Sunday, April 19, 2020

நாடு ரொம்ப கெட்டுப் போச்சி - சிறுகதை NAADU ROMBA KETTUP POCHI - SHORT STORY




ஞானசூரியன் கதைகள்

(இந்த உலகில் நல்லவனாக இருக்கவிரும்புபவன் ஒரு சர்க்கஸ்காரனைவிட சாமர்த்தியசாலியாகவும் இருக்க வேண்டும் என்று சொல்வதுதான் இந்த கதை. ஆனாலும், 'உண்டாலம்ம இவ்வுலகம்.")

நாடு ரொம்ப கெட்டுப் போச்சி - சிறுகதை 

NAADU ROMBA KETTUP POCHI - SHORT STORY


             மதுரைக்கு ஆல் இண்டியா ரேடியோ வந்த பிறகு, பிரபலமானது லேடி டோக் காலேஜ். பிரபலமான அளவுக்கு போக்குவரத்து ஜாஸ்தி இல்லாத ரோடு. அப்படி நடந்திருந்தால் இப்படி நடக்திருக்குமோ…?

      ஆட்டோ, லாரி, கார், பஸ், (ஸ்கூல் பஸ் மட்டும்), இதில் ஏதோஒன்று பட்டப்பகல் பன்னிரண்டு மணிக்கு வெட்ட வெளிச்சத்தில்,  நட்டநடுரோட்டில் கால்நடையாய் வந்த 25 –லிருந்து  28 வயசு சொல்லும்படியான, பார்க்கக் கொஞ்சம் லட்சணமாயிருந்த, ஒரு அப்பாவி ஆசாமியை அடித்து சாய்த்துவிட்டு, சுவடு தெரியாமல் நழுவிவிடுவது என்றால் மற்ற இடத்தில் முடியுமா…? 

      ஆடிபட்ட ஆள் சரியாய் பி.எஃப். குவார்ட்டர்ஸ் எதிரில் லேடி டோக் காலேஜ் காம்பவுண்ட் ஓரமாய் அனாதையாய் கிடந்தான். 

      முன் நெற்றியிலும் கைமுட்டியிலும் சிராய்ப்பு. ரத்தம் லேசாய் பொங்கியது. வெளிக்காயம் ஏதும் இல்லை. உள்அடியாய் இருக்கலாம்.

      அடிபட்டு ரொம்பநேரம் ஆகியிருக்க முடியாது. நல்ல வேளையாக பின்னாலேயே இந்த மாருதி வேன்காரர்வந்து பார்த்துவிட்டு, அக்கம் பக்கத்திலுள்ளவர்களை ( பி.எஃப். குவார்ட்டர்ஸ்சிலிருந்து.) அழைத்து, கொஞ்சம் முகத்தில் தண்ணீர் தெளித்து, வாயிலும் புகட்ட, அங்கு பத்திருவது பேராய் கூட்டம் கூடி அவன் யார்…? எந்த ஊர்…? –என்று கண்டுபிடிக்க முயற்சித்து தோல்வியடைந்து, -  என்னுடைய வேனிலேயே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டுபோகலாம்என்று மாருதி ஆம்னிவேன் காரர் சொல்லியும், சிலர், போலீசுக்குசொல்லாமலா..? இதில் சட்ட சிக்கல்வருமா..? என்றெல்லாம் குழப்பியது போக, இடித்துத் தள்ளியவன் தருமஅடிக்கு அகப்படாமல் போனதுக்காக சிலர் வருத்தப்பட்டார்கள்.

      அப்போதுதான் செயின்பாண்டி அங்கு வந்தான். பீபி குளத்திலிருந்து, கோரிப்பாளையம் வரை செயின்பாண்டி பிரபலம். எப்போதும் ஒரு சைக்கிள் செயின் இடுப்பில் இருக்குமாம். செயின்பாண்டி. அவனுடைய அதிகார எல்லையில், இம்மாதிரி நல்லதோ கெட்டதோ எது நடந்தாலும், அவனுக்கு மூக்கில் வியர்க்கும்.

      இரண்டு மூன்று பேராக சேர்ந்து, அடிபட்ட அந்த ஆளை காரில் ஏற்றி, பின்சீட்டில் படுக்கவைத்து, ஒருவர் கால் பக்கமும், இன்னொருவர் தலைப்பக்கமும் அமர, ஆம்னியை ஸ்டார்ட் செய்ய ஒருகுரல் பலமாக கேட்டது. 

