மந்திரி வீட்டு நாய் கடிக்குமா ?
நகைச்சுவை மேடை நாடகம்
THE MINISTER'S DOG -
HUMOROUS STAGE PLAY
-
(ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்காவ் அவர்களின் ‘பச்சோந்தி” என்னும் சிறுகதையை தழுவியது)
நாடக ஆக்கம்; தே.ஞானசூரிய பகவான், ஆசிரியர்,
விவசாய பஞ்சாங்கம்
(1988
ம் ஆண்டு மதுரை வானொலி நிலையத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் “மந்திரி வீட்டு நாய் கடிக்குமா ?” என்னும் மேடை நாடகமாக
நடத்தப்பட்டது.
அந்த ஆண்டு மதுரையில் நடந்த நாடக விழாவில் மேடை நாடகங்களுக்கான
போட்டியில் முதல் பரிசு பெற்றது.
பின்னர் மதுரை நகைச்சுவை மன்றம், மதுரை தியகராயர் கல்லூரி
மற்றும் பல இடங்களில் மேடை நாடகமாக நடத்தப்பட்டது.
ஒரு மேடை நாடக எழுத்தாளனாக எனக்கு முதன் முதலாக வெளிச்சம் போட்ட
நாடகம் இது.
அதைத்தொடர்ந்து கவுரவமாக ஒரு கொள்ளை, மரை கழன்ற மனிதர்கள் போன்ற
இரண்டு மேடை நாடகங்களை எழுதி நடத்தினேன். எல்லா நாடகங்களுக்கும்
நல்ல வரவேற்பு கிடைத்தது.
மதுரையில் பல இடங்களில் இந்த நாடகங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன)
காட்சி 1
இடம்: உழவர் சந்தை
பாத்திரங்கள்: 1. இன்ஸ்பெக்டர்
2. போலீஸ்கார்ர் 3. நாவல் பழம் விற்பவர்
நிலை:
உழவர் சந்தையில் விவசாயிகள் காய்கறிகள், பழங்கள், கிழங்குகள்,
கறிவேப்பிலை, கொத்துமல்லி, போன்றவற்றை விற்பனைக்காக ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். போலீஸ்காரர் ஒருத்தர் கடைகளுக்கு ஊடாக நடந்து வருகிறார். அவர் வரும் வழியில் ஒரு விவசாயி நாவல் பழ கூடையை வைத்துக்கொண்டு ஒருத்தர் நின்றுகொண்டிருந்தார்)
நேரம்:
காலை சுமார் 9.00 மணி அளவில்
8888888888
போலீஸ்காரர்: யோவ் என்னய்யா பண்ற ? எல்லாரும் நடக்கிற வழியில் நந்தி மாதிரி
நின்னுக்கிட்டு என்னய்யா பண்ற ?
நாவல்பழ விவசாயி:
நான் ஒரு ஓரமாத்தானய்யா நிக்கறேன்.
போலீஸ்காரர்: ஓகோ அப்படின்னா நான் பொய் சொல்றேன் அப்படித்தானே ?
நாவல்பழ விவசாயி:
இல்லய்யா நீங்க பொய் சொல்றீங்கன்னு சொல்லலய்யா.
போலீஸ்காரர்: அப்படின்னா நீ பொய் சொல்லணும்…
நாவல்பழ விவசாயி: இல்லய்யா உங்களுக்கு எப்படி
பதில் சொல்றதுன்னு தெரியலிங்க எஜமான்..
போலீஸ்காரர்: போலீஸ்காரங்க கேட்டா
கரெக்டா பதில் சொல்லணும். இப்படி வழவழா கொழகொழான்னு பதில் சொல்லக்கூடாது
தெரியுதா ? வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு பதில் சொல்லணும்.
சரி கூடைகள்ல என்ன கொண்டுவந்திருக்கெ ?
நாவல்பழ விவசாயி: பழைய ஏட்டையா எனக்கு ரொம்ப
பழக்கம்யா. எங்க பேரு ஊரு, கொலம் கோத்திரம்,
சாதி சனம் எல்லாம் தெரியும்யா. ஏட்டையா பத்து
வருஷமா இந்த உழவர் சந்தையில நான் கடை வச்சிருக்கேன்யா. ஒரு
நாய் நரி கூட பல்லு மேல நாக்க போட்டு ஒரு கேள்வி கேட்டது
கிடையாதுய்யா..
