Monday, April 13, 2020

பயம் -சிறுகதை - THE FEAR - SHORT STORY




பயம் -சிறுகதை 
 THE FEAR - SHORT STORY 

தே.ஞானசூரிய பகவான்

('செம்மஞ்சள் குதிரைமந்தை" என்ற மனிதர்கள் இடம்பெறாத மனிதர்கள் பற்றி ஒரு ரஷ்ய குறுநாவல் ஒன்றினை படித்தேன். அதன் விளைவுதான் இந்த கதை. இது நாய்கள் மட்டுமே இடம்பெறும் மனிதர்கள் பற்றிய கதை, உண்மையான பல சம்பவங்களை வெட்டியும் ஒட்டியும் நகாசுவேலை பார்த்தகதை இது> தினமணி கதிர் பத்திரிக்கையில் வெளிவந்த சிறுகதை)

      நாலுகால் பாய்ச்சலில் பயத்தில் ஓடி வந்த பப்பி வீட்டுக்குப் பக்கத்தில் வந்தப்புறம்தான் வேகத்தை மட்டுப்படுத்தி லேசாகத் திரும்பிப் பார்த்தது. துரத்திக் கொண்டு வந்த காரை வீட்டு நாய் எகுத்தாளமாய் வந்து கொண்டிருந்தது. மூடியிருந்த வாசல் படலை தள்ளிக் கொண்டு வீட்டின் மேலண்டை வாட்டத்தில் இருந்த வைக்கோல் போருக்குப் பின்னால் மறைவாக நின்றது.

      காரைவீட்டு நாய் போகிற போக்கில் சற்று நிதானித்து நின்று வலதுகாலைத் தூக்கி பப்பி வீட்டுப் படலை> மூத்திரத்தில் நனைத்து விட்டுப் போனது.

      மடிந்து தொங்கிய பப்பியின் காதுமடல்கள் உடல் நடுக்கத்தில் லேசாக ஆடின பப்பி மெல்ல தெருவிற்கு வந்தது. 

      தூரத்தில் விளக்குக் கம்பத்தடியில் நின்று கொண்டிருந்த எதிர்வீட்டு கருப்பு நாயும், தெரு நாய்களும்> காரைவீட்டு நாயைப் பார்த்தவுடன் மூலைக்கொன்றாய் சிதறி ஓடின.

     பப்பி பா  ட்ரோத்தியா …”  எஜமானி நாகரத்தினம் நீட்டி முழக்கினாள். அவள் பப்பியை கூப்பிடும் மொழி. 

      மீண்டும் எஜமானியின் ராகம். பப்பிக்கு எரிச்சல். சுள்ளென்று ஓங்கி அடித்த> காலைநேர வெய்யில் ஒருபக்கம்.

       பப்பி சுரத்தின்றி  நடந்துபோனது. 

      எஜமானன் சிங்காரம் வேலைக்குப் புறப்பட்டான். அவனுக்கு சர்க்கரை ஆலையில் வேலை. அவனுக்கு பப்பியிடம் பிரியம் அதிகம். காரை வீட்டு நாய் பப்பியை துரத்தி வரும்போதெல்லாம்> ரோசமாக கல்லெடுத்து ஓடியிருக்கிறான். அப்போதுகூட அது பயப்படாமல் திமிராக நின்று பார்த்துவிட்டுப் போகும்.

      எஜமானி பப்பிக்கான பானை ஓட்டில் பழைய கஞ்சியை சிலவி ஊற்றினாள். 

      பப்பி எஜமானியின் முன்னால் போய்> முன்னங்கால்களை நீட்டி வைத்து> தலையைக் குனிந்து படுத்து வாலை ஆட்டி திமிர் வாங்கியது.

      'சரி சரி போய் கஞ்சிக்குடி…” என்று செல்லமாக கரிப்பானையை எடுத்துக் கொண்டு சாக்கடைக்குப் போனாள்.

      நீராகரத்தில் ஓடு நிரம்பியிருந்தது. மேலாகத்தான் தண்ணீர். அடியில் அரைஓடு காணும்படியாக இருக்கும் சோறு.

      அது நீராகரத்தைமட்டும் நக்கிக் குடித்தது. அடியில் சோற்றுப் பருக்கைகள் விறைத்துக் கிடந்தன.

