அமெரிக்கா போகலாம் வாங்க – பயணக்கட்டுரை
AWESOME USA VISIT
நயக்காரா'வில்
ஒரு நாள்
ஒரு நாள்
ONE DAY IN
NIAGRA
WATERFALLS
‘நயக்காராவில் குளிக்க முடியுமா ?’ இது என் மனைவி,
‘கண்டிப்பா குளிக்கலாம், மறக்காம சோப்பு ஷாம்ப்பு
எல்லாம் எடுத்துட்டு போயிடு, அது என்ன உங்க வீட்டு பாத்ரூமா
? ’ இது என் மகளின் கிண்டல், உலகத்தோட பெரிய நீர்வீழ்ச்சி,
போகலாம் பார்க்கலாம் வரலாம் அவ்ளோதான்’ இது நான், இப்படி ஒரு நாள் எங்கள் வீட்டில்
நயக்காராபற்றி நடந்த எதார்த்தமான உரையாடல் இது, அந்த சமயம் நாங்கள்
யாரும் நயக்கரா போவோம் என்று யாரும் கனவில்கூட யோசிக்ககூட இல்லை.
நயாக்கராவுக்கு நான் எப்படிப்போனேன் ? எப்போது போனேன்
? யார் யார் போனோம் ? நயாக்ராவை பார்க்கும் வாய்ப்பு
எப்படி கிடைத்தது ? நயாக்ரா நதியில் எப்படி படகு பயணம் போனோம்
? அமெரிக்கா மற்றும் கனடா இரண்டு நாடுகளுக்குமான
நீர்வீழ்ச்சிகளில் நுழைந்து நனைந்து குளித்த, ஆபத்தான அனுபவங்களை
எல்லாம் இந்த கட்டுரையில் விரிவாக சொல்லுவதற்கு முன்னால், நயாக்ராபற்றிய
ஒரு குட்டி அறிமுகம் அவசியம் என்று நினைக்கிறேன்.
நயாக்ரா நதி ஏரி
(EARIE)என்னும் ஏரியில் உற்பத்தியாகி நீர்வீழ்ச்சியாக விழுந்து மீண்டும்
நதியாகி, ஒன்டாரியோ (ONTARIO) என்னும் ஏரியை
அடைந்து, மீண்டும் ஒரு நதியாகி அட்லாண்டிக் மகாசமுத்திரத்தை அடைகிறது,
இது நதியாக ஓடும் பரப்பு மட்டும் 6,84,000 சதுர
கிலோமீட்டர், அமெரிக்க நீர்வீழ்ச்சி 70 முதல் 110 அடி உயரத்தில் இருந்து 850 அடி அகலத்திற்கும், கனடியன் நயக்காரா 188 அடி உயரத்தில் இருந்து 2200 அடி அகலத்திற்கும்,
மணிக்கு 68 மைல் வேகத்தில் நீர்வீழ்ச்சியாக விழுகிறது,
உலகத்திலேயே அதிகமான உயரத்திலிருந்து விழும் நீர்வீழ்ச்சி நயக்காரா என்று
நிறையபேர் சொல்லக்கேட்டிருக்கிறேன், நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன்,
அது உண்மை அல்ல, இதைவிட உலகில்
500 க்கும் மேற்பட்ட உயரமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன,
உதாரணம், வெனிசுலா நாட்டின் ‘ஏஞ்சல்ஃபால்ஸ்’தான் உலகின் உயரமான நீர்வீழ்ச்சி,
ஆனால் நீர்வீழ்ச்சியின் உயரம், அகலம், நீரின் அளவு, நீரின் வேகம், இருப்பிடம்,
சுற்றுச்சூழல், அத்தனையும் பார்த்தால் உலகின் எந்த
பிரமாண்டமான நீர்வீழ்ச்சி இதுதான் ! நீருக்கு பதிலாக அழகை கொட்டும்
நீர்வீழ்ச்சி !
இன்று நான்,
என் மனைவி, என் மகன் மூவரும் நயகாரா போகிறோம்,
அதில் குளிக்கப்போகிறோம், கனெக்டிகட் மாநிலத்தின்
ஷெல்டன் நகரிலிருந்து ஒரு மெர்சிடஸ் பென்ஸ் காரில் புறப்பட்டோம்,
கிட்டத்தட்ட 700 கி,மீ.