போலீஸ்காரர்: அப்படியா .. இப்ப நான்
கேட்கிறேன் பாரு இந்த மார்க்கெட்டில் பத்து வருஷமா வச்சிருக்கும் இந்த கடைக்கு அனுமதி இருக்கா ? பெர்மிஷன்
இருக்கா ? அதுக்கு செர்டிஃபிகேட் இருக்கா ?
விவசாயி: இந்தாங்கய்யா இந்த கடை போடறதுக்கு பத்து வருஷத்துக்கு
முன்னடி எங்க வி ஏ ஓ எனக்கு குடுத்த சர்டிஃபிகேட்டு.
போலீஸ்கார்ர்: அதுசரி வி ஏ ஓ சர்டிஃபிகேட்டு
இருக்கு. இது நகரம் முனிசிபாலிட்டி எல்லை இது அதுக்கு
விவசாயி: அதுக்கு முனிகிபாலிட்டி கமிஷனர்
அனுமதி செர்டிஃபிகேட்டு. வி ஏ ஓ சர்டிஃபிகேட்டு இருக்கு. ஆர் ஐ சர்டிஃபிகேட்டு
இருக்கு. தாசில்தார் செர்டிஃபிகேட்டு இருக்கு. மாநகராட்சி கமிஷனர் சர்டிபிகேட் இருக்கு.
போலீஸ்காரர்: வி ஏ ஓ சர்டிஃபிகேட்டு இருக்கு.
ஆர் ஐ சர்டிஃபிகேட்டு இருக்கு. தாசில்தார் செர்டிஃபிகேட்டு
இருக்கு. மாநகராட்சி கமிஷனர் சர்டிபிகேட் இருக்கு. ஆனா போலீஸ்
சர்டிபிகேட் இருக்கா ?
விவசாயி: இந்தாங்க போலீஸ்
சர்டிபிகேட் (என்று சொல்லிகொண்டே
ஒரு நாவல்பழ கூடையை) தருகிறார்.
போலீஸ்காரர்: என்னையா இது ? போலீஸ்
சர்டிபிகேட் கேட்டா நாவல்பழ கூடையை பழத்தோட குடுக்கறே ? இதெல்லாம் எங்க இன்ஸ்பெக்டர் அய்யாவுக்கு
பிடிக்காது.
விவசாயி: இந்த கூடையை உங்ககிட்ட குடுக்க சொல்லி உங்களுக்கு ரொம்பவேண்டியவர்
குடுத்து அனுப்பினார். அதாங் கொண்டுவந்தேன்.
போலீஸ்காரர்: எனக்கு வேண்டியவரா யார்
குடுத்தது ? சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுய்யா..
விவசாயி: எங்கைய்யாதான் குடுத்தனுப்பினாரு..எங்கய்யான்னா எங்க அப்பா..அவர்தான் சொன்னாரு உங்களை தெரியும்னு.. எப்பிடி தெரியும்னு
கேட்டா அதப்பத்தி அவர் எதுவும் சொல்லலை. நாவல் பழத்தெ குழந்தைகளுக்கு
குடுக்க சொல்லு..கொட்டயெ பெரியவங்களை சாப்பிடச்சொல்லு சக்கரைக்கு
நல்லது ஹார்ட்டுக்கு நல்லதுன்னு சொன்னாரு..(அதற்குள் அங்கு இன்ஸ்பெக்டர்
வருகிறார்) .. அய்யா இன்ஸ்பெக்டர் வர்றாங்கையா..)
இன்ஸ்பெக்டர்:
கூட்டமா இருக்குதெ என்னன்னு பாக்கசொன்னா இங்க பழ வியாபாரம் பாத்துகிட்டு
நிக்கறே..
போலீஸ்காரர்: நாவல் பழம் கொஞ்சம் வாங்கனையா
குழந்தைகளுக்கு ஒடம்புக்கு நல்லதுய்யா.. அந்த கொட்ட உங்களுக்கு நல்லதுய்யா.. . சக்கரைக்கு குருய்யா…
பழத்துக்கு காசு குடுத்தா வேணாம்னு சொல்றாருய்யா .. அவுங்க அப்பாரு நமக்கு ரொம்ப வேண்டியவரு..
(போலீஸ்காரர் நாவல் பழக் கூடையுடன்
நின்று கொண்டிருக்கிறார்)
இன்ஸ்பெக்டர்: இந்த மாதிரி
வெகுமதியும் சன்மானம் சம்திங் இதெல்லாம் வாங்குறது தப்புன்னு சொல்லி இருக்கனா இல்லையா ?
