ஈரப்பலாவும் இதர பலா வகைகளும்
IRAPALA AND OTHER JACK TREES
ARTOCARPUS HIRSUTUS - அயனிப்பலா |
ARTOCARPUS LAKOOCHA லாகூச்சா குரங்குப்பலா |
Artocarpus rigidus - குரங்குப்பலா 2 |
Artocarpus gomezianus - ஈரப்பலா |
ஈரப்பலா மரங்கள் நல்ல உயரமாக வளரும்,
மரத்தின் பட்டை சாம்பல் நிறமாக இருக்கும்,
பட்டைகள் ஆச்சரியப்படும் வகையில் காகிதம்போல மெல்லியதாக,
நீண்ட வெடிப்புகளுடன் தென்படும், ஈரப்பலா பழங்களை சாப்பிடலாம், மரங்கள் பலவிதமான மரவேலைகளுக்கும் பயன்படும்,
இந்தியா உட்பட விரல்விட்டு எண்ணக்கூடிய ஆசிய நாடுகளில் ஈரப்பலா பரவியுள்ளது,ஈரப்பலா மட்டுமின்றி குரங்கு பலா, அயினிப்பலா மற்றும் செம்பலா பற்றியும் இந்த கட்டுரையில் சுருக்கமாக செய்திகளைத் தந்துள்ளேன்.
1. பலமொழிப் பெயர்கள் :
1.1. தமிழ்: ஈரப்பலா (IRAPALA)
1.2. இந்தி: தான் (DHAUN)
1.3. கன்னடா: ஈசுலுகுலி (ISULIHULI)
1.4. மலையாளம்:சிம்ப்பா (CHIMPA)
1.5. சமஸ்கிருதம்: அம்லக்கா (AMLAKA)
2. தாவரவியல் பெயர் : அர்டோகார்பஸ் கொமெசியானஸ் (ARTOCARPUS
GOMEZIANUS)
3. பொதுப்பெயர் ; பேப்பர் மல்பெரி (PAPER MULBERRY)
4. தாவரக்குடும்பம் : மோரேசியே (MORACEAE) என்னும் மல்பெரி குடும்பத்தைச்சேர்ந்தது.
5. தாயகம்: இந்தியா
6. பரவி உள்ள இடங்கள்: ஆசியாவில், இந்தியா, சைனா, மியான்மர், பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்ட்ரா, மேகாலயா ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது.
8. பட்டை : மரத்தின் பட்டை சாம்பல் நிறமாக இருக்கும், பட்டைகள் ஆச்ச்ரியப்படும் வகையில் காகிதம்போல மெல்லியதாக, நீண்ட வெடிப்புகளுடன் தென்படும்,
9. பலா வகைகள் : ஆர்டோகார்ப்பஸ் இனத்தில் சுமர் 60 வகையான மரங்கள் இருக்கின்றன, பலா மரங்களின் குடும்பத்தை மல்பெரி குடும்பம் என்பார்கள், இவற்றில் ஆர்டோகார்ப்பஸ் ஹெட்டரோபில்லஸ் (ARTOCARPUS HETEROPHYLLUS) என்பதுதான் நம்மூர் பலா, அதுதான் முக்கனிகளில் ஒன்று, ஆர்டோகார்ப்பஸ் கம்முனிஸ் (ARTOCARPUS COMMUNIS)என்பது கறிப்பலா, இதைத்தான் நாம் சமைக்கிறோம். இவை தவிர குரங்குபலா, அயினிப்பலா, செம்பலா என பலவகை உண்டு,
9. பால்வடிக்கும் பலாமரங்கள்: ஆர்டோகார்ப்பஸ் வகையைச்சேர்ந்த பெருமரங்கள், குறுமரங்கள், செடிகள் அத்தனையும் பால் வடிக்கும் தன்மை உடையன, இவற்றின் மரம், கிளை, இலை, சிறுகுச்சிகள், பூக்கள் இப்படி எதை கிள்ளினாலும் காயப்படுத்தினாலும் பால் வடியும், இவற்றின் பால் அனைத்துக்கும் ஒட்டும் தன்மையுண்டு, இந்த பாலைப்பயன்படுத்தி கிராமங்களில் சிறுவர்கள் பறவைகள் பிடிப்பதை பார்த்திருக்கிறேன், இதன் பால் அவற்றின் இறக்கைகளில் ஒட்டிக்கொண்டால் அவற்றால் பறக்கமுடியாது, சுலபமாக அவற்றை பிடித்துவிடலாம், பழங்களை வெட்டி எடுக்கும்போதுகூட அதன் மேல்தோலில் பால் வடியும், பலாச்சுளைகளை நீக்கும்போதும் கைகளில் நல்லெண்ணை அல்லது கடலை எண்ணை தடவிக்கொண்டால் எளிதாக சுளைகளை பழத்திலிருந்து பிரித்து எடுக்கலாம்.
