Friday, April 17, 2020

கட்லின்பர்க் ஸ்மோக்கி மலைகளின் கிழக்குவாசல் GATLINBURG DOWN TOWN OF SMOKY MOUNTAIN


AWESOME 

U S A VISIT - 

TRAVELOGUE - 

 

அமெரிக்கா போகலாம் 

வாங்க - பயணக்கட்டுரை








கட்லின்பர்க் ஸ்மோக்கி மலைகளின்

கிழக்குவாசல்



GATLINBURG DOWN TOWN OF

SMOKY MOUNTAIN

தே.ஞானசூரிய பகவான்

ஸ்மோக்கி மவுண்டெயின் தேசிய பூங்கா, மற்றும் கேட்ஸ்கோவை பார்த்து முடித்ததும் அடுத்து நம்முடைய திட்டம் என்ன என்று என்  மகனிடம் கேட்டேன்.

‘பக்கமா ரெண்டு ஊர் இருக்கு, ஒண்ணு கட்லின் பர்க், இன்னொண்ணு பீஜியன் பர்க்’
‘நம்ம எதுக்கு போறோம் ?”
‘கட்லின்பர்க், இங்கிருந்து 33 மைல்’
‘அங்க போக எவ்ளோ நேரம் ஆகும் ?’
‘ஒண்ணரை மணி நேரம்..’
‘அங்க என்ன பாக்கறோம் ?’
‘அங்க லோக்கல் அயிட்டங்கள் நிறைய இருக்கு.. முக்கியமா ஒரு மலை இருக்கு, ஒரு ஆறு இருக்கு, ஒரு அக்வரியம், ஒரு பேய்மாளிகை, ‘ஸ்கை லிஃப்ட்’னு ஒண்ணு இருக்கு.. உங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு பாப்போம்’
‘ஸ்கை லிஃப்ட் அப்படின்னா’
‘கேபிள் கார்..ஐநூறு அறுநூறு அடி உயரத்துக்கு மேல ஒரு கேபிள்ள தொங்கிகிட்டே போறது…,
‘சொல்றதப்பாத்தா ரிஸ்க்கா இருக்கும்போல”
‘எல்லாரும் போறதப்பாத்தா உங்களுக்கும் போகணும்னு தோணும்பா’ என்றான் என்  மகன்.

‘அங்க போயி பாக்கலாம்’ என்று சொல்லி வைத்தேன். அநேகமாக என் மனைவி பயப்படலாம் என்று நினைத்தேன். அதனால் நான் ஒன்றும் சொல்லவில்லை. அதற்கு வேறு யாரும் ஒன்றும் சொல்லவில்லை காரணம், எல்லோரும் அரைத்தூக்கத்தில் இருந்தார்கள், எனக்குக்கூட இப்படி பயணங்களில் தூங்கப் பிடிக்கும், ஆனால் இது போன்ற சைட்சீயிங்க் வரும்போது தூங்கினால் எதையும் பார்க்கமுடியாது.

எங்கள் ‘சீயன்னா’ கட்லின்பர்க்’ஐ நோக்கி போய்க்கொண்டிருந்தது.   கட்லின்பர்க் நகரத்தில் ஸ்கைலிஃப்ட் எப்படி இருக்கும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