போலீஸ்காரர்: (கொஞ்சம் படபடப்புடன்) யாருக்கு எந்த உதவி செஞ்சாலும், அவங்ககிட்ட இருந்து, எந்த விதமான
பிரதி உபகாரமும் எதிர்பார்க்கக் கூடாது, அவங்க கிட்ட இருந்து, பணமோ பொருளோ
வாங்கக்கூடாது, வெகுமதி சன்மானம் எதுவும் வாங்க கூடாதுன்னு, மூச்சுக்கு முன்னூறு தடவை நீங்களே
சொல்லி இருக்கீங்களே.. ஆனா
இது ஒரு மருந்து மாதிரி உடம்பு ரொம்ப நல்லதுங்க..
இன்ஸ்பெக்டர்:
அப்பறம் எதுக்கு இந்த பழகக்கூடையை அவர்கிட்ட இருந்து வாங்கின
?
விவசாயி:
இந்த பழத்துக்கு காசெல்லாம் வேணாம்யா..
போலீசய்யா நமக்கு ரொம்ப வேண்டியவருய்யா.. அவுங்க
ஐய்யாவும் எங்க அய்யாவும் ஒண்ணா படிச்சவங்கையா.. இவர் படிச்சு
போலீசுக்கு வந்துட்டார்.. அவர் என்னைமாதிரியே சரியா படிக்கல அப்பிடியே
விவசாயத்தோட வாய்க்கா வரப்புன்னு இருந்துட்டார்..
இன்ஸ்பெக்டர்:
சரிசரி கூடைய எடுத்துட்டு வாய்யா.. அங்க ஏதோ கூட்டமா இருக்கு பாரு. அந்த கூட்டத்துக்கு நடுவுல யாரோ வித்தை காட்டிட்டு இருக்கான்னு நினைக்கிறேன்.. அங்க ஏதாச்சும் அடிதடி கூட நடக்கலாம்
இன்னைக்கு சனிக்கிழமை சந்தை.. சந்தை இருந்தா இப்படி ஏதாச்சும் ஒரு அசம்பாவிதம் கண்டிப்பா நடக்கும்.. அதுக்காகத்தான் நம்பள சந்தை டூட்டி போட்டிருக்காங்க..நான் முன்னாடி போறேன்.
பின்னாடி வாய்யா..
போலீஸ்கார்ர்:
இதொ வந்துட்டென்யா… உங்க அய்யாவை விசாரிச்சதா சொல்லுய்யா..
(ரகஸ்யமான குரலில் விவசாயியிடம்).. எப்பிடி அது
உங்க அய்யாவும் எங்க அய்யாவும் ஒண்ணா படிச்சவங்களா ? உன்னை வந்து
கவனிக்கறேன்…(ஓட்டமும் நடையுமாக இன்ஸ்பெக்டர் பின்னால் கூடையை
தூக்கிகொண்டு ஓடுகிறார்).
(விவசாயி போலீஸ்காரரைப்பார்த்து நக்கலாக
சிரிக்கிறார்)
காட்சி 2
இடம்: உழவர் சந்தை –
நிலை:
ஒரு இடத்தில் வட்ட வடிவமாக உழவர் சந்தைக்கு விற்கவும் வாங்கவும்
வந்த ஜனம் நின்று கொண்டிருக்க, உட்பக்கமாக ஒரு
மரத்தின் தூரில் ஒரு நாய் கட்டப்பட்டுள்ளது, பக்கத்தில் நின்றபடி
ஒரு விவசாயி தனது கையில் இருக்கும் காயத்தை காட்டி புலம்பிகொண்டிருக்கிறான்.
அந்த கூட்டத்தை விலக்கிகொண்டு இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் உள்ளே நுழைகிறார்கள்.
பாத்திரங்கள்:
1. நாய்கடிபட்டு புலம்பிகொண்டிருக்கும் விவசாயி,
2.
சுற்றிலும் வேடிக்கை பார்க்கும் ஜனங்கள் 3. இன்ஸ்பெக்டர்
4. போலீஸ்காரர்
நேரம்: காலை
விவசாயி
(நாய்க்கடி பட்டவர்) : எல்லாரும் என் கையை பாருங்க..
