ஞானசூரியன் கதைகள்
(கடலூர்
தேவனாம்பட்டினத்தின் கடலும், அலைகளும், கடலோர மணல் பரப்பும், உப்பங்காற்றும், ஊற்றுக்குளங்களும், சுற்றி வளர்ந்திருந்த
மல்லிகைத் தோட்டங்களும்தான் மலர்கொடியின் காதல்சூறாவளி சுழன்றடித்த
சுற்றுப்புறங்கள்;)
மலர்கொடி - சிறுகதை
MALARKODI - SHORT STORY
சின்ன முனகலுடன் புரண்டு படுத்தாள் மலர்க்கொடி. இமைகளைப் பிரித்தாள். நீர்
தளும்பிக் கிடந்தது. ஒண்ணரை மாசம் விடாமல் அடித்த ஜூரத்தின் உக்கிரம் கண்களில்
சிகப்பு வரிகளாய் ஓடின.
கால்மாட்டில் பாட்டியும், சுகுணாவும் உட்கார்ந்திருந்தனர். மலருக்கு பாட்டிதான் எல்லாமும். பாட்டிக்கு
இட்டிலி வியாபாரம். வருஷந் தவறாமல், சேரிக்கு வந்து போகும் காலராவில் அம்மாவும் அப்பாவும் அவளை பாவாடை சட்டையில்
விட்டுவிட்டு போய்ச் சேர்ந்தார்கள். மற்றபடி உறவுக்காரர்கள் எல்லாம் அக்கம்
பக்கத்து வீட்டுக் காரர்கள் ;தான்.
சுகுணா மலருக்கு பால்ய காலத்தோழி. அவர்கள் பக்கத்து ஊரிலிருந்து வந்து
போகும் வைத்தியருக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.. கைராசிக்காரர். இவளுக்குத்தான்
இன்னும் சுகப்படவில்லை. இன்றோ நாளையோ என்றிருந்தாள். மலருக்கு இருவத்தெட்டு
இருவத்தொன்பதுகூட தேறாது வயசு.
ஆந்த சின்ன அறையில் அவள், அவள் படுத்திருந்த கட்டிலைச் சுற்றிலும் நிறைய பேர் உட்கார்ந்திருந்தனர்;. அந்தக் குடிசையே
ஒற்றை அறையாகத்தான் இருந்தது.
குடிசை என்று சொன்னாலும் நெத்திமூஞ்சி சுவர்வைத்து ஓலைபோட்டு
கட்டியிருந்ததால், சற்று தூக்கலாக சுமாரான வீடாகவே இருந்தது. மலர் உள்ளுர் டீச்சர்.
அவளிடம் படிக்கும் வாண்டுகள்சில கட்டிலைச்சுற்றி நின்று கொண்டிருந்தன.
எல்லோருமே ஏதோஒன்றை எதிர்பார்த்துப் கொண்டிருப்பதைப் போல பார்த்துக்
கொண்டிருந்தனர்.;.
எல்லோரையும் பார்த்துக் கொண்டிருந்த மலரின் கண்கள் சுகுணாவிடம் வந்ததும்
சற்று நிதானித்து நின்றது. மிகுந்த பிரயாசையுடன் அவளை வருமாறு சைகை செய்தாள்.
அவள் அருகில் சென்ற சுகுணா மெல்லிய குரலில் சொன்னாள். ஒடனே வரச்சொல்லி
தந்தி கொடுத்திருக்கேன்… சீக்கிரம் வந்துடுவாரு….
“ கடெய்சியா அவர ஒரு தடைவ பார்க்கணும் போல
இருந்திச்சி… அதான் … நானும் அற்பமான
மனுஷிதானே…’’ மூசு;சுவிடக்கூட
கஷ்டப்பட்டு சிரமத்துடன் பேசினாள் மலர்.
'என்னடி என்னென்னமோ பேசற… எனக்கு பயமா
இருக்குடி… தொண்டைக்குள்ளிருந்து, வெடித்துக் கொண்டு
வந்த அழுகையை சேலைத் தலைப்பில் அமுக்கினாள்.