கட்லின்பர்க் நகரம் ஸ்மோக்கிமவுண்டெயின்ன், முக்கிய நகரம் என்று சொல்லுவதைவிட ஸ்மோக்கிமவுண்டெயின்ன் டவுன்டவுன்  என்றுதான் சொல்லவேண்டும், ஸ்மோக்கிமவுண்டெயின்க்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கெல்லாம் தங்குமிடமும் உணவும் உபசரிப்பும் கேளிக்கையையும் வழங்கும், ஸ்மோக்கி மலைகளின் தொடர்ச்சியாக  அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த சின்னஞ்சிறிய நகரம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் இந்த நகரம் உருவானது, முதன் முதலாக இங்கு குடியேறிய குடும்பம் இந்த இடத்திற்கு வைத்த பெயர்  ஒயிட் ஓக் ஃப்ளாட்ஸ்’(WHITE OAK FLATS), காரணம் அந்த சமயம் இங்கு இருந்ததெல்லாம் ஒயிட் ஒக் மரங்கள்தான், அதன் பிறகு ரேட்ஃபோர்ட் கட்லின்என்பவர் ஒயிட் ஓக் ஃப்ளாட்ஸ்க்கு வந்து ஒரு மளிகைக்கடை தொடங்கினார், உண்மையில் அவர்தான் இந்த ஊருக்கு பெயர் தந்தவர், இது நடந்தது 1854ல், அதன் பிறகு இந்த ஊருக்கு ஒரு போஸ்ட் ஆபீஸ் வந்தது, இந்த மளிகைக்கடையின் சொந்தக்காரர் ரேட்ஃபோர்ட் கட்லின் தனது கடையின் ஒரு பகுதியில் போஸ்ட் ஆஃபீஸ் நடத்த இடம் கொடுத்தார், இதற்கு நன்றி சொல்லும் விதமாகஒயிட் ஓக் ஃப்ளாட்ஸ்என்பதற்கு பதிலாக கடைக்காரரின் பெயரை அதாவதுகட்லின்பர்க்என்று பெயர் சூட்டினார்கள்.

(www.visitmysmokies.com / Do you know How Gatlinburg Got its Name ? Visit My Smokies)

இந்த ஊருக்கு முதல் பெயராக அமைந்தது ஒயிட் ஓக் மரங்கள், அதனால் அதைப்பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம், இந்த மரங்களை வெட்டிப்பார்த்தால் அதன் மரப்பகுதி வெண்மையாக இருக்கும், அதனால்தான் இது ‘ஒயிட் ஓக்’, இதன் இலைகளின் ஓரத்தில் மற்ற ஓக் மரங்களைப்போல் சிறு முட்கள் இருக்காது, மரங்கள் சாதரணமாக 100 அடி வரை வளரும், வீடுகளுக்கு தரை போடுவதற்கும் இதர வேலைகளுக்கும் அதிகம் பயன்படுத்தும் மரம், அதே சமயம் ‘செஸ்ட்னட்’ போன்ற மரங்களை ஒப்பிடும்போது விலை இது மலிவானது, இதன் காய்கள் அல்லது கனிகளுக்கு அகார்ன் (ACORN) என்று பெயர், இந்த ஒயிட் ஓக் மரங்களின் தாவரவியல் பெயர் கொர்கஸ் ஆல்பா (QUERCUS ALBA), இது இந்த பகுதிக்கு உரிய மரம், இந்த மண்ணுக்கு சொந்தமான மரம். ஒருகாலத்தில் அமெரிக்க பழங்குடி மக்கள் இதனை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள், இந்த அகார்ன்கள் நல்ல இனிப்பான சுவையுடையவை. இப்போதுகூட அதனை பதப்படுத்தி ‘பீசா பர்கர்’ என்று வைத்துக்கொடுத்தால் சாப்பிட்டுவிடுவார்கள்.

சுமார் அரை மணி நேரத்திற்குள் ஸ்மோக்கியின் மலையடிவாரத்தில்  இருக்கும் வண்ணமயமான டவுன் டவுன் நகரம் கட்லின்பர்க் நகரை அடைந்தோம், தினசரி ஸ்மோக்கி மவுண்டைனுக்கு ஆயிரக்கணக்கில் வந்துபோகும் சுற்றுலா பயணிகளின் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உருவான ஊர் கட்லின்பர்க், சொல்லப்போனால் ஸ்மோக்கி மவுண்டைனைவிட இங்கு கூட்டம் அலைபாயும்.
ஆமாம் டவுண்டவுன் என்றால் உண்மையான அர்த்தம் என்ன என்று சித்து எனக்கு விளக்கினார். 

‘டவ்ன் டவுன் அப்படின்னா ஒரு நரத்தோட ஹார்ட்ன்னு சொல்ல்லாம்..
‘இன்னும்கூட விளக்கமா சொல்லுங்க..’
‘அங்கதான் பொருட்கள் விற்கும் கடைகள் இருக்கும், ஹோட்டல்கள் இருக்கும், தங்கும் விடுதிகள், பெட்ரோல் டீசல் பங்க், மருத்துவமனை, போலீஸ் ஸ்டேஷன், மற்ற நிர்வாக அலுவலகங்கள் எல்லாம் இருக்கும்..
‘சரி அப்டவுன் அப்படின்னா ?’
‘அப் டவுன் பெரும்பாலும் ஒதுக்குப்புறமா இருக்கும் அதுதான் லிவிங்க் ஸ்பஸ் அங்கிள்.. வீடுகள் எல்லாம் அங்கதான் இருக்கும்..
‘தேங்க் யூ சித்து, எனக்கு இது குழப்பமாவே இருந்தது ?

