Sunday, April 19, 2020

நாய்க்கார சீமாட்டி - சிறுகதை NAIKARA SEEMATTI - SHORT STORY



ஞானசூரியன் கதைகள்

(சில கதைகளின் தோள்மீது மட்டும்தான் கைபோட்டுக்கொண்டு ஜாலியாய் நடந்து போகலாம். அதுபோன்ற வகையறாவைச் சேர்ந்த கதை இது)

நாய்க்கார சீமாட்டி - சிறுகதை 

NAIKARA SEEMATTI - SHORT STORY

'உங்க பேரு…?" 
'சுமதி….”
'அப்பா   பேரு….?" 
'ராகவன்…”
'அம்மா…?" 
'லட்சிமி…"
'மிஸ்…. சுமதி உங்களுக்கு தாத்தா பாட்டி…?"
'குத்துக் கல்லாட்டம் இருக்காங்க…”
'வயசு என்னா இருக்கும்…?"
'ம்தாத்தாவுக்கு பதினேழுபாட்டிக்கு பதினாறுஎன்ன சார் வெளையாட்றீங்களா…?  எனக்கு என்ன இன்டர்வியூவா நடத்துறீங்க…? உங்க நாய்ப் பண்ணையில நாய்க்குட்டி வாங்க வந்த கஸ்டமர் நான்" சுமதியின் மூக்கு நுனியிலிருந்து கோபம் துள்ளிக் குதித்தது..
'ஐயாம்….சாரி மிஸ்  சுமதிஉங்களோட பேமிலி பேக்ரவுண்டபேமிலி மெம்பர்ஸ்ஸ்டேட்டஸ்.. இதெல்லாம் வச்சித்தான் உங்களுக்கு என்ன நாய் தேவை …? –ன்னு சயன்ட்டிபிக்கா தீர்மானிக்கிறோம். ட்ரை டு அண்டர்ஸ்டேண்ட் மீ"
'ஐயாம் சாரி.." 
இப்போது நாம் இருப்பது பைரவர் நாய்ப்பண்ணை. சுமதியிடம் பேசிக் கொண்டிருந்தவர்  நாய்ப்பண்ணை மேனேஜர் ராஜா. 
ராஜா சாதாரண மேனேஜர் அல்ல. துருவக் கரடியிடம்கூட ஐஸ்கிரீம் விற்றுவிடும் அசகாய சூரன். யாராவது இங்கு வெயிலுக்கு வந்து ஒதுங்கினால்கூட அவர் தலையில் ஒரு நாய்க் குட்டியை கட்டிவிடுவான்.
வடநாட்டிலிருக்கும் பல நாய்ப் பண்ணைகளுக்கும்கூட இங்கிருந்து மொத்தமாகவும் சில்லரையாகவும், நாய்கள் அவ்வப்போது அனுப்பி வைக்கப் படுகிறது. தொடங்கிய பத்தே வருஷத்தில் பைரவர் பண்ணை  பிரபலமாகிவிட்டது. இதற்குக் காரணம் நம்ம ராஜாதான்.
இந்தப் பண்ணைக்கு நூற்றுக் கணக்கில் வந்து போகும் கஷ்டமர்களில் ஒருத்திதான் சுமதி.  இதைத்தவிர ஏதும் நமக்குத் தெரியாது. ஆனால் தோற்றத்தை வைத்து சிலவற்றை அனுமானிக்கலாம். 
கழுத்துக்கு கீழே இருந்த மச்சத்தையோ மற்றவற்றையோ சொன்னால் விரசம். அஜந்தா எல்லோரா என்றால் அது எழுத்தாளர் கப்ஸா ஆகிவிடும். 
 
ஆனால் இப்படி சொல்லலாம். மேற்படி ஊர்வசியே நேரில் இறங்கி வந்தாலும், எந்த நாய் வேண்டும் என்ற ஒரே கேள்வியை மட்டுமே கேட்கக் கூடிய ராஜாவே கொஞ்சம் தடுமாறும்படியான அழகு. ப்ளஸ் ஒரு வசீகரமான அலட்சியம். இவற்றின் சம பங்கான கலவைதான் சுமதி.
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணிருக்க வேண்டும். கொஞ்சம் அவர்களை கவனிப்போம்.
'சார் எனக்கு போமரேனியன் வேணும்ணு மொதல்லியே சொல்லிட்டேன்"
'மிஸ்சுமதியு  ஆர்  ரைட்…. ஆனா நீங்க இன்னும் கொஞ்சம் விவரமெல்லாம் சொல்லியாகணும்"
'என்னது…? எங்க பாட்டியோட வயசா ….? 
ராஜா இதற்கெல்லாம் ரோஷப்படும் ஜாதி இல்லை.
அவன் போமரேனியனில் ஆரம்பித்து ராஜபாளையம், கோம்பை சிப்பிப்பாறை, இதர இந்நிய, அகில உலக நாயினங்கள்  அவற்றின் பழக்க வழக்கம், வளர்ப்பு முறை பற்றியெல்லாம் பேசிக் கொண்டே போனான்.
இவன்  மாஸ்டர் ஆஃப் டாக்ஸ்" படித்திருப்பானோ…? என்று கூட சுமதிக்குத் தோன்றியது. 
இப்போது ஆபீஸ் அறையிலிருந்து இருவரும் பண்ணைக்குள் இறங்கி நடந்தனர். 
நிழல் கவிந்த பண்ணையில் மூன்று வரிசையாய் நாய் வீடுகள். இடையிடையே தீப்பிடித்த மாதிரி, மயில்கொன்றை மரங்கள் பூத்திருந்தன. வழிநெடுக பணியாளர்களின் மரியாதை…. ராஜாவுக்குத்தான்.
'போமரேனியன் எங்க வச்சிருக்கீங்க…?" அவள் போரேனியன் மீது குறியாய் இருந்தாள்.
'அங்கேயும் நாம் போகத்தான் போறோம்இதப் பாருங்க ரொம்ப பெரோசியஸ்கோம்பை…'
'சீ….”
'அடுத்த காட்டேஜ்ல சிப்பிப்பாறைஎதுத்தாப்புல ராஜபாளையம்
இங்க பாருங்க இந்த காட்டேஜ்ல  ஏ.சி.  ;பண்ணியிருக்கோம்….”

