச்சின்ன செடிகள் கரும்பச்சை நிறத்தில் சுருண்டுக் கிடந்தன.
      கண்ணுக்கெட்டிய தூரம்வரை வயல்காடுகள் வெறும் பொட்டல் காடாய் விரிந்துக் கிடந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் பனைமரங்களும் ஈச்சைமரங்களும் நின்றிருந்தன.
      அதுதான் மணியின் வயல். அந்த ஒற்றை பனையிலிருந்து அந்த ஒதியன் வரிசைவரை ஒரு ஏக்கரா பூர்வீகச் சொத்து. அப்பா காலத்தில் எட்டுகாணி ஒரே சதுரம். அவர் போய் சேர்ந்த பின்னால் இரண்டு தங்கைகளுக்கு கல்யாணம் முடிந்தது. மூன்று தம்பிகள் பாகம் பிரித்துக் கொண்டு உருப்படாமல் போனார்கள்.
      இந்த ஒரு ஏக்கராதான் அப்பா சொத்தின் மீதி. தீவிர சாகுபடி செய்து அதன்மீதும் ஏகப்பட்ட கடன்கள். அத்துடன் மழை வராமல் ஆண்டுதோறும் செய்யும் பித்தலாட்டம்.
மீதி நிலம் பக்கத்து கிராம மெத்தை வீட்டுக்காரருக்கு சொந்தமானது. துண்டும் துக்கடாவுமாக நிலம் வைத்திருப்பவர்களுக்கு அவர்தான் அனாதை ரட்சகன். ஆபத்பாந்தவன். நிலம் வைத்திருக்கும் யாருக்கு பணக்கஷ்டம் வந்தாலும் அவருக்கு மூக்கில்வேர்க்கும்.
      இப்போது அவருக்கு நஞ்சையில் பதினோரு ஏக்கராவும் சேர்ந்திருந்தது.
      நில உச்ச வரம்பு வந்த பின்னால்கூட புதிதாக எட்டு ஏக்ரா  ரிஜிஸ்தர் செய்தார்.
      திருஷ்டிக் கழித்த பூசணிக்காய் துண்டுகள் ரோட்டோரத்தில் சுக்காய் காய்ந்து கிடந்தன..
      என்ன அண்ணே. கவனிக்காம போறீங்க…’ எதிரில் காளியப்பன் நின்றிருந்தான். அவன் பச்சை சிரிப்பில் எரிச்சல் முற்றியது
       'அண்ணாச்சி ஏதோ ரோசனையா போறீங்க போல இருக்கு?"
      'எல்லாம் இந்தப் பாழாப் போன மானத்தப்பத்திதான்.
      'இந்த மானம் ஒண்ணு காஞ்சி கெடக்கும் இல்ல பேஞ்சி கெடக்கும் என்ன அண்ணே நாஞ்சொல்றது?"  மீண்டும் அவன் சிரிக்கையில் கடைவாய்ப்பல் மஞ்சளாய்த் தெரிந்தது.
      'சர்தான்.."
      'அண்ணேஒருமுக்கியமானசமாச்சாரம்ஊருல மாரியாத்தாவுக்கு கூழு ஊத்தலாம்னு …” 
      'எதுக்கு ? 
              "என்னண்ணே பச்ச புள்ள மாதிரி கேக்கறீங்க? மழை மாரி இல்லாம கெடக்கேன்னுதான்.
      'சரி. அதுக்கு நான் என்ன பண்ணணும்;?"
      'அதாண்ணே தலைக்கு பத்து ரூவான்னு போட்டுருக்கோம் ஒரு வார்த்தை கலந்துடலாம்னுதான் …” 
     மூணுமாசத்துக்கு முன்னாடிதான் கொடும்பாவி கட்டி இழுத்தார்கள். அப்படியும் மழையைக் கட்டி இழுக்க முடியவில்லை. அப்போது தலைக்கு ஐந்து ரூபாய்.
      வருசம் முன்னூத்தியறுவத்தியஞ்சி நாளைக்கும் இப்படி ஏதாவது வசூல் செய்ய இருந்து கொண்டேயிருந்தது.
      மழை மாரி இல்லையென்றாலும் சில பேர்வழிகளுக்கு இப்படியாக வயிற்றுப்பாடு ஓடியது.
      'ஆமா மெத்தவூட்டுக்காரர் இருக்காரா?"
      'இப்பதான் பாத்துட்டு வர்றேன் ஏதாவது விசேஷமாண்ணே?
      'ஆமா வரட்டுமா.?"
