Sunday, April 12, 2020

விர்ஜீனியாவின் அதிசயம் லூரே குகை LURAY CAVERNS WONDER OF VIRGINIA




AWESOME USA VISIT

அமெரிக்கா போகலாம் வாங்க

விர்ஜீனியாவின்

அதிசயம்  
லூரே குகை  


 LURAY CAVERNS
WONDER OF
VIRGINIA

அமெரிக்காவில் விர்ஜீனியா மாநிலத்தின் ஷெனண்டோவா பள்ளத்தாக்கின் இயற்கை அதிசயம் லூரே கேவர்ன் எனும் லூரேகுகைகள், வாஷிங்க்டன் டிசி யிலிருந்து 90 நிமிட கார் பயணத்தில் 89 கி.மீ. தொலைவில் உள்ளது, நியூமார்க்கெட் என்ற இடத்திலிருந்து 15 நிமிட தொலைவில் உள்ளன இந்த அதிசயக்குகைகள், 101, கேவ் ஹில் ரோட், லூரே, விர்ஜீனியா என்பதுதான், அதன் ஜி பி எஸ் முகவரி, இந்த முகவரி இருந்தால் செவ்வாய் கிரகத்திற்குக்கூட காரில் போகலாம் என்கிறார்கள்.

சர்வதேச அங்கீகாரம் பெற்ற சுற்றுலாத்தலம் இது, ஆண்டுதோறும் மில்லியன் கணக்கில் சுற்றுலாப்பயணிகள் மொய்க்கும் இடம், கிழக்கு அமெரிக்காவின் முக்கியமான மற்றும் பிரபலமான டூரிஸ்ட்செண்டர், உள்ளூர் புகைப்பட கலைஞர் ஒருவர் இயற்கையாய் அமைந்துள்ள இந்த குகைகளை 1878 ம் ஆண்டு கண்டுபிடித்தார். அதிலிருந்து இந்த ஊருக்கு சுக்கிரதிசைதான், சுற்றுலாவில் லூரேவின் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுகிறது டாலர்.

தரை மட்டத்திலிருந்து கீழே இருக்கும் இந்த குகைகளை சென்று பார்ப்பதற்கு டிக்கட் வாங்க வெண்டும், இதனை கண்டுபிடித்த, 1878 ஆண்டிலிருந்தே வந்து பார்வையிடும் சுற்றுலா பயணிகளிடம் டிக்கட் வசூல் நடக்கிறது, ஐந்து வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கட் வாங்க வேண்டாம், ஆறு முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு 12 டாலர், பெரியவர்களுக்கு 24 டாலர் கட்டணம், சுற்றுலா பயணிகள் கிட்டத்தட்ட 98 சதத்திற்கும் மேல் கார்களில்தான் வருகிறார்கள்,  அதில் தோராயமாக பாதிப்பேர் எங்களைப்போல் வெளிநாட்டுப்பயணிகள், ஒரு பெரிய கால்பந்தாட்ட மைதானம்  மாதிரி ஒரு விசாலமான இடத்தை கார்கள் நிறுத்த ஒதுக்கி இருக்கிறார்கள், இங்கு எல்லாவகையான கார்களையும் பார்க்கலாம்,

நாங்கள் முதல் நாளே, லூரேகுகைக்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் விர்ஜீனியாவின் நியூமார்க்கெட்என்ற இடத்தில்டேய்ஸ் இன்என்ற ஒரு விடுதியை, முன்னிரவு நேரத்திலேயே சென்றடைந்தோம், பின்னிரவு முழுக்க அங்கு தங்கி இருந்தோம், காலை சுமார் ஒன்பது மணிக்கு நாங்கள் தங்கியிருந்த, ‘டேய்ஸ்இன்னில் டிஃபன் முடித்து, புறப்பட்டு  லூரேவை அடைந்தபோது சரியாக காலை 10 மணி, ஏற்கனவே சுமார் 200 கார்களுக்கும் மேல்பார்க்கிங் ஸ்பாட்டில் இருந்தன, அவை தவிர நிறைய கார்கள் சாரிசாரியாக வந்துகொண்டிருந்தன, நாங்களும் எங்கள் காரை நிறுத்தினோம், நாங்கள் அறுவரும், ஒரு பஸ்சில் முக்கா சைஸ் இருந்த ஒரு வெள்ளைநிற டொயோட்டா காரில் சென்றிருந்தோம், என் மகன்தான் கார் ஒட்டினான், இந்தமாதிரி சுற்றுலா தலங்களை பார்ப்பதைவிட அவனுக்கு காரோட்டுவதில்தான்  பிரியம் அதிகம்.  