'உங்க ஆபிஸை இங்க வச்சிக்கிட்டா ரொம்ப நல்லா இருக்பும் சார்…”
'நோநோ அடுத்த வாரம் ஆஸ்ட்ரேலியாவிலிருந்து ஒரு புது நாய் வருது. அதுக்குத்தான்….
'சார் போமரேனியன் காட்டேஜ் ரொம்ப தூரம் போகணுமா…?"
'இப்போ அங்கதான் போயிட்டிருக்கோம்.  இங்க பாருங்க இதுதான்   ஆஸ்ட்ரோஇண்டி"  புதுசு. இங்க கண்டுபிடிச்சது. ஆஸ்ட்ரேலியா  இந்தியா கிராஸ்"
அந்த இடம் புழுதியில்லாமல் இருந்திருந்தால், சுமதி மயக்கம் போட்டு விழுந்திருப்பாள். 
சுமதி மெதுவாகக் கேட்டாள். போமரேனியன் உங்ககிட்ட இல்லியா…?"
'அவசரப்படாதீங்க   மிஸ்…”
சுமதி அமைதியாக நடந்தாள். 
இதுதான் ஆப்ரி கோம்பா ரேபிஸ் வராத இனம். ஆப்பிரிக்கன்  கோம்பை கிராஸ்.; எங்க புராடக்ட்... இன்னும் சோதனையில இருக்கு…. இது மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சினாஒரே நாள்ல கெடைச்சிடும் எங்களுக்கு இண்டர்நேஷனல் ரெகக்னிஷன்.
கங்கிராட்ஸ் உங்களுக்கு கண்டிப்பா கெடைச்சிடும் சார்…”
'தேன்க் யூஇதப்பாருங்க போமரேனியன்….”
சுமதி அவசரமாக அந்த காட்டேஜ் --க்குள் ஓடினாள்….போமரேனியன்கள் பூப்பந்துகளாக உருண்டு கொண்டிருந்தன. ஒவ்வொன்றாகப் பார்த்தாள்.
எல்லாம் பார்த்துவிட்டு இப்போது இருவரும் மீண்டும் ஆபிஸ் அறைக்குள் வந்து உட்கார்ந்து விட்டார்கள்.
இனி பிடித்த நாய்க்குட்டிகள்விலைபில்பணம்இத்யாதி ஆரம்பமாகும்.
தன்னுடைய பணியை ஒரு ஒழுங்காக முடித்துவிட்ட திருப்தியில் ராஜா சாய்ந்து உட்கார்ந்தான்..
சுமதி எதற்கோ சந்தோஷப்படுவது தெரிந்தது.
பரவால்ல மிஸ்நீங்க போமரேனியனையே எடுத்துக்குங்கஆனா இதெல்லாம் சொல்ல வேண்டியது என்னோட கடமை….”
தேன்க் யூ வெரி மச்ஆனா…?
'டோண்ட்  பீ நெர்வஸ்எனக்குத் தெரியும்…. உங்களுக்கு ஓரேஒரு போமரேனியன் வேணும்ரொம்ப சிம்பிள்  கமான் டெல் மீ…”
'அதுக்கு இல்ல சார்…. எங்க வீடு பக்கத்து தெருவிலதான் இருக்கு….”
'ஈஸ்இட்…?     சீ …!"
'ஆமா  சார் …. ரெண்டு நாளைக்கு முன்னாடி எங்க போமரேனியன் நாய்குட்டி ஒண்ணு காணாமப் போயிடுச்சி… "
டோண்ட் வர்ரி எங்க பண்ணை நாய்ங்க ராசியானது…. வாங்கிட்டுப் போங்க…. கண்டிப்பா காணாமல் போகாது….”
'அது இல்லசார். …. இந்த மாதிரி தொலைஞ்சிப் போன நாயெல்லாம் புடிச்சி உங்க பண்ணையில வித்துடறதா கேள்விப் பட்டேன். அதான் உங்க பண்ணையிலஎங்க போமரேனியன் இருக்கான்னு பாத்துட்டு  போலாமுன்னு … 
மடேல்என்ற சப்தம்…. ராஜா சுழல் நாற்காலியோடு சுய நினைவின்றி கீழே விழுந்தான்… 
கொஞ்ச நேரத்திற்குப் பின்னர் மாப்பிள்ளை வினாயகர் சோடா உடைத்து ராஜா முகத்தில் தெளித்தபோது எழுந்துப் பார்த்தான். காலியாக இருந்தது சுமதி உட்கார்ந்திருந்த நாற்காலி.

 


 

 





1 comment:

Yasmine begam thooyavan said...

வித்தியாசமான கதை அதில் ஒரு திருப்பம். முடிவில் நகைக்க வைத்துவிட்டது. அருமை சார்.

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...