எல்லாம் முடிந்துவிட்டது. இனி ஒன்றும் இல்லை என்பது மாதிரி அவர்கள்
அவளைப்பற்றி ஆளுக்கொன்றாய் பேசிக்கொண்டார்கள்.
அந்தாளு …இப்பெல்லாம்
வந்துகிந்து பாத்துட்டு போறானா…?
‘‘எந்தாளு…? ’’
“அவருதான்.…”
'ஆமா … வந்துட கிந்துட போறான்..? பொண்டாட்டி கட்டிக்கினான் … புள்ளய பெத்துக்கினான்…. அப்பொறம் இவக்கிட்ட என்னா மசுரா இருக்கு…?"
“இல்ல … சாவப் பொழைக்க கெடக்கறாளே வந்தானா…? ன்னு கேட்டேன்…. ”
“அவங் கெடக்கறான் தொடப்பக்கட்ட… இவ்ளோ நாளு
இல்லாம இப்போபாத்துத்தான் அவப் பக்குன்னு
எழுந்து உட்காரப்போறா… போடி.....”
“……………….”
'இவளுக்கும் அப்படித்தான் வேணும். தெக்க இருந்து
ரெண்டு புள்ளாண்டங்க வந்து .. கேட்டாங்க. ராசா மாதிரி… நல்லா .லட்சணமான
பசங்க ரெண்டு பேரும் வாத்திமாருங்க.
“எல்லாத்தையும் இவத்தானே வேணான்னிட்டா…”
'இவமட்டும்
சரின்னிருந்தா …இவ கிளிமாதிரி இருந்ததுக்கு எம் மொவள
கொத்திக்கினு போயிருப்பானுவ… நானும் எவ்ளோ … பச்சை பச்சையா … கேட்டுப் பாத்துட்டேன் … ம் … மாருகண்டன் சூதை … யாரு கண்டா…?"
அவள் படுக்கையில் விழுந்த நாளிலிருந்தே இந்த மாதிரி தன்மேல் இருக்கும் பிரியத்தால் அவர்கள் இப்படி பேசுவது
பழகிப் போயிருந்தது.
அவர்களுக்கு கடைசியாக வாய்ப்பூட்டு போடுவது சுகுணாவாகத்தான் இருக்கும்.
“நீ என்னதான் சொன்னாலும், அந்த ஆளும் நல்ல
ஆளுதான். ”
“சீசீ … அவங்கெடக்கறான் தூமை…”
“அவங்கம்மாதான் ராச்சசி….”
'அது தெரியுதேல்ல…எதுக்கு அவன் ஒட்டமூட்டு நாயி எதுக்கோ அலைஞ்ச
கதையா பின்னால அலையனும்…?"
மலர் ஜன்னல் பக்கம் திரும்பினாள். ஜன்னல் கம்பிகளில் மாலை வெய்யில் மஞ்சளாக
சோம்பலுடன் வழிந்தது. கடலின் அலைகள்மெல்லப் புரளும் ஓசை தெளிவில்லாமல் கேட்டது.
சற்றுத் தொலைவிலிருந்த சவுக்குத் தோப்பு காற்றில் அலைவது மங்கலாய்த் தெரிந்தது.
கண்ணணைப் பற்றிய நினைவுகள் அவள்மனதில் பூக்களாக விரிந்தன.
அப்போது அவள் எஸ்செல்சி படித்துக் கொண்டிருந்தாள்.
அன்று மாலை மல்லிகைத் தோட்டத்தில் ஊற்றுக்குளத்தில் தண்ணீர் எடுத்து
செடிகளுக்கு ஊற்றிக் கொண்டிருந்தாள்.
மலர் ஒரு வினாடி தயங்கி நின்றாள். அந்த அலைகளின் ஓசையோடு இயைந்து இசையும்
இசை. உற்றுக் கேட்டாள். ரம்மியமான இசை.
இசை வந்த திக்கில் மெல்ல நடந்தாள். கனவில்
நடப்பதைப் போன்ற பிரமை.