அங்கிருந்து பார்த்தாலே லூரேகுகையின் நுழைவு வாயில் தெரிந்தது, ஏறத்தாழ நூறு பேருக்கும் பின்னால் நாங்கள் நிற்கவேண்டி இருக்கும், அந்த அளவிற்கு வரிசை நீளமாய் இருந்தது, கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் என்று பல நிறத்தில் பலநாடுகளைச் சேர்ந்த மக்கள் வரிசையில் காத்திருந்தார்கள், எல்லோருக்கும் பின்னால் போய் நின்றோம், “ஓ இந்தியர்களா ?” என்று கேட்பதுபோல எல்லோரும் எங்களைப் பார்த்தார்கள்

நாங்கள் ஒல்லியாக உயரமாக மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில் ஆட்டாசூட்டாவாக தலையில் அகலமான கவ்பாய்குல்லாய் அணிந்திருந்த ஒரு மெக்ஸிகனை முதல் தடவையாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம், என் மகன்தான் அடையாளம் காட்டினான், அவர் அந்த லூரேவில் வேலை பார்க்கும் ஒரு பணியாளர், பயணிகள் வரிசையை ஒழுங்குபடுத்துபவர், அப்போது என் மகன் என்னை எச்சரிக்கை செய்தான்ஏம்ப்பா  அந்த ஆளை அப்பிடி முறைச்சிப் பாக்கறீங்க ?’,என்று சொல்லிவிட்டு என்னைப் பிடித்து கிள்ளினான்.  

அதன் பிறகு எங்கு சென்றாலும் மெக்சிகன்கள் மற்றும் யூதர்களை தேடித்தேடி பார்க்க ஆரம்பித்தேன், இவர்களில் எனக்கு பிடித்தமானவை இவர்கள் அணிந்திருக்கும் தொப்பிகள், மெக்சிகன் தொப்பிகள் பேப்பர் ரோஸ்ட் மாதிரி அகலமாக இருக்கும் , யூதர்கள் போட்டிருந்த தொப்பிகள் பாசிங்ஷோ சிகரெட் டப்பாவில் இருப்பதுபோல  உயரமாக கருப்பு நிறத்தில் இருக்கும், நான் என் மகனை கலாய்ப்பதற்காவே அந்த மெக்ஸிகனிடம் போய் பேசினேன், ‘உங்களோடு நான் ஒரு போட்டோ எடுத்துகொள்ளவா ?’ என்று அவரிடம் கேட்டேன், உடனே அவர் என் கேமராவை வாங்கி உங்களை குடும்பத்துடன் எடுக்கிறேன் என்று சொல்லி எங்களை மட்டும் நிற்கச்செய்து இரண்டு மூன்று போட்டோ எடுத்து கொடுத்தார், ‘இப்படி அதிகப் பிரசங்கித் தனமெல்லாம் பண்ணாதிங்கப்பாஎன்று என்காதில் சொல்லிவிட்டு என் கையில் கிள்ளினான், ‘அவன் சொல்றத கேளுங்கஎன்று கண்டிப்பாக சொன்னாள் என் மனைவி, வழக்கம்போல்  நான்சரிஎன்றேன்.

எங்கள் குழுவில் மூன்று பெண்கள், மூன்று ஆண்கள், நான் என் மனைவி தவிர, என் மகன் உட்பட மற்ற நால்வரும் சாஃப்ட்வேர் எஞ்சினியர்கள், நாங்கள் எல்லோருமே, என்னையும் சேர்த்து அமெரிக்க சீருடையில் இருந்தோம், ஜீன்ஸ் கம் டிஷர்ட், என் மனைவி மட்டும் இந்திய உடையில், புடவை ஜாக்கெட் போர்த்தி பளிச்சென கட்டியிருந்தாள், அது எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்தது, உள்ளூரிலும் சரி வெளியூரிலும் சரி புடவைக்கு எப்போதும் மவுசுதான் என்று தோன்றியது, சிலர் மட்டும் ஏலியனைப் பார்ப்பது போல பார்த்துச் சென்றார்கள், சில வெள்ளைக்காரர்கள் ஹலோ ஹாய்சொல்லிவிட்டு போனார்கள்.  
  
நான் ஏற்கனவே மும்பைக்கு அருகில் உள்ள எல்லோரா-அஜந்தா குகைக்கோயில் மற்றும் ஒரிசா மாநிலத்தில் பல புத்த மத பிட்சுகள் தங்கி இருந்த குகைகளையும் பார்த்திருக்கிறேன், குகை என்றால் எப்படி இருக்கும் ? உள்ளே என்ன இருக்கும் ? உள்ளே செல்ல சரியான   பாதை இருக்குமா ? எவ்வளவு தொலைவு நடந்து செல்ல வேண்டும் ? இப்படி பல கேள்விகள் மனதில் எழ நாங்கள் ஆறு பேரும் குகைக்குள் இறங்கினோம்.