டவ்ன்டவுன் கட்லின் பர்க், நிறைய தங்கும் லாட்ஜுகள், ஹோட்டல்கள், விதவிதமான காப்பி கடைகள், சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் சாலைகள், நடந்து செல்லுபவர்களுக்கு சிரமம் இல்லாமல் நத்தைகளைப்போல ஊர்ந்து செல்லும் விதவிதமான கார்கள், சீனர்கள், ஜப்பனியர்கள், கறுப்பர் இனத்தவர் மற்றும் இந்தியர்களும், எந்த நாட்டினர்  கண்டுபிடிக்க முடியாத பல நாட்டுக்காரர்களும் நடந்து போகிறார்கள், இது போன்ற சுற்றுலா தலங்களில்தான் நடந்து போகும் மக்களை பார்க்கமுடிகின்றது அமெரிக்காவில், கண்ணைக் கவரும்படியான வித்தியாசமான கட்டிடங்களையுடைய ஆள்மயக்கி நகரம் கட்லின்பர்க்.

கட்லின்பர்க் வந்ததும் மிகுந்த சிரமப்பட்டு எங்கள் காரை பார்க் செய்வதற்கான இடத்தைக் கண்டுபிடித்தோம், அமெரிக்காவில் ஒரு இடத்திற்கு போவதைவிட அந்த இடத்தில் காரை நிறுத்த இடம் கண்டுபிடிப்பது என்பது சிரமமான காரியம், சாப்பிட ஒரு நல்ல ஹோட்டலை கண்டுபிடித்தால் மட்டும் போதாது, அந்த ஹோட்டலில் பார்க்கிங் இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும், சில இடங்களில் இந்த தெருவில் ஹோட்டல் இருந்தால் நான்கு தெரு தள்ளி இருக்கும் பார்க்கிங் இடம், பார்க்கிங்கில் கொண்டுபோய் விடவும் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வரவும் தனியாக ஆள் வைத்திருக்கிறார்கள்,  காரை ஒருவழியாய் நிறுத்திவிட்டு என் மகன் உட்பட  எங்கள் இருவரையும்  காரிலேயே உட்காரவைத்துவிட்டு மீதம் உள்ள மூன்று சாஃப்ட்வேர்களும் புறப்பட்டு ‘டெவில்ஹோம்’ பேய்மாளிகை போனார்கள், நான் புகைப்படம் எடுப்பதற்காக என் மனைவியிடம் சொல்லிவிட்டு கீழே இறங்கினேன்

இறங்கியதும்,  எங்கள் காருக்கு முன்னால் ஒர் மயிர் கூச்செரியும் காட்சி, சாலையின் அந்தப்புறத்தில் சாலை ஒரத்திலேயே எதிரில் ஒரு நீச்சல் குளம், அதில் ஆண்கள் பெண்கள்  இருபாலரும் சிக்கனமான ஆடைகளுடன் நீளமும் பச்சையும் கலந்த கலர் தண்ணீரில் மிதந்தபடி சிலர், குளத்தின் கரையில் குவித்திருந்த மணலில் சூரிய வெளிச்சதை நுகர்ந்தபடி படுத்துக்கிடந்தவர்கள் ஒன்றிரண்டுபேர், கரையில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து நனைந்த உடலை உலர்த்தியபடி, பெருசு ஒன்று, மொத்தமான சுருட்டு ஒன்றினை பற்களில் கவ்வியபடி, கரிரயில்எஞ்சின் கணக்காய்  புகைவிட்டு கட்லின்பர்கையே மாசு படுத்திக்கொண்டிருந்தார், வேடிக்கை பார்த்தபடி நின்றுகொண்டிருந்த என் காதில் வந்து கிசுகிசுத்தான் என் மகன்