      பப்பியின் நினைப்பெல்லாம் காரை வீட்டு நாயின் மேலேயே இருந்தது.

      எதிர்வீட்டு கருப்பு நாய்க்கு குலைப்பு எகுத்தாளப்பட்டது. சாப்பாட்டு நேரமாக இருக்கும். சும்மா போன பூனையை அலைக்கழித்து.
மரத்தில் ஏற, விரட்டி வாலைக் குழைத்து போய் வாசலில் நின்றது.

      ஓட்டில் கிடந்த சாதத்தை> ஒருமுறைத் திரும்பிப் பார்த்துவிட்டு  அங்கிருந்து நடந்தது பப்பி. வீட்டுக்குப் பின்புறம் கிழக்குமேற்கில் ஓடிய மண் பாட்டையில் வந்து நின்றது. தூரத்தில் பத்துக்கண் பாலத்திற்கு அருகாமையில் புழுதி பறக்க> கரும்பு ஏற்றிய வண்டிகள் கடக்கடக்கென வந்து கொண்டிருந்தன.
 
      தெருக்கோடியில் மண் பாட்டையின் ஓரத்திலேயே  ஒதியஞ் சாலையை நோக்கி நடந்தபடி, காரை வீட்;டு நாயிடம் எத்தனைமுறை கடிபட்டோம்..? என்று கணக்குப் போட்டது.

      அங்கு பையன்கள் கோலி விளையாடிக் கொண்டிருந்தனர். எதிரில் ரயில் தண்டவாளத்தில் பையன்கள் வரிசையாக உட்கார்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

      ஒதிய மர நிழல் அடர்த்தியில் பப்பி மெல்ல இமைகளை சாத்தியபடி உடலை அரை வட்டத்தில் கிடத்தியது.

      காரைவீட்டுக்காரர் ஊரில் தூக்கலான கை. முதலில் காரைவீடு கட்டியவர். தினமும் கறியும் எலும்பும் போட்டு நாய்; வளர்ப்பவர். எஜமானன் கரிசனத்தில் அது  நாய்களை இளக்காரமாக பார்க்கும். 

      அப்போது பப்பி மூனுமாசக்குட்டி. பப்பியின் அண்ணன் டைகர் சாக்லெட் நிறத்தில் அழகாய் இருக்கும். வால் நுனியில் மட்டும் ஒரு வெள்ளைப் புள்ளி இருக்கும். டைகருக்கு இருபத்தியோரு நகம். ரொம்பவும் அதிர்ஷ்டம்.

      எஜமானிக்குக்கூட டைகரை ரொம்பப் பிடிக்கும். பல நேரங்களில் பப்பிக்கு பொறாமையாக இருக்கும்.

      அன்று எஜமானன் வேலைக்குப் போயிருந்தான். எஜமானியும் வீட்டில் இல்லை. ரயில்ரோடு ஓரத்தில் வழக்கம்போல் கருவாடு காயவைத்திருந்தது. 

      தந்திக் கம்பத்தில் உட்கார்ந்திருந்த இரண்டு மூன்று காக்கைகள்  காவலுக்கிருந்த மீன்காரப்பையன் 'எப்போது ஏமாறுவான் ?" என்று பார்த்துக்கொண்டிருந்தன.

      எதிர்வீட்டு கருப்பு நாய் கருவாட்டு மோப்பத்தில் சுற்றிவர> மீன்கார பையன் அரட்டிக் கொண்டிருந்தான். அப்போது கருப்பு நாய் ஆறேழு மாசக்குட்டி.

      பப்பியும் டைகரும் மண்பாட்டைப் புழுதியில் விளையாடிக் கொண்டிருந்தன. வேகமாக முன்னால் ஓடிய டைகரைப் பாய்ந்து> கழுத்தில் பொய்க்கடி கடித்துத் தள்ளியது. டைகரும் பதிலுக்கு பப்பியை புரட்டி எடுத்தது.

      விளையாட்டு ரொம்ப நேரம் நீடிக்கவில்லை.

      கண்சிமிட்டுவதற்குள் எல்லாமே நடந்து முடிந்துவிட்டது. 