முதலில் சுமார் 50 முதல் 60 படிக்கட்டுகள், ஒருவர் பின்னால் ஒருவர் என ஏற இறங்க என்று தனித்தனி படிக்கட்டுகள், பக்கத்தில் பிடித்துக்கொள்வதற்கு ஏற்ற நீளமான பாதுகாப்பான இரும்பு கைப்பிடிக் கிராதிகள்,  குகைக்குள் பல இடங்களில் மங்கலான வெளிச்சம், குகைக்குள் நவீன ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் இருக்கும் இடங்களில் பளிச்சென்ற ஏற்பாடு செய்த பலவண்ண வெளிச்சங்கள், குகைக்குள் இருக்கும் காட்சிகளை ஒரே வரியில் சொல்வதென்றால், இயற்கையே மீண்டும் ஒருமுறை செதுக்க முடியாத, தங்க முலாம் பூசிய சிற்பங்களை உள்ளடக்கிய ஒன்றே லூரேகுகை, குகையின் அனைத்துபகுதிகளையும் பார்த்து முடித்துவிட்டு வரும்போது, உலக அதிசயங்கள் பட்டியலில் லூரே விட்டுபோனது எப்படி என்று நினைத்தேன்,
விர்ஜீனியாவில், ஷென்ண்டோவா பள்ளத்தாக்கில் அப்பளாச்சியன் மலைச்சரிவில் லூரே என்னுமிடத்தில், கடல்மட்டத்திலிருந்து, 927 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 

இந்த அதிசயக் குகை, சுமார் 3 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த குகை 10 தட்டுக்களில், பக்கவாட்டிலும், மேற்கூரையிலும், தரைப்பரப்பிலும் இந்த சுண்ணாம்பு சிற்பங்கள், ‘சைலூரியன் லைம்ஸ்டோன்என்னும் சுண்ணாம்பு பாறைகளினால் ஆனது, கூரையைத் தாங்கி நிற்பது போன்ற தூண்கள், சில கூரைகளிலிருந்து ஒழுகிய மெழுகினால் செய்யப்பட்டது போன்ற தூண்கள், அடிபருத்து நுனி சிறுத்த கூம்புகள், கல்லில் செதுக்கிய நீர்வீழ்ச்சி போன்றவை, எரியும் மெழுகுவர்த்தியில் ஒழுகும் திரவம் போன்றவை, இவை எல்லாமே கெட்டியான சுண்ணாம்புப்பாறை சித்திரங்கள், ஓரிடத்தில்   தேங்கி நிற்கும் பளிங்கு போன்ற தண்ணீர் மேற்கூரை சித்திரங்களை பிரதிபலிக்கின்றது, அது நிஜமா நிழலா என்று கண்டுபிடிப்பது கடினமான காரியம்.

ஆலமரம் முதல் ஆல்பைன் மரம் வரை அமீபா முதல் டைனோசர் வரை, குடிசை முதல் கோபுரம் வரை, உலகின் அத்தனை உயிருள்ள மற்றும் உயிரில்லா பொருட்களும் லூரேகேவ் சிற்பங்களில் அடக்கம், தேவதச்சனால் செதுக்கப்பட்ட சிவப்பு, மஞ்சள், மற்றும் காவி நிறத்தில் அமைந்த இந்த சிற்பங்கள், நினைத்த வாசனை வீசும் மனோரஞ்சிதம் பூ மாதிரி,  நினைத்த உருவங்களை நினைத்த மாத்திரத்தில் காட்டும் மனோசிற்பங்கள், உலக  அதிசயங்கள் பட்டியலில் விட்டுப்போன அதிசயம், இன்னொரு தாஜ்மகாலை உருவாக்க இன்னொரு ஷாஜஹான் வரலாம், லூரேகுகை சிற்பங்களை உருவாக்க இனி எந்த ஷாஜஹானும் வர முடியாது.

அறிவியல் ரீதியாக சிலவற்றை பார்க்கலாம், குகைக்குள் நிலவும் சீரான வெப்பநிலை 54 டிகிரி ஃபாரன்கீட், இதன் சிற்பங்கள் எல்லாம் கால்சியம் கார்பனேட் எனும் சுண்ணாம்பினால் ஆனவை, சிற்பங்கள்  வெண்மையாக இருந்தால் அதில் வெறும் சுண்ணாம்பால் ஆகி இருக்கும், சிற்பங்கள் சிவப்பு மஞ்சளாக இருந்தால் அந்த மண்  இரும்பு கலப்பாய் இருக்கும்,  சிற்பங்கள் நீலம் மற்றும் பச்சையாக இருந்தால் அந்த மண்  தாமிரம் கலப்பாய் இருக்கும்,  சிற்பங்கள் கருப்பாக இருந்தால் அந்த மண் மேங்கனீஸ் டைஆக்சைட் கலப்பாயிருக்கும்.
  