நோ ஸ்டேரிங்க்.. அப்பிடி முறைச்சி பாக்காதிங்க,’
நான் என்னடா மூறைச்சி பாக்கறேன்.. ?
அம்மா கூப்பிடறாங்க
எதுக்கு ?’
வந்து அவுங்க்கிட கேளுங்க..’
ரெண்டு போட்டோ எடுத்துட்டு வர்றேன்..’
ஒரு போட்டோவும் எடுக்கக் கூடாது..’
யார் சொல்றது ?’
அம்மாதான்..’
‘சுற்றுலான்னாலே பாக்கறதுதான்.. பாக்கதேன்னா அது சுற்றுலா இல்லன்னு உங்க அம்மாகிட்ட சொல்லு..”
சொன்னா கேளுங்கப்பா..அவுங்க குளிக்கறதல்லாம் போட்டோ எடுக்காதிங்கப்பா..’
அதை போயி நான் எடுப்பானா ?.
எதா இருந்தாலும் நீங்க அம்மாகிட்ட வந்து சொல்லுங்க..’

விடாப்பிடியாய் என்னைப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்தான் காருக்கு என் மகன், எல்லோரும் ஏற்கனவே காரில் ஆஜர், நடந்தை கேட்டு எல்லோரும் சிரித்தார்கள், ‘இவர் இறங்கிப்போகும்போதே நினைச்சேன்’ என்று என் மனைவி சொல்ல, நான் அதை பார்க்கப் போகவில்லை என்று சொன்னாலும் யாரும் அதை கேட்க தயாராக இல்லை. பின்னர் ஒரு சிறிய கடையில் வெண்ணிலா பிளேவர் காப்பிச்சீனொ வாங்கி குடித்தோம், கடையின் எதிரில், நம்ம ஊர் மாதிரியே ஒரு மரபெஞ்ச் போட்டிருந்தார்கள், அதில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

பக்கத்தில்தான் இருந்த்து என் மகன் சொன்ன  கேபிள் கார் கம்பெனி, இங்கிருந்தே பார்க்கத் தெரிந்தது, இரண்டு இரண்டுபேர் உட்கார வசதியான நூற்றுக்கும் மேற்பட்ட நாற்காலிகள், அதில் ஆண்களும் பெண்களுமாய் உட்கார்ந்திருக்க, ஒரு வரிசை மேலே ஏறிக்கொண்டிருந்தது கேபிள்காரில், அதன் பெயர்ஸ்கைலிஃப்ட்ஒரு வரிசை கீழே இறங்கிக்கொண்டிருந்தது, கெட்லின்பர்க் நகரின் ஒரு அங்கமாக இருந்த செங்குத்தான ஒரு மலையில் ஏறுவதும் இறங்குவதுமாக நடந்தது அந்த ஸ்கைலிஃப்ட்கேபிள் சவாரி, ‘அந்த ஸ்கைலிஃப்ட்  போகலாமாஎன்று என் மகன் கேட்டதும், பயப்படுவாள் என்று நினைத்த எனக்கு ஆச்சரியம், ‘சரிஎன்றாள் உற்சாகமாக என் மனைவி,  ஸ்கைலிஃப்ட்என்று போர்ட் வைத்திருந்த இடத்தில் இருந்த கவுண்டரில் டிக்கட் எடுத்தோம், அடுத்த வினாடி அங்கு நிற்காமல் ஏறிக்கொண்டும் இறங்கிக்கொண்டும் இருந்த அந்த கேபிள் நாற்காலிகளில் ஏறி உட்காரஸ்கைலிஃப்ட்உதவியாளர் ஒருத்தர் உதவினார், நானும் என் மனைவியும் பக்கம்பக்கமாக ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டோம்

ஒரு  நாற்காலியில் இருவர் உட்காரலாம், இரண்டுபேர் அல்ல நாங்குபேர்கூட அதில் உட்காரலாம், எங்களுக்கு பின்னல் வந்த  நாற்கலியில் என் மகன் ராஜா மட்டும் தனியாளாகவே வந்தான், இந்த நாற்காலிகளின் தலைப்பகுதி கேபிள் கம்பியுடன் பொருத்தி இருந்தது, ஒருவேளை இந்த நாற்காலி மட்டும் கழற்றிக்கொண்டு கீழே விழுந்தால் என்ன ஆகும் ? அப்படி எல்லாம் நினைக்கக்கூடாது என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டேன், ஓரு செல்ஃபியாச்சும் எடுக்க முடியுமா பாருங்க என்றாள்.