      'நிறுத்துங்கப்பா வண்டியெஎன்ன வெளையாட்றீங்களா…? இப்போ அவம்பேர்ல யாரு இடிச்சான்னு தெரிஞ்சாகணும்…" செயின்பாண்டி.

    தோ பாருங்க சார். மொதல்ல அந்த ஆளை காப்பாத்தலாம். யாரு இடிச்சதுன்னு அப்புறம் பாத்துக்கலாம். அமைதியாகச் சொன்னார் ஆம்னிரவி. 

      'நீ என்ன அப்பொறமா பாக்குறது…?  நீ என்ன போலீசா…?" 

      'அதுக்கு இல்லபோலீஸ் வந்து அப்பொறமா ஹாஸ்பிட்டலுக்கு  கொண்டு போறதுக்குள்ள ஏதாவது ஒண்ணு ஆயிடுச்சின்னா…?" 

     ஆயிடுச்சின்னா என்னா…?  நீ ஒம்பாட்டுக்கு காரை ஓட்டிக்கிட்டு போயிடுவெ. கச்சேரிக்கு நானுல்ல நாயா நடக்கணும்….அதுசரி இவ்ளோ அக்கறையா ஆஸ்பத்ரி ஆஸ்பத்திரின்னு துடிக்கறியேநீஎன்னா அவனுக்கு மாமனா…?  மச்சானா…?”

     மாமனும் இல்ல மச்சானும் இல்ல மனுஷன்…” என்றார் ஆம்னி.

      ஆனாலும் அங்கு அந்த பத்து பதினைந்து பேரில் செயின் பாண்டி முக்கியமான ஆளாகிவிட்டான். அவன் முகத்தில் அடாவடித்தனம் அடிக் கோடிட்டிருந்தது.

    'ஒலகத்துல மழைமாரி ஏம்பேயலேன்னு இப்பொத்தான் புரியுது.செயின்பாண்டி காதுக்கு கேட்காமல் கேட்டுவிட்டு புறப்பட்டார்--- கூட்டத்தோடு கூட்டமாயிருந்த பெரியவர் ஓருத்தர்.

      இப்போது, அங்கு நமக்கெதுக்கு வம்பு…?:”  என்று போனவர்கள் போக நாலைந்து பேர்கள் மீதியாய் வேடிக்கை பார்க்கும் தோரணையில் ரோட்டோரத்தில் அங்கு அடித்த வெயிலில் லேடி டோக் பொகைன்வில்லா நிழலில் தலையை சாய்த்துக் கொண்டு நின்றார்கள்.

      ஒருசிலரை நமக்கு பார்த்த அந்தக்கணமே பிடிக்காமல் போய்விடும். சிலரை பிடித்துவிடும். சாமுத்ரிகா லட்சணம். இதில் முதல் டைப் செயின்பாண்டி. இரண்டாவது டைப் ஆம்னிரவி. 

      செயின் பாண்டியன் அலட்டல்கள், அடாவடித்தனம். மிரட்டல்கள், சவால்கள் இவை அத்தனைக்கும், பொறுமையாக ரவி பதில் சொல்ல செயின் பாண்டியே அலுத்துப் போய், அவனும், அவன்சஹாவும்,; ஏறிக் கொள்ள ஆம்னி புறப்பட்டது ஹாஸ்பிட்டலுக்கு.

      காலையில் நாஸ்தா சாப்பிடாமல் வெளியில் கிளம்பியது. பெல்ட்டை இறுக்கிக் கட்டினான் செயின்பாண்டி. எல்லாம் விதிதானென்று நினைக்க தெய்வம் ஒன்று நினைத்தது. டாக்டரே சொல்லிவிட்டார். அடிபட்டவனுக்கு வெறும் அதிர்ச்சிதானாம். அடிபட்ட ஆசாமி மயக்கம் தெளிஞ்சி, இந்நேரம் வீட்டுக்கே போயிருந்தாலும், போயிருப்பான். இந்த ஆம்னிகாரன், டாக்டரிடம் தஸ்புஸ்சென்று இங்கிலீசில் பேசிவிட்டு, ஹாஸ்பிட்டலில் பெட்டி பெட்டியாய் தடுத்திருந்த ஏதொஒரு புறாக்கூண்டு அறைக்குள் புகுந்துக்கொண்டான். இன்றைக்கு எப்படியும் ஒரு பெரிய நோட்டாவது தேறும் என்று நினைத்த செயின்பாண்டியின் எண்ணத்தில் குதப்பிய நிஜாம் லேடி புகையிலைக் கிறுகிறுப்பில். குருவிக்காரன் சாலையில், எம்.எம். வறாஸ்பிட்டல் எதிரில் அங்கு வேலை செய்யும் வாட்ச்மேனா…? என்று சந்தேகிக்கும்படியாக, குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தான். இது தேறாத கேசுப்பா நீ வேணும்ணா இருந்து பாத்துட்டு வா…”   என்று நக்கலாய் சொல்லிவிட்டு  நடந்தான் செயின் பாண்டியின் கூட்டாளி. 