      பப்பி மட்டும் சாமர்த்தியமாக படலுக்குள் நுழைந்து வீட்டுக்குள் வந்துவிட்டது. சிறிது நேரம்வரைக்கும் பப்பிக்கு உடம்பு வெடவெடத்துக் கொண்டே இருந்தது.

      மெல்ல தைரியத்தை வரவழைத்தபடி ரோட்டோரம் எட்டிப் பார்த்தது. 

      காரைவீட்டு நாய் சாவதானமாக நடந்துப் போய் கொண்டிருந்தது.
      கிழித்துப் போட்ட சிவப்புக் கந்தையாக செத்துக்கிடந்தது டைகர்.

      கண், காது, மூக்கு என்று அடையாளம் தெரியாமல் டைகர் ரத்தத்தில் நனைந்து கிடந்தது. சிறிது நேரம்வரை அந்த வெள்ளைப் புள்ளியுடன்கூடிய அழகிய வால்மட்டும் லேசாக ஆடிக்கொண்டே டைகர் செத்துப் போனது.

      அன்றையிலிருந்தே பப்பிக்கு அதன்மீது வங்காத்திரம் இருந்து வந்தது. அதை கணக்கு தீர்க்க காத்திருந்தது.

      காரைவீட்டு நாயை மற்ற நாய்கள் அதனை ராஜபாளையம் என்று பேசிக்கொள்ளும். அது அந்தத் திமிரிலேயே இறுமாப்பாய் செல்லும். அது சுத்தமான ராஜபாளையம் அல்ல. அதன் உடம்பு வெள்ளையாக இருந்தாலும் கரும்புள்ளிகளும் இருந்தன. மூக்கு மட்டும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.

      பப்பியின் அம்மா கோம்பை இனம். உடல் செம்மஞ்சள் நிறம். வெல்வெட் மாதிரி பளபளக்கும். வால், காது, மூக்கு மற்றும் வாய்ப் புறத்தில் மட்டும் புகைபடிந்த மாதிரி கருப்பாக இருக்கும். கற்பகம் இருக்கும்போது> ஒரு மாடுகூட வீட்டின் வைக்கோல்போர் பக்கம் வராது. கற்பகம் காவலில் கெட்டி. குலைக்க ஆரம்பித்தால் ஊரே எடுபட்டுவிடும்.

      பப்பியின் தொண்டைக்கும் அந்த ராசி உண்டு.

      கற்பகம் பப்பியின் அம்மா.  டாஷண்ட்" என்னும் சீமை ஜாதியுடன் காதல் கொண்டபோதுதான், பப்பியும் டைகரும் ஆண் குட்டிகளாக பிறந்தன.

      இரண்டும்; குட்டையாக> உடல் சற்று நீளமாக> அகலமான தொங்கிய காது மடல்களோடு பார்க்க கவர்ச்சியாக இருக்கும். மற்ற நாய்கள் இரண்டையும் விச்சித்திரமாக பார்க்கும்.

      எல்லாம் நேற்றைப் போல ஞாபகத்தில் இருந்தன.

      கற்பகம் செத்து அஞ்சாறு மாசம் இருக்கும்.

      பையன்கள் மும்முரமாக கோலி விளையாடிக் கொண்டிருந்;தனர்.

      கழுத்திலிருந்துத் தாவி> மூக்காந்தண்டையில் உட்கார்ந்த தௌ;ளுப் பூச்சியை, கோபமாக வெடுக்கென்று கவ்வியது. பப்பியின் கடிக்கு அகப்படாமல் அது அலைக்கழித்தது. பப்பி புரண்டு எழுக்து உடலை உலுக்கி உதறியது.

      ஓட்ட நடையில் வந்த கோடிவீட்டு சொறிநாய் ஜிம்மி மெதுவாக வந்து ஒதியமர நிழலுக்கு ஒதுங்கியது.

      சிநேகபாவத்துடன் பப்பியை பார்த்தபடி, நாக்கை இலையாய் தொங்கவிட்டு, இழுத்து இளைத்தது. நாக்கின் நுனியில் நூலாய்  இறங்கிய எச்சிலை மண்ணில் கோலமாக்கியது.

      ஜிம்மி இளைத்துப் போயிருந்தது. மயிர் உதிர்ந்த இடங்களில், சிவந்து தடித்த தோலில் பரவலாக சீழ் கோர்த்த கொப்பளங்களாய் உண்ணிகள்.