“இப்போ உங்களால ஒரு செல்ஃபி எடுக்கமுடியுமா ?’
‘முடியாம என்ன ? ஆனா விழுந்தா பரவால்லியா ?’
‘என்ன விளையாட்றிங்களா ?’

‘இடது கையில இந்த நாற்காலிய புடிச்சி இருக்கேன்.. வலது கையில கேமராவை புடிச்சி இருக்கேன்..இடது கையை விட்ட கேமரா கீழே விழுந்துடும் வலது கையை விட்டா நான் விழுந்துடுவேன் பரவால்லியா ‘
‘ரொம்ப கொழுப்புதான்..”

இந்த கேபிள் கம்பி மலைக்குமேலே போய்க்கொண்டிருந்தது, இன்னொருபக்கம் கேபிள் இறங்கிக் கொண்டிருக்கிறது, ‘ஸ்கைலிஃப்ட்எங்களை பயமுறுத்தாமல் கீழே உள்ள கடைகண்ணிகள், சாலை ஓரமாக ஓடும் பீஜியன் ஆறு எல்லாம் பளிச்சென்று தெரிந்தது, எங்களுக்கு முன்னாலும் வரிசையான கேபிள் நாற்காலிகள் அதைப்போல பக்கத்தில் வரிசையாக இறங்கும் நாற்காலிகள். ரொம்பவும் வித்தியாசமான அனுபவம், மேலே இருந்து பார்க்க கட்லின்பர்க் வீடுகள் எல்லாம் தீப்பெட்டி மாதிரி தெரிந்தன

கையில் இருந்த டிஜிட்டல் கேமராவை ஒரு கையில் நீட்டிப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் கேபிள் நாற்காலியை உயிர் ஆசையில் இறுகப்பற்றியபடி சர்க்கஸ்காரனைப்போல நான்கைந்து புகைப்படங்கள் எடுத்தேன், அதில் பின்னால் வந்த என் மகனின் போட்டோக்களும் அடங்கும், கேபிள் நாற்காலியில் உயிரையும் கேமராவையும் கையில் பிடித்தபடி சென்றபோது, அந்த மலையின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 1800 அடி என்பதும் கட்லின்பர்க் நகரம் 1200 அடி உயரத்திலும் இருப்பது தெரியாத புள்ளிவிவரம், மலை உச்சிக்கு சென்றதும் அங்கே இறக்கி விட்டார்கள், இப்பொது நாங்கள் அந்த மலையின் உச்சியில் இருந்தோம், கிட்டத்தட்ட 600 அடி உயரத்தில், அங்கு ஒரு கிஃப்ட் ஷாப்பும் ஒரு காபி ரெஸ்டாரண்டும் இருந்தது, ஒரு பெரிய சாதனையை நிகழ்த்திய சந்தோஷத்தில், டாக்டரின் ஆலோசனை ஞாபகமில்லாததைப்போல, அந்த குளிரையும் சட்டை செய்யாமல் ஆளுக்கொறு ஐஸ்கிரீமை அங்கு அடித்து நொறுக்கினோம். அங்கு இறங்குபவர்கள் குறைந்தபட்சம் அரைமணி நேரம் அங்கு செலவு செய்கிறார்கள், அதற்கு மேலும்கூட இருக்கலாம்.