      'செயின்பாண்டிஉன்னத்தாம்பா ஜெயின்பாண்டி…" 

      அவன் திரும்பினான். ஆம்னி;காரர் . வறாஸ்பிட்டல் வாசலில். 

      'என்னப்பாபாக்கறே…?  உன்னத்தான்…"

      'என்னையா…? தோ வந்துட்டேன்…."

    இந்தாஇத வச்சுக்கநூறு ரூபாய் சலவை நோட்டு மொடமொடப்பு குறையாததுபோய் நாஸ்தா சாப்பிடு…” 

      செயின்பாண்டியின் கண்களில் -- சந்தோஷம் -- ஆச்சரியம்

      'என்னப்பா நின்னபடியே தூங்கறே…?  தூங்கறதே தூங்கற ஒரு ஓரமா நின்னு தூங்கக் கூடாது…?"  என்று ஹாஸ்பிட்டலிலிருந்து வெளியே வந்த ஒருவர் இறைய, செயின் பாண்டிக்கு தான் கண்டது கனவு என்று புரிந்த போது. அவன்பேரிலே அவனுக்கு இரக்கம் வர ஒரு ஓரமாய் ஒதுங்கினான்.

      பேசாமல் அந்த வேன்காரரையே பார்த்து, லேசாக தலையை சொரிந்தால்கூட போதும். ஐந்து ரூபாயை தூக்கி வீசி எறிவான். சின்ன வயசானாலும் பெரிய மனுசன் குணம் என்று நினைக்கும்போதே, தோ சப்தம் கேட்க, திரும்பிப்பார்த்தான். போலீஸ் ஜீப்.

      இன்ஸ்பெக்டர் மாதவன் ஜீப்பிலிருந்து இறங்க. நல்ல வேளை. இவனை கவனிக்கவில்லை. இந்த வட்டாரத்தில் எல்லா ஸ்டேஷனுக்கும் செயின்பாண்டி பிரபலம். போலீஸ்காரர்கள் கேஸ் கிடைக்காத காலத்தில் சும்மாவேகூட இவனிடம் விஷயத்தைச் சொல்லி, கூட்டிக் கொண்டு போய் கேஸ் போடுவார்கள். அப்போது இவர்களே கூட இவனுக்கு ஐந்து பத்து என்று சம்திங் கொடுப்பார்கள்.  டிப்பார்ட்மெண்டில், இப்படி பலபேருக்கு அவன் மனசார உதவியிருக்கிறான். 

      சப்இன்ஸ்பெக்டர் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைய. இவனுக்கு மின்னலாய் ஒரு யோசனை. சப்இன்ஸ்பெக்டரைக் காட்டி ஒருமிரட்டு.  மிரட்டினால் என்ன ? ஆம்னி;காரன் அசந்து ஆடிவிடுவான்.

      ஒரு புறாக்கூண்டு அறை கால்வாசி திறந்த கதவு. ஆடிபட்டவன் குத்துக் கல்லாய் இவன் எதிர் பார்த்த மாதிரியே  உட்கார்ந்திருக்க   தலைமாட்டில் ஆம்னி., சலவை நோட்டு நம்பிக்கை நட்சத்திரம், எதிர்ப்   புறத்தில் யாரோ ஒருத்தர். கதவு இன்னும் கொஞ்சம்திறந்தால் அந்த நந்தி யார் என்று தெரியும். செயின்பாண்டி கதவோரமாய் நின்றான். உள்ளேயிருந்து அவர்கள் பேசியது தெளிவாகக் கேட்டது.