பயணம், காரை என் மகனே ஓட்டினான், அமெரிக்காவின் அகன்ற சாலைகளில் என் மகன் அனாயசமாக ஓட்டி எங்களை பிரம்மிக்க வைத்தான்.
அவனுக்கு ரொம்ப மகிழ்ச்சி, அவனுடைய அப்பா அம்மாவை பென்ஸ்காரில் அழைத்துக்கொண்டு,
அதுவும் அவனே காரை ஓட்டிக்கொண்டு போவதில் அவனுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி,
எங்களுக்கு அதைவிட மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டாம், அவன் திட்டப்படி சூரியன் மறையும் முன்னர் நயக்காரா போய்ச் சேர்ந்துவிடவேண்டும்,
நம்ம ஊரைப்போல் அங்கு சூரியன் ஆறு மணிக்கே அவசரமாய் அஸ்தமிப்பதில்லை,
எட்டு மணிவரை சூரியன் நிதான்மாய் காய்கிறது,
என் மகன் திட்டமிட்டதுபோல நயக்காரா நீர்வீழ்ச்சியின், விலாப்புறத்தில் இருந்த நயகாரா பூங்காவில் காரை பார்க்
செய்துவிட்டு இறங்கினோம், உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான நயாக்ரா
மண்ணில் கால் வைத்த்தும் உடல் சிலிர்த்தது, குளிர் 16
டிகிரி பாரன்கீட்டில் எலும்புகளில் இறங்கியது.
சாதுவான ஆறாக நயகாரா ஓடும் இடத்திற்கு
அருகில் மேப்பிள் மற்றும் பைன் மரங்கள், மரங்களுக்கு அடியில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மேஜை விரிப்பாக புல்தரை,
உதயசூரியன் மாதிரி விரித்த கைகளைப் போன்ற மேப்பிள் இலைகள் நம்மை வசீகரிக்கின்றன,
சிவப்பு நிற மேப்பிள் இலைதான் கனடா நாட்டின் அரசு இலச்சினை, மேப்பிள் இலையை இங்கு கொண்டாடுகிறார்கள், நம்ம ஊரில்
இப்படிப்பட்ட வடிவத்தில் இலைகள் நிறைய செடிகளில் மரங்களில் இருக்கின்றன, ஆமணக்கு, ரப்பர், பப்பாளி எல்லாமே
விரித்த கைவடிவ இலைகள்தான், மேப்பிள் மரங்களுக்கு ஊடாக நடந்து
செல்லும்போது கூடுதலான குளிரில் உடம்பு வெடவெடத்தது, ஜெர்க்கின் ஸ்வெட்டர் ஆகிய கவச குண்டலங்களோடு மீண்டும் நடந்தோம், நயகாரா எரிமலையாய் வெடித்து சிதறி நுங்கும் நுரையுமாக, நீர்த்துளிகளால் ஒரு புகை மண்டலத்தை பரப்பியபடி, நீர்வீழ்ச்சியாய்
கீழிறங்கும், இடத்திற்கு அருகில் நின்று, நெஞ்சில் கைவைத்து பார்த்தபோது அது படபடத்தது.
நயகாரா நீர்வீழ்ச்சிபற்றி ஒரு அறிமுகம் தந்தான் என் மகன், நயக்காரா என்பது இரண்டு
நீர்வீழ்ச்சிகள், ஒன்று அமெரிக்க எல்லயில் இருப்பது, இன்னொன்று கனடாவின் எல்லயில் இருப்பது, நயக்காராவின்
ஒருபக்கம் அமெரிக்கா இன்னொரு பக்கம் கனடா, இதுவரை கனவுக்கன்னியாய்
இருந்த நயக்காரா கண்களுக்கெட்டும் தொலைவில், கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தோம், சூரியன் கனடா
நாட்டின் குதிரைலாட நீர்வீழ்ச்சிக்கு பின்னால் ஒளிந்துகொள்ள,
என் கைக்கடிகாரம் மணி ஒன்பது என்றது, குளிர் கூடுதலாய்
மிரட்டி எங்களை காரை நோக்கி விரட்டியது.