ஐஸ்கிரீம் சாப்பிட்டு முடித்த்தும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, நாங்கள் இருவரும் கேபிள் நாற்காலியில் வரும்போது ஒரு போட்டோ எடுத்து அதற்கு பிரேமும் போட்டுஇந்தாருங்கள் இது உங்களுக்கு எங்கள் கிஃப்ட்என்று கொடுத்தார்கள் ஸ்கைலிஃப்ட்காரர்கள், எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள் ? அதிர்ச்சியில் அப்படியே நாங்கள் உறைந்து போனோம், அந்த  போட்டோவை போட்டு வைப்பதற்கு ஒரு அழகான பிரேம் அவர்களே விற்கிறார்கள், வெறும் 12 டாலர்தான், ‘ஹோ லவ்லி சீஃப்என்று சந்தோஷத்துடன் எல்லோரும் வாங்கினார்கள், நாங்களும்தான், இது தவிர அந்த கடையில் ஏராளமான நினைவுப்பொருட்கள், ‘ஸ்கைலிஃப்ட் கட்லின்பர்க்என்று எழுதி இருக்கும் கீசெயின், டேபிள் வெயிட், பேனா, பென்சில், ஸ்கிரிப்ளிங்க் பேர்ட், டம்ளர்கள், வெவ்வேறு அழகான சைஸ்களில் டிஷர்ட்ஸ், இப்படி ஏகப்பட்ட அயிட்டங்கள், இரண்டு டாலர் முதல் இருபது டாலர் வரை, எதைப்பார்த்தாலும் வாங்கலாம் போல மனம் படபடக்கிறது. அமெரிக்காவில் எதையும் விற்பனை செய்வதில் அசகாய சூர்ர்களாய் இருக்கிறார்கள். நாம் அவர்களிடம் விற்பனை செய்யும் கலையை கற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் அங்குள்ள காப்பிகடை, காப்பியில் கப்புச்சீனோ காப்பி, எக்ஸ்பிரசோ காப்பி, மொக்கச்சீனோ காப்பி, ஃப்ளாட்ஒயிட் காப்பி, லாங்க்பிளாக் காப்பி, ஐரிஷ்காப்பி, ஃபில்டர்காப்பி,  ப்ரொப்பர் சீனோ காப்பி, ஃப்ரென்ச் வேனிலா காப்பி, இப்படி ஏகப்பட்ட காப்பி அயிட்டங்கள், நரசுஸ் மட்டும் இல்லை, ஐஸ்கிரீம்கள் ஆரஞ்சு, பட்டர் ஸ்காட்ச், சாக்லேட், என ஏகப்பட்ட வகைகள், அப்புறம் வெஜிடேரியன் பர்கர், நான்வெஜ் பர்கர் எல்லாம் இருந்தது, ஆனால் சில்லரையை டாலராக அள்ளிவிட தயாராக இருக்க வேண்டும்.

அமெரிக்கர்கள் தங்கள் நாடு முழுவதையுமே சுற்றுலாத்தலமாக மாற்றிவிட்டர்கள், இன்னும் மாற்றி வருகிறார்கள் என்பதையும் பார்க்க முடிகிறது, எல்லா சுற்றுலத்தலங்களும் காமதேனுவாக மாறி அரசுக்கு டாலர்களை கறந்து தருகிறது, எந்த ஒரு சுற்றுலாத்தலமாக இருந்தாலும், அங்கு நினைவுப்பொருட்கள் விற்பனைக்கடை, காப்பி ஷாப், கார்பார்க்கிங் இடம், ரெஸ்ட் ரூம் (டய்லெட்), கிடைக்கிற வருமானத்தில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை செய்து தருகிறார்கள், அந்த இடத்தை சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இதுமாதிரி இடங்களில் இந்த வசதிகள் கிடைப்பதுதான் கஷ்டம்.

மலை உச்சியிலிருந்து கட்லின்பர்க் கடைகள் வீடுகள், அத்தனையும் பார்த்து ரசித்துவிட்டு, ஐந்தாறு போட்டோக்களையும் எடுத்துக்கொண்டு, மீண்டும் கேபிள் நாற்காலிகளில் ஏற்றிவிட்டார்கள்,  பாதுகாப்பாக கீழே வந்து இறங்கினோம்,கட்லின்பர்க் கேபிள் நாற்காலி சவாரியை 60 வயதை தொட்டுக் கொண்டிருந்த என் மனைவிக்கும் 63 வயதைத்தாண்டிய எனக்கும் பெரிய சாகசப்பயணமாக இருந்தது.
    
    

No comments:

SEA OF SEA LIONS IN PACIFIC SEA - சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கலாமா ?

WORLD'S LARGEST SEA LIONS CAVE IN FLORENCE SEA CITY Your way of description of silver falls in the National park is remarkable and also ...