என் கையில எவ்ளோ ரத்தம் வழியுது பாருங்க.. இந்த
நாய்தான் என்னை கடிச்சது. இந்த நாய் யாருடைய நாயா இருந்தாலும்
நஷ்டஈடு வாங்காம, நான் சும்மா விடமாட்டேன்.. இது யாருடைய நாயுன்னு தெரிஞ்சா சொல்லுங்க..
குரல்
1(கூட்டத்தில் இருப்பவர்): வரவர இந்த உழவர் சந்தையில
மக்க மனுசாளு பயமில்லாம நடமாட முடியலே..எப்பொ எந்த நாய் கடிக்கும்னு சொல்ல முடியலே..
இன்ஸ்பெக்டர்
(கூட்டத்தில் உள்ளே நுழைந்து நாய்க்கடிபட்டவரைப் பார்த்து நக்கலாக கேட்கிறார்):
என்னய்யா இது கையில ரத்தம்.. இது உழவர் சந்தை..இங்க விவசாயிங்க உற்பத்திபண்ற காய்கறி பழங்கள் தானியங்கள்
எல்லாத்தையும் அவுங்களெ நேரடியா கொண்டுவந்து விற்பனை செய்யற இடம்..
இங்க மோடிமஸ்தான் வித்தையெல்லாம் காட்டக்கூடாது, இது தெரியாதா உனக்கு ..?
விவசாயி:
இஞ்சுபட்டர் அய்யா.. நான் என்னைய்யா மோடி மஸ்தான்
வித்தை காட்றமாதிரியா இருக்கு..? என் கையைப்
பாருய்யா .. எவ்ளோ ரத்தம் பாருய்யா.. இது
நிஜ ரத்தம்யா.. இந்த நாயி, எந்த பொறம்போக்கோட
நாயின்னு தெரியலை..இண்ணைக்கி யார் மூஞ்சியில முழிச்சேன்னும் தெரியலை..
இந்த மூதேவி நாயி கடிச்சி வச்சிடுத்துய்யா.. நல்ல
வேளை என்னோட நல்ல நேரம் நீங்க, இஞ்சிபட்டரைய்யா வந்திருக்கிங்க
.. நீங்கதான் இதுக்கு ஒரு நாயம் சொல்லணும்..எனக்கு நஷ்ட ஈடு வாங்கி
குடுக்கணும்..
குரல்
1 (கூட்டத்திலிருந்து): இந்த நாயி பாக்க சாது மாதிரி
இருக்கு.. இடிக்காத மானத்தையும் இந்தமாதிரி குலைக்காத நயையும்
நம்பக்கூடாது.. இப்பிடி ரத்தகாயம் வர்ரமாதிரி கடிக்குதுன்னா இது
கண்டிப்பா வெறி நாயாத்தான் இருக்கும்..
குரல்
2 (கூட்டத்திலிருந்து): ஒருவேளை இது வெறிநாயா இருந்திச்சின்னா..
கண்டிப்பா இந்த ஆளுக்கும். வெறிபுடிச்சிடும்..
வெறிபுடிச்சா. அப்புறம் நாய் மாதிரியே குலைச்சி
நாய் மாதிரியே எல்லாரையும் கடிக்க ஆரம்பிச்சிடுவான்.. அவனை யாராலயும்
காப்பாத்த முடியாது.. சாகவேண்டியதுதான்..
குரல்
1 (கூட்டத்திலிருந்து): தொப்புளை சுத்தி ஒரு பத்து
ஊசி போடணும்.. ஒரு ஊசிபோட்டாலே உசிறுபோயி உசிறு வரும்....
போலீஸ்காரர்:
யோவ் நிறுத்துங்கய்யா ஆளாளுக்கு பேசிக்கிட்டு.. எங்க அய்யா வந்துருக்காரு.. அவரு விசாரிச்சி நியாயம்
சொல்லுவாரு.. எல்லாரும் தரையில காலடிபாத்து கண்டு பிடிப்பாங்க..