      'காலைல வீட்டுப்பக்கம் வந்தண்ணேகட்டுத்தறியில ஒழவு மாடுங்க  பாக்க சவிக்கல. ஒரே கோராமை.
               "………………”
       ப்பவே சொன்னீங்கன்னா நல்ல வெலைக்கி தள்ளி விட்றலாம்…”
      'நாளைக்கு காலைல வா .  நம்ம நாய்கூட பாக்க சவிக்காம கோராமையா கெடக்கு ஓட்டிட்டு போவ..நெருப்புத் துண்டுகளாக வார்த்தைகள் தெறித்து சிதறின.
            ஊரில் இப்போதெல்லாம் ரெண்டு மூன்று என்று மாடுகள் கசாப்பு கடைக்கு போகிறது என்றால் அதற்கு காளியப்பனும்; ஒரு காரணம். டவுனில் காளியப்பனுக்கு நல்ல பழக்கம் இருந்தது. மாடுகள் விற்பனையில் இரண்டு பக்கமும் அவனுக்கு நல்ல கமிஷன் கிடைத்தது.
      மணி நடக்க ஆரம்பித்தான்.-
      காளியப்பன் சிறிது நேரம் நின்று பார்த்துவிட்டு பின் விரைப்பாய் நடையை எட்டி வைத்தான்.
      மெத்தை வீட்டின் முன்புறமிருந்த சிமெண்ட் களத்தைத் தாண்டி இரும்பு கேட்டைத் திறந்தபடி வெளியே வந்தான் மணி.
      பகல் வெய்யிலின் உக்கிரம் மெலிதாய் வீசிய காற்றில் நெருப்பாய்ப்; பறந்தது.
      பஞ்சாயத்து கிணற்றில் பெண்கள் கூட்டம் சுறுசுறுப்படைந் திருந்தது. கிணற்றைச் சுற்றிலும் குடங்களும் பானைகளும் அடுக்கிக் கிடந்தன. அங்கு தண்ணீர் எடுக்க ஒரு பெரிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
      இந்த கிணறும் வறண்டு விட்டால்  பக்கத்தூருக்குத்தான் போக வேண்டும். அதுவும் ஒரு சத்தியத்துக்கு கட்டுப்பட்ட மாதிரி சொட்டி இழுக்க இழுக்க சுரந்து வீட்டிற்கு ஒன்றிரண்டு குடம் என கொடுத்தது.
      மணி வீட்டை அடையும்போது வானம் மசங்கலாய் இருந்தது. காற்று ஈரமாக வீசியது.
      தோள் துண்டை உதறி கொடியில் வீசிவிட்டு திண்ணையில் உட்கார்ந்தான்.
      சரோஜா தண்ணீர்குடத்தை இறக்கி வைத்துவிட்டு தலைச்சும்மா டாய் சுருட்டி வைத்திருந்த புடைவை தலைப்பை உதறியபடி, அவன் அருகில் வந்து உட்கார்ந்தாள்.
      கடைக்கார கெழவி வந்திச்சி. நாளைக்கு கண்டிப்பா வட்டிப் பணமாவது குடுக்கணுமாம்.
      மணி ஒன்றும் பேசாமல் மடியில் இருந்த பொட்டலத்தை எடுத்து அவளிடம் கொடுத்தான்.
      அவன் முகத்தை பார்த்தபடியே பொட்டலத்தை பிரித்தாள். ரூபாய் நோட்டுக்கள். அதிர்ச்சியுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
      அவன் சொன்னான் இனிமே இந்த மழைய நம்பிக் கிட்டிருந்தா நம்ம வயித்துல ஈரத்துணிய போட்டுக்க வேண்டியதுதான். வாங்கன கடன கழிச்சுட்டு ஐந்நூறு ரூவா வாங்கிக்கிட்டு நெலத்தை மெத்தைவீட்டுக்காரருக்கு எழுதிக் கொடுத்திட்டேன்.
      அவன் சொல்லி முடிப்பதற்கு காத்திருந்தது போல். வாசலில் உட்கார்ந்திருந்த தங்கச்சியும் மாப்பிள்ளையும்> பாயை வாரி சுருட்டிக் கொண்டு ஓடிவந்தனர்.
      வெளியில் ஆங்காரமாய் பெய்து கொண்டிருந்தது மழை.
      கொஞ்ச நாட்களில் மணியின் குடும்பம் பஞ்சம் பிழைக்க பட்டினம் புறப்பட்டுப்போனது.           
                                
   

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...