      பருவத்தசையில் இருக்கும்போது ஜிம்மியின் பின்னால் அலையாத ஆண் நாய்கள் குறைச்சல்..

      ஜிம்மிக்கும் காரை வீட்டு நாயை பிடிக்காது. ஆனால் அதற்கு மட்டும் ஜிம்மியின்மீது ஒரு கண். 

      ஜிம்மிக்கு பப்பியை பிடிக்கும். பப்பியைவிட ஜிம்மி அஞ்சுமாசம் மூத்தது. ஜிம்மி அதன்மீது காதல் கொண்டிருந்தது.

      நாளடைவில் காரைவீட்டு நாயும் ஜிம்மியின் பின்னால் அலைந்தது. சில்லரை விஷமங்கள் செய்ய ஆரம்பித்தது. ஜிம்மி இடம் தரவில்லை. ஜிம்மி பப்பியிடம் அடிக்கடி இதுபற்றி பெராது சொன்னது. பப்பிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. ஆனால் என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை.

      தெருநாய்களில் ஒன்றுக்கும் காரைவீட்டு நாயை எதிர்க்க துப்பில்லை. 

      வாட்டசாட்டமாக வளரும் ராஜபாளையமாகவோ> கற்பகம் மாதிரி காரசாரமான கோம்பையாகவோ> தான் இல்லையே என்ற வருத்தம் மட்டும் அவ்வப்போது பப்பிக்கு மனசில் தோன்றியது.

      ஒருநாள் தெரு நாய்கள் வேடிக்கை பார்க்க ஜிம்மியை கடித்துக் குதறியது. வெகு நேர போராட்டத்திற்குப் பின் காரைவீட்டுநாய் ஜிம்மியை பலவந்தமாக அனுபவித்தது.

      வேடிக்கைப் பார்த்த நாய்கள் கலைந்துபோயின.

      அதன் பின்னர் காரைவீட்டுநாயும் ஜிம்மியும் கண்ட கண்ட இடங்களில் அக்குறும்பாய் நடந்துகொண்டன. ஜிம்மிக்கு கோபமாகவும் வருத்தமாகவும் இருந்தது.

      பப்பி ஜிம்மியிடம் பேச்சை நிறுத்திக் கொண்டது.

      ஒருநாள் ஜிம்மி இரண்டு ஆண் குட்டிகள் போட்டது. குட்டி போட்ட இரண்டாம்நாள் ஜிம்மிக்குத் தெரியாமல் தூரத்தில் நின்று பார்த்தது. குட்டிகள் ஜிம்மியின் மார்பில் காம்புகளைத்தேடி துழவின. பப்பி எரிச்சலுடன் திரும்பியது.

      நான்கைந்து நாட்களுக்குப் பிறகு குட்டிகள் வயிறு உப்பி செத்துப் போனதை கேட்டு பப்பியின் மனசு சங்கடப் பட்டதா ? சந்தோஷப்பட்டதா ? என்று சொல்லத் தெரியவில்லை.

      கொஞ்சநாள் கழித்துத்தான் ஜிம்மிக்கு சொறி பிடித்தது.

      இப்போதெல்லாம் தெருநாய்கள் ஜிம்மியைப் பார்த்து முகம் சுளித்து ஒதுங்கிப் போகும்போதெல்லாம் பப்பிக்கு நெஞ்சில் சோகம் வந்து அமர்ந்து கொள்ளும்.

      பப்பியின் கண்களில் லேசாக ஈரம் கசிய> ரயில்ரோட்டை ஒட்டிச்சென்ற கொடிப் பாதையில் நடந்தது. சிதறிக்கிடந்த கருங்கல் ஜல்லிகளில் பதிந்த பாதங்கள் ரணமாய் வலித்தன.

      கண்மண்தெரியாமல் வந்துபோய்க்கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் பூமி அதிர பப்பியை கடந்து போனது.

      புத்துகண்ணு பாலத்திற்கு அருகாமையில் வந்த பின்னர்தான் தெரிந்தது> ரொம்ப தூரம் வந்துவிட்டது.

      பாலத்தின் ஓரத்தில் சப்பாத்திக்கள்ளிகள் முள்ளும் முரண்டுமாக படர்ந்து கிடந்தன.