என்றைக்கும் அவள் கவனத்தை ஈர்க்காத கடல்தான் இன்று அவ்வளவு வனப்பாக
இருக்கிறது. இந்த அற்புதமான இசைக்குக் கட்டுப்பட்டுத்தான் ஆக்ரோஷிக்கும் இந்த
அலைகள்கூட இப்படி மெல்ல மெல்ல எழும்பி இசை லயத்தோடு சாய்கின்றன.
அவள் தயங்கி நின்றாள். கண்ணன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான்.
அவன் இரண்டு வருஷங்களுக்கு முன் அவன் படிக்கும் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்தான். அவன் புல்லாங்குழல் வாசிப்பு அவளுக்கு ஏற்கனவே பரிச்சயமானது.
சின்ன வயசில் நிறைய தடவை பாம்பாட்டி வாசிக்கும் மகுடி கேட்டு அவன்
பின்னாலேயே அவள் அலைந்திருக்கிறாள். இசை என்றால் அப்படி ஒரு பிடிமானம் அவளுக்கு.
இசை நின்றபாடில்லை. அவன் கண்கள் மூடியிருந்தன.
அலை வாசலில் ஓடி மறையும் நண்டுகளாக அவன் விரல்கள் அந்த குழல் விளிம்பில்
ஏறி ஓடின. அந்த இசை அந்த மணற் பரப்பையெல்லாம் நிரப்பி காற்றில் கரைந்து
வானவெளியெல்லாம் நிரம்பி வழிந்தது.
மணற்பரப்பில் பதிந்திருந்த அவள் பாதங்கள் மெல்ல மெல்ல வழுக்கிக் கொண்டு
எங்கோ பறப்பதுபோல ;அவள் நாடி நரம்புகளிலெல்லாம்கூட இசையின் அதிர்வுகள்.
பார்வை
அவன் மேல் நிலைக்க அவளுக்கு புத்தி தப்பியது. அவளுக்கு நினைவு திரும்பியபோது அவன்
நின்றுகொண்டிருந்தான். என்னமோ கேட்டான். ஒரு வினாடி ஸ்தம்பித்து நின்றாள்.
“மலர் மலர் …” என்று அவன்
கூப்பிட்டது, அவள் காதுகளை
அடையாமல் காற்றில் கரைந்தது.
அவள் மல்லிகை தோட்டத்தை நோக்கி ஓடினாள்.
அன்று இரவு முழுக்க மணற்படுக்கை. மல்லிகைத் தோட்டம் - கண்ணன். இப்படியே
மாறி மாறி கண்ணாமூச்சி விளையாடின. அந்த நினைவுகள் அவளுக்கு இனித்தன.
கட்டிலில் திரும்பிப் படுத்தாள்.
காது செவிடாகும்படியாக இறைந்து கொண்டிருந்த கடலின் சப்தங்கள் எங்கோ சென்று
ஒளிந்து கொண்டதுபோல் அலை நாவுகள் மட்டும் அசைய கடல் ஊமையானது.
சுகுணா அவசரமாக உள்ளே ஓடிவந்தாள்.
பின்னால் வந்தான் கண்ணன்.
ஒரு கணம் அவள் இதயம் நின்று மறுபடி வேகமாக
துடிக்க ஆரம்பித்தது. மலர் பரக்கப் பரக்கப் பார்த்தாள். ஆமாம் அவனேதான்.
சற்று வெளுப்பாக… கன்னத்தில் கொஞ்சம்
கூடுதலான சதைப் பிடிப்பு…. அவளுக்கு சந்தோஷம்….திகைப்பு… இன்னும்
என்னென்னவோ துள்ளி எழுந்திருக்க முயற்சித்தாள்.
முடியவில்லை. உடம்பின் எல்லா பாகங்களிலும் வலி. மூச்சிரைப்பில் மார்பு முகத்திற்கு
மேல் ஏறி இறங்கியது.