லூரே குகையில் ஆம்லட் வடிவத்தில்கூட ஒரு சிற்பம் பார்த்தேன், இந்த குகையின் வயது 40 லட்சம் ஆண்டுகளாம் தலை  சுற்றுகிறது, கடவுள் அந்த காலத்திலேயேஆம்லட்போட்டிருக்கிறார், இன்னும் தேடிப்பார்த்தால் இந்த குகையில் நம்மூர் இட்லி, தோசை, குழிப்பணீயாரம் அத்தனையும் கூட பார்க்கலாம். நமக்கு அப்படி பொறுமையாக தேடிப்பார்க்க அவகாசம் இல்லை.

உறைந்து பாறை வடிவத்தில் அமைந்த இந்த சிற்பங்களை கால்சைட் என்னும் மண்ணில் (CRYSTALLISED CALCITE) உருவானவை என்கிறார்கள். மேலும் இவற்றை ஸ்டாலக்டைட்ஸ், டிரிப்ஸ்டோன், புளோஸ்டோன் (STALAKTITES, DRIP STONES, FLOW STONES)என்றும் சொல்லுகிறார்கள்.
2.00 PM 

லூரேபற்றி ஒரு ஆச்சரியமான செய்தி, இந்த சிற்பங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளருகின்றன, 120 ஆண்டுகளில் ஒரு அங்குலம் வளர்ந்துள்ளதாம்.

26 அடி, 35 அடி, 60 அடி உயரம் உள்ள தூண் சிற்பங்கள், 40 அடி உயரமும், 30 அடி அகலமும் கொண்ட நீர்வீழ்ச்சி சிற்பங்கள், ஆனால் குகைக்குள் சுனை, ஓடை, நீர்வீழ்ச்சி எதுவும் இல்லை, ஆனால் ஒன்று முதல் 50 அடி விட்டமுள்ள நூற்றுக்கணக்கான சின்னஞ்சிறு குளங்கள் உள்ளன, இந்த குளத்து நீரில் அபரிதமாக சுண்ணாம்பு கலந்துள்ளது,   இந்த தண்ணீர் காலப்போக்கில் இவை முத்துக்கள், முட்டைகள், மற்றும் பனிப்பந்துகள், சிவப்பு, ஊதா, ஆலிவ் நிற படிகங்கள், மெகா சைஸ் காளான்கள் இப்படி பல வடிவங்களில் சிற்பங்களாக உருவாகின்றன, பல தளங்களில் அமைந்துள்ள இந்த சிற்பங்கள் தரைமட்டத்தில் தொடங்கி இந்த குகைகளில் 269 அடி ஆழம் வரை தொடர்கின்றன.

குகைக்குள் இருக்கும் ஒரு குளத்தின் பெயர் டிரீம்லேக் (DREAM LAKE), இந்த கனவு ஏரியில் உள்ள நீர் இதன் கூரையில் உள்ள சிற்பங்களை பிரதிபலிக்கும், தண்ணீர் இருப்பது தெரியாது, சிற்பங்கள் தரையில் இருப்பது போலவே தோன்றும், அப்படித் தெரிந்தாலும் அதிக ஆழமாக இருப்பதுபோலத் தெரியும், ஆனால் அதன் உண்மையான ஆழம் வெறும் 20 அங்குலம் மட்டுமே

இன்னொரு குளத்தின் பெயர் விருப்பக்கிணறு (WISHING WELL), நாம் நினைத்தது நடக்கவேண்டுமென்றால் அதில் காசுகளை போட வேண்டும். இதனை பார்க்க 3 முதல் 4 அடி ஆழம் உள்ளதைப்போலத் தோன்றும், ஆனால் இதன் உண்மையான ஆழம் 6 முதல் 7 அடி. நானும் என் மனைவியும் அந்த விருப்பக் கிணற்றில் சில்லறை டாலர் களைப்போட்டுஇந்த இரண்டு ஜோடி மணமக்களுக்கும் பிரச்சினை இல்லாமல், விரைவில், சிறப்பாக, எல்லோருடைய வழ்த்துக்களுடனும் திருமணம் நடக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டோம், அப்படியே நடந்து முடிந்தது, விருப்ப கிணறுக்கு நன்றி ! 
  


No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...