      செத்துப்போன அம்மா கற்பகத்தின் எலும்புகள் ஆய்ந்து போட்ட புளியங்கோம்பாய் ஒருபக்கம்.; சற்றுத் தள்ளி முடிச்சு முடிச்சாய் கழுத்து எலும்புகள். சுற்றிலும் இன்னும் மக்கி இற்றுப்போகாத தோலுடன் கூடிய மயிர்க் கற்றைகள்.

      கற்பகத்தை வெறிபிடித்த சந்தேகத்தில், ஊர்ப் பையன்கள் அடித்துக் கொன்றுவிட்டனர்.

      கண்களில் ஈரம் கசிய அங்கேயே நின்றிருந்த பப்பி மீண்டும் ஓட்ட நடையில் அங்கிருந்து திரும்பியது.

      உரிம வெய்யில் மண்டையை பிளந்தது.

      ரயில் ரோட்டில் தெருநாய்கள் கும்பலாய் சண்டை போட்டுக் கொண்டிருந்தன. ஏழெட்டு நாய்களுக்கு நடுவில் வேற்று நாய் ஒன்று. எல்லா நாய்களும் ஆக்ரோஷத்துடன் குலைத்து கடித்தன. வேற்றுநாய் அத்தனைக்கும் சவால் கொடுத்தது.

      சண்டைக்கு காரணம் புரிந்தது. கழுதை ஒன்று ரயிலில் அடிபட்டு> மாமிசத் துண்டுகளாய்க் கிடந்தது. சற்று முன்பு போன ரயிலின் உபயம். பச்சை ரத்தம் சிந்திக் கிடந்தது.

      வேற்றுநாய் இப்போது தெருக் கோடியில் குதிரைப் பாய்ச்சலில் ஓடியது. துரத்திச்சென்ற நாய் பாதி தூரத்திலேயே அதிகார குலைப்பில் நின்று கொண்டது.

      தெருநாய்கள் மாமிசம் கடிப்பதில் உற்சாகப்பட்டன. குட்டி நாய்கள் சிறு துண்டுகளாய் தூக்கிப் போய் தூரத்தில் வைத்துக் கொண்டு மல்லாடின.

      சிறிது நேரத்தில் பப்பியும் மற்ற நாய்களுடன் கலந்து கொண்டது. பப்பி தொடையில் கவ்வி, முன்னங்காலை ஊன்றி> சிம்பியது. கழுதை கிழடு. சீக்கிரம் பிய்ந்து வரவில்லை.

      இரண்டாவது வாய்க் கறியை கடித்து இழுக்கும் போதுதான் பார்த்தது சுற்றிலும் இருந்த நாய்கள் ஒன்று கூட இல்லை. கடெய்சியாக கருப்பு நாய் குப்பை மேட்டில் கால் தடுக்கி விழுந்து எழுந்து வாலை காலிடுக்கில் அழுத்தியபடி, ஓடியது. நிமிர்ந்து பார்த்தது பப்பி. எதிரில் காரைவீட்டு நாய்

      மனதில் பயம். இதுவரை எதிர்த்து நின்று பழக்கம் இல்லை. வழக்கம்போல் ஓடிவிடலாமா ? என்று நினைக்கும் போதே, ஓடக்கூடாது.. ஓடக்கூடாது.. என்ற எண்ணம் மின்னலாய் வெட்டி மறைந்தது. 

      பப்பியின் கால்கள் ஓட மறுத்தது. அதன் அடித் தொண்டையில்  கர்ச்சனை சத்தம். காரைநாய்கூட ஒரு கணம் அதிர்ந்தது. அடுத்த வினாடி காரை யோசனை பண்ண நேரம் கொடுக்காமல் அதன் மீது பாயந்த்து. பாய்ந்து காரையை பிடறியில் கவ்வியது பப்பி. பிடி கொடுக்காமல் ஓடியது காரை. 

      காரைவீட்டுக்கு அடுத்த தோட்டத்துப் படல் திறந்திருந்தது.

      ஒரே பாய்ச்சல். காரை வீட்டு நாய் உள்ளே போய் விட்டது.