10. மரம்:
மரம் வெண்மையாக இருக்கும், இதனைத் தரமான மரவேலைகளுக்கு பயன்படுத்த முடியும், கரையான் தாக்காத மரம் என்னும் சிறப்புக்கு உரியது, ஈரப்பலா மரங்களில் தயார் செய்யும் ஒட்டுபலகைகளை கரையான்கள் தாக்காது என்னும் பெருமைக்கு உரியது.
11. பூக்கள்: இந்த மரங்கள் இருபாலினப்பூக்களை உடையவை, இதனை தாவரவியலில் மானோசியஸ் (MONOCIOUS) என்று சொல்லுவார்கள், அதாவது ஆண்பூக்கள் மற்றும் பெண்பூக்கள் ஒரே மரத்தில் பூக்கும், நடவு செய்த 4 முதல் 5 ஆண்டுகளில் பூத்து காய்க்க ஆரம்பிக்கும், இதன் பூக்கள் தேனீக்களால் மகரந்தசேர்க்கை அடைகின்றன.
12. பரவி உள்ள இடங்கள் : மகாராஷ்ட்ராவில் கொங்கன் பகுதிகள், கர்னாடகாவில் மைசூர், வடக்கு கேனரா, கேரளாவில் பாலக்காடு, இடுக்கி, மற்றும் தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும்.
13. ஈரப்பலா தலவிருட்சமாக கோயில் மரமாக உள்ள கோவில்கள் மற்றும் இடங்களைப் பார்க்கலாம்.
1. குறுங்காளீஸ்வரன் கோயில், சென்னை – கோயம்பேடு
2. திருக்குற்றாலநாதர் கோயில், குற்றாலம், திருநெல்வேலி மாவட்டம்
3. காங்கேசப்பெருமான் கோயில், காங்கேசநல்லூர், ஈரோடு மாவட்டம்.
4. தாந்தோன்றீஸ்வரன் கோயில், பேளூர், சேலம் மாவட்டம்.
குரங்குபலா MONKEY JACK (ARTOCARPUS LAKOOCHA)
இந்தியாவிற்கு சொந்தமான இந்த மரத்தின் தாவரவியல் பெயர் அர்டோகார்ப்பஸ் லகூச்சா, இதனை லகூச்சா பலா, குரங்கு பலா மற்றும் ஈரப்பலா என்றுகூட சொல்லுகிறார்கள், பழங்கள் 2.5 அங்குல அகலத்திற்கு தொட்டால் வெல்வெட் போல, உருண்டையாக அல்லது சரியான வடிவத்தில் இல்லாத பழங்களாக இருக்கும், அழுக்கு மஞ்சள் நிறத்துடன் லேசான இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறச்சாயை கலந்தது போல இருக்கும், பழங்கள் நல்ல இனிப்பான சுவையுடன் இருக்கும், ஆனால் பெரும்பாலும் சமைத்து சாப்பிடுவார்கள், இது ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலங்களில் பூத்து காய்க்கும்.
இந்தோனேசியா மலேசியாவின் குரங்குப்பலா – INDONESIA AND MALESIYA’S MONKEY JACK FRUIT - ARTOCARPUS REGIDUS
அர்டோகார்பஸ் இனத்தில் ஒரு வகை காட்டுபலா இந்த குரங்குபலா, இதனையும்
‘மங்கி ஜாக் புரூட்’ என்றுதான்
சொல்லுகிறார்கள், ஆனால் இதன் தாவரவியல் பெயர் அர்டோகார்ப்பஸ் ரிஜிடஸ், இந்த மரங்கள் 45 மீட்டர் உயரம் வரை வளரும்,
அடிமரம் 3 மீட்டர் வரை அகன்று பருத்து வளரும், இந்தொனேசியா மற்றும் மலேசியாவில் இந்த குரங்குபலா மரங்கள் அதிகம் காணப்படுகின்றன, பழங்கள் சுவையாக இருக்கும், கொட்டைகளையும் சாப்பிடலாம், பழங்கள் 7 முதல் 15 செ.மீ. அகலம் இருக்கும், சிறிய இதன் பழங்களின் மேல் காணப்படும் முட்கள் சிறியவையாக குட்டையாக இருக்கும், இந்த குரங்குப்பலா வகை ஆசியாவில் மலாய் தீபகற்பம், சிங்கப்பூர்,
தாய்லாந்து, பர்மா,
இந்தோனேசியா, சுமத்ரா,
ஜாவா, போர்னியோ ஆகிய நாடுகளில் பரவியுள்ளது,
இவை தாழ்வான நிலப்பகுதிகளிலும் குன்றுகளில் காணப்படும் காடுகளிலும் அதிகம் விரும்பி வளருகின்றன.