அடுத்த
10 வது நிமிடம், கையடக்கமான நயக்காரா சிட்டியின்
இந்திய ஒட்டல் ‘மஹாராஜா’வில், அங்கிருந்த தாடிக்கார பஞ்சாப் சிங்’ஜியின் அன்பான உபசரிப்புடன் இரவு உணவை முடித்துவிட்டு,
பாப்பலோ (BUFFALO) என்ற நகரத்தில் இருக்கும் ‘டேய்ஸ்இன்’ லாட்ஜுக்கு அங்கிருந்து 20 நிமிடத்தில் எப்படி போய்ச்சேரலாம் என காரில் வழிகாட்டியது
ஜி பி எஸ்.
‘டேய்ஸ்இன்’னில் மூன்றாவது முறையாக தங்குவதால் அது பழகிய
வீடு மாதிரி இருந்தது, எட்டு ஒன்பது மணிநேர களைப்பு எங்களை சீக்கிரமாக
தூங்கவைத்தது.
காலை சுமார்
10 மணிவாக்கில் நயக்காரா ஸ்டேட் பார்க்கில் எங்கள் காரை பார்க் செய்தோம்,
நயக்காராவை மூன்று வகைகளில் பார்க்கலாம், நீர்வீழ்ச்சி
கொட்டும் இடத்திற்கு படகுசவாரி செய்யலாம், இன்னொரு இடத்தில் கொட்டும் நீர்வீழ்ச்சியில் நேரடியாக
குளிக்கலாம், எலிகாப்டரில் பறந்துசென்றும் பறவைக்கண் பார்வையில்
பார்க்கலாம், முதல் இரண்டு வழிகளிலும் நாங்கள் நயக்காராவை சந்தித்தோம், படகில் சென்று பார்ப்பதற்கு மேய்ட் ஆஃப்
தெ விண்ட் (MAID OF THE WIND) என்று பெயர், மேய்ட் ஆஃப் தெ மிஸ்ட்- என்பது அங்கு செல்ல பயன்படுத்தும்
படகின் பெயர், அதுதான் நம்மை நீர்வீழ்ச்சிக்குள்
நீந்தியபடி ஓட்டிச்செல்லும், அதற்கான டிக்கட்
எடுக்க கவுன்ட்டரில், நீண்ட ஆர்ப்பாட்டமில்லாத, ஒருத்தரை ஒருத்தர் முந்த வேண்டும் என்ற போட்டியில்லாத ஆரோக்கியமான வரிசையில்,
நாங்கள் மூவரும் போய் நின்றோம், எங்களுக்கு முன்னால் சீனா, ஜப்பான், கொரியா, பங்ளாதேஷ் இப்படி பல நாட்டினர் வரிசையில்,
டிக்கட் எடுத்துக்கொண்டு, மீண்டும் எலிவேட்டருக்கான
(LIFT) வரிசையில் நின்று, அதன் மூலம் நயக்காராவின்
படகுத்துறையில் இறங்கினோம்.
மேய்ட் ஆஃப் தெ மிஸ்ட் படகு மூன்று தளங்கள் கொண்டது, வெண்ணை மாதிரி வெள்ளை நிற
படகு, உயிரை துச்சமாக மதித்து சாகசம் செய்யும் தைரியசாலிகள் படகில்
கூரையில்லா மேல்தளத்திலும் பயணம் செய்யலாம், மிதமான தைரியசாலிகள்
நடுத்தளத்திலும், பயந்தாங்கொள்ளிகள் கீழ்த்தளத்திலும் பயணம் செய்யலாம்
என்று சொன்னான் என் மகன், யார் எந்த தளத்தில் பயணம் செய்வது என்று
இப்போது முடிவு செய்ய வேண்டும், நானும் என் மனைவியும் ஒருவரை
ஒருவர் பார்த்துக்கொண்டோம்.