கண்ணன் கட்டில் பக்கத்தில் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான். அவள் கண்களின்
கடைக் கோடியிலிருந்து சந்தோஷம் தண்ணீராக வழிந்து கொண்டிருந்தது,
அவள்
நினைவுகள் மீண்டும் கடற்புறத்து மணற் பரப்புகளில் கால்களைப் பதித்தன. அந்த
குழலோசையில் மயங்கிப் போய் அவனுக்கு அடிமையாகி, அவன் உள்ளத்தையே ஆக்கிரமித்துக் கொண்ட நாட்களும், “ஒன்னப் பாக்காம
என்னால ஒரு நாள்கூட இருக்க முடியாது மலர்; ….”
ஏன்று அவன் கூறிய வார்த்தைகளும், இன்னும் அவள்
மனத்தில் பனிக்கட்டியாய் ஜில்லிட்டன.
மயக்கத்திலும் மகிழ்ச்சியிலும், நனைந்த அந்த இரண்டு ஆண்டுகளில் தான் அவள் ஆசிரியப் பயிற்சியை முடித்தாள்.
அந்த வசந்த நாட்களில்தான் அந்தப் புயல் வானத்துக்கும் பூமிக்குமாய் சுழன்று
வீசியது. கண்ணன்-மலர் விவகாரம் கால் முளைத்த கத்தரிக்காயாய், கடைத் தெருவுக்கு
வந்தது. வெறும் வாயை மென்ற ஊர்க்காரர்களுக்கு மெல்ல அவல் கிடைத்தது.
கண்ணணின் அம்மா சேரியில் ஏற்பாடு செய்திருந்த ஊர்க் கூட்டத்தில்
கிழவியையும் மலரையும் விசாரித்து ஊர்க்கட்டுப்பாடு கொண்டுவந்தார்கள்.
சேரியில் பலவிதமாய் பேசிக் கொண்டார்கள்.
“நாங்கூட என்னமோ நெனைச்சேன்…. அதுக்குத்தான் பாப்பா
தளுக்குநடை நடந்தாளா…?"
“நான் அறியாதப் பொண்ணுன்னு நெனச்சேன்…. ”
“ஆமா… ஒண்ணுந்தெரியாத பாப்பா … உள்ளார போட்டுக்கிச்சா தாப்பா… ”
“ நரியண்ணன் நடக்கும் போதே தெரிஞ்சிக்கலாம்…. ”
சிலர் பந்தி பந்தியாக பாட்டியிடம் வந்து குசுகுசுத்தனர். சிலர் அவளிடமே
நேரிடையாகக் கேட்டனர்:
“ஏண்டியம்மா… நல்ல எழுத்து நேரா இருக்க … கோண எழுத்து குறுக்க
வருது…? ”
அவள் ஒன்றுமே பேசாமல் பொங்கிப் பொங்கி அழுதாள்.
கண்ணனின் அம்மா உபயத்தில் சேரிக்கோயிலுக்கு கரண்ட் லைட் வந்தது. கையோடு
கையாய் மலருக்கு ஊர்க்கட்டுப்பாடு வந்தது. அவள் அவனைப் பார்க்கக் கூடாது.
பேசக்கூடாது.
ஒருநாள் ராத்திரி கண்ணன் தெரியாமல் சேரிக்கு வந்தான், முக்காடு
போட்டுக்கொண்டு. கிழவி வாயிலும் வயித்திலும், அடித்துக் கொண்டாள். பாட்டியை சமாதானப் படுத்தி, வாசலில் காவலுக்கு உட்கார வைத்துவிட்டு, அவனை உள்ளே கூட்டிப்
போனாள் அவள்.
“நீ என்னதான் சொன்னாலும், நீ இல்லாம என்னால வாழ
முடியாது மலர்;…. பேசாம இப்பவே என்னோட கௌம்பி வந்துடு. எங்கயாச்சும் போயிடலாம்…”
“நல்லா யோசனப் பண்ணிச் சொல்லுங்க… உங்களுக்கும் வேலை
இல்ல… எனக்கும் ஒண்ணும் வழி
இல்ல. வெளிய போயி பணங்காசு இல்லாம, சோத்துக்கு என்ன பண்றது…?”
“ ………………….. ”
கண்ணன் குழந்தை மாதிரி அழுதான். நீ இல்லாம என்னால வாழ முடியாது மலர். என்று திரும்பத்
திரும்பச் சொன்னான்.