பசுஃபிக் பகுதியின் சிகப்புபலா –JACK OF PASUFIC AREA
- ARTOCARPUS DADAH
பசுஃபிக் பகுதியை தாயகமாகக்கொண்ட சிகப்புப்பலாவின் தாவரவியல் பெயர் அர்டோகார்ப்பஸ் டாடா, இந்த பழத்தின் தசைப்பகுதி சிகப்பாய் இருப்பதால் நாம் இதனை செம்பலா அல்லது சிகப்புப்பலா என
அழைக்கலாம், உள்ளூர் உணவு, மருத்துவத்தேவைகள் ஆகியவற்றிற்காக மக்கள் அதிகம் பயன்படுத்தும் மரம் இது, ஆனால் இந்த மரத்தின் கட்டைகள் தரமானது, உலக அளவில் இது நல்ல விலைக்குப் போகிறது என்கிறார்கள், ஆசியாவில் மலேசியா மற்றும் சுமத்திரா ஆகிய பகுதிகளில் இந்த மரங்கள் அதிகம் வளர்கின்றன, ஆழமான வடிகால் வசதியுள்ள இடங்கள் இதற்கு பொருத்தமானவை.
இதன் பழங்கள் ஒரு கோழிமுட்டை அளவுக்கு சிறியதாக 5 செ.மீ. குறுக்களவு கொண்டதாக இருக்கும், பழங்கள் புளிப்பு சுவையுடையதாக இருக்கும், இதன் மரக்கட்டைகள் மஞ்சள் நிறமாக அதிக நாட்கள் உழைக்கும்படியாக மிகவும் உறுதியானவை, பூச்சிகளால் தாக்கப்படாதது, பாலங்கள் போன்ற முரட்டு கட்டுமானப்பணிகளுக்கு உதவியாக இருக்கும்.
இந்த செம்பலா மரங்கள் கெலிடாங் டிம்பர் (KELEDON TIMBER) என்னும் உயர்தரமான மரவகையைச் சேர்ந்தது, இதன் மரக்கட்டைகளில் மேஜை நாற்காலிகள் சார்புடைய பொருட்கள் செய்ய, வீடுகள் கட்டுமானப்பணிகள், கடைசல் வேலைகள், மிருதுவான இதர தச்சு வேலைகள், பேனல் பலகைகள் மற்றும் இணைப்பு வேலைகள், பெட்டிகள் இப்படி பலவகை வேலைகள் செய்ய ஏற்றவற்றை கெலிடாங் மரங்கள் என்று சொல்லுகிறார்கள்,
இந்த மரங்களின் வயிரப்பகுதி கவர்ச்சிகரமான வண்ணங்களில் தென்படும், மஞ்சள் சிவப்பு கலந்த நிறம், ஆரஞ்சு சிகப்பு கலந்த நிறம், தங்க நிறம், இவற்றின் லேசான மற்றும் அடர்த்தியான நிறங்களில் நமது கண்ணைக்கவரும், இந்த மரத்தினை மெல்லிய காகிதங்கள் போல நீளமான நாடாக்களைப்போல சீவி அல்லது உறித்து எடுத்து பயன்படுத்த முடியும், இந்த மரத்தில் வேலைசெய்ய பயன்படுத்தும் கத்திகள், உளிகள், ரம்பங்கள் ஆகியவை சுலபமாக முனை மழுங்கிப்போகும் அல்லது உடைந்து போகவும் வாய்ப்பு உண்டு, அந்த அளவுக்கு இந்த செம்பலா மரங்கள் உறுதியானவை.
மலேசியாவில் விலை உயர்ந்த சவப்பெட்டிகள் வேண்டுமென்றால் ‘கொண்டுவா செம்பலா மரங்களை’ என்கிறார்கள், இந்த இடத்தில் இன்னோரு செய்தியை சொல்ல விரும்புகிறேன், நமக்கு தெரிந்த ஒரு மரத்தை ஒரு காலத்தில் பிரமிடுகளில் வைக்கும் பதப்படுத்திய மனித உடல்களை வைக்கும் மம்மி பெட்டிகள் செய்ய பயன்படுத்தி இருக்கிறார்கள், அச்சி நறுவிலி என்று சொல்லும் மரங்களைத்தான், இப்போது நாம் அழகுக்காக வீட்டின் முகப்புகளில் நடுகின்றோம், அந்த மரத்தை நாம் ‘கார்டியா’ என்று ஆங்கிலத்தில் சொல்லுகின்றோம், இதன் பூக்கள் கனகாம்பரம் பூக்களைப்போல வெண்மை கலந்த அழகான இளம் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
அரைத்த மஞ்சள் நிற பழங்கள் உருண்டை வடிவமாக இருக்கும், பழங்களைத் தொட்டால் ‘மெத்மெத்’ தென இருக்கும், தோல் முள் இல்லாமல் மொழுமொழுவென இருக்கும், பழத்தின் உட்புறம் சிவப்பு தடவிய கல்யாணப்பூசணி போல இருக்கும்.