படகை நோக்கி வரிசை நகர, நடுவில் ஒரு கவுண்டரில்
ஆளுக்கொரு நீலநிற பாலித்தீன் மழைக்கோட்டு கொடுத்தார்கள், எங்களுக்கு
முன்னால் இதனை வாங்கி அணிந்து கொண்டவர்கள் ராக்கெட்டில் பயணம் செய்பவர்களைப்போல நடந்தார்கள்,
சில மணித்துளிகளில் நாங்களும் சந்திரமண்டலத்து சிறப்பு உடையில் தயாராகி, நடந்து படகுக்குள் காலடி எடுத்து வைத்ததும்,
‘ஏங்க நாம் கீழ் தளத்துலயே போகலாம்ங்க’
என்று என் மனைவி சொல்ல, தைரியமாக நானும்
‘சரி’ என்றே சொல்லி பழக்கப்பட்ட நான், அடித்தட்டில் ஒரு இடத்தில் நான் ஒதுங்க எனக்கு பக்கத்தில் அவளும் என் மகனும்,
நீலச்சீருடையில் எல்லோரும் ஒருவர் ஒருவராக படகில் இறங்க, எங்களைச்
சுற்ற்லும் நிறைய்ய பேர்.
ஓடும் நயக்காரா நதியின் ஓரமாக நின்றிருந்த பனிப்பெண் ஆங்கிலத்தில்
மேய்ட் ஆஃப் தெ மிஸ்ட் அப்படியும் இப்படியுமாக தள்ளாடிகொண்டிருந்தாள், வெண்ணைக்குக்கு இறக்கை
முளைத்தமாதிரி சாண்டில்யனை நினைவுபடுத்தியவாறு ஏகப்பட்ட சீகல்ஸ்
எனும் கடல்புறாக்கள் பறந்துபறந்து படகைச் சுற்றிலும் மீன் வேட்டை ஆடின.
அந்த கரையில் கனடா,
கனடா எல்லையிலும் மேய்ட் ஆஃப் தெ மிஸ்ட், அங்கும்
ஜனங்கள், படகு வீட்டிலிருந்து
படகில் ஏறிக்கொண்டிருந்தார்கள், ஏற்கனவே இரண்டுபக்கம் இருந்தும்
புறப்பட்டுப்போன முந்தையப் படகுகள், இரண்டு
நீர்வீழ்ச்சிகளின் நீர்க்குகைக்குள் நுழைந்து, மறைந்து மீண்டும் வெளியே வருவதைப் பார்த்ததும் எங்களுக்குள் பயப்பிராந்தி மனசுக்குள்
பிறாண்டியது.
படகு புறப்பட்டது,
அதற்கு முன்னதாகவே எல்லோரும் கேமராவும் கையுமாக தள்ளாடி தள்ளாடி படம்
எடுக்க முயற்சி செய்துகொண்டிருக்க, படகில் நாங்கள் எல்லோருமே
நின்றுகொண்டுதான் இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிறேன், தூரத்து
நீர்வீழ்ச்சியின் நீர்த்திவலைகளை, தவணை முறையில் வாரிக்கொண்டுவந்த
காற்று எங்கள் முகத்தில் விசிறிவிட்டுப் போனது, காரணம் எங்கள்
முகம் மட்டும் சந்திரமண்டல உடைக்கு வெளியே இருப்பது நினைவுக்கு வந்தது, படகு அருகில் செல்ல செல்ல குளிர்ப்பனிவிசிறல் கூடுதலாகி இப்போது முழுவதுமாக குளிர்ப்பனிக்குகை மாதிரியான நீர்வீழ்ச்சிக்குள்
மெல்ல நுழைய, மகிழ்ச்சியும் மருட்சியும் சமபங்காக கலந்தபடி எங்கள்
இதயம், படகின் இயந்திரத்தைவிட வேகமாக தடதடத்தது, இப்போது இடைவெளி இல்லாமல் ஆக்ரோஷத்துடன் முரட்டுத்தனத்துடன், மூர்க்கமாக, பாறையாக குதிக்கும் நயக்காரா, எனக்கு பூபோன்ற முகமும் உண்டு என்று தன் குளிர்ப்பனிச்சாரலால் தனது இன்னொரு முகத்தை எங்களுக்கு அறிமுகம் செய்தது, அமெரிக்க நயக்காரா நீர்வீழ்ச்சியிலிருந்து வெளியே வந்து,
கனடாவின் குதிரைலாட நீர்வீழ்ச்சிக்குள் எங்கள் படகு நுழைந்தது,
இந்த நீர்வீழ்ச்சி பார்க்க குதிரை லாடம்போல அரைவட்டமாக தோன்றும்,
குதிரை லாட்த்திற்குள் நுழைந்ததும் எங்கள் பயம் தெளிந்து குளிர்
கூடியது, இந்த முறை கூடுதலான சந்தோஷத்தில் நனைந்துவிட்டு, மீண்டும் படகு வீட்டிற்கு வந்து இறங்கும்போது அத்தனை பயணிகள் முகங்களும் மகிழ்ச்சியில்
மலர்ந்திருந்தன.