ஏதேதோபேசி கடைசியில் சொன்னாள் மலர். 'உங்க அம்மாவும் உங்க ஜாதியில, பெரிய எடத்துல, பொண்ணு பார்த்திருக்காங்களாம்… பேசாம பண்ணிக்கீங்க… பாவம் … நீங்களே உங்க வீட்ட
நம்பி இருக்கீங்க… சாப்பாட்டுக்கு…. இதுல நான் வேறயா…?
அவன் முதுகுக்குப் பின்னால், கதவை அடைத்துச் சாத்தினாள் மலர்.
மூடிய கதவின் பின்னால் நெடு நேரம் நின்று, அழுது கொண்டிருந்த அவன், கால் போன போக்கில்
நடந்தான்.
அன்று இரவுமுழுக்க அவள் தூங்கவில்லை. விளக்கை அணைத்துவிட்டு, மண்தரையில் குப்புறப்
படுத்து, ஓசைப்படாமல் விம்மி
விம்மி அழுதாள்.
பாட்டி திண்ணையில் வெற்றிலை இடித்துக் கொண்டிருந்தாள்.
“ ஏண்டியம்மா…? எத்தினி நாளக்கி
இப்படி தண்ணி வெண்ணி இல்லாம கெடப்ப…? சாப்பிடாமப் போயி படுக்கக் கூடாது….”
பாட்டி அதட்டினாள்.
“ எனக்கு பசிக்கல… தண்ணி ஊத்திட்டுப் போயிப் படு….”
நீண்டநேரத்திற்குப்பின் பாட்டியின் குறட்டைச் சத்தம் கேட்டது. லேசாக
சாத்தியிருந்த ஜன்னல் கதவுகள் காற்றில் திறந்துகொண்டன. அந்த மையிருட்டில் கடலலைகள்
வெறிப்பிடித்து அலறின. அத்துடன் அவளுக்கு பரிச்சயமான அந்த இசை.
ஆமாம்…. அது அவன்தான்.
மனசு படபடத்தது… மெதுவாக எழுந்து தாவணியை சரிசெய்தாள். வெளியே வந்தாள். மெல்ல நடந்தாள்.
எங்கும் இருள் பூசிக் கிடந்தது. காற்று பலமாக வீசியது. சவுக்குத் தோப்பில்
மரங்கள் பேயாட்டம் போட்டன. அலைகள் மூர்க்கத் தனமாக மோதிமோதி சாய்ந்துகொண்டிருந்தன.
எல்லாவற்றையும் மீறி அந்த இசை, மெல்லிய கம்பியாக இழைந்தது.
வானம்இடிந்து கடலினுள் விழுந்து
நொறுங்குவது போல் அலைகள் வெடித்துச்சிதறின.
மனத்தை உருக்கி திரவமாக ஒழுக வைக்கும் இசை. அந்த இசை முழுவதும் காற்றாக
அவள் இதயத்திற்குள் நுழைவதைப் போன்ற ஒரு பிரமை. மார்கழி மாதத்து பனிக் காற்றைப்
போல இதயத்தை இறுக வைத்து உறைய வைக்கும் இசை.
அந்த இருட்டிலும் அவள் நன்றாகத் தெரிந்தாள்.
அவன் கையிலிருப்பது புல்லாங்குழல் அல்ல.
கொலைக்கருவி.
அவன் குழல் வாசிப்பதை நிறுத்தினான்.
“நான் உயிரோட இருக்கணும்னா… இனிமே இந்த
ஓசையே எங்காதுல விழக்கூடாது…” எந்திரம் போல் அவள் வீட்டிற்கு விரைந்தாள்.
எதையோ எதிர் பார்த்தவன் போல சிறிது தூரம் நடந்து வந்து, அவளை வெறித்து
பார்த்தபடியே நின்று கொண்டிருந்தான்.
கண்ணன் கொஞ்ச நாள் வரை கடற்கரைக்கும் மல்விகை தோட்டத்திற்குமாய் தாடி
வைத்துக்கொண்டு அலைந்து திரிந்தான்.