முற்றிய அல்லது முதிர்ந்த பழங்களிலிருந்து விதைகளை எடுக்கலாம், அப்படி எடுத்த புத்தம்புதிய விதைகள் அற்புதமாய் முளைக்கும், விதை உறக்கம் இல்லாதவை, உலர்ந்தால் இதன் விதைகள் முளைக்காது.
(FOR FURTHER READING www.globinmed.com / Artocarpus dadah / www.tropical.theferns.info/ Artocarpus dadah)
அயினிப்பலா – அர்டோகார்பஸ் ஹிர்சுட்டஸ், AYINIPPALA – ARTOCARPUS HIRSUTUS
இந்தியாவிற்கு சொந்தமானது அயினிப்பலா, இன்னும் சொல்லப்போனால் இந்த மரங்கள் மலையாள வாடை வீசியபடி கேரள மாநிலத்தில் அதிகம் தென்படும் மரம், தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ராவிலும் காணப்படும், இதன் பொதுப்பெயர் அல்லது ஆங்கிலப்பெயர் ஒயில்டு ஜேக் (WILD JACK), கன்னடாவில் ஹெப்பாலசு என்றும், தமிழில் மற்றும் மலையாளத்தில் அயனிப்பலா என்றும் அஞ்சிலிப்பலா என்றும் சொல்லுகிறார்கள்.
ஈரப்பசை கூடுதலாக உள்ள இடங்களிலும் பசுமைமாறா காடுகளிலும் அயனிப்பலா விருப்பமாக வளரும், கடல் மட்டத்திலிருந்து 1000 முதல் 1500 மீட்டர் உயரம் உள்ள இடங்களில் பிரச்சினையின்றி வளரும்.
அயனிப்பலா, தேக்குமரத்திற்கு இணையான தரமுள்ளவை, கேரள மாநிலத்தின் பரம்பரிய சிறப்புமிக்க ‘ஸ்னேக் போட்’ (SNAKE BOAT)என்று சொல்லப்படும் ‘சுண்டிவள்ளம்’ (CHUNDI VALLAM) என்னும் படகுகள் செய்வதற்கு உரிய மரமாக கருதுகிறர்கள்.
‘ஸ்நேக்போட்’ கேரளவின் பாரம்பரியமிக்க பாம்புப்படகுகள், அதனைச் செய்ய இந்த அயினிப்பலா மரத்தைதான் பயன்படுத்துவார்கள், வள்ளம்களி (VALLAM KALI) என்பது கேரள மாநிலத்தின் பரம்பரியமிக்க படகுத் திருவிழா, அதன் முக்கிய அம்சம் படகுப்போட்டி, அதில் கலந்துகொள்ளும் படகுகள் அயினிப்பலா மரத்தில் செய்திருக்கும், இந்த படகுகள் சாதாரணப்படகுகள் போல இருக்காது, ஒருபக்கம் உயர்ந்தும் அகன்றும் மீதமுள்ள பகுதி குறுகலாகவும் நீளமாகவும் இருக்கும், இந்த குறுகலான நீளமான பகுதியில்தான் படகு சவாரிக்காரர்கள் வரிசையாக உட்கார்ந்தபடி துடுப்பு தள்ளுவார்கள், கேரளாவில் மலயாள மண்ணில் அதன் பெயர் சுண்டிவள்ளம், அந்த படகுபோட்டியின் பெயர் வள்ளம்களி, அழகான இந்த படகுப்போட்டியை காண கண்கோடி வேண்டும்.
அயனிப்பலாப்பழங்கள் சாதாரண நம்மூர் பலாப்பழங்கள் போல பெரியதாகவே இருக்கும், பழச்சுளைகளை சாப்பிடலாம், சுவையாக இருக்கும், கொட்டைகளையும் சமைத்து சாப்பிடலாம், பலாப்பழங்களைப்போலவே முட்களுடன்கூடிய முரட்டுத்தோலை நீக்கி சுளைகளை சுலபமாக பிரித்து எடுக்கலாம், இவை பசுமைமாறா காடுகளில் இருந்தாலும் மேற்குத்தொடர்ச்சி மலைக்கு அயினிப்பலா அருகியபலாதான்.
No comments:
Post a Comment