     சாரி என்னோட வேன்லதான் நீங்க அடிபட்டீங்கன்னு அப்பொ  நான் சொல்லியிருந்தா …? உங்கள உடனே ஹாஸ்பிட்டல்ல  சேர்த்திருக்கவும் முடியாது. தரும அடிக்கு நானும் என் வேனும்; தப்பியிருக்க முடியாது. அதனாலத்தான், நானே கூட்டத்தக் கூட்டி, அந்தக் கூட்டத்துல இப்படீ ஒரு பொய் சொல்ல வேண்டியதாப் போச்சி” 

      டடா செயின்பாண்டி பொய்யாக சொன்னது, நிஜமாகிவிட்டது. வேன்காரன் இனி தப்பமுடியாது. இவன்தான் ஐவிட்னஸ். காதுக்குள் சலவை நோட்டுக்கள் மொடமொடத்தது. 

    எம்பேர்லதான்  தப்பு. நான் திடுதிப்புன்னு ரோட்டை கிராஸ் பண்ணதாலதான் இப்படி ஆச்சி. உங்களுக்குத்தான் ரொம்ப சிரமம். அந்த ரோட்ல அப்பொ யாருமே இல்லாததுக்கு நீங்க பாட்டுக்கு போயிருந்தாக்கூட, யாருக்கு என்னா தெரியப் போகுது…?  நாந்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்என்றான் அடிபட்டவன்.

      காரியத்தை கெடுத்து விட்டான். எல்லாம் குட்டிச்சவர். பிழைக்கத் தெரியாதவன். தெரிந்திருந்தால் இப்படி அடிபட்டு ரோட்டில் அனாதையாக கிடந்திருப்பானா…? வேன்காரன் எப்படியோ தாஜா பண்ணிவிட்டான். ஆனால் இன்னும்கூட ஒன்னும் குடி முழுகிவிடவில்லை. இப்போது அவனுக்குத் துருப்புச் சீட்டே சப்--இன்ஸ்பெக்டர்தான். வேன்காரன் வேண்டுமானால் அவனை ஏமாற்றலாம். ஆனால் இவனை செயின் பாண்டியை எந்தக் கொம்பனாலும் ஏமாற்ற முடியாது. செயின்பாண்டி ஒரு     முடிவுக்கு வந்து விட்டான்.

      லேசாக கதவில் கை வைத்துத்தள்ள, சப்தமில்லாமல் அது உள்ளே போக அடிபட்ட ஆசாமிக்கும் வேன் காரனுக்கும் எதிரில் நந்தி இன்ஸ்பெக்டர் மாதவன். செயின்பாண்டி வயிற்றுக்குள் ஐஸ் பந்து. தலையை வெளியே இழுத்துக் கொண்டான். 

      சப்இன்ஸ்பெக்டர், “மிஸ்டர்ரவி, நீங்களே எனக்கு போன்பண்ணி என்னோட வேன்ல ஒருத்தர் அடிபட்டுவிட்டார் என்று சொன்ன ஒடனே நான் டாக்டருக்குப் போன் பண்ணேன். அவர் பேஷண்ட்டுக்கு அதிர்ச்சிதான்ன்னு சொன்னதும் எனக்கு நிம்மதி. அங்க என்ன நடக்குதுன்னு டாக்டருகிட்ட விளக்கமா சொன்னதா சொன்னாரு. உங்க பிரசன்ஸ் ஆப் மைன்ட், ரொம்ப பாராட்டணும். விபத்து நடந்த எடத்துல யாருமே இல்லாம இருந்தும், நீங்களே கூட்டத்தைக் கூட்டி. அவுங்களோட ஒத்துழைப்போட இங்க கொண்டு வந்தது: சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தது: நீங்களே போன்பண்ணி போலீசுக்கு தெரிவிச்சது: யூ ஆர் கிரேட்: உங்கள நேரடியா பாராட்டறதுக்குத்தான் நான் இங்கு வந்தேன்" 

      செயின்பாண்டி எட்டிப் பார்த்தான். சப்--இன்ஸ்பெக்டர் ஆம்னியின்; கையை குலுக்கிக் கொண்டிருந்தார். 

    அவரு வேன்ல இடிப்பாராம். அதுக்கு இவரு கை குலுக்குவாராம். இந்த ஆளெல்லாம் ஒரு சப்--இன்ஸ்பெக்டரு. சே நாடு ரெம்ப கெட்டுப் போயிடுச்சி…” என்று சொன்னவாறு எம்.எம். வறாஸ்பிட்டலைத் தாண்டி நடந்துக் கொண்டிருந்தான் செயின்பாண்டி…”            ;        


                  
                
  
    


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...