கொஞ்ச நாட்களில் பக்கத்து ஊரில் வேலை கிடைத்தது.
அப்புறம் ஒரு நல்ல நாளில் தாடியை மழுங்க சிரைத்துவிட்டு அப்பா அம்மா
பார்த்த பெண்ணை சீர்செனத்தியோடு கல்யாணம் பண்ணிக் கொண்டான்.
அதன் பின்னர்தான் மலர் உள்ளுரில் பள்ளியில் டீச்சரானாள்.
மலர் மீண்டும் கட்டிலில் புரண்டு
படுத்தாள்.
கண்ணன் எதிரில் உட்கார்ந்திருந்தான். அவன் கண்கள் சிவந்து கலங்க. முகத்தில்
கையைப்பொத்தி சின்னப் பிள்ளையாய் அழுதான்.
ஜன்னலில் மல்லிகைத்தோட்டம் தெரிந்தது.
சுகுணாவும் சுற்றியிருந்தவர் களும், வெளியே சென்றனர். பாட்டி மட்டும் அங்கேயே உட்கார்ந்திருந்தாள்.
அவள் தயக்கத்துடன் “அழாதீங்க… கடெய்சியா ஒரு தடவை
பாக்கலாமுன்னு தான் வரச்சொன்னேன்…”
அரை குறையாக வெளி வந்த
வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள்ளேயே புதைந்தன.
மீண்டும் சிரமப்பட்டு பேசினாள். 'உங்க வீட்ல குழந்தைங்க எல்லாம் நல்லா இருக்காங்களா… ?" வார்த்தைகள்
தெளிவில்லாமல் வந்தன.
அவன் தலையசைத்தான். சுகுணா மீண்டும் கால்மாட்டில் வந்து உட்கார்ந்தாள்.
அவன் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென்று உதிர்ந்தது.
கண்ணன் இன்னமும் ஸ்டூலில் உட்கார்ந்திருந்தான். அவள் அவனையே கண்கொட்டாமல்
பார்த்துக் கொண்டிருந்தாள்.
சோகையாய் சதையேறிய கன்னப்பகுதியில் கண்ணீர்வழிய கண்ணன் அழுது
கொண்டிருந்தாள்.
அன்று ராத்திரி தன் குடிசை தேடிவந்து “ நீ இல்லாமல் என்னால வாழ முடியாது மலர்” – என்று சொல்லி
அழுத அந்தக் கண்ணனின் முகம் தெரிந்தது.
அந்த முகம் அருவருப்பாக இருந்தது. மீண்டும் உற்றுப்பார்த்தாள். அந்த முகத்தில்
ஆண்மையற்ற பெண்ணின் சாயல் தெரிந்தது.
'இந்த கண்ணனுக்காகவா …? இவ்வளவு நாளை
எப்படி…?"
இப்போது அவளுக்கு வாழ ஆசையாக இருந்தது.
உடம்பு அனலாய்க் கொதித்தது. கஷ்டப்பட்டு மூச்சு விட்டாள். நெஞ்சின்வலி
மெல்ல உடல்முழுவதும் பரவியது.
எதிரில் இன்னமும் அவன் அங்கு உட்கார்ந்திருப்பது அவளுக்கு சகிக்க
முடியாததாக இருந்தது. கஷ்டப்பட்டு கையை
உயர்த்தி அவனை வெளியே போகுமாறு சைகை செய்தாள்.
கண்ணன் புரியாமல் எழுந்து நின்றான்.
மலர் மறுபடியும் சைகை செய்தாள்.
சுகுணாவிலிருந்து, கட்டிலை சுற்றி கூடியிருந்த அனைவரும் அவனையே பார்த்தனர்.
அவன் மெதுவாக குடிசையைவிட்டு வெளியே போனான்.
அவள் முகத்தில் பூசினாற்போல் இருந்த ஈரப்பசை உலர, கண்களிலிருந்து
கண்ணீர், காது மடல்களில் வழிய, இமைகளின் அசைப்பு
லேசாக நின்றது.
No comments:
Post a Comment