எங்க அய்யா தண்ணியில் தடம் பாப்பாரு.. அவரு போலீஸ்
டிபாட்மெண்ட்டுல சாணக்கியன்மாதிரி..(நாய்க்கடி
பட்டவனைப்பார்த்து) இப்போ அய்யாகிட்ட என்ன நடந்ததுன்னு சொல்லுய்யா
.. அவர் உனக்கு நியாயம் சொல்வாரு.. கடிச்ச நாய்பேர்ல
நடவடிக்கை எடுக்கறதா ? நாய் ஓனர் பேர்ல நடவடிக்கை எடுக்கறதா
? அவர் சொல்வாரு …
(அதற்குள் ஒருத்தர் இன்ஸ்பெக்டருக்கு நாற்காலி கொண்டுவந்து போட்டு உட்கார வைக்கிறார்)
விவசாயி:
அய்யா நான் பக்கத்து ஊரு விவசாயி..நான் உழவர் சந்தைக்கு
கத்திரிக்காய் விக்க வந்தேன்..ஒரு மூட்டை காயை கொண்டாந்து வச்சிட்டு
இப்படி திரும்பி ஒரு எட்டு வச்சேன் ..வள்ளுன்னு எட்டி என்
கையை கடிச்சிட்டு ஒரே ஓட்டம் எடுத்துடுத்து..ரத்தம்
பிச்சிகிட்டு கொட்டுது.. நான் பின்னாடியே
ஓடியாந்து, பிடிச்சு கட்டிபோட்டுட்டேன்யா.. நீங்கதாய்யா எதாச்சும் நடவடிக்கை எடுக்கணும்.. இந்த நாய்
பேர்லயும் இந்த நாயோட ஓனர் பேர்லயும் நடவடிக்கை எடுத்து, ஏதாச்சும்
நஷ்டஈடு குடுக்க ஏற்பாடு செய்யுங்கையா..
இன்ஸ்பெக்டர்:
அது சரிய்யா இது யாருடைய நாயி இது ?
விவசாயி:
இது எந்த நாயோட நாயின்னு தெரியலையா ?
குரல்
1 (கூட்டத்திலிருந்து): காய்கறி மூட்டை பக்கத்துல அப்பிராணியா படுத்திருந்த நாயோட மூக்குல சிகரெட் நெருப்பால நீ சுட்டா அது கடிக்காம என்ன
செய்யும் ?
விவசாயி:
இப்படி நீ அபாண்டமா பொய் சொன்னா அழிஞ்சி போயிடுவே, நான் சிகரெட்டால் சுட்டத நீ பார்த்தியா ?
குரல்
1 (கூட்டத்திலிருந்து): இதெல்லாம் பார்க்கணுமா ரெண்டு ரெண்டு நாலுன்னு கணக்கு போட யாருக்கும் தெரியாதா ? இதை
ஒரு ஆளு பார்த்துட்டு சொல்லணுமா ?
விவசாயி:
நாயோட மூக்கைப் பாரு..
அதை நான் சிகரெட்டால சுட்டு இருந்தா சுட்ட காயம் இருக்கும்ல ? கருகிப்போயி இருக்கும்ல, அதெல்லாம் இன்ஸ்பெக்டருக்கு தெரியாதா ? அவங்க
என்ன உன்ன மாதிரி முட்டாளா ? போலீஸ்காரங்க பார்த்த உடனே கண்டுபிடிச்சிடுவாங்க,
ஒரு நாய் கடிக்குமா கடிக்காதான்னு அவுங்களுக்கு தெரியாதா ?
குரல்
1 (கூட்டத்திலிருந்து): அப்பொன்னா இன்ஸ்பெக்டர்
அய்யா சொன்னா ஒத்துக்கறையா ?
விவசாயி:
போலீஸ்காரங்க தப்பா சொல்ல மாட்டாங்க. அப்படியே
சொல்லி ட்டாலும் கோர்ட்டு
எதுக்கு இருக்கு ? விசாரணை எதுக்கு இருக்கு ? ஜட்ஜு எதுக்கு இருக்காரு ?
குரல்
1 (கூட்டத்திலிருந்து): அப்படியே இருந்தாலும் போலீஸ் சப்போர்ட் டுன்னு ஒண்ணு
இருக்கு இல்ல ?
விவசாயி:
அப்படி பார்த்தாலும் எங்க ஒண்ணுவிட்ட அண்ணாச்சி ‘ஐஜி’ ஆபீஸ்ல பியூனா
இருக்காரு. அவரைப் பார்த்தா நம்ம மாவட்ட எஸ்பிகூட சல்யூட்
அடிப்பார் தெரியுமா ?
குரல்
1 (கூட்டத்திலிருந்து): அவர் அடிப்பாரு … நம்ம இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரர்களும் அடிப்பாங்களா ?
இன்ஸ்பெக்டர்:
ஏன்யா கடித்த நாயை விட்டுட்டு கடிபட்ட ஆளையும் விட்டுட்டு
எங்கள போட்டு எதுக்கியா கடிக்கற ? (விவசாயியைப் பார்த்து)
உன் பெயர் என்னய்யா ?