      பப்பி விடவில்லை. பின்னாலேயே பாய்ந்தது. சின்னத்தோட்டம். அங்கு கத்தரிச் செடிகளும் தக்காளிச் செடிகளும் மிதிபட இரண்டும் பாரி அடித்தன. 

      இப்போது தோட்டத்தின் ஒரு மூலையில், குப்பைக் குழிக்கு அந்தப்புறம், தென்னங்கன்றின் ஓரமாக, நின்று மூச்சு வாங்கியது காரை.

      அது சற்று மேடான இடத்தில் நின்றுகொண்டிருந்தது பப்பி. 

      வெளியில் ஓட வேறு வழியில்லை காரைக்கு. சுற்றிலும் கிட்டிப்பிடித்த கெட்டியான வேலி.

      வெளிப்புறத்தில் தெருநாய்கள் சுற்றிலும் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன. காரை வீட்டு நாயை பப்பி துரத்தும் காட்சி அபூர்வமாய் இருந்தது. மற்ற நாய்கள் சந்தோஷமாய் வேடிக்கை பார்த்தன. காரைக்கு அவமானமாய் இருந்தது.

      இப்போது காரை திடீரென பாய்ந்தது பப்பியின் மீது. மலையைப்போல் நின்றிருந்த பப்பி, அதனை புரட்டி எடுத்தது. இரண்டு மூன்று தடவை புரண்டு எழுவதற்குள் பப்பியின் கூர்மையான பற்கள் காரையின் இடது காதில் அழுந்தப் பதிந்தது.

 இந்தமுறை காரையின் இடது காதில் ரத்தம் பெருகி வழிய> காது பாதியாக அறுந்து தொங்கியது. 

      பப்பி வெறித்தனமாக காரையைக் கடித்துக் குதறியது. காரையின்; உடம்பில் ஒரு இடமும் பாக்கியில்லாமல் ரத்தக்களறி.

      காரை களைத்துப் போனது. மெல்லத் தள்ளாடி எழுந்து நின்றது.  மீண்டும் பப்பியை நோக்கி பாய்ந்தது. பாய்ச்சலின் வேகத்தில் பப்பியையும் தாண்டிக்கொண்டு பக்கத்தில் இருந்த குப்பைக் குழிக்குள் வழுக்கி விழுந்தது. 

      பப்பி, யோசனையாய் ஒரு கணம் நடந்து குப்பைக் குழியின் விளிம்பில் நின்று உள்ளே பார்த்தது. பின்னங்கால்களை நன்கு ஊன்றி தன் எல்லா பலத்தையும் ஒன்றுதிரட்டி எம்பிப் பாய்ந்தது குழியினுள். 

      தெருநாய்கள் வேலியை சுற்றிக் கொண்டு அவசரமாய் உள்ளே நுழைந்து பயந்தபடி குப்பைக் குழிக்குச் சற்றுத் தொலைவிலேயே நின்றன. சற்று நேரம் வரையில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.

      சிறிது நேரத்திற்குப் பின் வலது கண்ணிலிருந்து ரத்தம் சொட்ட உடல் நடுங்க சாபம் கொடுக்கும் தொணியில் ஊளையிட்டபடி, குப்பைக் குழியிலிருந்து வெளியே வந்தது காரைவீட்டு நாய். வலதுகண் முழுசாய் வெளியே வந்து தொங்கிக் கொண்டிருந்தது.

      காரைவீட்டு நாய்  ஓட்டநடையில் படலைத் தாண்டி வெளியே போகும்போது> தெருநாய்கள் விரைப்பாய் நின்று கொண்டிருந்தன.

      பப்பி குழியைவிட்டு சாதாரணமாக வெளியே வந்து நிதானமாக நின்று, உடலை ஒரு உதறு உதறியபோது உடம்பில் ஒட்டிக் கொண்டிருந்த தூசி துப்பட்டைகள் எல்லாம் புகை பறக்க உதிர்ந்தன.

      வேடிக்கை பார்த்த தெரு நாய்களின் உடம்பு சிலிர்த்து மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.
                             
                                

No comments:

INDIAN FARMERS - உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்

  ஜெய் ஜவான்  ஜெய் கிசான் ! இந்தியாவில் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் அளிக்கும் உதவி மிகவும் குறைவு , அது போதுமானதாக இல்லை , ந...