படகுத்துறையிலிர்ந்து வெளியே வந்ததும் மேய்ட் ஆஃப் தெ விண்ட்
சிறப்பு ஆடையை
கழற்றி உதறி மடித்து நயக்காரா நினைவாக வைத்துக்கொண்டு எலிவேட்டரில் ஏறி மேலே வந்து,
பூங்காவிற்கு வந்தோம், அங்கு காப்புச்சீனோ காப்பி
ஒன்று குடித்தோம், ஒரு காப்பி வாங்கினால் மூன்றுபேர் வேண்டும்வேண்டாம்
என்று குடிக்கலாம், ஒரு காப்பி முக்காலிட்டருக்கு குறைவில்லாமல்
இருக்கும், அடுத்து கேவ் ஆப் தெ விண்ட் (CAVE OF THE
WIND) பயணம், எப்படி பெயர் வைக்கிறார்கள் பாருங்கள், கேவ் ஆப் தெ விண்ட்’ல் செல்ல, முன்னைபோல மூன்றுபங்கு தைரியம்
வேண்டும், சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதைப்போல நீர்வீழ்ச்சியை
நேரடியாய் சந்திப்பது, ரொம்பவும் சவாலான பயணம்தான் இது,
கரணம் தப்பினால் மரணம் மாதிரியாம் என் மகன் மிரட்டினான்,
முக்கால் லிட்டருக்கும் மேல் இருந்த காப்பியை மூன்றுபேரும் மாறிமாறி
குடித்தபடி, பேப்பர் லோட்டவை கையில் பிடித்தபடி, அந்த பூங்காவின்
மரங்களுக்கு ஊடாக நடந்தோம், கடற்புறாக்கள் எங்களை சுற்றிசுற்றி
வந்தன, கடல்புறாக்கள் காப்பிச்சீனோ குடிக்குமா ? தெரியவில்லை, அதைப்போலவே அருகில் இருந்த மேப்பிள் மரங்களிலிருந்து இறங்கிய மெகாசைஸ் அணில்கள்
புஷ்டியாக இருந்தன, கடற்புறாக்கள் மாதிரியே எங்களைச்சுற்றிசுற்றி
வந்தன,
சீகல்ஸ்’ஐ கடல் காக்கைகள் என்கிறார்கள், நம்ம ஊர் சீகல்ஸ்’களை சிறிய சைஸ்சில் பழவேற்காடு பகுதியில் ஆயிரக்கணக்கில் கூட்டம்கூட்டமாக வரும், காகங்கள்
மாதிரி எதைப்போட்டாலும் சாப்பிடாது, மீன் மட்டும்தான் சாப்பிடும்,
ரோஷமான கடல்புறாக்கள் ! நயக்காரா கடற்புறாக்கள்
வெண்ணைப்பந்து மாதிரி வழுவழு மொழுமொழு !
நயாக்ராவின்
குண்டு அணில்களுக்கு முதுகில் ராமர் போட்ட கோடுகள் இருக்காது,
சின்ன அணில்களுக்கு கோடுகள் இருக்கும், ரூல்டு
அன்ரூல்டு இரண்டுவகை அணில்களும் இங்கு இருக்கின்றன, ஆனால் அன்ரூல்டுதான்
அதிகம்.