விவசாயி:
என் பெயர் சின்னசாமிய்யா..தெக்குபட்டு சின்னசாமின்னா இந்த சுத்துவட்டாரத்துல
எல்லாருக்கும் தெரியும்ங்க..
இன்ஸ்பெக்டர்:
அவர் பேரு என்ன ? ஐஜி ஆபீஸ்ல இருக்காரே அவர் பேரு
என்னா ?
விவசாயி:
அவர் பேரு பெரியசாமி. எங்க ஒண்ணுவிட்ட அண்ணாச்சி ‘ஐஜி’
ஆபீஸ்ல இருக்காரு.
போலீஸ்காரர்:
அய்ய இப்போ இந்த கேசை என்ன பண்றதுய்யா ?
இன்ஸ்பெக்டர்:
சின்னசாமிகிட்ட ஒரு கம்ப்ளயிண்ட் எழுதி வாங்கிக்கய்யா..
போலீஸ்கார்ர்:
ஒரு சின்ன சந்தேகம்யா.. கம்ப்ளைன்ட் நாய் பேர்ல வாங்கவா ? நாய் ஓனர் பேருல
கொடுக்கவா
?
இன்ஸ்பெக்டர்:
அறிவிருக்கா உனக்கு.. நாயோட சொந்தக்காரர் யாருன்னு நமக்கு
தெரியாது. அதனால நாய் பேர்லதான் பெட்டிஷன்
எழுதணும்…
போலீஸ்காரர்; அப்படியே ஆகட்டும்யா
..
குரல்
3 (கூட்டத்திலிருந்து): இந்த நாய் கடிச்சதா இல்லையா அதப்பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனா ஒன்னு மட்டும் எனக்கு ஊர்ஜிதமா தெரியும். எதைச் செய்தாலும் பார்த்து செய்யுங்க.. பெரிய இடத்து பொல்லாப்பு
கண்டிப்பா வந்து சேரும்.. அப்புறம்
சொல்லலன்னு என்பேர்ல
நீங்க குறை சொல்லக் கூடாது.
போலீஸ்காரர்; யோவ் என்னய்யா
சொல்ற ?
குரல்
3 (கூட்டத்திலிருந்து): அய்யா புரியலையா ? நீங்க கம்ப்ளைன்ட் நாய் பேரில் எழுதினாலும் நாய் ஓனர் பெயர்லேயே எழுதினாலும், நான் சொல்றேன்
உங்க ரெண்டு பேருக்கும் வில்லங்கம்தான்..
இன்ஸ்பெக்டர்:
யோவ் என்னையா சொல்றே ?
குரல்
3 (கூட்டத்திலிருந்து): நாயை நல்லா கவனிச்சுப் பாருங்க.. இப்படி ஒரு நாயை இந்த வட்டாரத்தில் பார்க்க முடியாது.. ராஜகளை அது மொகத்துல எழுதி இருக்கு பாருங்க .. ஏன்னா இது மந்திரி வீட்டு நாய்.
இன்ஸ்பெக்டர்:
என்னையா சொல்றிங்க ?
விவசாயி
: ஐயா இந்த நாய் யார் வீட்டு நாயோ எனக்கு தெரியாது. அதை நீங்க கண்டுபிடிச்சி நடவடிக்கை எடுங்க.. எடுக்காம அப்படியேகூட
விட்டுடுங்க.. எனக்கு நேரமாச்சிய்யா..
எனக்கு கைவலி தாங்கல.. தொப்புளசுத்தி ஊசி போடணும்.
டாக்டர் இருக்கும்போதே ஆஸ்பத்திரிக்கி போகணும். கொண்டுவந்த காயை விக்கணும். வீட்டுக்கு வேண்டிய மளிகை
ஜாமான் வாங்கணும். இருக்கற வேலைவெட்டிய முடிக்கணும்..
உத்தரவு குடுத்திங்கன்னா பொழுது சாயறதுக்கு முன்னாடி ஊடு போயி சேரணும்..
இன்ஸ்பெக்டர்: ஏன்யா என்னய்யா
மந்திரி வீட்டு நாய் கடிச்சதா காலையிலிருந்து பிரச்சனை பண்ணியிருக்க. ஒரு கூட்டத்தை
கூட்டி தப்புப் பிரச்சாரம் பண்ணியிருக்க. கடிக்காத மந்திரிவீட்டு நாய் கடிச்சதா கம்ப்ளைன்ட் பண்ணி இருக்க.. இதை எப்படி சாதாரணமா எடுத்துக்க
முடியும் ?