‘கேவ் ஆஃப் தி விண்ட்’ க்கான வரிசையில் நாங்கள், நீலத்திற்கு
பதில் இங்கு மஞ்சள் நிற பாலித்தீன் சீருடை, அத்துடன் பச்சை,
வெள்ளை, கருப்பு நிறங்கள் கலந்ததாய் ஒரு ஜோடி ரப்பர்
செறுப்புகள் தந்தார்கள், வரிசை நகர்ந்தது, தனித்தனியாய் சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பதுதான் கேவ் ஆஃப் தி விண்ட்
என்று மீண்டும் ஒருமுறை பீதியைக் கிளப்பினான் என் பையன்.
இரண்டு பக்கமும் இரும்பு
கிராதிகள் போட்ட பாதுகாப்பான
இரண்டு அல்லது மூன்றுபேர் நடக்கும்படியான குறைவான அகலத்தில், மலையின் விலாப்புறத்தில் இறங்கிச்செல்லும் நடைபாதை, பாதையின்
இருபக்கமும் கடல் புறாக்களின் தேசம், ஆயிரக்கணக்கானவை,
முட்டைகள், குஞ்சுகள் குடும்பம் மற்றும் குடும்பமாக
பார்க்க முடிந்தது, எங்கள் பாதையின் இருபக்கத்திலும், நம்ம ஊராய் இருந்தால்
கொண்டுவந்து வளர்க்கலாம், ஆச்சர்யமான அபூர்வமான காட்சிகள்.
ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருந்து மரப்படிக்கட்டுகள், இதுதான் கிளைமேக்ஸ், சிங்கத்தை அதன் குகையில்
சந்திக்கும் காட்சி வரப்போகிறது, இருபுறமும் பற்றிப்பிடிக்க இன்னும்
பாதுகாப்பான இரும்பு கிராதிகள், இந்த படிக்கட்டுகள் ‘தபதப’ என நீர்
கொட்டும் நீர்வீழ்ச்சியின் ஊடாக செல்லுகிறது, ஒவ்வொரு
15 படிக்கட்டுகள் ஏறி பிறகும் ஒரு சதுரமான இடம், அங்கு கொஞ்சனேரம்
நின்று பயம் தெளியலாம், ஆசுவாசப்படுத்திகொள்ளலாம், அந்த சதுரத்தில் ஒரு
10 அல்லது 15 பேர் நிற்க முடியும், பாதுகாப்பாக மேலெ இருந்து முரட்டுதனமாகக்
கொட்டும் ஐய்ஸ்நீரில் குளிக்கலாம், அங்கிருந்து
மேலே 15 படிக்கட்டுகள் ஏறியபின் இன்னொரு சதுரம், இப்படியாக 6 சதுரங்கள், 6 வது சதுரம்தான்
சிங்கத்தை சந்திக்கும் கடைசி சதுரம், அதுதான்
ஹரிக்கேன்டெக் என்பது, அதுதான் உச்சகட்டம், மேலே இருந்து குதிக்கும் நீர்வீழ்ச்சி பாறைகளின்மீது குதித்து, ஓடும்போது சிதறும் நீர் இந்த படிக்கட்டுகளிலும் சதுரங்களிலும் சகட்டுமேனிக்கு
பட்டு சிதறும், மேலே
செல்லசெல்ல ரிஸ்க் அதிகம் ! த்ரில் அதிகம் ! ஹரிக்கேன்டெக் அளவிற்கு நீங்கள் போகவேண்டாம், நாங்களே
இங்கு முதலில் வந்தபோது அங்கு இரண்டு நிமிடம்தான் நின்றோம், அதற்குமேல்
எங்களால் தாக்குபிடிக்கமுடியவில்லை, ஹரிக்கேண்டெக் போகாமலே
4 அல்லது 5 வது சதுரத்தோடு திரும்புவது பாதுகாப்பானது,
இது எனது மகனின் ஆலோசனை.
என் மகனின் கூடுதலான கவனத்திற்கு கரிசனத்திற்கு ஒரு காரணம் உண்டு,
ஒரு வெளை வீசி அடிக்கும் ஐஸ்தண்ணீரின் வேகத்தால்
நாங்கள் தடுமாறி சதுரத்திலேயே கீழே விழுந்துவிட்டால்கூட, பிறருடைய
உதவி இல்லாமல் எங்கள் இரண்டு பேராலுமே எழுந்து நிற்க முடியாது, நாங்கள் இருவருமே
பழுதுபட்ட உடம்புக்கார்ர்கள், என் மனைவிக்கு முட்டி பிராப்ளம்,
எனக்கு தொடை எலும்பு முறிவுக்காக உள்ளே நட்டு போல்ட்டு இன்னும் உள்ளே
எடுக்கப்படாமல் உள்ளது, அவை வெளியே வந்துவிடக்கூடாது, காலை மடக்கக்கூடாது,
கீழே உட்காரக்கூடாது.
இதை எல்லாம் யோசித்தபடி முதல் சதுரத்தில் நின்றோம், சந்தோஷமாய் இருந்தது, தெறித்து விழுந்த
நீர் கொத்துகொத்தாய் ‘குபீர்குபீர்’ என விழுந்து வயிற்றை, கலக்கியது, எங்கள் முதுக்கு பின்னால்
நுங்கும் நுரையுமாக நயக்காரா, அடுத்த சதுரத்தில் போய் நின்றதும் மீண்டும் படிக்கட்டுகள், பலமான அர்ச்சனை, மூர்க்கமாக வீசும் காற்று ஒருபக்கம்,
அடுத்த செட் படிக்கட்டுகள், இடுப்பு உயரம் வரை
இரண்டுபக்கமும் மூன்று இரும்பு கிராதிகள், எங்கள் பாதுகாப்புக்காகவும் பிடிமானத்திற்காகவும், எங்களுக்கு முன்னாலும் பின்னாலும்
எங்களைவிட வயது குறைவான வயதுடைய வர்கள், இந்த முறை எங்கள் தலைக்கும் சமமான உயரப் பாறையில் விழுந்த
நீர் கூடுதலான ஆக்ரோஷத்துடன் வெடித்துச் சிதறி சுளீர்சுளீர் என நீர்ச்சாடையாக, எங்களைத்
தாக்கியது, ஆறாவது தளம் முடிந்தால் போகலாம் இல்லை
என்றால் வேண்டாம் என்று ராஜா, என்மகன் எச்சரித்த தளம்.
என்னைவிட என் மனைவி தைரியமாக கடைசி தளம் – ஹரிக்கேண்டெக்கிற்கு செல்லலாம்,
என்று சொல்லிவிட்டு எங்கள் பதிலை எதிர் பார்க்காமல் முன்னால் படிகட்டில்
ஏற ஆரம்பித்தாள், முண்டியடித்தபடி நான் முன்னால் ஏற என்மகன் எங்கள்
எல்லோருக்கும் பின்னால், அவனுக்கும் பின்னால்
வேறு சிலர்,
நாங்கள் ஒன்று,
இரண்டு என மூன்று சதுரம் வரை சென்று விட்டோம், ‘இத்துடன் திரும்பிவிடலாம்’ என்றான் என் மகன்,
அந்த மூன்றாவது சதுரத்தில் எங்களையும் சேர்த்து ஒரு பத்து பேர் இருந்திருப்போம்,
நானும் சரி என்றேன், எனக்கும் அது சரி என பட்டது,
இதுதான் ‘கேவ் ஆஃப் தி’ விண்ட்’, இப்படியாக
6 சதுரங்கள், ஆறாவதுதான் ‘ஹரிக்கேன்டெக்’,
நயாகாரா பயாகாரா’ வாக மாறும் இடம். இப்போது நாங்கள் வெற்றிகரமான ஆறாவது
சதுரம் ஹரிகேன்டெக்கில், இப்போது நாங்களும் இரண்டு ஜப்பான்
கார்ர்களும்தான், நயக்காரா இப்போது பயாக்ராவாக மாறி எங்கள்மீது தண்ணீர்
கூடாரமாகக் கவிழ்ந்து தன் அசுர பலத்துடன் ஹரிகேன்டெக் எங்களோடு
கைகுலுக்கியது, சுமார் பத்து நிமிடங்களுக்குப்பிறகு ஹரிக்கேன்டெக்கிடம்
விடைபெற்றோம்.
No comments:
Post a Comment