போலீஸ்கார்ர்:
இதுக்கு பின்னாடி ஏதாச்சும் சதித்திட்டம் இருக்கான்னு தெரியணுமில்ல.. இது சிவில் கேசா ? கிரிமினல் கேசான்னு இன்னும் முடிவாகல.. அதுக்குள்ள எப்படி உன்னைய அனுப்பறது ?
இன்ஸ்பெக்டர்: பத்திரிக்கைகாரங்களுக்கு தெரிஞ்சா அவங்க கேட்கிற கேள்விக்கு ஏன் நம்மை படைத்த
பிரம்மாவே வந்தா கூட பதில்
சொல்ல முடியாது..
போலீஸ்கார்ர்:
அதை விடுங்க .. மேலதிகாரிங்க அக்யூஸ்டு எங்கன்னு கேட்டா யாரு பதில் சொல்றது ?
விவசாயி: அது
என்னய்யா அக்யூஸ்டு ?
போலீஸ்கார்ர்:
அக்யூஸ்டுன்னா குற்றவாளிய்யா..
விவசாயி: யாருய்யா குற்றவாளி. ?
போலீஸ்காரர்; குற்றவாளி நீதான். இதுல உனக்கு என்னையா சந்தேகம் ? கையில ஆணியால நீயேகீறீகிட்டு மந்திரி வீட்டு நாய் கடிச்சதா சொன்னது யாரு
? அது மூக்குல சிகரெட் நெருப்பால சுட்டது யாரு ? அது பேர்ல பொய்ப்புகார்
கொடுத்தது யாரு ? சந்தையில கூட்டம் கூட்டினது யாரு ? அப்ப நீ தானே குற்றவாளி ? இதுல என்னய்யா உனக்கு சந்தேகம் ? கைப்புண்ணுக்கு
கண்ணாடி வேண்டுமா ?
(அந்தக் கூட்டத்தோடு கூட்டமாக
காய்கறிகள் வாங்க வரும் மந்திரி வீட்டு சமையல்காரர் சீனிவாச அய்யங்கார்
இன்ஸ்பெக்டருக்கு வணக்கம் சொல்கிறார்)
போலீஸ்காரர்: (இன்ஸ்பெக்டரிடம்) ஐயா..மினிஸ்டர்
வீட்டு சமயல்காரர் சீனிவாச அய்யங்கார் வர்றார்..
சீனிவாச
அய்யங்கார்: இன்ஸ்பெக்டர் சார்
வணக்கம் எப்படி இருக்கீங்க ?
போலீஸ்காரர்: வணக்கம் ஐயா..
இன்ஸ்பெக்டர்: வணக்கம் ஐயா.. உங்க
ஆசிர்வாதம் நாங்க நல்லா இருக்கோம்
சீனிவாசய்யங்கார்:
சீனிவாசய்யங்கார் என்னதான் மினிஸ்டெர்
வீட்டுல இருந்தாலும் நான் கிச்சன்ல சமையல்காரன்தானே இன்ஸ்பெக்டர்..
போலீஸ்காரர்: அப்படி எல்லாம்
சொல்லாதீங்க. நீங்க பெரியவங்க. இப்ப நீங்க
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி வந்திருக்கிங்க.. இந்த நாயைப் பாருங்க… இது மினிஸ்டர் வீட்டு நாயான்னு
பார்த்து சொல்லுங்க.
சீனிவாசன்: இது கண்டிப்பா
மினிஸ்டர் வீட்டு நாய் கிடையாது. இந்த
மாதிரி எந்த நாயும் மினிஸ்டெர் வீட்டுல இல்ல.
என்னால அதுக்கு கேரண்டி கொடுக்க முடியும்.
இன்ஸ்பெக்டர்: அப்படின்னா இது தெருநாயாதான் இருக்கும். இது கண்டிப்பா தெரு நாயாதான்
இருக்கும். அந்த விவசாயியை அனுப்பி வை..
அந்த ஆளு தொப்புள சுத்தி ஊசியாவது போட்ட்டும்… கேசும் வேணாம் ஒரு பொடலங்காயும் வேணாம்.
போலீஸ்காரர்:
அப்படின்னா அந்த விவசாயிகிட்ட வாங்கின கம்பிளெயிண்ட்டுய்யா
..
இன்ஸ்பெக்டர்:
அதை கிழிச்சி குப்பையில போடுய்யா.. அந்த நாயை அவுத்து
வெரட்டி விடுய்யா..
போலீஸ்காரர்:
நல்லவேளையா அய்யா வந்திங்க.. இந்த பிரச்சினைக்கு
ஒரு தீர்வு சொன்னிங்க..
இன்ஸ்பெக்டர்:
ஆமாய்யா.. நாங்க மண்டயப்போட்டு ஒடச்சிகிட்டோம்.
என்ன செய்யறதுன்னு தெரியாம.
சீனிவாசய்யங்கார்: அவசரப்படாதேள். எனக்கு சந்தேகமாவே இருக்கு. நம்ம மினிஸ்டரோட தம்பி தங்கப்பல்லு
தங்கராஜு இருக்காரே அவர் போனவாரம்தான் சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கிறார்.
இன்ஸ்பெக்டர்: அப்படியா மினிஸ்டெரோட கடைசி தம்பிதானே. அவர் எனக்கு ரொம்ப வேண்டியவராச்சே.. சிங்கப்பூரில் இருந்து
இந்தியா வந்துட்டாரா ?
சீனிவாசய்யங்கார்: இந்தியா வந்துட்டார். வந்து
வாரம் ஒண்ணு ஆச்சி. அவர் சிங்கப்பூர்லருந்து
கொண்டு
வந்ததுதான் இந்த நாய். அதை ஏன் இங்க கட்டி வெச்சிருக்கேள் ? அவா கண்ணுல பட்டா ரத்த கண்ணீர் வடிப்பேள். அவாள் தேடறதுக்குள்ள எப்படியாச்சும் அவாகிட்ட
கொண்டு
போய் சேர்த்துடுங்கோ..ஆத்துல தேடுவாள் நான் வரேன்..
(இன்ஸ்பெக்டர் டென்ஷனாக குறுக்கும்
நெடுக்குமாக நடக்கிறார்)
இன்ஸ்பெக்டர்: இப்பொதான் எனக்கு புரியுது. இந்த ஆள் வேணுமின்னே அந்த
நாய் பேர்ல புகார் குடுத்து இருக்கான்.
போலீஸ்காரர்:
எனக்கும் இப்பொதான் புரியுதுய்யா. இந்த ஆள் வேணுமின்னே
அந்த நாய் பேர்ல புகார் குடுத்து இருக்கான்.
இன்ஸ்பெக்டர்: இதுல எதாச்சும் உள்நோக்கம் இருக்கும். இதுல சூது ஏதாச்சும் இருக்கும்னு
தோணுது.
போலீஸ்காரர்:
எனக்கும் இப்பொதான் புரியுதுய்யா. இதுல எதாச்சும்
உள்நோக்கம் இருக்கும். இதுல சூது ஏதாச்சும் இருக்கும்னு தோணுதுய்யா.
இன்ஸ்பெக்டர்: இந்த நாயை பத்திரமா கூட்டிகிட்டு
போயி மினிஸ்டர் தம்பி வீட்டுல ஒப்படைச்சிடலாம். நாய்பேர்ல பொய்புகார் குடுத்தவனை கொண்டுபோய்
கஸ்ட்டடியில வச்சிடலாம். முதல்ல புகாரை எழுதி வாங்கிடுய்யா..
போலீஸ்காரர்:
இப்போதாய்யா அவன் எழுதிக்கிட்டு இருக்கான்hi.. யோவ்
இங்க வாய்யா எவ்ளோ நேரமா புகார் எழுதிகிட்டு இருக்கே.. அய்யா
கிளம்புறார்.. எழுதினதை சீக்கிரமா குடுய்யா..
விவசாயி:
அய்யா என்னை நாயும் கடிக்கலை .. புகாரும் குடுக்கலை..
போலீஸ்காரர்:
அப்போ கையில காயம் ?
விவசாயி:
அது நானே கடிச்சிக்கிட்டேன்..நான் வரேன்யா நீங்க
சீக்கிரமா புறப்படுங்க.. நாய் பத்திரம்..
(இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் செய்வதறியாமல் விழிக்கிறார்கள்.
சுற்றிலும் இருந்த மக்கள் சிரித்தபடி கலைந்து போய் உழவர் சந்தையில் அவரவர்
கடைகளில் உட்காருகிறார்கள்.)
/திரை /
No comments:
Post a Comment